‘செண்பகமே... செண்பகமே’  பாடல் புகழ் நிஷாந்தி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?!

அக்கா பானுப்ரியா போலவே நிஷாந்தியும் இப்போது அம்மா, அக்கா, அண்ணி, அல்லது சிறப்பு குணச்சித்திர வேடங்கள் என எதில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறார்.
‘செண்பகமே... செண்பகமே’  பாடல் புகழ் நிஷாந்தி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?!

தமிழ் ரசிகர்களுக்குப் பானுப்ரியாவை ஞாபகமிருக்கக் கூடும். பானுப்ரியாவுக்கு சாந்திப்ரியா @ நிஷாந்தி என்ற பெயரில் ஒரு தங்கை இருந்தாரே அவரை நினைவிருக்கிறதா? அவர் உங்கள்நினைவிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட அவர் நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற நினைவை விட்டு நீங்காத சில சாகாவரம் பெற்ற பாடல்கள் ராஜாவின் இசை உள்ள வரை நம் எல்லோருக்குமே
எப்போதும் நினைவிலிருக்கும். யோசித்துப் பாருங்கள்...

எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் ராஜா இசையில், ஆஷா போஸ்லே பாடிய செண்பகமே, செண்பகமே பாடல் யாருக்காவது மறக்குமா என்ன? அதே... அதே!

நிஷாந்தி தமிழில் சில திரைப்படங்களில் நடித்தார், பிறகு டோலிவுட் பக்கம் சென்றவர் அப்படியே பாலிவுட்டுக்குப் பிளைட் பிடித்து சென்று செட்டிலானவர் தான் பிறகு தமிழ் பக்கம் வரவே இல்லை.

பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த போது பிரபல பாலிவுட் பட அதிபர், தயாரிப்பாளர் கம் நடிகரான வி.சாந்தாராமின் பேரனான சித்தார்த்ராயைத் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு இரு மகன்களைப் பெற்றெடுத்தார் சாந்திப்ரியா @ நிஷாந்தி. வாழ்க்கை அப்படியே சென்று கொண்டிருந்தால் ஒரு தெளிந்த நீரோடையாகத்தான் இருந்திருக்கக் கூடும். ஆனால் வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடையாக மட்டுமே இருந்து விடுவதில்லையே! நிஷாந்தியின் வாழ்விலும் அப்படியோர் சோதனை வந்தது. தனது கணவர் சித்தார்த் ராயை 2004 ஆம் ஆண்டில் ஒரு ஹார்ட் அட்டாக்கில் பறிகொடுத்தார். இப்போது தன் இரு மகன்களுடன் மும்பையில் வசிக்கும் நிஷாந்தி தனது கணவரது குடும்பத்துக்குச் சொந்தமான ‘ராஜ்கமல்’ ஸ்டுடியோவின் நிர்வாக வேலையில் பங்கெடுத்துக் கொண்டு வருவதாக டோலிவுட் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, இந்தி எந்த மொழியானாலும் சரி நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் தற்போது அதை ஏற்றுக் கொண்டு செய்ய தனக்கு நிறைய அவகாசம் இருப்பதால் நடிப்பதிலும் ஆர்வம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அக்கா பானுப்ரியா போலவே நிஷாந்தியும் இப்போது அம்மா, அக்கா, அண்ணி, அல்லது சிறப்பு குணச்சித்திர வேடங்கள் என எதில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் ஒரே ஒரு கண்டீஷன்... அவருக்கான கதாபாத்திரம் வெறுமே திரையில் வந்து செட் பிராப்பர்ட்டி போல நின்று விட்டுச் செல்வதாக இருக்கக் கூடாது. நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்புள்ள வேடங்கள் எனில் இளம் இயக்குனர்கள் நிஷாந்தியை அணுகலாம். அவர் நடிக்கத் தயார். என நிஷாந்தியே தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com