புதுகை அருகே பழங்கால சமணர் கற்சிலை பாகங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை அருகே உள்ள கவிநாடு கண்மாய்க் கரைப்பகுதியில் மாணவர்கள் மரபுவழி நடைப்பயணம் மேற்கொண்டபோது

புதுக்கோட்டை அருகே உள்ள கவிநாடு கண்மாய்க் கரைப்பகுதியில் மாணவர்கள் மரபுவழி நடைப்பயணம் மேற்கொண்டபோது ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த சமணர் சிலை மூன்று பாகங்களாக உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம், சமூக நல ஆர்வலர்கள், மக்கள் பாதை உறுப்பினர்கள், புத்தாஸ் வீரவிளையாட்டுக் கழக மாணவர்கள், எல்லைப்பட்டி ஆய்வுக்குழுவினர் ஆகியோர் இணைந்து புதுக்கோட்டை அருகே உள்ள கவிநாடு கண்மாய்ப்பகுதியில் மரபுவழிப் பயணம் மேற்கொண்டர். அப்போது தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் கரு.இராசேந்திரன், தலைமையில்  குழுவினர் ஆய்வு நடத்தியபோது மூன்று துண்டுகளாக 3 இடங்களில் கிடந்த சிலைகளின் துண்டுகளை ஒன்றுடன் ஒன்றை இணைத்துப்  பார்த்தபோது அந்தச் சிலைக்கு முழு உருவம் கிடைத்தது.
இது குறித்து தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.இராசேந்திரன் கூறுகையில்,  இந்த மரபுவழிப்பயணத்தில் கவிநாடு பகுதியில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தோம். அவையாவும் கடந்த காலங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டவைதான் என்ற போதிலும் மீள் ஆய்வு செய்தோம். அதில் கவிநாடு கண்மாய் கிபி 872-ஆம் ஆண்டு வெட்டப்பட்டு அதில் குமிழிகள் நிறுவப் பெற்றுள்ளன. அதற்கான கல்வெட்டுகள் குமிழியிலேயே உள்ளது. அதன்படி கிபி 872-ஆம் ஆண்டில் அப்பகுதியில் குறுநில மன்னராக ஆட்சி செய்த மூதாண்டி வெங்கன் என்பவரின் உதவியோடு கோமாறன் சடையன் என்ற மன்னன் அந்தப் பாசனக்குளத்தை வெட்டி குமிழிகள் அமைத்துள்ளார்.
சுமார் 6 கிலோ மீட்டர் தூரமுள்ள இதன் கரையில் பாசனத்துக்கேற்றவாறு குமிழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் கல்வெட்டுள்ள குமிழியிலிருந்து வெளியேறும் தண்ணீரானது குளத்தின் புறக்கரையிலேயே 6 வாய்க்கால்களாகப் பிரித்து 6 குளங்களின் மூலம் 6 கிராமங்களுக்குப் பாசன வசதியை ஒரே நேரத்தில்  சரிசமமாக பெறும் அளவிற்கு வேளாண் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
அதேபோல் இந்தக் குளத்தின் உட்பகுதி பரப்பளவு சுமார் 3000-ஏக்கர் இருக்கும். பாசனப் பகுதி என்று பார்த்தால் இங்கிருந்து கிழக்குப் பகுதியில் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லநாட்டுக் கண்மாய் வரை கவிநாட்டுக் கண்மாயிலிருந்துதான் தண்ணீர் செல்கிறது. எனவே இதனைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்த மரபுவழி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்தக் குளத்துக்கரைப் பகுதியில் ஏற்கெனவே ஒரு கற்சிலையின் தலை கிடக்கிறது என்பதை அறிந்திருந்தோம். அதை இப்போது தேடியபோது ஓரிடத்தின் மண்ணில் புதையுண்டு குப்புறக் கிடந்தது. மேலும் வேலிக்கருவை மண்டிக்கிடந்த பகுதியில் சிலையின் அடிப்பாகமும், சற்று தொலைவில் உடைந்த நிலையில் உடல்பாகமும் கிடந்தன.
அவற்றைக் கொண்டு வந்து ஓரிடத்தில் சேர்த்தபோது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சமணர் சிலை என்பது தெரியவந்தது. அதன் தொன்மை, அதன் அமைப்பு போன்றவை ஏற்கெனவே சிறிதளவு சேதப்படுத்தப்பட்டிருந்தாலும் தலையை மட்டுமாவது பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தலையை மட்டும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் ஒப்படைத்திருக்கிறோம். இந்தச் சிலை குறித்து இன்னும் நிறைய ஆய்வு செய்ய வேண்டும். மேலும் சமணர் சிலை கிடைத்த இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களும் நிறைய கிடைத்துள்ளன. அது பற்றியும் ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com