கணவரை விவாகரத்து செய்கிறேன்: பாடகி சுசித்ரா அறிவிப்பு

என் கணவர் தங்கமான மனிதர். ராமரை பூமியில் பார்த்தேன் என்றால் அவர் கார்த்திக் தான். இந்த முடிவு இரு தரப்புக்கும் கடினமான ஒன்று...
கணவரை விவாகரத்து செய்கிறேன்: பாடகி சுசித்ரா அறிவிப்பு

கணவரும் நடிகருமான கார்த்திக்கை தான் விவாகரத்து செய்ய உள்ளதாக பாடகி சுசித்ரா பேட்டியளித்துள்ளார்.

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. இதையடுத்து சுசித்ராவின் சர்ச்சைப் பதிவுகளுக்கு ஒரு முடிவு ஏற்படும் என்று நம்பப்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டதன் காரணத்தையும் சுசித்ராவுக்கு நேர்ந்துள்ளது குறித்தும் அவருடைய கணவர் நடிகர் கார்த்திக் விளக்கம் அளித்தார். கடைசியாக, சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு சுசித்ரா பேட்டியளித்தபோது கூறியதாவது:

என்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்னுடைய வழக்கறிஞர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இது யார் செய்திருப்பார் என்று என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. என்னுடைய கணவர் உள்ளிட்ட பலருடைய சமூகவலைத்தளக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. வேண்டுமானால் என்னுடைய கணவரிடம் கேட்டுக்கொள்ளலாம். என்னுடைய சமூகவலைத்தளக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் என்னால் எதையும் மறுத்தும் தெரியாது என்றும்தான் கூறமுடியும்.  

ஜல்லிக்கட்டு சமயத்தில் என்னுடைய ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. 3 வாரங்களுக்கு முன்பு என்னுடைய ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டு பலவிதமான ட்வீட்கள் வெளியாகின. ட்விட்டர் நிர்வாகத்திடம் என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கும்படி எழுதி அனுப்பினேன். அதோடு அது முடிந்துவிட்டது என்றுதான் எண்ணியிருந்தேன். இருநாள்களுக்கு முன்பு இரவில் பாடல் ஒலிப்பதிவு முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கிவிட்டேன். அப்போது தனுஷ் அலுவலகத்தில் இருந்து காலையில் 9 மணிக்கு எனக்கு போன் வந்தது. உங்கள் ட்விட்டர் கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதை உடனே கவனியுங்கள் என்று கூறப்பட்டது. அப்போதுதான் நடந்தவற்றை நான் கவனித்தேன். என்னால் முடிந்தவரை அனைத்தையும் நீக்க முயற்சி செய்தேன். ஆனால், பல்வேறு தளங்களிலிருந்து அவை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டன. மற்ரவர்களை மானபங்கப்படுத்தும்படி பதிவுகள் வெளியிடப்படுவதால் நான் காவல்துறையை அணுகியுள்ளேன். என்னுடைய ட்விட்டர் கணக்கை மூடச் சொல்லி ட்விட்டருக்குக் கோரிக்கை விடுத்தபிறகு நான் சொந்தமாக ஒரு ட்வீட் கூட எழுதவில்லை. 

என்னுடைய ட்விட்டர் கணக்கில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்ளார்கள். ஆனால் என்னுடைய ட்விட்டர் கணக்குக்கு ப்ளூ டிக் கிடையாது. எனவே இதுபோன்ற ட்விட்டர் கணக்கைச் சுலபமாக ஹேக் செய்துவிடமுடியும். ட்விட்டர் கூட காப்பாற்றாது. எனக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருப்பதால் ஒருவர் மீதான வன்மத்தைப் பயன்படுத்த என்னுடைய ட்விட்டர் கணக்கை மேடையாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள் என எண்ணுகிறேன். யாருக்கு யார் மீது பொறாமை, யார் யாரைப் பழிவாங்குகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் கடந்த 10 வருடங்களாகத் திருமண வாழ்க்கையில் இருந்தேன். என் திருமண வாழ்க்கை விவாகரத்து நோக்கி உள்ளது. அது என் சொந்த வாழ்க்கை. அதையும் இவர்கள் நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். நீங்கள் ஒருவரை வெறுத்தாலும் மனிதாபிமானமில்லாமல் நடந்துகொள்ளக்கூடாது. 

என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியானதைப் பார்க்கவேண்டாம் என என் வழக்கறிஞர் கூறியுள்ளார். எனவே நானும் எதையும் பார்க்கக்கூட இல்லை. நான் இப்போது சென்னையில் தான் உள்ளேன். இப்போதுகூட த்ரிஷா படத்துக்காகப் பாடல் ஒன்றைப் பாடிவிட்டு வந்தேன். நான் மருத்துவமனையில் இருந்தேனா, பாடல் பதிவில் இருந்தேனா என்று இசையமைப்பாளர் அம்ரீஷிடம் கேட்டுக்கொள்ளலாம். என் வேலை சகஜமாகப் போய்க்கொண்டுதானிருக்கிறது. 

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளேனா என்று கேட்கிறீர்கள். அது என் சொந்த வாழ்க்கை. என் விவாகரத்துடன் தொடர்புடையது. அதுகுறித்து பேச விரும்பவில்லை. ஆமாம். என்னைக் கடந்த ஒரு வாரத்தில் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். அது என் விவாகரத்துடன் தொடர்புடையதால் என் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 

எனக்கு எதிரிகள் கிடையாது. ரேடியோ மிர்ச்சியில் 10 வருடங்கள் வேலை செய்தபோதுகூட ஆதரவாளர்கள்தான் நிறைய பேர் இருந்தார்கள். வேண்டுமானால் நான் நிறைய ஆங்கிலம் கலந்து பேசுகிறேன் என்று விமரிசனம் செய்தவர்கள் உண்டு. இந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவள். 

என்னுடைய புகழைத் தாங்கிக்கொள்ள முடியாமல் என் கணவர் கார்த்திக் இதைச் செய்கிறாரா என்று கேட்கிறீர்கள். அவர் இதைச் செய்யமாட்டார். அவர் ராமர். தங்கமான மனிதர். ராமரை பூமியில் பார்த்தேன் என்றால் அது கார்த்திக்தான். நாங்கள் விவாகரத்து செய்ய உள்ளோம் என்பது எனக்குத் தெரியும். இந்த முடிவு இரு தரப்புக்கும் கடினமான ஒன்று. தீர்க்கமுடியாத ஒரு பிரச்னையால்தான் விவாகரத்து செய்யவேண்டிய நிலைமை உருவானது.   

யார் ஹேக் செய்தார்கள் என்பதைக் கிட்டத்தட்ட கண்டுபிடித்தாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு என் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தபோது ஒரு தனியார் அமைப்பை அணுகி இதுகுறித்து விசாரித்து யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க அணுகினேன். இப்போது எனக்கு ஓர் அறிக்கை அவர்களிடமிருந்து வந்துள்ளது. சென்னையில் உள்ள ஓர் அலுவலகத்தில் இக்காரியத்தைச் செய்துள்ளார்கள். ஹேக்கர் அலுவலகம், மொழிபெயர்ப்பு மையம் என்பதாகத் தகவல் வந்துள்ளது. 

இந்தப் பிரச்னை குறித்து புகார் அளிக்க சரியான அமைப்பு நம்மிடம் கிடையாது என்பது துரதிர்ஷ்டம். எந்தக் காவல் அலுவலகத்துக்கு போன் செய்தாலும் எங்களுக்கே இதை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. அங்கே செல்லுங்கள் இங்கே செல்லுங்கள் என்றே கூறுகிறார்கள். எனக்கு வேறு ஒரு சின்ன மிரட்டல் உள்ளதால் என்னால் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியவில்லை. காவல் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளிக்கமுடியாமல் உள்ளேன். 

என் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் ஒரு குழுவாகச் செயல்படுகிறார்கள். எனக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்கள் வழியில் நான் சென்றது கிடையாது. அவர்களைப் பற்றி நல்லவிதமாகவும் சொன்னது கிடையாது. கெட்ட விதமாகவும் சொன்னது கிடையாது. என்னை விட்டுவிடுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com