தனுஷ் உடலில் மேலூர் தம்பதியர் குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் இல்லை!

தனுஷின் உடலில் இருந்த மச்சம் லேசர் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தவறு என அவரது அங்க அடையாளங்களைச் சோதனையிட்ட...
தனுஷ் உடலில் மேலூர் தம்பதியர் குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் இல்லை!

நடிகர் தனுஷின் உடலில் இருந்த மச்சம் லேசர் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தவறு என அவரது அங்க அடையாளங்களைச் சோதனையிட்ட மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி, மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு, மேலூர் தம்பதியர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், தனுஷ் தங்கள் மகன் தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன. அவரது இடது காரை எலும்பின் மேல் ஒரு மச்சமும், இடது முழங்கையில் ஒரு தழும்பும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, மேலூர் தம்பதியர் குறிப்பிட்டுள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது என்று கூறி நடிகர் தனுஷை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்களை பதிவாளர் (நீதித்துறை) முன்னிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையிலான மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பான அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் தனி அறையில் திங்கள்கிழமை விசாரித்தார். அப்போது நடிகர் தனுஷின் உடலில் உள்ள அடையாளங்களைச் சோதனையிட்ட மருத்துவர்கள், அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

அதுகுறித்து மேலூர் தம்பதியர் தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், நடிகர் தனுஷின் இடது காரை எலும்பில் மச்சமும், இடது முழங்கையில் தழும்பும் இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மச்சத்தை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியும். ஆனால், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் தழும்புகளின் அளவைக் குறைக்க முடியுவே தவிர அதை முற்றிலுமாக அகற்ற முடியாது. நடிகர் தனுஷின் உடலில் மேலோட்டமாக இருந்த மச்சம், லேசர் சிகிச்சை மூலம் எவ்வித தடயமுமின்றி அகற்றப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதை டெர்மாஸ்கோப் கருவி மூலம் கண்டறிய முடியும். நவீன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தழும்பின் அளவை மட்டுமே குறைக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலூர் தம்பதியர் தரப்பு வழக்குரைஞரின் பேட்டியை அடுத்து நடிகர் தனுஷின் உடலில் இருந்த மச்சம் லேசர் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இத்ததகவலை தனுஷின் அங்க அடையாளங்களைச் சோதனையிட்ட மருத்துவர்கள் மறுத்துள்ளார்கள்.

மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டீன் வைரமுத்து ராஜா இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். தனுஷின் உடலில் மேலூர் தம்பதியர் சொன்ன அங்க அடையாளங்கள் இல்லை. அதேபோல மச்சத்தை அழிக்க முயற்சி நடந்திருந்தால் அதற்கான அடையாளங்கள் நிச்சயம் இருக்கும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அங்க அடையாளங்களைத் தடயமில்லாமல் அழிப்பது கடினம் என்று கூறியுள்ளார்.

நீதிமன்றம், மருத்துவர்களிடம் மூன்று கேள்விகளை முன்வைத்தது. 1. மேலூர் தம்பதியர் கூறியபடி தனுஷ் உடலில் அங்க அடையாளங்கள் உள்ளதா? 2. அறுவை சிகிச்சை மூலமாக அவற்றை அழிக்க வாய்ப்புள்ளதா? 3. அப்படியொரு அறுவை சிகிச்சை நடந்திருந்தால் அதற்கான தடயங்கள் எதுவும் உள்ளனவா?

இதற்கு தங்களது அறிக்கையில் பதிலளித்த மருத்துவர்கள் கூறியதாவது: மேலூர் தம்பதியர் கூறியதுபோன்ற அங்க அடையாளங்கள் தனுஷ் உடலில் கிடையாது. இரண்டாவதாக, உடலில் உள்ள மச்சத்தை அகற்றமுடியும். ஆனால் அதனால் உண்டாகும் வடுவை மறைக்கமுடியாது. அறுவை சிகிச்சை மூலம் அதனை ஓரளவு குறைக்கமட்டுமே முடியும். மூன்றாவது கேள்விக்கு பதிலளிக்கும்போது, மேலோட்டமாக உள்ள மச்சத்தை மட்டுமே அகற்றமுடியும். ஆனால் அந்த மச்சம் பெரியதாக இருந்தால் அதன் தடயங்களைக் கண்டுபிடிக்கமுடியும். நீக்க முயற்சி செய்திருந்தால் அதனைக் கண்டுபிடித்துவிடமுடியும் என்றே பதில் அளித்திருந்தார்கள். இந்த மருத்துவ அறிக்கை இணையத்திலும் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கு மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com