பாகம்-23: நடைபாதைகளிலும் தெருவோரங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இருப்பிடவசதி திட்டம்

நடைபாதைகளிலும், தெருவோரங்களிலும் வீடின்றி வசிக்கும் மக்களுக்கும் இருப்பிட வசதி ஏற்படுத்தித் தரும் தீனதயாள் அந்த்யோதயா யோஜனா திட்டம் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பாகம்-23: நடைபாதைகளிலும் தெருவோரங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இருப்பிடவசதி திட்டம்

நடைபாதைகளிலும், தெருவோரங்களிலும் வீடின்றி வசிக்கும் மக்களுக்கும் இருப்பிட வசதி ஏற்படுத்தித் தரும் தீனதயாள் அந்த்யோதயா யோஜனா திட்டம் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

தீனதயாள் அந்த்யோதயா யோஜனா- (தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்) National Urban Livelihoods Mission (NULM) 

அறிமுகம்

பொருளாதார வளர்ச்சியும் நகர்மயமாதலும் நெருங்கிய தொடர்பு கொண்டவை.  நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்ற ஊர்தியின் எஞ்சினாக இந்திய நகரங்கள் மாறி வருகின்றன.  நாட்டின் மொத்த உற்பத்தியில் சுமார் 60 சதவீதம் நகரங்களின் மூலம் உருவாகிறது.  2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய நகரங்களில் வசிப்போரின் எண்ணிக்கை சுமார் 37.7 கோடி.  இது 2001 ஆம் ஆண்டில் இருந்ததைவிட சுமார் 31 சதவீதம் அதிகம்.  அமைப்பு சாதாரண துறைகளின் தொழில்களுக்கான தேசிய ஆணையம் நடத்திய தொழிலாளர்களின் வேலைச் சூழல் மற்றும் வாழ்வாதாரங்களின் வளர்ச்சி பற்றிய அறிக்கை 2007 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்தத் தொழிலாளர்களில் 92 சதவீதம் பேர் அமைப்பு சாதாரண விவசாயம் அல்லாத துறைகளில் பணியாற்றுவது தெரிய வந்தது.  பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் புதிய வேலை வாய்ப்புகளைப் பெற இயலுவதில்லை.  எனவே நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டுமானால் அவர்களுடைய திறன்களையும் மேம்படுத்த வேண்டும்.

அமைப்பு சாராத துறைகளில் வேலை செய்கின்ற பலருக்கும் எப்போது வேலையில் இருந்து நிறுத்தப்படுவோம் என்ற பீதியும். தங்களுடைய உடமைகள் பறித்துக் கொள்ளப்படகூடிய அபாயமும் தொடர்ந்து நீடிக்கிறது.  சமுகப்பாதுகாப்பு ஏற்பாடுகள் அறவே இல்லை.  இவர்களில் பலருக்குப் போதிய வருமானத்திற்குக் குறைவில்லை என்றாலும், சுகாதாரமான வாழ்க்கைச் சூழலின்மை, சமூகப் புறக்கணிப்பு, குற்றச்செயல்கள், வன்முறை, ஆபத்தான சுற்றுச்சூழல், போன்ற காரணங்களால் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.  மேலும், ஆட்சியில் அவர்கள் குரல் ஒலிப்பதும் இல்லை.

நகர்ப்புற வறுமையின் மூன்று விதங்கள்

(1) குடியிருப்பு வறுமை – நிலம், வீடு அடிப்படைவசதிகள் போன்றவை கிடைக்காமை

(2) சமூக வறுமை – சமூகரீதியான மேல் – கீழ் அடுக்கும் பாகுபாடு, சமூகப் பாதுகாப்பு இன்மை, வயது மற்றும் பாலின வேறுபாடு, ஆட்சி அமைப்புகளில் பங்கேற்க வாய்ப்புகள் இன்மை போன்றவற்றால் ஏற்படுகிறது.

(3) செய்தொழில் வறுமை – வேலைக்கும், பொருள் ஈட்டுவதற்கும் முறை சாராத தொழில்களைச் சார்ந்திருப்பது.  வேலைக்கு உத்திரவாதம் இல்லாதநிலை, மோசமான வேலைச் சூழல் போன்றவற்றால் ஏற்படுகிறது.  இந்த மூன்று பிரிவினால் ஏற்படும் வறுமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.  இவர்களிடையேயும், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், ஆதிதிராவிடர் – பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளர்கள் போன்றோர் அதிக பாதிப்புக்கு உள்ளாவதால் அவர்களுக்குத் கூடுதலான தனிக்கவனம் செலுத்தவேண்டும்.

நகர்ப்புறத்து ஏழ்மையைப் போக்குவதற்காக 1997-ஆம் ஆண்டு முதல் ஸ்வர்ண ஜெயந்தி ஷெகாரி ரோஜ்கார் யோஜனா (பொன்விழா நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம்) என்பதை மத்திய வீட்டுவசதி – நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வந்தது.  இத்திட்டம் 2013 செப்டம்பர் முதல், தீமையாள் அந்தயோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் என்று மாற்றி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  2013 செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் (மக்கள் தொகை கணக்கின்றி) ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நகர்ப்புறத்து ஏழை மக்களுக்கு ஆதாயம் உள்ள சுயவேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவது, திறன் உள்ள தொழில்களில் வேலை பெற்றுத்தருவது, போன்றவற்றால், அவர்களுடைய வாழ்வாதாரத்தில் தொடர்ந்து மேம்பாடு ஏற்படச்செய்யப்படுகிறது.  வீடில்லாதவர்களுக்கு, அத்தியாவசிய வசதிகளுடன் தங்குமிட வசதிகளைப் படிப்படியாக உருவாக்கித்தரும் வேலைகள் நடைபெறுகின்றன.  மேலும் நகரங்களில் தெருவணிகம் செய்கின்றவர்களுக்கு வியாபாரம் செய்ய இடம், வங்கிகள் மூலம் கடன் உதவி சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் பலன்கள் போன்றவை கிடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இவற்றால் தெருவியாபாரிகள், புதிய சந்தை வாய்ப்புகளை அணுகிப் பலன் பெற முடியும்.

வழிகாட்டும் கோட்பாடுகள்

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் அடிப்படையான நம்பிக்கை, ஏழை மக்கள் தொழிலார்வம் உடையவர்கள் என்பதும், ஏழ்மையில் இருந்து வெளியே வரத்துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தான்.  அவர்களுடைய திறமைகளை வெளிக் கொணர்ந்து நிலையான வாழ்வாதாரங்களை எவ்வாறு ஏற்படுத்தித் தருவது என்பதே அரசின் முன் உள்ள சவாலான பணி. இதன் மூலம் நடவடிக்கையாக, அம்மக்களைத் தமக்கென்று சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கிக் கொள்ளுமாறு தூண்டுதல் செய்யப்படுகிறது.  அவர்கள் தமது புறச் சூழலை நிர்வகித்துக் கொள்ளவும், தமது திறன்களை வளர்த்துக் கொள்ளவும், நிதியுதவிகளைப் பெறவும், தக்கவாறு வழி நடத்தப்பட வேண்டும்.  ஆதரவு அமைப்பு வேண்டும் அந்த அமைப்பே சமூக இடப்பெயர்ச்சிக்கும் நிறுவனக் கட்டுமானத்திற்கும் வாழ்வாதார மேம்பாட்டுக்கம் தூண்டுவிசையாக இருக்கும்.

நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு இயக்கப்பணிகள், ஏழைமக்களும் அவர்களது அமைப்புகளும் முடுக்கிவிட்டால், குறிப்பிட்ட காலத்திற்குள் வாழ்வாதார வசதிகளை அதிகரிக்க முடியும் என்று இந்த இயக்கம் நம்புகிறது.  அமைப்பு ரீதியான ஆதரவினால் தான் ஏழை மக்கள் தமக்கு என தனிமனித, சமூக, ரீதியான சொத்துக்களைக் கட்டமைக்க முடியும்.  அவ்வாறு கட்டமைத்தால், அரசு மற்றும் தனியார் துறைகளில் தமக்குரிய சேவைகளையும் வாய்ப்புகளையும் உரிமைகளையும் பெறுவதற்குத் தங்கள் ஒற்றுமையையும், பேரம் பேசும் ஆற்றலையும் பயன்படுத்தமுடியும்.

1992 ஆம்ஆண்டின் அரசியமைப்பு 74 ஆவது திருத்தச் சட்டத்தின்படி வறுமை ஒழிப்பு என்பது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் கடமையாகும்.  எனவே ஏழைமக்களின் வாழ்வாதாரம், திறன் மேம்பாடு போன்றவை சம்பந்தப்பட்ட எல்லா திட்டங்களிலும் அவை முன்னிலை வகிக்க வேண்டும்.

நகர்ப்புறத்து ஏழை மக்கள் அனைவருக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் கடன்வசதியும் கிடைக்க வேண்டும் என்பதும் இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.  எந்த மாதிரியான திறன் இருந்தால் வேலை கிடைக்குமோ அது போன்ற திறன்களைப் பெறவும், சுயதொழில் புரியத் தேவையான திறன்களைப் பெறவும் பயிற்சிகள் அளிக்கப்படும்.  அதே போல எளிதாக வங்கிக் கடன் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

நகர்ப்புற ஏழை மக்கள் தொகுதியின் அடித்தளத்தில் தெரு வணிகம் செய்வோர் உள்ளனர்.  தெரு வியாபாரம் என்பது சுயவேலைவாய்ப்பாகவும், அரசின் தலையீடு இல்லாத வறுமை ஒழிப்புத் திட்டமாகவும் உள்ளது. நகர்ப்புறத்து மக்களுக்குப் பொருள்கள் கிடைப்பதில் முக்கிய சங்கிலிக் கண்ணியாகவும் அவர்கள் உள்ளனர்.  பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் புதிய சந்தைவாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, வியாபாரத்திற்கான இடம், சிறுவணிகக்கடன் சமூகப்பாதுகாப்புத்திட்ட உதவி போன்றவை வழங்கப்படும்.

இருப்பிட வசதியோ, சமூகப் பாதுகாப்பு வசதிகளோ இல்லாமல் நகரங்களில் வசிப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மிகக்குறைந்த கூலிக்கு வேலை செய்து பொருளாதார வளர்ச்சிக்கு இவர்கள் துணை புரிகின்றனர்.  நடைபாதைகளிலும் தெருவோரங்களிலும் வசிக்கும் இம்மக்களுக்கு இருப்பிடவசதியும், அத்தியாவசியமான பிற வசதிகளும் ஏற்படுத்திக் தருவது படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கின்ற வாழ்வாதார வசதிகள் மேம்படுத்துகிற, தொழில் முனைந்தவை ஊக்குவிக்கின்ற, சுகாதாரவசதி, கல்வி போன்றவற்றை அளிக்கின்ற சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள் மூலம் உதவிகள் தருகின்ற அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத்துறைகளின் திட்டங்களையும் ஒரு புள்ளியில் குவியச் செய்வதற்கும் இந்த இயக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.  மேலும் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்குக் குடிபெயரும் மக்களுக்குத் திறன் பயிற்சிகள் அளிப்பதற்கும் சம்பந்தப்பட்ட துறைகளோடு இணைந்து செயலாற்றுவதற்கான உத்தியும் பின்பற்றப்படும்.

நகர்ப்புற ஏழைமக்களில் வீடற்றவர்களுக்கு இருப்பிட வசதி செய்து தரவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரவும், திறன் பயிற்சிகள் அளிக்கவும், தனியார் துறையினருடன் இணைந்து செயல்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் தமது சொந்தத் தொழிலை அது சிறிய வியாபாரமாக இருந்தாலும் அல்லது உற்பத்தித் தொழிலகமாக இருந்தாலும், அவற்றைத் தொடங்கி நடத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள், விற்பனை வசதிகள் போன்றவையும் செய்து தரப்படும்.

தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்
Ms. M. Asia Mariam,
Jt.Commissioner-cum-Mission Director Municipal Administration,
6 Floor Ehilagam Annex Municipal Administration,
Chepauk,Chennai-600005


தொடரும்……
Lr. C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com