பாகுபலி சர்ச்சை: வருத்தம் தெரிவித்தார் நடிகர் சத்யராஜ்!

நடிகனாக இருப்பதைவிட எவ்வித மூடநம்பிக்கையும் இல்லாத தமிழனாக இறப்பதே பெருமை, தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்...
பாகுபலி சர்ச்சை: வருத்தம் தெரிவித்தார் நடிகர் சத்யராஜ்!

பாகுபலி சர்ச்சை தொடர்பாக நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி விவகாரத்தில் நடிகர் சத்யராஜ், கர்நாடகத்துக்கு எதிராகப் பேசியதாக குற்றம்சாட்டி, அவர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள 'பாகுபலி-2' திரைப்படத்தை தங்கள் மாநிலத்தில் வெளியிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பாகுபலி-2 படத்தை வெளியிட அனுமதிக்குமாறு கன்னட அமைப்பினரிடம் படத்தின் இயக்குநர் ராஜமெளலி ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) விடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், '9 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தனிப்பட்ட முறையில் தெரிவித்த ஒரு கருத்து உங்களை காயப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் ஏற்கெனவே தயாரித்த பாகுபலி முதல் பாகம் உள்பட சத்யராஜ் நடித்த பல திரைப்படங்கள் கடந்த 9 ஆண்டுகளில் கர்நாடகத்தில் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை மட்டும் சத்யராஜ் ஏற்றுள்ளார். அவர் தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்ல' என்று ராஜமெளலி கூறியுள்ளார். ஆனால், சத்யராஜ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று கன்னட அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .

இந்நிலையில், காவிரி விவகாரம் குறித்து நடிகர் சத்யராஜ் பேசிய விடியோ, கர்நாடகத்தில் சமூக வலைதளங்கள் மூலம் கடந்த சில நாள்களாக வேகமாகப் பரவி வருகிறது. இது, பாகுபலி-2 படத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்றைய தினம் 'பெங்களூரு பந்த்' என்ற பெயரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும் கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

 கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இது குறித்துத் கூறியதாவது: ராஜமெளலி அல்லது அவர் எடுத்துள்ள திரைப்படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அப்படத்தில் நடித்துள்ள சத்யராஜ் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும். ஏப்ரல் 28-ஆம் தேதி கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெறும். சத்யராஜின் மன்னிப்பைத் தவிர வேறு எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்றார்.

இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ். இதுகுறித்து வீடியோவின் வழியாக அவர் கூறியுள்ளதாவது:

9 வருடங்களுக்கு முன்பு காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ்த் திரைப்படங்கள் நிறுத்தப்பட்டன. அதுதொடர்பாக நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பலரும் ஆவேசமாகப் பேசினார்கள். அதில் நானும் ஒருவன். அதேபோல காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற கூட்டத்தில் கன்னட நடிகர்களும் ஆவேசமாகப் பேசினார்கள். அப்போது நான் பேசிய பேச்சுக்குப் பிறகு நான் நடித்த பல படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளன. கன்னடப் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. நேரமின்மையால் நடிக்கவில்லை.

நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்லன். நீண்டநாளாக என்னிடம் உதவியாளராக உள்ளவரின் தாய்மொழி கன்னடம் தான். 9 வருடங்களுக்கு முன்பு பேசிய பேச்சுக்காக தற்போது மனபூர்வமாக வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாகுபலி 2 படத்தை கன்னட மக்கள் வெளியிட ஒத்துழைக்க வேண்டும். பாகுபலி என்கிற மிகப்பெரிய படத்தின் சிறிய தொழிலாளி நான். என்னால் ஏற்பட்ட தொல்லைகளைப் பொறுத்துக்கொண்ட இயக்குநர் ராஜமெளலிக்கு நன்றி. எதிர்காலத்தில் என்னால் இதுபோன்ற பிரச்னைகள் வரும் என்று படத்தயாரிப்பாளர்கள் நினைத்தால், என்னை வைத்துப் படம் எடுக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இனி வரும் காலங்களில் தமிழ் ஈழப் பிரச்னை, காவிரி பிரச்னை என தமிழர் நலன் தொடர்புடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று தெள்ளத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். நடிகனாக இருப்பதைவிட இறப்பதைவிட, எந்தவித மூடநம்பிக்கையும் இல்லாமல் தமிழனாக இருப்பதும் இறப்பதுமே பெருமை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com