ரஜினி, கமல் கவலை அடைந்துள்ளார்கள்: கேளிக்கை வரி குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கிடைக்கும் முக்கிய வருவாய் என்று அமைச்சர்...
ரஜினி, கமல் கவலை அடைந்துள்ளார்கள்: கேளிக்கை வரி குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாள்களாக 1,200 திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரையில் மொத்தம் 1200 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் காலை, பிற்பகல், மாலை, இரவு என 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. வார இறுதி நாள்களில் மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும். கடந்த 3-ம் தேதி முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு காலவரையற்ற போராட்டம் நடைபெறுகிறது.

சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது:

கேளிக்கை வரியால் திரைத்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏராளமானோர் திரைத்துறையை நம்பி இருக்கிறார்கள். திரைத்துறை நலிந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் வரிவிதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்று இரட்டை வரி விதிப்பை ரத்து செய்யவேண்டும். கேரளாவில் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே முதலமைச்சர் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்றார். 

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் வேலுமணி, கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கிடைக்கும் முக்கிய வருவாய். கேளிக்கை வரி விவகாரம் தொடர்பாக இன்று மாலையில் திரைத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com