ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி உத்ஸவம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு வெண்ணெய்த்தாழி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு வெண்ணெய்த்தாழி உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் 18 நாள் பங்குனித் திருவிழாவும், அதைத் தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறும். நிகழாண்டின் திருவிழா கடந்த மார்ச் 15-இல் பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய நிகழ்வுகளான வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜ அலங்கார சேவை, கோவர்த்தனகிரியில் கண்ணன் திருக்கோலம், மரவுரி ராமர் திருக்கோலம், கண்டபேரண்ட பட்சி வாகனம், வண்ண புஷ்ப பல்லக்கு சேவை, தங்க சூர்யபிரபை ஆகியவை நடைபெற்றன.
16-ஆம் நாள் திருவிழாவான வெண்ணெய்த்தாழி உத்ஸவத்தை முன்னிட்டு காலையில் சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருக்கோயிலின் நான்கு வீதிகள், மேலராஜவீதி, பெரியக்கடைதெரு, பந்தலடி வழியாக வெண்ணெய்த்தாழி மண்டபம் சென்றடைந்தார்.
அப்போது சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோபாலா, கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி சுவாமி மீது வெண்ணெயைச் சாற்றி வழிபட்டனர்.
வெட்டுங்குதிரை உத்ஸவம்: வெண்ணெய்த்தாழி உத்ஸவத்தை தொடர்ந்து, இரவு 7 மணிக்கு வெண்ணெய்த்தாழி மண்டபத்தில் வெட்டுங்குதிரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெருமாள் இராஜ அலங்காரத்தில்(வையாளி) எழுந்தருளி வெட்டுங்குதிரையில் மூன்று முறை செட்டித்தெருவில் உத்ஸவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவை மண்டகப்படிதாரர் சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை தாளாளர் வி.திவாகரன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com