ஆர்யாவின் மனைவியாகப் போவது யார்? பிக் பாஸ் அளவுக்கு ‘எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு; ஆரவார வரவேற்பு இல்லையே!

நடுவில், ஆர்யாவின் இந்த ரியாலிட்டி ஷோ இந்தியக் கலாசாரத்தை அவமதிப்பதாக இருக்கிறது. பெண்களை இழிவு படுத்தும் விதமாக இருக்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது.
ஆர்யாவின் மனைவியாகப் போவது யார்? பிக் பாஸ் அளவுக்கு ‘எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு; ஆரவார வரவேற்பு இல்லையே!

கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்றொரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் ஆர்யா, இந்த நிகழ்ச்சியின் மூலமாகத் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதற்கு வந்து குவிந்த விண்ணப்பங்களில் இருந்து 16 பெண்களை ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சி மூலமாகத் தேர்வு செய்திருந்தார். இந்த 16 பெண்களும் ஆர்யாவுடன் ஜெய்ப்பூர் சென்று அங்கு தங்கி இருந்து ஒருவருக்கொருவர் பழகிப் பார்த்து எந்தப் பெண் ஆர்யாவுக்குப் பொருத்தமானவர் என்பதை ஆர்யாவே நிகழ்ச்சியின் முடிவில் கண்டடைவது தான் இந்நிகழ்ச்சிக்கான கான்செப்ட். ஒருவழியாக கலந்து கொண்ட பெண்களில் பலரும் வடிகட்டப்பட்டு தற்போது அபர்னதி, அகாதா, சுஸானா, ஸ்வேதா, சீதாலட்சுமி எனும் 5 பெண்களில் வந்து நிற்கிறது இந்த ஷோ. இந்த 5 பெண்களிலும் 4 பேர் வடிகட்டப்பட்டு இறுதியில் முழுதாக ஆர்யாவின் மனதைக் கவர்ந்த பெண் எவரோ அவரே அவருக்கு மனைவியாகப் போகிறவர் என ஆர்யாவும், சேனலும் அறிவிப்பார்கள். இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரும் நடிகை சங்கீதா தான் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூட. அதோடு ஆர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தாண்டி இதை ஒரு ரியாலிட்டி ஷோ என்ற முறையில் பார்த்தீர்களானால் இது பார்வையாளர்களுக்கு முற்றிலும் பொழுது போக்கு அம்சங்களைத் தரக்க்கூடிய நிகழ்ச்சியாக இருந்தும் பார்வையாளர்கள் மட்டத்தில் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் அளவுக்கு இதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக் கூடிய அம்சம் என்னவோ குறைவு தான். ஆர்யாவுக்காகவும், கலந்து கொண்ட இளம்பெண்களுக்காகவும் கல்லூரிப் பெண்களும், பள்ளியிறுதி பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இதை ரசிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பெரியவர்களிடையே மணப்பெண்ணை ரியாலிட்டி ஷோ மூலம் தேர்வு செய்ய நினைக்கும் ஆர்யாவின் எதிர்பார்ப்பு கேலிக்கு இடமானதாக இருக்கிறது. இது இதன் பாதக அம்சங்களில் ஒன்று. அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களில் சிலர் தங்களைப் புரமோட் செய்து கொள்ளும், மக்களிடையே தங்களது முகத்தைப் பாப்புலர் ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிய வந்ததால் பார்வையாளர்களிடையே இந்த நிகழ்ச்சியைக் காணும் ஆர்வம் படிப்படியாக குறையத் தொடங்கி விட்டது என்பது உண்மை.

ஆர்யா, போட்டியில் தன்னுடன் கலந்து கொண்டு பங்கு பெற்ற அத்தனை இளம்பெண்களுடனும் நேசத்துடனே இருந்தார்.. குறைந்த பட்சம் இருப்பதாகக் காட்டிக் கொண்டார். எலிமினேட் செய்யப்படவிருப்பதைக் கூட சோகம் கவிந்த முகத்துடனே சொல்லி வந்திருக்கிறார். நிச்சயமாக இந்திய திருமணச் சட்டங்களின் படி ஆர்யாவால் இந்த ஷோவில் கலந்து கொண்ட அத்தனை பெண்களையும் மணக்க முடியாது. எவராவது ஒருவரைத் தான் மணக்க முடியும். அந்த ஒருவரையும் மணப்பதற்கு முன் என்ன விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரியவில்லை. ஏனெனில், இந்தியில் இதே போன்றதொரு ஷோ மூலமாகத் தனது வாழ்க்கைத் துணைவரை தேர்வு செய்தவரான நடிகை மல்லிகா ஷெராவத் பிறகு ஏனொ அவருடன் சண்டையிட்டு திருமணத்திற்கு முன்பே பிரிந்து விட்டார். எனவே ஆர்யாவின் கதை என்னவாகும் என்பது நிகழ்ச்சியின் நிறைவு அறிவிப்பன்று தான் தெரிய வரும்.

நடுவில், ஆர்யாவின் இந்த ரியாலிட்டி ஷோ இந்தியக் கலாசாரத்தை அவமதிப்பதாக இருக்கிறது. பெண்களை இழிவு படுத்தும் விதமாக இருக்கிறது என்று நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிகழ்ச்சி அதன் இறுதிக் கட்டத்தை நோக்கி வெகு விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

முடிவாக ஆர்யாவின் மனைவி யார் என்பதில் அகாதா, சுஸானா, அபர்னதி மூவருக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது என சமூக ஊடகங்களில் திரி பற்ற வைத்திருக்கிறார்கள் இந்நிகழ்ச்சியின் தொடர் பார்வையாளர்கள். இதில் அகாதா போலியானவர் என அவருடன் அந்தப் போட்டியில் பங்கு பெற்று எலிமினேட் ஆன பிற போட்டியாளர்கள் தெரிவித்திருப்பதாகத் தகவல். அபர்னதி வெளிப்படையாகப் பேசக்கூடிய உண்மையான நபராக இருந்த போதும் அவரது அப்பட்டமான வெளிப்படைத் தன்மையே அவருக்கு எதிராகத் திரும்பக் கூடும். என்றும் பேசப்படுகிறது. சுஸானா எனும் கனடாவைச் சேர்ந்தவரே இது வரை ஆர்யாவிடன் இருந்து அதிக எண்ணிக்கையில் டோக்கன் ஆஃப் லவ் என்று சொல்லப்படக் கூடிய இதய வடிவ கைக்காப்பை வென்றவர் என்பதால் அவருக்கு போட்டியில் ஜெயித்து ஆர்யாவின் மனைவியாகும் வாய்ப்பு நிறைய இருக்கிறது என்கிறார்கள். இதுவரையில் இந்ந்கழ்ச்சியின் போக்கு இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. சிலர் தொடர்ந்து பார்த்து விட்டு சமூக ஊடகங்களில் அதைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தாலும் கூட ஒரு ரியாலிட்டி ஷோ என்ற முறையில் தமிழ்நாட்டில் இதற்கு பிக் பாஸுக்கு கிடைத்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே நிஜம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com