பாகம்-7: அரசு நிலங்களில் குடியிருப்போர் பட்டா பெற வழிகள்; அறிவோம் தமிழ்நாடு பூமிதான வாரியம்!

நிலமற்ற ஏழைகளுக்கு விவசாய நிலங்கள் வழங்கல்; அரசு நிலங்களில் வீடுகளைக்கட்டி குடியிருப்போருக்கான மற்றும் தமிழ்நாடு பூமிதான வாரியம் பற்றிய அரசாணை பற்றிய விரிவான அலசல்.
பாகம்-7: அரசு நிலங்களில் குடியிருப்போர் பட்டா பெற வழிகள்; அறிவோம் தமிழ்நாடு பூமிதான வாரியம்!

நிலமற்ற ஏழைகளுக்கு விவசாய நிலங்கள் வழங்கல்; அரசு நிலங்களில் வீடுகளைக்கட்டி குடியிருப்போருக்கான மற்றும் தமிழ்நாடு பூமிதான வாரியம் பற்றிய அரசாணை பற்றிய விரிவான அலசல்.

தமிழ்நாடு பூமிதான வாரியம் என்பதென்ன?
தமிழ்நாடு பூமிதான வாரியம், நில சீர்திருத்த ஆணையர் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. பூமிதான இயக்கம் 1951 ஆம் ஆண்டு ஆச்சார்ய விநோபா பாவே அவர்களால் துவக்கப்பட்டது. அவர் 13-03-1956 முதல் 18-04-1957 வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நிலச்சுவான்தார்கள் தங்கள் நிலங்களை மனமுவந்து தானமாக அளித்தனர். அவ்வாறு அளிக்கப்பட்ட நிலங்கள் இன்று பூமிதான நிலங்களாக உள்ளன

இப்படி தானமாக பெற்ற நிலங்களை முறைப்படுத்தவும் அதனை நிலமில்லாத ஏழைகளுக்கு வினியோகம் செய்யும் பொருட்டும் தமிழ்நாடு பூமிதான யக்ஞ சட்டம் 1958-ல் ஏற்படுத்தப்பட்டது. அதன் விதி முறைகள் 1959-இல் அமுலுக்கு வந்தது. முதன்முதலில் 1958இல் பூமிதான வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி வாரியத்திற்கு தலைவர் நீங்கலாக 14 உறுப்பினர்களை நியமனம் செய்யலாம். மேலும், இந்த வாரியத்தின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும்.

2. பூமிதான யக்ஞ சட்டத்தின்படி தானமளிக்கப்பட்ட நிலங்கள் அரசிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு வட்டாட்சியர்களால் உறுதியாக்கம் செய்யப்பட்ட பின் சார்பதிவாளர்களால் பூமிதான வாரியத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டு பூமிதான வாரியத்தின் பேரில் பட்டாவாக மாற்றப்படுகிறது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் பூமிதான வாரியத்திடம் 28,126.15 ஏக்கர் நிலங்கள் இருந்ததில் 20,295.83 ஏக்கர் நிலங்கள் தேவைப்படும் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது போக, மீதம் 7,830.32 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

3. 1984ஆம் ஆண்டு பூமிதான பணியாளர்கள் அரசு அலுவலர்களாக வரன்முறை செய்யப்பட்டனர். ஒரு தனித்துணை ஆட்சியரும் 12 துணை வட்டாட்சியர்களும் மாற்றுப் பணியில் பூமிதான வாரியப் பணிகளை பார்த்து வந்தனர். பூமிதான பணியாளர்கள் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைக்கப்பட்டு 1993ல் சென்னைக்கு மாற்றப்படும் வரை, ஒரு தனித்துணை ஆட்சியர் தனி அலுவலராக இருந்து பணியை பார்த்து வந்தார். 

பின்னர் தமிழ்நாடு பூமிதான வாரியம் 1993ம் ஆண்டு மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி இயக்ககத்தில் கீழ்கண்ட பணியாளர்களுடன் தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரை தனி அலுவலராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

4. பூமிதானத்தின் பரிணாம வளர்ச்சியாக கிராமதானம் உள்ளது. இதில் ஒரு கிராமத்தில் இத்திட்டத்தில் சேர்ந்த அனைவரது நிலங்களையும் கிராம சபைக்கு ஒப்படைத்து பொதுவில் வைத்து சாகுபடி செய்து விளைச்சலை அவரவர் பங்கிற்கேற்பப் பிரித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிராமதானத்தில் சேர்ந்தவர்களின் நிலம் கிராம சர்வோதய பஞ்சாயத்தின் பேரில் பதிவு செய்யப்படும். இவ்வாறு 1700 கிராமங்கள் கிராமதானமாக கண்டறியப்பட்டு 237 கிராமங்கள் கிராமதானமாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

5. தமிழ்நாட்டில் 13 பூமிதான சேவைக் கூட்டுறவு சங்கங்களும் 32 கிராமதான சேவைக் கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. அதன் செயற் பதிவாளராக தமிழ்நாடு பூமிதான வாரிய தனி அலுவலர் உள்ளார். பூமிதான வாரியத்திற்கு கீழ்க்கண்டவாறு நிதி இருப்பு உள்ளது.

1. நிரந்தர வைப்புநி  -    ரூ.1,00,18,815.00 
2. சேமிப்பு கணக்கு   -    ரூ.24,63,853.00
         மொத்தம்           -     ரூ.1,24,82,668.00

மேற்கண்ட தொகை பூமிதான நிலங்களை நில எடுப்பு செய்த வகையில் இழப்பீட்டுத் தொகையாக பெறப்பட்டு இதுநாள் வரை சேர்ந்த தொகையாகும்.

*****

வருவாய் (நிமு.3(1))த் துறை அரசாணை (நிலை) எண்.506 நாள் 26.11.02 ஆணை:
நிலமற்ற ஏழை மக்களுக்கு குடும்ப வருவாயின் அடிப்படையில், இலவசமாக விவசாயத்திற்கு நிலம் ஒப்படை செய்வது என்பது அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் இலவசமாக விவசாய நில ஒப்படைக்கு ஆண்டு வருமான வரம்பு ரூ.12,000/- என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

1.  வீட்டுமனை ஒப்படை செய்வதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.12,000/- என்று இருந்ததை கிராமப் பகுதிகளில் ரூ.16,000/- எனவும் நகரப் பகுதிகளில் ரூ.24,000/- எனவும் உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டது. 

2. சிறப்பு ஆணையர் மற்றும் நிலநிர்வாக ஆணையரின் கருத்தினை அரசு நன்கு பரிசீலனை செய்தது. மைய அரசின் நகர்ப்புற வேலைவாய்ப்பு மற்றும் வறுமை குறைப்பு துறையின் 8-10-97 நாளிட்ட கடிதத்தின்படி 1996-97 ஆம் ஆண்டு விலைப்புள்ளி அடிப்படையில் வறுமைக்கோட்டினை நிர்ணயம் செய்வதற்கு கிராமப்பகுதியில் தனி நபர் மாத செலவினம் ரூ.269.07 ஆகவும், நகரப்பகுதியில் தனி நபர் மாத செலவினம் ரூ.381.04 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இலவச வீட்டு மனைப்பட்டா பெற குடும்ப வருமானத்தைக் கிராமப்புறங்களில் உள்ளவர்ளுக்கு ஆண்டு வருமானம் ரூ.16,000/- என்றும், நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.24,000/- என்று திருத்தியமைத்து அரசாணை (நிலை) எண்.287, வருவாய்த்துறை, நாள் 31.5.2000ல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அரசாணையின் அடிப்படையில் கிராமப்பகுதிகளில் விவசாய நிலம் இலவசமாக ஒப்படை பெற ஆண்டு வருமானம் ரூ.16,000/- எனவும் நகரப் பகுதிகளில் விவசாய நிலம் இலவசமாக ஒப்படை பெற ஆண்டு வருமானம் ரூ.24,000/- என்றும் நிர்ணயம் செய்து அரசு ஆணையிட்டது.

அரசு நிலங்களில் வீடுகளைக்கட்டி குடியிருப்போருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குதல் – ஆணை (வருவாய்த் நிமு 1(2) துறை அரசாணை(நிலை) எண்: 854 நாள்: 30.12.2006. ஆணை )

அரசிற்குத் தேவைப்படாத புறம்போக்கு நிலங்களில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளைக் கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டுமனை ஒப்படை செய்வது பற்றி பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை செய்ய குழு ஒன்றினை அமைத்து மேலே1 இல் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டன. அந்தக்குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், நீர்வழிப் புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல், மந்தைவெளி, மயானம், பாட்டை என வகைப்பாடு செய்யப்பட்ட அரசு நிலங்கள் தற்போது அத்தகைய உபயோகத்தில் இல்லாமல் நத்தமாக இருந்து, அதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளைக் கட்டிக் குடியிருப்பவர்களுக்கு அந்த நிலங்கள் அரசின் உபயோகத்திற்குத் தேவையில்லை யெனில், அத்தகைய குடியிருப்புகளைப் பட்டா வழங்கி முறைப்படுத்தலாமென பார்வை இரண்டு மற்றும் மூன்றில் படிக்கப்பட்ட அரசாணைகளில் ஆணைகள் வெளியிடப்பட்டன.

3. சிறப்பு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையர் தனது அறிக்கையில், நீர்நிலைப் புறம்போக்குகளில் வீடுகள் மூலம் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட எண்ணிக்கைகளே அதிகமாக உள்ளன என்றும், அரசு நீர்நிலைப் புறம்போக்குகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியும், அவற்றை முந்தைய நிலைக்கு  மாற்றி, மாநிலத்திலுள்ள மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படாமல் இருக்குமாறு பாதுகாக்க வேண்டும் என்று நீதிப்பேராணை மனு  எண்.20186/2005-இன் மீது சென்னை உயர்நீதிமன்றம் தனது 27.6.2005 ஆம் நாளிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளது என்றும், பொதுத்தெருக்கள், சாலைகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பாதுகாக்க வேண்டும் என்று நீதிப்பேராணை மனு  எண்.689/2005-இன்மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனது 2.2.2005 ஆம் நாளிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளது என்றும், எனவே ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் நீர்நிலைப் புறம்போக்குகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்த அரசாணையை புதுப்பிக்கவோ அல்லது அமலுக்கு கொண்டுவரவோ அரசளவில் தான் முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் மேலே 5-இல் படிக்கப்பட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

4. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நிலங்களில் வீடுகளைக் கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும், சட்டமன்றப் பேரவை வினாக்கள் மூலமாகவும், பொதுமக்களிடமிருந்தும் அதிக அளவில் கோரிக்கைகள் வருவதைக் கவனத்தில் கொண்டு, அரசு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டிக் குடியிருந்து வருபவர்களின் ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்துவது குறித்து அரசு கவனமாக ஆய்வு செய்தது. மேற்படி நிலங்கள் அரசுக்கு தேவையில்லையெனில் அவற்றை வரன்முறைப்படுத்த ஏதுவாக, ஒப்படை செய்ய விதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட தடையாணைகளை இவ்வினங்களில் மட்டும் தளர்வு செய்து, இதை ஒரு சிறப்புத் திட்டமாக கருதி, அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி குடியிருப்பவர்களுக்கு 2007 ஜனவரித் திங்கள் முதல் ஆறு மாத காலத்திற்குள் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க பின்வரும் நிபந்தனைகளுடன் அரசு ஆணையிட்டது:-

(i) கோயில் புறம்போக்கு நிலங்கள், திருச்சபை மற்றும் மசூதி போன்ற வழிபாட்டுத்தலங்களைச் சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களைத் தவிர, சிற்றூராட்சி / பேரூராட்சி / நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, ஆட்சேபகரமான அரசு நிலங்கள், பொதுநலனுக்கு தேவையில்லாத சமுதாயத் தேவைக்கு என ஒதுக்கப்பட்டு தற்போது அத்தகைய உபயோகத்தில் இல்லாமல் நத்தமாக உபயோகத்திலிருந்து அதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளைக் கட்டி குடியிருந்து, அதற்கான தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு மட்டும் அந்நிலங்கள் அரசின் உபயோகத்திற்கு தேவையில்லையெனில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் மாவட்ட மூத்த அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழு அந்த நிலங்களை புலத்தணிக்கை செய்தும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்துள்ள தீர்ப்புகளை கருத்தில் கொண்டும், உள்ளாட்சி மன்றங்களின் தீர்மானங்களைப் பெற்றும், தகுதியின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரே வரன்முறைப்படுத்தலாம்; 

(ii) நகராட்சி பகுதிகளில் வீட்டுமனை ஒப்படை செய்ய விதிக்கப்பட்ட தடையாணையும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளின் எல்லைக்குள் வீட்டுமனை ஒப்படை செய்ய விதிக்கப்பட்ட தடையாணையும் இவ்வாறு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நேர்வுக்கு மட்டும் தளர்வு செய்யப்பட்டது;

(iii) வரன்முறைப்படுத்தும்போது பிரஸ்தாப நிலங்கள் குறிப்பாக நீர்நிலைப் புறம்போக்கு என வகைபாடு செய்யப்பட்டுள்ள நிலங்கள், அரசுக்கு தேவைப்படாத நிலம்தான் என்பதை மாவட்ட ஆட்சியர் தலைமையிலானகுழு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்;

(iv) வீட்டுமனைப் பட்டா வழங்கும் போது இலவச வீட்டுமனைப்பட்டா பெற தகுதி இல்லாதவர்களுக்கு வழிகாட்டிப் பதிவேட்டின் அடிப்படையில் நிலமதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் நேர்வுகளில், தற்போது நடைமுறையில் உள்ள விதிகள்/ ஆணைகளின்படி  மதிக்கப்பட்ட பரப்பைவிட கூடுதலாக அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அக்கூடுதலான ஆக்கிரமிப்புப் பகுதிக்கு வழிகாட்டிப் பதிவேட்டின்படி நிலமதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்;

(v) புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களான திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட தலைநகரங்களிலிருந்து 16/8 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் ஒப்படை செய்ய விதிக்கப்பட்ட தடையாணையையும் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பிற துறைகளுக்கு மாற்றம் செய்வது குறித்து வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகளையும் இந்நேர்வுக்கு மட்டும் தளர்வு செய்யப்படுகிறது;

(vi) வீட்டுமனைப் பட்டா வழங்குவது பற்றிய மற்றைய விதிகள் /ஆணைகள் இவ்வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்திற்குப் பொருந்தும்;

(vii) இவ்வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் ஒருமுறை (One time Scheme) மட்டுமே செயல்படுத்தப்படும் திட்டமாகும்;

அரசு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போரின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் 30.09.2013 உடன் முடிவடைந்தது - 31.3.2015 வரை கால நீட்டிப்பு  ஆணை (வருவாய்த் நிமு 1(2) துறை அரசாணை(நிலை) எண்: 372 நாள்: 26.08.2014.)

அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போருக்கு, அவர்களது ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து, வீட்டுமனைப்பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் அரசாணை (நிலை) எண்.854, வருவாய்த் துறை, நாள்: 30.12.2006 அரசாணையில் வெளியிடப்பட்டது. இச்சிறப்பு திட்டத்தின் கீழ், அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து, அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அக்குடியிருப்புகளை புலத் தணிக்கை செய்து, உள்ளாட்சி மன்றங்களின் தீர்மானங்களைப் பெற்று, அந்நிலங்கள் அரசுக்கு தேவையில்லை எனில் வீட்டுமனைப் பட்டா வழங்கி வரன்முறைப்படுத்த ஆணையிடப்பட்டது. இதற்கென செயல்பாட்டிலிருந்த பல தடையாணைகள் தளர்வு செய்யப்பட்டன.

2. இத்திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தும் பொருட்டு, அரசாணை (நிலை) எண்.498, வருவாய்த் துறை, நாள்: 05.09.2007 அரசாணையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சில அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மேலும், அரசாணை (2டி) எண்.711, வருவாய்த் துறை, நாள்: 30.11.2007 அரசாணையில் இலவச ஒப்படை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு நீக்கப்பட்டும், ஊரகப் பகுதிகளில் 3 சென்ட், நகராட்சிப் பகுதிகளில் 11/2 சென்ட் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் 1 சென்ட் என்று இருந்த வரம்பை இத்திட்டத்திற்கு மட்டும் உயர்த்தி, ஊரகப் பகுதிகளில் 4 சென்ட், நகராட்சி பகுதிகளில் 21/2 சென்ட் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 2 சென்ட் என்கிற அளவில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தின் கீழ் முன்னதாக நிலக்கிரயம் செலுத்தி வீட்டுமனைப் பட்டா பெற்றவர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகை, உரிய ஆய்விற்குப் பின்னர், அவர்களுக்கு திரும்பவும் வழங்கப்படும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.

3. அரசாணை (நிலை) எண்.34, வருவாய்த் துறை, நாள்: 23.01.2008 அரசாணையில், இத்திட்டம் அரசு நிலங்களில் ஐந்தாண்டுகளுக்கு மேல் வீடுகட்டி குடியிருப்பவர்களுக்கும் பொருந்தும் என ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அதிகளவில் பயனாளிகள் பயன் அடைய வேண்டும் என்பதற்காகவும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தவும் இத்திட்டம் பலமுறை நீட்டிக்கப்பட்டு மீண்டும் அரசாணை (நிலை) எண்.366, வருவாய்த் துறை, நாள்: 08.10.2009. அரசாணையில் 30.9.2010 வரை நீட்டிக்கப்பட்டது.

4. மேலும், அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போரின் குடியிருப்பு கால வரம்பை ஐந்தாண்டு காலமாக உள்ளதை மூன்று ஆண்டுகளாக குறைத்து அரசாணை (நிலை) எண்.43, வருவாய்த் துறை, நாள்: 29.01.2010. அரசாணையில் அரசு ஆணையிட்டது. இச்சூழ்நிலையில், சிவகாசி பகுதி வரிச் செலுத்துவோர் சங்கம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நீதிப்பேராணை எண்.18485/10-இல், அரசாணை (நிலை) எண்.43, வருவாய்த் துறை, நாள்: 29.01.2010. அரசாணையில் குடியிருப்பு கால வரம்பை ஐந்தாண்டு காலத்திலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து வெளியிட்ட அரசாணையை இந்த வழக்கு விசாரணை முடியும் வரை செயல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை ரத்து செய்வதற்கு தனியாக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அரசின் இலவச வீட்டுமனை வழங்கும் ஒரு முறை சிறப்புத் திட்டத்தின் கீழ் விடுபட்டுள்ள ஏழை எளிய மக்கள் பயன் அடையும் பொருட்டு அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டி குடியிருந்து வருபவர்களின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கும் இந்த ஒரு முறை சிறப்புத் திட்டம் 1.10.2010 முதல் ஓர் ஆண்டு காலத்திற்கு அதாவது 30.9.2011 வரை நீட்டிப்பு செய்து அரசாணை (நிலை) எண்.482, வருவாய்த் துறை, நாள்: 28.09.2010. அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒரு முறை சிறப்புத் திட்டம் 1.10.2011 முதல் ஓர் ஆண்டு காலத்திற்கு அதாவது 30.9.2012 வரை நீட்டிப்பு செய்து அரசாணை (நிலை) எண்.172, வருவாய்த் துறை, நாள்: 23.05.2012. அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

5. முதன்மைச் செயலாளர்/நில நிருவாக ஆணையர் கடித எண். எப்1/24458/2011, நாள் 30.10.2012.  கடிதத்தில் முதன்மைச் செயலர் மற்றும் நில நிருவாக ஆணையர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த ஒரு முறை சிறப்புத் திட்டத்தினை 1.10.2012 முதல் 31.03.2013 வரை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்தும், இத்திட்டத்தின் நோக்கம் வலுவிழப்பதை தவிர்க்கும் பொருட்டு, 01.06.2007-க்கு முன் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருபவர்களின் ஆக்கிரமிப்புகளை மட்டும் வரன்முறை செய்யுமாறும் பார்வை பன்னிரெண்டில் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக அரசாணை (நிலை) எண்.142, வருவாய்த் துறை, நாள் 23.5.2013 அரசாணையில் இந்த ஒருமுறை சிறப்புத் திட்டத்தினை 30.9.2013 வரை கால நீட்டிப்பு செய்து ஆணைவெளியிடப்பட்டது.

6. தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் 2013-14 ஆம் நிதியாண்டில் வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக அறிவிப்பினை "2013-2014-ம் நிதியாண்டில் 2 இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும்" என்று வெளியிட்டிருந்தார்.

7. அதற்கிணங்க, 2013-2014-ம் நிதியாண்டில் அரசாணை (நிலை) எண்.174, வருவாய் [நிஅ-2] துறை, நாள் 13.6.2013-இன்படி நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்தின் கீழ் தனி வட்டாட்சியர் மூலம் 68,000 நத்தம் வீட்டுமனைப் பட்டாக்களும், அரசாணை (வாலாயம்) எண்.161, வருவாய்த் துறை, நாள் 17.7.2013-இன்படி ஒருமுறை வரன்முறைப்படுத்தி வீட்டுமனை வழங்கும் திட்டம் மற்றும் வழமையான திட்டத்தின் கீழ் 1,32,000 வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 2,17,723 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு இலக்கு எய்தப்பட்டது.

8. தற்போது 2014-2015-ம் நிதியாண்டில் மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் 8.8.2014 அன்று நடைபெற்ற வருவாய்த் துறையின் மானிய கோரிக்கையின் போது வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக "வீட்டுமனை இல்லாத ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 2014-2015ம் நிதியாண்டில் 3 இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது"

9.  தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் 2014-2015-ம் நிதியாண்டில் 3 இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளபடியாலும், இத்திட்டத்தினை மேலும் கால நீட்டிப்பு செய்ய இத்துறை உத்தேசித்துள்ளதாலும், அரசின் இலவச வீட்டுமனை வழங்கும் ஒரு முறை சிறப்புத் திட்டத்தின் கீழ் விடுபட்டுள்ள ஏழை எளிய மக்கள் பயன் அடையும் பொருட்டு, 01.06.2007-க்கு முன்னர் ஆட்சேபணையற்ற அரசு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருந்து வருபவர்களின் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கும் இந்த ஒரு முறை சிறப்புத் திட்டத்தினை அரசாணை (நிலை) எண்.854, வருவாய்த்துறை, நாள் 30.12.2006 மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி வரன்முறை செய்து பட்டா வழங்கும் பொருட்டு இத்திட்டத்திற்கான கால வரம்பினை 01.10.2013 முதல் 31.03.2015 வரை நீட்டிப்பு செய்து அரசு ஆணையிடப்பட்டது.

தொடரும்….

C.P.சரவணன், வழக்கறிஞர்
தொடர்புக்கு -  9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com