பாகம்-1 அங்கீகார மனை: சொத்து வாங்கும் போது தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

தமிழ் நாட்டில் Chennai Metropolitan Area-ல் வரும் இடங்களை வீட்டு மனைகளாகப் பிரித்து அந்த layout-க்கு அங்கீகாரம் கொடுக்கும் அதிகாரம்
பாகம்-1 அங்கீகார மனை: சொத்து வாங்கும் போது தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

அங்கீகாரம் பெற்ற layout -க்கும் அங்கீகாரம் பெறாத layout -க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

தமிழ் நாட்டில் Chennai Metropolitan Area-ல் வரும் இடங்களை வீட்டு மனைகளாகப் பிரித்து அந்த layout-க்கு அங்கீகாரம் கொடுக்கும் அதிகாரம்  சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் (CMDA - Chennai Metropolitan Development Authority) க்கு இருக்கிறது. 

இதைத் தவிர தமிழ்நாடு முழுவதும் உள்ள மற்ற இடங்களுக்கு வீட்டு மனைப்பிரிவிற்கு அங்கீகாரம் கொடுக்கும் அதிகாரம் நகர் ஊரமைப்புத்துறை (DTCP எனப்படும் Directorate of Town and Country Planning)க்கு மட்டும் தான் உண்டு. பஞ்சாயத்திற்கோ அல்லது வேறு எந்த உள்ளாட்சி அமைப்பிற்கோ, வேறு எந்த அரசாங்கத் துறைக்கோ அதிகாரம் கிடையாது. சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள DTCP-க்கு தமிழ்நாடு முழுவதும் 35 மண்டல அலுவலகங்கள் (Regional Office), 15 உள்ளூர் திட்ட குழுமங்கள் (Local Planning), இயங்கி வருகின்றன. இவைகளால் மட்டும் தான் தமிழ்நாடு முழுவதும் வீட்டு மனைப்பிரிவிற்கு (layout) அங்கீகாரம் கொடுக்க முடியும் . இவைகளின் கீழ்தான் தமிழ் நாட்டில் எல்லா இடங்களும் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உள்ளூர் திட்டக் குழுமத்தின் எல்லையில் உள்ள இடங்கள் பல zone-களாக பிரிக்கப்பட்டிருக்கும்.

1. Residential Zone - குடியிருப்புப் பகுதி
2. Commercial Zone - வர்த்தகம் அல்லது வணிகப் பகுதி
3. Industrial Zone - தொழிற்சாலை பகுதி
4. Educational use Zone - கல்வி நிறுவனங்கள் பகுதி
5. Public and Semi Public use Zone
6. Agricultural Zone - விவசாய பகுதி

இதில் Residential Zone-ல் வரும் இடத்தை மட்டும் தான் வீட்டு மனைகளாகப் பிரித்து அங்கீகாரம் பெற முடியும். மற்ற Zone-ல் உள்ள இடத்தினை வீட்டு மனைகளாக பிரிக்க வேண்டும் என்றால், அரசாங்கத்துக்கு மனு செய்து முதலில் Zone மாற்றம் (Conversion) செய்ய வேண்டும்.

உதாரணமாக : Agricultural Zone அல்லது Industrial Zoneல் உள்ள இடத்தினை வீட்டு மனைகளாக பிரித்து layout போட வேண்டும் என்றால் அதை Residential Zone -க்கு மாற்றம் செய்து விட்டுத்தான் போட முடியும்.

DTCP-ல் வீட்டு மனைப் பிரிவிற்கு (layout) அங்கீகாரம் வழங்க என்னென்ன முறைகள் பின்பற்றப் படுகின்றன என்பதை பார்ப்போம். அப்போது தான் அங்கீகாரம் பெறாத வீட்டுமனையில் உள்ள பிரச்னைகள் தெளிவாக புரியும்.

1. Layout போட உத்தேசிக்கும் இடத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்றிதழில் மேற்கண்ட நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள் இல்லை என்றும், நில சீர்திருத்தச் சட்டம் மற்றும் நகர்ப்புற நில உச்ச வரம்பு சட்டம் ஆகியவையின் கீழ் கையகப்படுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் வெள்ளப் பெருக்கால் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையில் இல்லை என்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சான்று கொடுக்கப்படும். இதற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் நேரில் வந்து நிலத்தை ஆய்வு செய்த பிறகு மேற்கண்ட சான்றிதழை அளிப்பார்கள்.

2. பின்பு உள்ளூர் அமைப்புகளின் அதாவது ஊராட்சி, பேரூராட்சி போன்றவை மூலம் தான் நகர் ஊரமைப்பு துறைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். இதற்கு நிலம் சம்பந்தப்பட்ட கிரயப்பத்திரம், மூலப்பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், வில்லங்கச் சான்றிதழ் மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்ற சான்றிதழ், சில தேவையான ஆவணங்களை இணைத்து, உள்ளாட்சி அமைப்பில் இருந்து இடம் சம்பந்தப்பட்ட விபரங்கள் அடங்கிய வினா விடைப்படிவம் ஒன்றை பூர்த்தி செய்து இணைத்து உள்ளாட்சி அமைப்பின் மூலம் நகர் ஊரமைப்புத்துறை மண்டல அலுவலகத்திலும் அல்லது இடம் உள்ளூர் திட்டக் குழுமத்தின் கீழ் வந்தால் அந்த அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்பின்னர், அலுவலக அதிகாரி இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்வார். 

நிலத்திற்கு அருகில் நீர் நிலைகள் ஏதும் இருக்கக்கூடாது. இடுகாடு, ரயில்தண்டவாளம் போன்றவை இருக்கக் கூடாது என்ற சில நிபந்தனைகளை ஆய்வு செய்வார். மேலும் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். அங்கு எல்லா ஆவணங்களையும் சரிபார்த்து அவர்களே ஒரு layout வரைந்து அதற்கு ஒப்புதல் அளிப்பார்கள். இதற்கு தொழில் நுட்ப ஒப்புதல் எனப் பெயர். இந்த layout -க்கு அங்கீகார எண் ஒன்று கொடுக்கப்படும்.

அந்த layout-ல் விதிகளுக்கு உட்பட்டு பொது ஒதுக்கீடு, சாலை, கடைகள், பிளாட்டின் அளவுகள் அமைந்திருக்கும். மனையின் எண்ணிக்கை, பொது உபயோகம், சாலை, கடைகள் முதலிய ஒதுக்கீடுகள் அந்த layout -ல் சதுர அடிகளிலேயே கொடுக்கப்பட்டிருக்கும்.

மேற்கண்டவாறு தொழில் நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்ட layout உள்ளாட்சி அமைப்பதற்கு இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அதில் சில நிபந்தனைகளும் குறிக்கப்பட்டிருக்கும். உள்ளாட்சி அமைப்பானது அந்த நிபந்தனைகளையெல்லாம் மனுதாரருக்கு தெரிவித்து அவர் அதை பூர்த்தி செய்தவுடன் இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும். layout -ல் எந்த மாற்றமும் செய்ய உள்ளாட்சி அமைப்பிற்கு அதிகாரம் கிடையாது.

நிபந்தனைகளில் எல்லாவற்றிற்கும் பொதுவானவை:.

1. Layout-ல் குறிப்பிட்டிருக்கும் சாலை மற்றும் பொது ஒதுக்கீடு பகுதியைதான பத்திரத்தின் (Gift Deed) மூலம் மனுதாரர் உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

2. அன்றைய தேதி வரை layout-க்கு தொழில் நுட்ப ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் அரசாங்கத்தால் நில ஆர்ஜித நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்று உள்ளாட்சி அமைப்பு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேற்சொன்னவைகளும், மற்றும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அவைகளும் நிறைவேற்றப் பட்டபின் உள்ளாட்சி அமைப்பால் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு layout-க்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்படும்.

உள்ளாட்சியின் பங்கு நகர் ஊரமைப்புத்துறை சொல்லும் நிபந்தனையை பின்பற்றுவது தான். இதில் வேறெதுவும் செய்வதற்கு அதிகாரம் இல்லை.

இப்போது தான் அங்கீகாரம் முழுமை பெறுகிறது. இதற்கு பின்பு தான் layout -ல் உள்ள பிளாட்டுகளை உரிமையாளரால் விற்பனை செய்ய முடியும்.

இடம் 5 ஏக்கருக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப ஒப்புதல் மண்டல அலுவலகம் (அல்லது) உள்ளூர் திட்டக்குழுமத்திலேயே வழங்கப்பட்டு, இறுதி ஒப்புதலுக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு அனுப்பப்படும்.

5 ஏக்கருக்கு அதிகமாக இருப்பின் இடத்தை நேரில் ஆய்வு செய்து அதன் அறிக்கை மண்டல அலுவலகம் அல்லது உள்ளூர் திட்டக் குழுமத்திலிருந்து நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகம், சென்னைக்கு அனுப்பப்படும். அங்குதான் தொழில் நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டு இறுதி ஒப்புதலுக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு அனுப்பப்படும். இவ்வளவு முறைகளை பின்பற்றி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட layout-ல் கீழ்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படும்.

1. சாலையின் குறைந்த பட்ச அகலம் 23 அடி தவிர 30 அடி, 40 அடி சாலைகளும் அமைந்திருக்கும்.

2. பொது ஒதுக்கீடு என்று ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கப்படும் அது layout-ன் area -வை பொறுத்தது. பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு திடல்,சமூகக்கூடம், மருத்துவமனை போன்றவைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

3. Layout-ஐ சுற்றி உள்ள மற்ற எல்லா இடத்திற்கும் layout -லிருந்து வழி கட்டாயம் கொடுக்கப்பட்டிருக்கும்.

4. கடைகளுக்கென்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

5. வீட்டு மனைகளின் நீள அகலங்கள் நெறிப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றில் எந்த முறையையும் பின்பற்றாமல் ஒரே நாளில் பஞ்சாயத்தால் கொடுக்கப்படும் அங்கீகரிக்கப்படாத layout-ல் எதுவும் பின்பற்றப்படாது. அதனால் பல சிக்கல்கள் ஏற்படும்.

1. சாலை மிகவும் குறுகியதாக இருக்கும். 15 அடி சாலைகள் கூட இருக்கும். இதனால் அந்த பகுதி வளர்ச்சி அடையும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

2. சுற்றியுள்ள இடங்களுக்கு பாதை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாததால், வழியில்லாத காரணத்தினால் layout-ஐ சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சியடைய வாய்ப்பில்லை. மேலும் இந்த layout -க்கு பின்புறம் நிலம் வைத்திருப்பவர்கள் இவர்களிடமே குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

3. பொது ஒதுக்கீடும் மிகக் குறைந்த அளவே ஒதுக்கப்படுவதால் அந்த பகுதி வளர்ச்சி அடையும் போது பள்ளி, மருத்துவமனை போன்ற பொது நல கட்டடங்கள் கட்டுவதற்கு இடம் இருக்காது.

4. பிளாட்டின் நீள அகலங்களும் முறையாக இருக்காது. இப்படிப்பட்ட இடத்தில் நிலத்தினை நீங்கள் வாங்கும் போது, உங்கள் எண்ணம் நிறைவேறாது. மேற்கண்ட பிரச்சனைகள் எதிர்காலத்தில் அந்த பகுதியின் வளர்ச்சியை பாதிக்கும்.

பஞ்சாயத்து அங்கீகாரம் என்று ஒன்று இல்லையென்றாலும், இன்னும் பல இடங்களில் பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற layout என்று விளம்பரம் செய்து விற்பனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதனால் பெரும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

DTCP-ஆல் கொடுக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட layout-ல் கீழ்கண்ட விவரங்கள் அடங்கி இருக்கும்.

1. Layout போடும் இடம் எந்த உள்ளாட்சியில் அமைந்துள்ளது மற்றும் கிராமம், வட்டம், மாவட்டம் முதலியன இருக்கும்.
2. சர்வே எண்கள் மனைப்பிரிவின் மொத்தப் பரப்பு ஏக்கரிலும் சதுர அடியிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
3. DTCP-ன் கோப்பு எண்.
4. மனுதாரரால் கோரப்பட்ட மனைகளின் எண்ணிக்கை.
5. DTCP -ஆல் ஒதுக்கப்பட்ட மனைகளின் எண்ணிக்கை.
6. பொது ஒதுக்கீடுகள் - பூங்கா, சாலை, சிறுவர்கள் விளையாடும் இடம். முதலியவை சதுர அடியிலும் சதவீதத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவை உள்ளாட்சிக்குத் தானமாக அளிக்க வேண்டியவை.
7. பொது உபயோகம் - கடைகள், சமூக நலக்கூடம் போன்றவை மனுதாரரால் விற்பனை செய்யப்படலாம். ஆனால் மேற்கண்ட காரணத்திற்காக மட்டும் தான் அந்த இடம் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
8. மூலை முடுக்கு, கட்டிட வரம்பு முதலியவற்றிற்கு எவ்வளவு இடம் கொடுக்க வேண்டும் என்ற விபரமும் இருக்கும்.
9. உள்ளாட்சியால் நிலம் சம்பந்தமாக, உறுதி செய்து கொள்ள வேண்டிய நிபந்தனைகள்.
10. DTCP-ஆல் கொடுக்கப்படும் அங்கீகார எண்.
11. DTCP-ன் ஆணையர் உட்பட அதிகாரிகளின் கையொப்பம்.DTCP-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ள வீட்டு மனையில் பிளாட் வாங்குவோர் கவனிக்க வேண்டியவை:-

1. தொழில்நுட்ப ஒப்புதலில் கொடுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகுதான் உள்ளாட்சி இறுதி ஒப்புதல் வழங்கி இருக்கிறதா என்பதையும், உள்ளாட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் மனுதாரரால் செலுத்தப்பட்டு இரசீது வாங்கப்பட்டிருக்கிறதா? என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உள்ளாட்சி அமைப்பினால் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுதான் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறதா? என சரிபார்க்க வேண்டும். சில layoutகளில் உள்ளாட்சி அமைப்பின் தலைவர் கையொப்பம் இட்டு இருப்பார். ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்காது. இது தவறானது.

2. உள்ளாட்சிக்கு கொடுக்கப்பட வேண்டிய பொது ஒதுக்கீட்டு இடங்கள் அதாவது சாலை, பூங்கா போன்றவை சார்பதிவாளர் அலுவலகத்தில் தானபத்திரத்தின் (Gift Deed) மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பதிவுசெய்யப்படாமல் கொடுக்கப்படும் தானபத்திரம் செல்லுபடியாகாது.

3. பெரும்பாலான Promoter-கள் Layout-ஐ கணினியில் பல வண்ணங்களில் வரைந்து, வாங்குபவரின் பிளாட்டை தனி வண்ணமிட்டு அவர்கள் பத்திரப்பதிவு செய்யும் போது இணைப்பார்கள். computer layout-ல் எந்தவித மாற்றமும் செய்யபடவில்லை என்பதை DTCP-ஆல் அனுப்பப்பட்ட layout உடன் ஒத்து பார்த்து சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

Promoter-கள் நமக்கு கொடுக்கும் approved layout-ல் ஏதேனும் சந்தேகம் ஏற்படும்படியாக இருந்தால் நாம் DTCP-க்கு அந்த layout-ன் அங்கீகார எண்ணைக் குறிப்பிட்டு நகலைப் பெற்று சரிபார்த்துக் கொள்ளலாம். 

Layout-ல் இடம் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அவர்கள் வாங்கும் பிளாட் எந்த சர்வே எண்ணில் அமைந்திருக்கிறது என்பது தான்.பொதுவாக layout ஒன்றுக்கு மேற்பட்ட சர்வே எண்ணில் அமைந்திருக்கும். இப்படி அங்கீகரிக்கப்பட்ட layout-ல் பிளாட் வாங்கி பத்திரப்பதிவு செய்தவுடன் நம்முடைய வேலை முடிந்து விட்டது என நினைக்கக்கூடாது. 

நம் பிளாட் அமைந்திருக்கும் சர்வே எண் அல்லது சர்வே எண்களின் தாய்ப்பத்திரத்தையும் மறக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படியென்றால் தான் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யும் போது எந்த பிரச்சனையும் வராது.

பிளாட் பதிவு செய்யப்பட்டவுடன் தாய்பத்திரங்களையும் தவறாமல் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பிளாட் அமைந்திருக்கும் சர்வே எண்ணுக்கு, யார் பெயரில் பட்டா இருக்கிறதோ அந்த பட்டாவிலிருந்து, நமக்கு வரும் வரை உள்ள அனைத்து பதிவுகளின் (கிரயப்பத்திரம், பவர் ஆஃப் அட்டார்னி முதலியவை) நகல்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

DTCP Approval முறைகளை அரசாங்கம் இன்னும் மேம்படுத்தலாம். இப்போது உள்ள முறையில் அங்கீகரிக்கப்பட்ட layout-ல் பொது ஒதுக்கீடுகள் உள்ளாட்சிக்கு தானபத்திரம் (Gift Deed) மூலம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் உள்ளாட்சிலிருந்து பொது ஒதுக்கீட்டுக்கான இடங்களை,  உள்ளாட்சியின் பெயருக்கு Sub Division செய்து பட்டா பெறுவதில்லை. அதனால் வருவாய் துறையில், இந்த இடம் பழைய உரிமையாளர் பெயரில் தான் இருந்து கொண்டு இருக்கும். உள்ளாட்சியின் பெயரில் பட்டா மாற்றப்படாததால் பிற்காலத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Layout போடும் Promoter ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளரிடம் இருந்து Power of Attorney மூலம் layout போடும் பட்சத்தில், அவர் எத்தனை உரிமையாளர்களிடம் இருந்து Power of Attoreny வாங்கி இருந்தாரோ அத்தனை உரிமையாளர்களின் சர்வே எண்களிலும் பொது ஒதுக்கீட்டிற்கான இடம் வர வாய்ப்பு இருக்கிறது. பொது ஒதுக்கீட்டில் சாலையும் அடங்கி இருப்பதால் எல்லா உரிமையாளர்களின் இடத்திலும் சாலை அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் தானபத்திரத்தை உள்ளாட்சிக்கு எழுதிக் கொடுத்தாலும், பொது ஒதுக்கீட்டிற்கான இடம் Sub division செய்யப்பட்டு DTCP-க்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற முறை அமுலுக்கு வரவேண்டும் அல்லது Layout தமிழ்நாட்டில் எந்த இடத்தில் அமைந்திருந்தாலும், தான பத்திரமானது அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட துறைக்கு எழுதிக் கொடுக்கப்படலாம்.இந்த பொது ஒதுக்கீட்டை பராமரிப்பது மட்டும் உள்ளாட்சியால் செயல்படுத்தப்பட வேண்டும்.

பொது மக்களுக்கு வசதியாக DTCP-யால் அங்கீகரிக்கப்பட்ட layout-ன் விவரங்களை வரைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அங்கீகார எண்ணை வைத்து பொது மக்கள் layout-ன் விவரங்களைத் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட வேண்டும். Layout-க்கு உள்ளாட்சி இறுதி ஒப்புதல் கொடுத்த பின்பு அதன் விவரம் DTCP-யால் பெறப்பட்ட பின்னரே, வீட்டு மனைகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

Layout போடுபவர்கள் பெரும்பாலானோர் நிலத்தின் உரிமையாளரிடம் இருந்து Power of Attorney வாங்கி நிலத்தை Layout ஆக பிரித்து அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்று விற்பனை செய்கிறார்கள். அவர்கள் Power of Attorney வாங்குவதற்கு இரு காரணங்கள் உண்டு.

1.நிலத்திற்கு உரிய மொத்த பணத்தையும் உரிமையாளரிடம் கொடுத்து நிலத்தை வாங்க முடியாத நிலை.

2.கிரயப்பத்திரம் செய்தால் Guide line மதிப்பிலிருந்து 8% முத்திரைத்தாள்கள் மற்றும் 1% பதிவு கட்டணம் மற்ற இதர செலவுகளை தவிர்ப்பதற்காகவும் Layout போடுபவர்கள் ஒரு ஏரியாவை தேர்வு செய்து ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்களிடம் நிலத்தை வாங்குவார்கள். அப்படி நிலம் வாங்கும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வே எண்கள் அதில் அடங்கி இருக்கும். நில உரிமையாளர்களும் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பாபர்கள். ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் தனித்தனியே ஒரு புல வரைபடம் உண்டு. அது FMB என்று சொல்வார்கள்.

தொடரும்…

C.P.சரவணன், வழக்கறிஞர்
தொடர்புக்கு - 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com