மறைந்த நடிகர் கோவை செந்தில், ரஜினியைப் பற்றி பகிர்ந்துகொண்ட விக்ரமன் பட பாணியிலான சம்பவம்!

கூடுதலாக ஒரு ஆம்லேட் கேட்டார். அதற்கு அவர், கோழி இன்னும் முட்டை போடலை என்று கிண்டலாகக் கூறினார்...
மறைந்த நடிகர் கோவை செந்தில், ரஜினியைப் பற்றி பகிர்ந்துகொண்ட விக்ரமன் பட பாணியிலான சம்பவம்!
Published on
Updated on
2 min read

திரைப்பட குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகரான கோவை செந்தில் (74) உடல்நலக் குறைவால் கோவையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இயக்குநர் கே.பாக்யராஜின் ஆஸ்தான நடிகரான இவர், ஒரு கை ஓசை, இது நம்ம ஆளு, படையப்பா உள்பட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக கோவை, வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இவருக்கு மனைவி லட்சுமி, மகன் திலக், மகள் நர்மதா ஆகியோர் உள்ளனர்.  சூலூர், பெரிய குளக்கரை எரிவாயு மயானத்தில் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்திருந்த கோவை செந்தில், ரஜினியின் ஆரம்பக் கால வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். இயக்குநர் விக்கிரமன் படப் பாணியிலான அந்தச் சம்பவத்தையும் பேட்டியையும் பலரும் சமூகவலைத்தளங்களில் தற்போது பகிர்ந்துள்ளார்கள். அப்பேட்டியில் ரஜினி குறித்து கோவை செந்தில் கூறியதாவது:

ரஜினி அப்போது திரைத்துறைக்கு வந்த சமயம். இரண்டு படங்கள் நடித்திருந்தார். ஒருநாள், படப்பிடிப்பில் மதிய உணவின்போது புரொடக்‌ஷன் பாயிடம் கூடுதலாக ஒரு ஆம்லேட் கேட்டார். அதற்கு அவர், கோழி இன்னும் முட்டை போடலை என்று கிண்டலாகக் கூறினார். ஆம்லேட் தர மறுத்ததால் ரஜினி ஒன்றும் பேசாமல் எழுந்துபோனார். 

சிலவருடங்கள் கழித்து, ரஜினி நடித்தால் படம் ஓடும் என்கிற நிலை வந்தது. அப்படிப்பட்ட சமயத்தில் ஒரு படப்பிடிப்பில், உணவு நேரத்தில், ரஜினியின் தனியறையில் சாப்பாடு கொண்டு போகவேண்டிய பணி அந்த புரொடக்‌ஷன் பாய்க்கு வந்தது. ரஜினி பெரிய ஆளாகிவிட்டதால் பயந்துகொண்டே உள்ளே சென்று ரஜினி அருகே தட்டை வைத்துவிட்டு சத்தமிலாமல் வெளியேற நினைத்தார். கதவுக்கு அருகே சென்றபோது, பின்னாலிலிருந்து ரஜினியின் குரல் கேட்டது. என்ன, கோழி முட்டை போட்டிருச்சா...? என்று. தன்னை அத்தனை வருடம் கழித்து ரஜினி ஞாபகம் வைத்திருந்ததால், ஆடிப்போன அவர் ரஜினியிடம் வந்து கெஞ்ச, ரஜினி புன்முறுவலுடன் இதில் உங்கள் தப்பு ஒன்றுமில்லை. அன்றைக்கு என் நிலை அப்படி. ஆனால் எனக்குள் ஒரு வைராக்கியம் ஏற்பட, நீங்களும் ஒரு காரணம் என்று சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். ரஜினிக்குத்தான் இந்த மாதிரி பெருந்தன்மை இயல்பிலேயே உண்டு என்று பேட்டியளித்துள்ளார் கோவை செந்தில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com