மாற்றத்திற்கான வியூகத்தை நோக்கிய பயணத்தில்..!: வி.ஜி.என்.  குழும நிர்வாக இயக்குநர் ப்ரதிஷ் தேவதாஸ் பேட்டி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறைச் சட்டம்  மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றின் தொடர் தாக்குதல்களின் விளைவாக ரியல் எஸ்டேட் துறை பெரும் பாதிப்புக்குளாகியிருக்கும் நிலையில்.....
மாற்றத்திற்கான வியூகத்தை நோக்கிய பயணத்தில்..!: வி.ஜி.என்.  குழும நிர்வாக இயக்குநர் ப்ரதிஷ் தேவதாஸ் பேட்டி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறைச் சட்டம்  மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றின் தொடர் தாக்குதல்களின் விளைவாக ரியல் எஸ்டேட் துறை பெரும் பாதிப்புக்குளாகியிருக்கும் நிலையில், இத்துறையில் உள்ள நிறுவனங்கள் தொழிலில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதற்காக புதுமையான வியூகங்களை வகுக்க வேண்டிய நிலையில் உள்ளன. வி.ஜி.என் ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்த குழுமத்தின் பல்வேறு வகையிலான வியூகம் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் உதவியுடன், வளர்ச்சியை நோக்கிய இதன் பயணத்தில் எவ்வித சிறு தடைகளும் ஏற்படாதவாறு, குழுமத்தின் நிர்வாக இயக்குநரான ப்ரதிஷ் தேவதாஸ் தளர்வில்லாமல் செயல்பட்டு வருகிறார். இவரது துடிப்பான தலைமை மற்றும் நிர்வாகத்தின் கீழ், வி.ஜி.என் குழுமத்தின் ஆண்டு வருமானமானது ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 900 கோடியாக உயர்ந்துள்ளது

அவர் நமது குழுமத்தின் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், குழுமத்தின் முன்னுள்ள  சவால்களை எதிர்கொள்வதற்கான பல்வேறு வியூகங்களையும், குழுமத்தின் எதிர்காலம் குறித்த தனது பார்வையினையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் உங்களுக்காக.

தற்போதைய சந்தை நிலவரத்தில் வி.ஜி.என் குழுமத்தின் முன்னுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு எவ்விதமான செயல் திட்டங்களை கைவசம் வைத்திருக்கிறீர்கள்?

தற்போதைய சூழலில் புதிய நிலங்களை வாங்குவதை விட, கையில் உள்ள திட்டங்களை முடிப்பதிலும், கைவசம் உள்ள சொத்துக்களின் மூலதன மதிப்பை பயன்படுத்திக் கொள்வதிலுமே கவனம் செலுத்துகிறோம்.

அந்த சவால்கள் எதிர்கொள்ள முடியாதவை என்று நினைக்கிறீர்களா?

அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. உங்களது பாதையில் எதிர்வரும் சவால்கள் அனைத்துமே சமாளிக்கப்பட வேண்டியவையே.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சொத்து மேலாண்மை சேவைகளையே (property management services) வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம்பி இருக்கும் நிலையில்,  அந்தப் பிரிவை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய இருக்கிறீர்கள்?

எங்களது பெரும்பாமையான திட்டங்கள் நகர எல்லைக்கு உள்ளேயோ அல்லது நகரத்திற்கு அருகிலேயோ அமைந்துள்ளன. எனவே அவற்றை நிர்வகிக்கும் சேவையை வேறொருவருக்கு அளிப்பதில் பிரச்னை இல்லை. இது போன்ற சேவைகளை வழங்குபவர்களுடன்தான் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். வீடுகள் கட்டி முடித்து ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிட்ட காலம் வரை இந்த சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.

அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில் அதிலும் குறிப்பாக 'அலுவலகப் பகிர்வு' (co-working sector) என்னும் கலாசாரம் கவனம் பெறும் சூழலில், அலுவலக இடம் சார்ந்த 'கமர்ஷியல்' பிரிவில் கால்பதிக்க திட்டமுள்ளதா?

தற்போதைக்கு இல்லை. நாங்கள் பொறுத்திருந்து சூழலைக் கவனித்து சரியான சமயத்தில் முடிவெடுப்போம். 

உங்களது சொகுசு அடுக்கு மாடி வீட்டுத் திட்டங்களுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?

அது வளர்ச்சியடைந்து வருகிறது. அது ஒரு முதிர்ந்த சந்தை. இந்த திட்டத்தில் வளர்ச்சியும் மதிப்புமிருப்பதை உணரும் வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள். எங்களது நுங்கம்பாக்கம் திட்டத்தில் இதுவரை 70%-க்கும் மேலாக வீடுகளை விற்பனை செய்திருக்கிறோம்.

வருங்காலத்தில் உங்களது நடவடிக்கைகளை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம்  செய்யும் திட்டம் உள்ளதா?

உடனடியாக இல்லை.

இந்தியா முழுவதும் பரந்து செயல்படும் பல பெரிய நிறுவனங்கள் சென்னை சந்தையில் ஆதிக்கம் செலுத்தும்போது, உங்களது திட்டங்களுக்கான தேவையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் தனித்துவமிக்க அம்சங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்?

ரியல் எஸ்டேட் என்பது தற்போது மிகவும் உள்ளூர் மயமாக்கப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்கள் அறியப்பட்ட ப்ராண்டுகளுடன் உள்ளூர் அளவில் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள். எல்லா வணிகத்தையும் போலவே, தரமும் மதிப்பும் கொண்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள்.

ரியல் எஸ்டேட் துறையில் நுழைய விரும்பும் இளம் தொழில் முனைவோர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?

அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது என்று கூறுவேன். பொறுத்திருங்கள், கவனித்து பின்னர் ஒரு முடிவெடுங்கள்.

சென்னையில் தற்போதைய ரியல் எஸ்டேட் துறை சூழல் எப்படி இருக்கிறது?

ரியல் எஸ்டேட் துறை தற்போது வளர்ச்சியினை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இன்னும் ஒன்றிரண்டு காலாண்டுகளில் வீடுகளை விரைவாகக் கட்டி வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பதில் கவனிக்கதக்க மாற்றம் இருக்கும்.

சென்னையின் முதலீட்டாளர்களுக்கு ரியல் எஸ்டேட்  துறை என்பது ஒரு சிறந்த வாய்ப்பாகும். நில மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் அதே நேரத்தில், சென்னையைச் சுற்றி வளர்ந்து வரும் பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அத்துடன் அடுக்கு மாடி குடியிருப்புகள், நிலங்கள் மற்றும் வில்லாக்கள் ஆண்டு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கிறது.

ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறைச் சட்டம்  மற்றும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதன் வாயிலாக இந்தத் துறையானது வெளிப்படைத்தன்மையுடனும் நெறிப்படுத்தப்பட்ட ஒன்றாகவும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகவும் அமைந்துள்ளது. வாங்குபவர்களின் மனநிலை மாறிவரும் சூழலில், துறையில் நேர்மையாக இயங்குபவர்களும் அதற்கு ஏற்றவாறு மாறியுள்ளனர். இது ரியல் எஸ்டேட்  துறைக்கு நல்ல விஷயமாகும். அதேசமயம் புதிய திட்ட அறிவிப்புகள் வெகுவாக குறைந்து விட்டன.

சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனையாகாமல் இருப்பதன் காரணம் என்ன?

தேவைக்கும் கட்டப்படும் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டின் காரணமாக ஒரு சில இடங்களில் தேவைக்கு அதிகமாக வீடுகள் கட்டப்படுகின்றன. அதேசமயம் ஐ.டி உள்ளிட்ட சில துறைகளின் வளர்ச்சி குறைந்துள்ளது.  ஆனாலும் சென்னை தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு நகரம் என்பதாலும், தினந்தோறும் அங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும் தேங்கியிருக்கும் வீடுகள் விரைவில் விற்பனையாவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டிற்கும் குறைந்து வருகிறது.    

ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறைச் சட்டமானது இன்றைய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினை அதிகரித்துள்ளதா?

ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறைச் சட்டம் இத்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தியுள்ளது. அத்துடன் துறையில் மிகுந்த வெளிப்படைத் தன்மையையும் பொறுப்பையும் கொண்டு வந்துள்ளது. கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகளை ஒப்படைப்பதில் ஏற்படும் தாமதம்,  கூறியபடி திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் சொத்துக்களின் சட்டப்பூர்வ தன்மை ஆகியவற்றின் காரணமாக பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களின் சிரமங்களைப் போக்கவே ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே இச்சட்டம் வாடிக்கையாளருக்கு அனுகூலமான ஒன்று என்று கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் சிரமங்களைப் போக்க மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளதால், வீடுகளில் முதலீடு செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இச்சட்டம் கண்டிப்பாக நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும்.

வீடுகளைக் கட்டி முடித்து ஒப்படைப்பதில் வி.ஜி.என் குழுமத்தின் திட்டச் சாதனை என்ன?

நாங்கள் கடந்த வருடம் டிசம்பர் வரை 6500 வீடுகளைக் கட்டி முடித்து ஒப்படைத்துள்ளோம். அத்துடன் 10000 வீடுகள் கட்டப்பட்டும், செயல்திட்ட நிலையிலும் இருக்கின்றன.

வீடுகளை வாங்குபவர்கள் வி.ஜி.என் குழுமத்தின் மீது பதில் நம்பிக்கை வைத்திருப்பதற்கான காரணிகள் என்று எவற்றைக் கூறுவீர்கள்?

1942-ல் துவக்கப்பட்ட வி.ஜி.என் குழுமமானது, ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 76 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வளர்ச்சி கண்டுவருகிறது. இதுவரை 20 மில்லியன் சதுர அடி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சொத்துக்கள் வாங்குவதென்றால் எப்போதுமே வி.ஜி.என்-ஐத் தேர்வு செய்கிறார்கள். அத்துடன் எங்களது திட்டங்கள் அனைத்தும் எங்களது சொந்த நிலங்களில்  அமைந்துள்ளன. அவை நகரத்திற்கு அருகில் அமைந்திருப்பதுடன், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பல்பொருள் சிறப்பு அங்காடிகள் சூழ அமைந்துள்ளன. அங்கிருந்து சாலைகள், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை இணைக்கும் வசதியும் உள்ளது.  

வி.ஜி.என் குழுமம் எப்போதும் தங்களது கட்டுமானங்களில் உயர் தரநிர்ணயங்களை கடைப்பிடிப்பதுடன், தேவையான எல்லா வசதிகளுடன் உரிய நேரத்தில் முடித்து ஒப்படைக்கிறது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com