முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் தாமதம்: விசாரணை நடத்த முதல்வருக்கு கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் தமிழக அதிகாரிகள் தாமதம்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் தமிழக அதிகாரிகள் தாமதம் செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
   முல்லைப் பெரியாறு அணையின்  நீர்ப்பிடிப்புப் பகுதியான ஆனவாச்சல் என்ற இடத்தில் கேரள அரசு வாகனம் நிறுத்தும் இடம் அமைக்க கற்களை அடுக்கி, மண் மேவி உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, நிலையான கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. இது பற்றி விவசாயிகள் பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து ஆறு மாதங்களாகியும், நடவடிக்கை இல்லை. மேலும் வெள்ளத்தால் சேதமான வல்லக்கடவு கல்பாலம் சீரமைப்பு, வனப்பகுதியில் தார்ச் சாலை அமைப்பு, அணைப் பகுதிக்கு மின்சார இணைப்பு பெறுவது போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தமிழக அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர். இது கேரள அரசுக்கு சாதகமாக உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அணையின் நீர் வரத்து ஓடைகள் இடுக்கி அணைக்கு திருப்பி விடப்பட்டதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையை நிர்வகித்து வரும் சிறப்பு கோட்ட செயல்பாடுகளை ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் பொறியாளர்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று  தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து மனுக்களை அனுப்பியுள்ளனர். 
  இது தொடர்பாக  அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டச் செயலாளர் ஏ.திருப்பதிவாசகன் கூறியது:
  தமிழக அரசு போராடி கேட்டுப் பெற்றுள்ள பணிகளை அணைப்பகுதியில் செயல்படுத்துவதை  பொறியாளர்கள் தாமதப்படுத்தி வருகின்றனர். அதற்கான காரணம் தெரியவில்லை. விளக்கம் கேட்டு மனு கொடுத்தால், பொறுப்பற்ற பதில்களை அனுப்புகின்றனர். எனவே  முதல்வர், துணை முதல்வருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் போராட்டம் நடைபெறும் என்றார். 
  இது பற்றி பெரியாறு அணை பொறியாளர் ஒருவர் கூறுகையில், அணையைப் பராமரிப்பதற்கான வேலைகள் முறையாக நடக்கின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com