விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ – சினிமா விமரிசனம்

வடிவேலு ஏற்ற இந்தப் பாத்திரத்தின் பெரும்பாலான சாயலை ஒரு நாயகனே ஏற்றால் எப்படியிருக்கும்? அதுதான் ஜுங்கா...
விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ – சினிமா விமரிசனம்

தமிழ்த் திரையில் இதுவரை மிகையாக ஊதப்பட்ட நாயக பிம்பங்கள் நொறுங்கி வீழத் துவங்கியிருக்கும் பின்நவீனத்துவக் காலக்கட்டம் இது. முந்தைய சினிமாக்களில், நாயகன் என்பவன் நன்மையின் ஒட்டுமொத்த அடையாளமாக இருப்பான். தீயகுணம் ஒன்று கூட அவனிடம் இருக்கவே இருக்காது. உதாரணம் எம்.ஜி,ஆர். இதைப் போலவே வில்லன், தீமைகளின் ஒட்டுமொத்தக் குத்தகைதாரனாக, கொடூரமானவனாக இருப்பான். பி.எஸ்.வீரப்பா, நம்பியார் வகையறாக்கள் இதற்கு உதாரணம். துல்லியமாகப் பிரிக்கப்பட்ட இந்தக் கறுப்பு, வெள்ளைச் சித்திரங்கள் இயல்புக்கு மாறானவை.

ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு இந்தச் சித்திரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சூழல் மற்றும் சந்தர்ப்பம் காரணமாக நாயகனும் தீமையின் பால் தற்காலிகமாக வசீகரிக்கப்பட்டு பிறகு திருந்துவான். வில்லனிடம் இருந்த லேசான நற்குணங்களும் சித்தரிக்கப்பட்டன. மணிரத்னம் இயக்கிய ‘பகல்நிலவு’ திரைப்படத்தில் வில்லன் சத்யராஜ், ஒரு நல்ல குடும்பத்தலைவருக்கான இயல்புடன் அறிமுகம் ஆவார். விநோதமான விளக்குகள் மின்னும் பின்னணியில், அரைகுறை ஆடை அணிந்த பெண்களும், மதுபாட்டில்களும், அடுக்கி வைக்கப்பட்ட மரப்பெட்டிகளுமாகக் காட்சியளிக்கும் வில்லனின் இருப்பிடங்கள் மெல்ல மறையத் துவங்கின.

இது போலத்தான் ‘டான்’ பாத்திரமும். பயங்கரமான வில்லர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இந்தப் பாத்திரத்தில் பிற்பாடு  நாயகர்களும் நற்குணம் கொண்ட ‘டான்’களாக நடிக்கத் துவங்கினர். ராபின்ஹூட் சாயலில் பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளைக் காப்பாற்றினார்கள். இந்த வகையில் ரஜினியின் ‘பாட்ஷா’ ‘தளபதி, கமலின் ‘நாயகன்’ போன்றவை முக்கியமான திரைப்படங்கள்.

ஆனால் அசலான டான்களின் மறுபுறத்தில் நகைப்பிற்கு இடமான விஷயங்களும் இருந்தன. எந்த நேரத்திலும் நிகழக்கூடிய உயிராபத்தின் காரணமாக உள்ளூற மறைத்துக் கொண்ட அச்சமும் நடுக்கமும் கொண்டவர்களாக இருக்கிற ‘டான்’களும் நிஜத்தில் இருக்கிறார்கள். இந்தச் சித்திரத்தின் கச்சிதமான உதாரணமாக வடிவேலுவின் ‘கைப்புள்ள’ பாத்திரத்தைச் சொல்லலாம். பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற இந்தக் குணாதியசத்தைப் பிறகு பல படங்களில் நடித்து தீர்த்து விட்டார் வடிவேலு.

வடிவேலு ஏற்ற இந்தப் பாத்திரத்தின் பெரும்பாலான சாயலை ஒரு நாயகனே ஏற்றால் எப்படியிருக்கும்? அதுதான் ஜுங்கா. இத்திரைப்படத்தில் வரும் சிக்கனமான, அற்பமான கஞ்சத்தனம் உடைய ‘டானை’ நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அப்படியொரு ரகளையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ‘நானும் ரவுடிதான்’ என்று இதே போன்றதொரு பாத்திரத்தில் அவர் ஏற்கெனவே நடித்திருந்தாலும் முற்றிலும் வேறு மாதிரியான சித்திரம் இது. இதையொட்டி தமிழ் சினிமாக்களின் தேய்வழக்குகளை கிண்டலடித்திருக்கிறார்கள். கூடவே சில அரசியல் பகடிகளும். ‘தமிழ் படம் 2’ வெளிப்படையாக முன்வைத்ததை, ரசிக்கக்கூடிய அமைதியுடன் சாதித்திருக்கிறது, ஜுங்கா.


**

‘டான்’ ஜுங்காவை ‘என்கவுன்டர்’ செய்ய முடிவு செய்கிறது தமிழக காவல்துறை. துரைசிங்கம் (?!) எனும் அதிகாரியை இதற்காக அனுப்புகிறார்கள். “யார் இந்த ஜுங்கா?” என்று அவர் விசாரிக்கிறார். ‘பிளாஷ்பேக்’ வழியாக ஜுங்காவின் அறிமுகம் விரிகிறது. பொள்ளாச்சியில் பேருந்து நடத்துநராக இருக்கிறார் விஜய் சேதுபதி. பேருந்தில் தினமும் வரும் மடோனா செபாஸ்டியனைக் காதலிக்கிறார். இது தொடர்பாக ஏற்படும் சில்லறைத் தகராறில் முகத்தில் குத்து வாங்குகிறார். தம்மை அடித்தவர்களைப் பழிவாங்கச் செலவு செய்து ஆட்களை ஏற்பாடு செய்கிறார். அதில் பலனில்லாமல் போக தாமே எதிரிகளை அடித்து வீழ்த்துகிறார். ‘நம்முடையது ‘டான்’ குடும்பம்’ என்ற ரகசியத்தை இதுவரை தெரியவிடாமல் வளர்த்தேனே’ என்று தாய் சரண்யா புலம்ப, தன் தந்தையான ரங்காவும், தாத்தா லிங்காவும் ‘டான்’களாக இருந்தவர்கள் என்பதை அறிந்துகொள்கிறார் விஜய் சேதுபதி.

ஆனால் அவர்களின் வரலாறு பெருமைக்குரியதாக இல்லை. வெட்டி வீறாப்புடன் சுற்றும் ‘நகைச்சுவை’ டான்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிற சொத்தையெல்லாம் காலி செய்து குடும்பத்தை ஓட்டாண்டி ஆக்கியிருக்கிறார்கள். அவர்களைப் போல் அல்லாமல் சிக்கனமாகச் சேமித்து, தன் குடும்பச் சொத்தான ‘சினிமா பாரடைஸ்’ என்கிற திரையரங்கை மீட்பதை லட்சியமாகக் கொண்டு சென்னைக்குச் செல்கிறார் விஜய் சேதுபதி. ‘ரூ.500/-க்கு கொலை, அடிதடி’ என்று சகாய விலையில் சேவை செய்ய பணம் குவிகிறது.  இதனால் இதர டான்களின் பகைமையைச் சம்பாதித்துக் கொள்கிறார். திரையரங்கை வைத்திருக்கும் செட்டியார், அதைத் திரும்பத் தர மறுப்பதோடு விஜய் சேதுபதியை அவமானப்படுத்தியும் விடுகிறார்.

பாரிஸில் தங்கியிருக்கும் செட்டியாரின் மகளைக் கடத்துவதின் மூலம் தன் லட்சியத்தை நிறைவேற்ற முடிவு செய்கிறார் விஜய் சேதுபதி. ஆனால்  வடிகட்டிய கஞ்ச ‘டானான’ இவர் எப்படி வெளிநாட்டுக்குச் செல்கிறார்? அங்கு இத்தாலிய மாஃபியாவிற்கும், பிரெஞ்சு போலீஸிற்கும் இடையில் சிக்கி எப்படித் தப்பிக்கிறார்? செட்டியாரின் மகளைக் கடத்தினாரா, திரையரங்கத்தை மீட்டாரா என்பதையெல்லாம் நையாண்டி பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

‘கஞ்ச’ டான் பாத்திரத்தில் விஜய் சேதுபதி கலக்கியெடுத்திருக்கிறார். இது தொடர்பான காட்சிகள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன.

ஒரேயொரு காட்சியின் மூலம் ஜுங்காவின் குணச்சித்திரத்தை உதாரணம் காட்ட முயல்கிறேன். ஒருவனைக் கொலை செய்வதற்காக பழைய ஜீப்பில் இரண்டு அடியாட்களுடன் கிளம்புகிறான் ஜூங்கா. ‘வண்டி சும்மாதானே போகிறது’ என்று அதை ‘ஷேர் ஆட்டோவாக்கி’ வழியில் பயணிகளை ஏற்றிச் செல்கிறான். கொலை செய்யப்படவிருக்கிறவனின் வீட்டில் தன் கைபேசிக்கு ‘சார்ஜ்’ போடச் சொல்கிறான். மதிய உணவை அந்த வீட்டின் பிரிட்ஜில் இருந்து எடுத்து வரச் சொல்கிறான். இப்படிப் பல காட்சிகளின் வழியாக ‘டானின்’ அற்பத்தனங்களைச் சித்தரித்துச் சிரிக்க வைக்கிறார்கள்.

திரையரங்கை மீட்பதற்காகக் கஞ்சத்தனமாகப் பணம் சேர்க்கும் இவனின் இம்சைகளைத் தாங்க முடியாமல் யோகி பாபு உள்ளிட்ட உதவியாளர்கள் தவிக்கிறார்கள். இந்திய ரூபாய்க்கும் யூரோவிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் செலவு செய்து விட்டு பயங்கரக் கோபத்துடன் கண்ணீர் விடுவது, ‘டான்’களின் கூட்டத்தில் கெத்தாகப் பேசி விட்டு அங்குள்ள குளிர்பானத்தையும், பிஸ்கெட்டையும் லவட்டிக் கொண்டு வருவது, செட்டியாரிடம் சவால் விடுவது, காதலியிடம் தன் கதையைச் சொல்வது.. எனத் தன்னுடைய பாத்திரத்தை ரகளையாகக் கையாண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. ‘உதவி’ டானாக வரும் யோகி பாபுவின் எதிர்வினைகள் நகைச்சுவையாக அமைந்திருக்கின்றன.

‘உனக்கு ஜுங்கா’ன்னு எப்படி பேர் வந்துச்சு தெரியுமா?’ என்று குடும்ப வரலாற்றின் கேவலத்தைக் கூறும் சரண்யாவின் வசன உச்சரிப்பும் நடிப்பும் அட்டகாசமான நகைச்சுவையுடன் அமைந்திருக்கிறது. சமயத்திற்கு ஏற்றாற் போல் தோரணையை மாற்றும் ஜுங்கா-வின் பாட்டி (விஜயா) மிகவும் ரசிக்க வைக்கிறார். சிறிது நேரமே வந்தாலும், ‘காட்ஃபாதர்’ திரைப்பட ‘டானை’ நினைவுப்படுத்தும் ராதாரவியின் கோணங்கித்தனம் புன்னகைக்க வைக்கிறது. ஜுங்காவின் ‘பாரிஸ்’ காதலியாக நடித்திருக்கும் சயீஷாவின் ஆடம்பரமான தோற்றமும் நடனமும் வசீகரிக்கிறது. ‘தெலுங்கு’ பேசும் பெண்ணாக, சிறிது நேரம் வந்தாலும் மடோனா செபாஸ்டியன் கவர்கிறார். செட்டியாராக, இயக்குநர் சுரேஷ் மேனன் நடித்திருக்கிறார்.


**

முதல் பாதியில் ரகளையாக நகரும் திரைப்படம், பாரிஸிற்கு இடம் மாறியவுடன் தொய்வடைந்து விடுகிறது. மீண்டும் இறுதிப்பகுதியில்தான் ‘கலகல’வுணர்வு திரும்புகிறது. ஒரு காமெடியான ‘டான்’, இத்தாலிய மாஃபியா மற்றும் பிரெஞ்சுக் காவல்துறை ஆகியவர்களுடன் மோதி சாகசம் செய்வது, பணக்கார ஹோட்டலில் தங்குவது உள்ளிட்ட பல காட்சிகளில் தர்க்கமில்லை. இது போன்ற காட்சிகள் படத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்து சோர்வூட்டுகின்றன.  ‘நகைச்சுவை திரைப்படம்தானே’ என்று இந்த லாஜிக் மீறல்களைச் சமாதானப்படுத்திக் கொண்டாலும், பலவீனமான திரைக்கதை உண்டாக்கும் சோர்விலிருந்து வெளியே வர முடியவில்லை. இதற்கு மாறாக படத்தின் முதல் பாதியின் வேகத்தை அப்படியே தக்க வைத்திருந்தால் இன்னமும் ரசிக்கக்கூடிய திரைப்படமாகியிருக்கும் ஜுங்கா.

‘மெளனராகம்’, ‘பாட்ஷா’ போன்ற திரைப்படத்தின் காட்சிகள் ரசிக்க வைக்கும் வகையில் மெலிதாகக் கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றன. விஜய் சேதுபதிக்கும், மடோனா செபாஸ்டியனுக்கும் இடையிலான காதல் முறிந்து போவதற்கான காரணம் இதுவரை உலக வரலாற்றிலேயே சொல்லப்பட்டதில்லை. ‘அவன் கிட்ட கதையில்லை போலிருக்கிறது, ‘பார்ட் டூ’விற்கு அடிபோடறான், மாட்டிக்காத’ மற்றும் ‘சாதிக்காமலேயே சக்ஸஸ் பார்ட்டி’ போன்ற வசனங்களின் மூலம் சமகாலத் தமிழ்த் திரையுலகின் போக்குகளையும் கிண்டலடித்திருக்கிறார்கள்.

சித்தார்த் விபினின் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள்  எதுவும் கவரவில்லை. தமிழ் சினிமாவின் வழக்கம் போல், ஒரு டூயட் பாடல் அசந்தர்ப்பமான சமயத்தில் வந்து, வேகத்தடையாக அமைந்து ‘கொட்டாவி’ விட வைக்கிறது. பாரிஸ் உள்ளிட்ட இடங்களை ஒளிப்பதிவு அபாரமாக பதிவு செய்திருக்கிறது.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற திரைப்படங்களை இயக்கிய கோகுல் ‘ஜுங்கா’வை இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கெனத் தயார் செய்யப்பட்ட பிரத்யேகமான திரைக்கதை கவர வைக்கிறது. இவரது திரைப்படங்களின் சில பகுதிகள் ரசிக்க வைக்கும். ஆனால் ஒட்டுமொத்த நோக்கில் திருப்தியைத் தராது. ஜுங்காவும் இதற்கு விதிவிலக்கில்லை.

தன்னுடைய பாரம்பரியச் சொத்தை மீட்பதற்காக, ‘கஞ்ச’ டான் செய்யும் நகைச்சுவைகளும், விஜய் சேதுபதியும்தான் இந்தத் திரைப்படத்தின் முக்கிய பலம். ஏறத்தாழ  படத்தின் முழுச்சுமையையும் அநாயசமாக சுமந்திருக்கிறார் விஜய்சேதுபதி. ஆனால், இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிதைக்காமல், முழு திரைப்படத்தையும் நகர்த்தியிருந்தால் மேலதிகமாக ரசிக்க வைத்திருப்பான் ‘ஜுங்கா’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com