தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரனின் பதவிக் காலம் நிறைவடைவதையொட்டி, அவருக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக க. பாஸ்கரன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.5) நிறைவடைகிறது.
இதையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர்கள், அலுவலர் நிலைப் பணியாளர்கள் சார்பில் அவருக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் சிறப்புரையாற்றினார்.
மேலும், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் நா. மோகன்தாஸ், மருத்துவர் ராதிகா மைக்கேல் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். இதனிடையே, அடுத்த துணைவேந்தரைத் தெரிவு செய்வது தொடர்பாக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆக. 27-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், இக்குழுவினர் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து 3 பேரை ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய உள்ளனர்.
பொறுப்புக் குழு: இந்நிலையில், அடுத்த துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை நிர்வாகம் செய்வதற்காக 3 பேர் கொண்ட பொறுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் ஆர். வெங்கடேசன், பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ். ராஜேந்திரன், வளர் தமிழ்ப் புலத் தலைவர் செ. சுப்பிரமணியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.