3 கோயில்களில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கீழ வீதியிலுள்ள திரெளபதியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கீழ வீதியிலுள்ள திரெளபதியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 28 ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ, மகாலட்சுமி ஹோமங்களும், வாஸ்து சாந்தியும், மிருத்சங்கிராஹணம், புனித நீர் கொண்டு வரும் நிகழ்வும் நடைபெற்றது.  ஜூன் 29, 30 ஆம் தேதிகளில் யாகசாலை பிரவேசம், கும்ப அலங்காரம், யாக பூஜைகள், பூர்ணாஹூதியும், அஷ்ட பந்தனம் சாத்துதல் நிகழ்வும் நடைபெற்றது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் யாகசாலை பூஜைகள், நாடீசந்தனம், மகா பூர்ணாஹூதியும், யாத்ராதானம், கடம் புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் விமான கும்பாபிஷேகமும், திரெளபதி அம்மன் பரிவார மூர்த்தங்கள் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து கும்பங்களுக்கும் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.  மாலையில் மகா அபிஷேகமும், இரவு சுவாமி அம்மன் வீதியுலா புறப்பாடும் நடைபெற்றது.
பட்டுக்கோட்டையில்... பட்டுக்கோட்டையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில்   ஸ்ரீ பிருந்தாம்பிகை  சமேத ஸ்ரீ வில்வாரண்ய ஈஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.  கடந்த வியாழக்கிழமை தொடங்கிய விழாவில்,  ஞாயிற்றுக்கிழமை காலை வரை  ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை சிவாச்சாரியார்கள் கோயில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூரில்...  தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஸ்ரீ அய்யன் சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 29 ஆம் தேதி அனுர்ஞை, விக்னேசுவர பூஜை, கணபதி, நவக்கிரஹ, லட்சுமி ஹோமங்கள், தனபூஜை, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 11 ருத்ரர்களை ஆவாகானம் செய்தல், சாய்பாபாவிற்கு ருத்ர அபிஷேகம், வஸ்த்ர ஹோமம் ஆகியவை நடைபெற்றது. ஜூன் 30 ஆம் தேதி இரண்டாம், மூன்றாம் கால பூஜையும்,  சுமங்கலி, கன்யா உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற்றன.  ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜையும், நாடிசந்தானம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடும், தொடர்ந்து விநாயகர் பரிவார கும்பாபிஷேகம், சாய்பாபா மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாய்பாபாவிற்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாய்பாபாவை வழிபட்டனர். மாலையில் சந்தனகாப்பு வைபவமும், சத்ய நாராயண பூஜையும், இரவு ஆரத்தி எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com