புதுமைப்பித்தன் வீதியில் இருந்து....

திருப்பாதிரிப்புலியூரில் பிறந்த புதுமைப்பித்தன், அவரது அப்பாவின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வரும்போது அவருக்கு வயது 12. 
புதுமைப்பித்தன் வீதியில் இருந்து....

திருப்பாதிரிப்புலியூரில் பிறந்த புதுமைப்பித்தன், அவரது அப்பாவின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வரும்போது அவருக்கு வயது 12. 

தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் உள்ள கம்பராமாயண தெருவில் அவர் இருந்தது வெறும் 13 ஆண்டுகளே. பாளையங்கோட்டையில் இருந்த தூய யோவான் பள்ளியில் பள்ளிப்படிப்பை நிதானமாக படித்து முடித்தார். படிப்பில் அவ்வளவு விருப்பம் எல்லாம் கிடையாது. கல்லூரியில் படிக்க ம.தி.தா.இந்தக் கல்லூரியில் சேர்ந்தார். மஹாகவி பாரதி கல்வி பயின்ற கல்விக்கூடம்.

ஆங்கில  துப்பறியும் நாவல்கள் நிறைய  படிப்பார். தினம் ஒரு நாவல் என்று வாசிப்பார். எழுதவும் முயற்சி செய்திருக்கிறார். 

'வண்ணாரப்பேட்டையில் இவரது நண்பர்களான முத்துசிவன், டி.கே.சி.யின் மகன் தீத்தாரப்பன், சதானந்தன்,குஹன்பிள்ளை,மகாராஜன் ஆகியோர் ஒரு அறை எடுத்து தங்கி இருந்தபோது, புதுமைப்பித்தன் அங்கேயே தான் பெரும்பாலும் இருந்தார். அங்கே இவரே நாயகனாக திகழ்ந்தார். அறைக்குப் பின்னால் இருந்த தென்னந்தோப்பில் இளநீர் குலைகளை திருட்டுத்தனமாக கயிறு கட்டி இறக்கி, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மணல் வெளிக்கு கொண்டு சென்று , இளநீரை வெட்டி பருகி நண்பர்களோடு களித்திருக்கிறார்.

வண்ணாரப்பேட்டை தாமிரபரணி மணற்படுகையில் நண்பர்களோடு படுத்துக்கிடந்து இலக்கிய ஆராய்ச்சி..பிறகு மாந்தோப்பு சுடுகாட்டில் சென்று திருப்பள்ளி கொள்வது... இந்த பித்தனை  சுற்றி அவரது நண்பர்கள் பூதகணங்கள் போல சுடலைக்கு செல்வார்கள் ...' என்று எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் இவரின் பால்ய வாழ்க்கை பற்றி எழுதி இருக்கிறார்.

ஆற்று மணலில் படுத்தபடியே பார்த்து ரசித்த சுலோச்சனா முதலியார் பாலத்தைப் பற்றி..பேராச்சி அம்மன் கோவில் படித்துறை பற்றி..எல்லாம் தனது விநாயகர் சதுர்த்தி, சாயங்கால மயக்கம் போன்ற சிறுகதைகளில் பார்க்க முடியும். 'பேராச்சி  காளியின் ஸ்வரூபம்..நாளைக்கு அம்மனுக்கு கொடை. கோயில் வாசலில் இரண்டு ஆட்டுக்கிடா. வாழ்வு நாளை வரை தான் என்று அவற்றிற்கு தெரியுமா? சித்திரபுத்திரன் மாதிரி எனக்கு தெரியும். எங்கெங்கோ புல்லையும் பூண்டையும் தின்ற கொழுப்பு முட்டி விளையாடுகின்றன.. டமார்..' மண்டை வெடித்து விடும் போலிருக்கிறது.  பின்னுக்கு வந்து மறுபடியும் ஓடி வந்து ... டபார் ..'

என்ன கொள்கை பிணக்கோ? நாளைக்கு இரண்டினுடைய ரத்தமும் அந்த பலிபீடத்தில் கலக்குமுன், அதற்குள் என்ன அவசரம் ?அதுதான் சுவாரஸ்யம்..! அந்த சண்டை தான் வாழ்க்கையின் ரகசியம்..தத்துவம்.. என்று சாயங்கால மயக்கம் கதையில் ஊர் திரும்பும் ஒருவனின் மனநிலையை வெளிப்படுத்துவார்.

வண்ணாரப்பேட்டையில் உள்ள வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சுடுகாட்டைப் பற்றி 'காலனும் கிழவியும்'  என்ற கதையில் எழுதி இருப்பார். இப்போதும் திருநெல்வேலி வழக்கில் ஒருவர் வெள்ளக்கோவில் போகிறார் என்றால், உலகத்தாரிடம் இருந்து விடை பெற்று கொள்கிறார் என்று அர்த்தம். உண்மையில் வெள்ளக்கோவில் என்பது ஒரு கிராமத்தின் பெயர். அங்கே போகிறவர் திரும்பி வருவதில்லை என்ற ஐதீகத்தை பகடியாய் சொல்வார். அந்த சுடுகாட்டுப் பக்கம் வந்த எமதர்மன் , மருதாயி கிழவியிடம் தோற்று ஓடிய கதை தான் அது.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் நிலபுலன்களோடு வசதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த வேளாளர் சமூகம் பற்றியும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆணவத்தையும் 'நாசகார கும்பல் ' கதையில் வெளிப்படுத்தினார். 

பாளையங்கோட்டையில் இருந்து எட்டாவது மைலில் இருக்கும் அழகிய நம்பியாபுரம் என்ற கிராமம் என்று சொல்லி விட்டு...திருநெல்வேலி நண்பர்கள் அழகியநம்பியாபுரத்தை தேடி ஜில்லா படத்துடன் மோதி மூளையை கசக்கிக் கொள்ள வேண்டாம்..அதில் இல்லை..என்று பகடி செய்து விட்டு கதையை மேலே சொல்ல தொடங்குவார்.

'பிள்ளைமாருன்னா என்ன கொம்பு மொளச்சுருக்கா..பிரிட்டிஷ் ராச்சியமா என்ன..மனுஷனை கட்டிப்போட்டு அடிக்கதுன்னா நாய அநியாயமில்லையா..' என்று கதறும் மருதப்பன் பாத்திரம் இதை உணர்த்தும்.

அவர் 25 வயதிற்கு மேலே சென்னையில் வசித்தபோதிலும், அவரது இலக்கிய வேர் என்பது திருநெல்வேலியில் தான் இருந்தது. அவரது சிறந்த கதைகளில் ஒன்றான செல்லம்மாள் கதையின் பிரமநாயகம் பிள்ளையும், 'தனி ஒருவனுக்கு' கதையில் வரும் அம்மாசி சாம்பானும் திருநெல்வேலி அச்சுக்கள்..!

திருமணமாகி அப்பாவுடன் சண்டையிட்டு விட்டு, ஒரு நள்ளிரவில் வண்ணாரப்பேட்டை சாலை தெருவை விட்டு வெளியேறினார். அந்த இருண்ட நாளில், அவரும் அவரது மனைவியும் செல்லுமிடம் அறியாமல், சாலை தெரு வழியே நடந்து சென்று பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சென்று சித்தப்பா வீட்டில் அன்று இரவு தங்கினர். 

அங்கிருந்து சென்னை வந்த புதுமைப்பித்தன் மணிக்கொடி இதழில் பணியாற்றினார். பிறகு ஊழியன் இதழில். ஒரு கட்டத்தில் அதில் இருந்தும் விலகி, டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில், தினமணி நாளிதழில் 1936 இல் உதவி ஆசிரியராக சேர்ந்தார். 1943 வரை அதில் பணியாற்றினார்.

தினமணியில் புத்தக மதிப்புரை எழுதி வந்தார். அவரது விமர்சனங்கள் மிகவும் கறாராக இருக்கும். ஒருமுறை பாரதி மகாகவியா இல்லை தேசியக்கவியா என்ற விவாதம் பெரிய அளவில் வந்தது. கல்கி பாரதியை தேசியக்கவி என்றே சொன்னார். வ.ரா.மற்றும் புதுமைப்பித்தன் ஆகியோர் பாரதியை மகாகவி என்று ஆணித்தரமாய் வாதிட்டனர். புதுமைப்பித்தன், 'ரசமட்டம்'[ என்ற புனைபெயரில் மிகக் காத்திரமான விவாதங்களை முன்வைத்தார். இறுதியில் கல்கி இறங்கி வந்து, பாரதி மகாகவி தான் என்று ஒத்துக்கொண்டார்.  இது அக்கால வாசகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு, சினிமா துறைக்கு சென்று, அவ்வையார் படத்திற்கு திரை கதை வசனம் எழுதினார். அதன் பிறகு காமவல்லி என்ற திரைப்பட வாய்ப்பும் கிடைத்தது. ராஜமுக்தி படத்தில் பணிபுரிந்த காலத்தில் தான் அவருக்கு காச நோய் ஏற்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். 

1948 இல் மனைவி இருந்த திருவனந்தபுரத்திற்கு நோயுடன் வந்து சேர்ந்தார். அவரது சிறுகதையான "மகாமசானம் " மவுண்ட் ரோடு பிச்சைக்காரன் சாவதை பற்றி எழுதி இருப்பாரே..அதைப்போல, இவரும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தார், வறுமையில். நண்பர்களிடம் பணம் கேட்டு கடிதங்கள் எழுதினார். ஒரு கட்டத்தில், சாவு என்ற மணியார்டரை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார். அந்த மணியார்டரும் 1948 இல் ஜூன் 30 இல் வந்து சேர்ந்தது. 

இவர் மறைந்து 68 ஆண்டுகள் ஆகி விட்டன.  அவரது 'ஆசைக்கு என்று காலம் தப்பிப்பிறந்த கறிவேப்பிலைக்கொழுந்தான'  மகள் தினகரி சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கும் 70 வயதாகிறது. திருநெல்வேலி வரும்போதெல்லாம், தனது அப்பா இருந்த வண்ணாரப்பேட்டை வீட்டைப் பார்த்து செல்வார். 

இவர் வாழ்ந்த வண்ணாரப்பேட்டை சாலை தெருவிற்கு 'புதுமைப்பித்தன் வீதி' என்று பெயர் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தது. நேரம் காலம் எல்லாம் ஒத்து வந்ததோ என்னவோ, கடந்த செப்டம்பர் 15 இல் புதுமைப்பித்தன் வீதி மாநகராட்சியால் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

- எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com