தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கோ. பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கோ. பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இப்பல்கலைக்கழகத்துக்குத் தேசிய தர நிர்ணயக் குழுவினர் (நாக்) அக்டோபர் 10, 11, 12-ஆம் தேதிகளில் வருகின்றனர். இதில், அதிக மதிப்பெண்களைப் பெற முயற்சி செய்வோம். இப்பல்கலைக்கழகத்துக்கு ஏற்கெனவே 2007 ஆம் ஆண்டில் பி பிளஸ் தரம் கிடைத்தது. இப்போது ஏ தரம் கிடைக்கும் என நம்புகிறோம்.
இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் தமிழக அரசு சுமார் 10 திட்டங்களுக்கு ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டங்களை 2019, மார்ச் மாதத்துக்குள் முடித்து, மீண்டும் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் வளர் மையம், தமிழ்ப் பண்பாட்டு மையம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.
இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் முதல் க. பாஸ்கரன் வரை அனைத்து துணைவேந்தர்களும் கொண்டு வந்த திட்டங்களை ஆய்வு செய்து, அவை முன்னெடுத்துச் செல்லப்படும். பழைய திட்டங்கள் என்பதால் கைவிடப்பட மாட்டாது.
தமிழ் மொழியின் பயன்பாட்டை புதுமையாகச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் அமைப்பில் புதுமை ஏற்படுத்தும் விதமாகத் தமிழ்த் தரவகம் உருவாக்கப்படும். இதில், இக்காலத் தமிழ் எப்படி உள்ளதோ, அதற்கேற்ப தரவகத்தைப் புதுமையாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகான தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளில் தேவையான அளவுக்கு மறுபதிப்பு செய்யப்படும். பிற திராவிட மொழிகளில் உள்ள சிறந்த நூல்கள் தமிழில் வெளியிடப்படும். மேலும், ஒப்பாய்வு செய்வதற்கு ஏற்ப கன்னடம், தெலுங்கு, மலையாளம், சம்ஸ்கிருதம் - பிராகிருதம் ஆகிய மொழிகளுக்குத் துறை அல்லது இருக்கை ஏற்படுத்தப்படும்.
சென்னை, அழகப்பா பல்கலைக்கழகங்களில் உள்ளதுபோல, தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் திருக்குறள் மையம் அமைக்கப்படும். இதில், திருக்குறள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தமிழாய்வுக்கு முதலிடமாக இப்பல்கலைக்கழகத்தை மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பாலசுப்பிரமணியன்.
முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள திருவள்ளுவர், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு துணைவேந்தர் மாலை அணிவித்தார். மேலும், தமிழ்த்தாய் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, பதிவாளர் ச. முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com