'மெர்சல்' பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய இடைக்காலத் தடை! ரசிகர்கள் அதிர்ச்சி!

மெர்சல் என்கிற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது...
'மெர்சல்' பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய இடைக்காலத் தடை! ரசிகர்கள் அதிர்ச்சி!

மெர்சல் என்கிற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை - ஏ.ஆர்.ரஹ்மான். நேற்று இயக்குநர் அட்லியின் பிறந்தநாள். அதனையொட்டி மெர்சல் பட டீசர் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களில் டீசர் சாதனை படைத்துள்ளது. உலகளவில் யூடியூபில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மெர்சல் டீசர் பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியாக இருந்தார்கள்.

இந்நிலையில் மெர்சல் என்கிற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தயாரிப்பாளர் ராஜேந்திரன் தன்னுடைய மனுவில் கூறியதாவது: ஏ.ஆர். பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் மெர்சலாயிட்டேன் என்கிற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறேன். 2014-ல் இந்தத் தலைப்பைப் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் மெர்சல் என்கிற தலைப்பில் நடிகர் விஜய்யும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மெர்சல் மற்றும் மெர்சலாயிட்டேன் ஆகிய இரு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம் தான். மெர்சல் என்கிற தலைப்பில் படம் வெளிவந்தால் எனக்குப் பாதிப்பு ஏற்படும் என்று மனுவில் குறிப்பிடிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதையடுத்து, மெர்சல் என்கிற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய அக்டோபர் 3-ம் தேதி வரை இடைக்காலத் தடையை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகப் பொருட்செலவில் படம் தயாரிப்பதால் தடை விதிக்கக்கூடாது என்று தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மெர்சல் தலைப்பைப் பயன்படுத்தக்கூடாது என்கிற இந்த உத்தரவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com