மதகடிப்பட்டு வாரச் சந்தையில் விற்பனை மந்தம்

பொங்கல் பண்டிகையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதகடிப்பட்டு வாரச் சந்தையில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை.

பொங்கல் பண்டிகையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதகடிப்பட்டு வாரச் சந்தையில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை.
 புதுவை அருகே உள்ள மதகடிப்பட்டில், செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. முந்தைய பிரெஞ்சு ஆட்சி காலத்திலிருந்து நடைபெற்று வரும் இந்தச் சந்தையில், ஆடு, மாடுகள், காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
 இங்கு, அருகே உள்ள விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, திண்டிவனம் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடு, மாடு, காய்கறி, பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்வர்.
 காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தச் சந்தை இயங்கும்.
 வியாபாரிகள், பொதுமக்கள் ஆடு, மாடுகள், காய்கறி உள்ளிட்ட பொருள்களை குறைந்த விலையில் வாங்கிச் செல்வர்.
 இதன் மூலம், வாரம்தோறும் பல லட்சம் ரூபாய் வியாபாரம் நடைபெறும். இதனிடையே தற்போது, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நடத்தப்படும் போகி சந்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதற்காக, சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடு, மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பொங்கல் பண்டிகைக்காக, மாடுகளை அலங்கரிக்கத் தேவையான வண்ணக் கயிறுகள், சலங்கை, மணி, அலங்கார தோரணங்கள் போன்றவையும் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. வழக்கமாக போகி சந்தைக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வரும். ஆனால், மழையின்றி விவசாயம் பொய்த்து விட்டதாலும், மாடுகள் வளர்ப்பு குறைந்து போனதாலும், இந்த முறை 1,000-த்துக்கும் குறைவான மாடுகளே வந்திருந்தன.
 அவற்றை வாங்க விவசாயிகள் குறைந்த அளவிலே வந்திருந்தனர். இதனால், எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரமின்றி போனது.
 இதுகுறித்து, வியாபாரிகள் கூறியது:
 இடவசதி, தீவனமின்றி போனதால், மாடு வளர்ப்பு குறைந்துவிட்டது. மேலும், தற்போது பணத் தட்டுப்பாட்டால் சில வாரங்களாகவே சந்தையில் வியாபாரம் குறைந்து வருகிறது.
 தற்போது, பருவமழையின்றி நிலங்கள் வறண்டு போயுள்ளதால், இந்தாண்டு மாடுகள் விற்பனை, பொங்கல் பொருள் விற்பனை பாதியளவு குறைந்துவிட்டது
 என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com