புதுகை அருகேயுள்ள கோயிலில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு

புதுக்கோட்டை, ஜூலை 2:   புதுகை மாவட்டம், தேனிப்பட்டி அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலில் எஞ்சி இருக்கும் சிவலிங்கத்தை புதுக்கோட்டையைச் சேர்ந்த வரலாற்றுப் பேரவையினர் கண்டுடெடுத்துள்ளனர்.   இதுகுற
Updated on
1 min read

புதுக்கோட்டை, ஜூலை 2:   புதுகை மாவட்டம், தேனிப்பட்டி அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலில் எஞ்சி இருக்கும் சிவலிங்கத்தை புதுக்கோட்டையைச் சேர்ந்த வரலாற்றுப் பேரவையினர் கண்டுடெடுத்துள்ளனர்.

  இதுகுறித்து வரலாற்றுப் பேரவை நிறுவனர் புலவர் பு.சி. தமிழரசன் தெரிவித்தது:

  புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் செல்லும் வழியில் 30 கி.மீ. தொலைவில் தேனிப்பட்டி அருகே பழங்கால கோயில் இருப்பதாகக் கல்லுக்குடியிருப்பைச் சேர்ந்த கா. சிதம்பரம் தகவல் அளித்தார்.

  அதைத் தொடர்ந்து, வரலாற்றுப் பேரவை நிர்வாகிகள் ஆர். திருமலைநம்பி, சுப. முத்தழகன், கு.மா. சுப்பிரமணியன், ஆர். பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய குழு அந்தக் கோயிலை ஆய்வு செய்தது.

  அதில், கிபி 14-ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிவலிங்கம் பாம்பாற்றின் வட கரையில் அமைந்திருந்தது. அதைச்சுற்றி உள்ள கோயில் கட்டுமானம் அழிந்த நிலையில் காணப்படுகிறது.

மறைந்து போன ஊர்:  700 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாகுறிச்சி என்ற ஊருக்கு இடைப்பட்ட பகுதியில் இக்கோயில் இருந்திருக்கலாம். காலப் போக்கில் அந்த ஊர் இருந்த இடம் தெரியாமல் அழிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

படைப்பு விழா:  இந்தக் கோயிலுக்கு அருகில் முத்தரையர் குடும்பக் கோயிலான அடைக்கலங்காத்தார் கோயில் உள்ளது. இந்தக் கோயில்களை 12 கரை நாட்டுக் கோயில்கள் எனக் கூறுகின்றனர்.

  ஆடி மாதத்தில் அடைக்கலங்காத்தார் கோயிலில் படைப்பு விழா நடைபெறும் போது, 12 கரை நாட்டாரில் தம்புரான் வகையறாவைச் சேர்ந்த பூசாரி இந்தச் சிவலிங்கத்தின் மீது நின்று அருள்வாக்கு சொன்னதாகவும் செய்திகள் கூறுகின்றன.

  இதுதொடர்பான கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு கோயில் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை ஆராயும் போது மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என்றார் தமிழரசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com