பாகம்-3 சொத்து வாங்குபவர்கள் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்!

நிலத்தை, சொத்தை வாங்குபவர்கள், ரியல் எஸ்டேட் செய்பவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வருவாய்த்துறை பதிவேடுகள், ஆவணங்கள் பற்றிய அறிமுகம்.
பாகம்-3 சொத்து வாங்குபவர்கள் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்!

நிலத்தை, சொத்தை வாங்குபவர்கள், ரியல் எஸ்டேட் செய்பவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வருவாய்த்துறை பதிவேடுகள், ஆவணங்கள் பற்றிய அறிமுகம்.

நிலமும் சொத்துரிமையும்
முற்காலத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நிலவுடமை வெவ்வேறாக இருந்தன. கி.பி.1000 முதல் 1800 வரை சுமார் 800 ஆண்டுகள் ஐரோப்பிய கண்டம் முழுதும் நிலபிரபுத்துவ முறையே [Feudalism] வழக்கிலிருந்தது. அரசரே ராஜ்ஜியத்தில் உள்ள அனைத்து சொத்துகளுக்கும் சொந்தம் கொண்டிருந்தார். குடிமகன் நிலபிடியாளராகவே (Land holder or Tenant) இருந்தனர்.

அதன்பின் அரசு வருவாயை பெருக்கிட பயிரிடப்படாத நிலங்களை யார் அதிக வரியை கட்ட முன்வந்தர்களோ அவர்கள் வசம் ஒப்படைக்க முன்வந்தது. அதன்பின் முதன்முதலில் 1796-இல் மெட்ராஸ் அரசாங்கம் எழுத்துபூர்வ ஆவணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்ய முடியாது என அறிவித்தார்கள். 1802-ஆம் ஆண்டு நிரந்தர நிலவரி திட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களே அனைத்து வகை நிலங்களுக்கும் சொத்துரிமை பெற்றுள்ளதாக அறிவித்தார்கள். இவ்வாறான செயல் தவறு என உணர்ந்து, 1822 ஆம் ஆண்டின் IV-வது ஒழுங்குமுறைகள் குடியானவர்களின் உண்மையான உரிமையில் தலையிடுவதாக எண்ணப்படவில்லை என அறிவித்தார்கள்.

நில உரிமைகள்
(i) இரயத்துவாரி:  இரயத்துவாரி நிலங்களில் குடியானவர்கள் ஒருவருக்கொருவர் இணையாமல் தனித்தனியாக நிலத்தைக் கொண்டு நேரடியாக அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர்.

(ii) ஜமீந்தாரி :  ஜமீன்தாரி முறையில் ஆவணங்களின் படி (Sunnud) ஜமீன்தார்கள் தரிசு நிலங்களுக்கு உரிமையாளர்களாக இருந்தார்கள். அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஜம்மா (Jamma) அல்லது (Peishkush) நிலவரியை அரசுக்கு செலுத்த வேண்டும்.

(iii) மிராசி:  மிராசி நிலத்தில் கிராமத்தில் உள்ள நிலங்கள் அனைத்திற்கும் கூட்டு பங்குதாரர்கள் அமைப்பு இருந்தது.  சர் தாமஸ் மன்ரோ மிராசி 1824-ஆம் ஆண்டு மிராசி முறையில் அரசுக்கும் கூட்டு மிராசிகளுக்குமிடையே ஒப்பந்தம் நிலவியது. கிராமத்திற்கே நிலங்கள் சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
  
(iv) இனாம்: ஆற்றிய சேவைகளுக்கு பரிசாக நிலங்கள் வழங்கப்படும் அது “ஜாகிர்’ எனப்படும். சமஸ்கிருதத்தில் “மான்யம்” எனப்படும். படை வீரர்களை பராமரிக்க “மான்சாப்” என நிலங்கள் வழங்கப்பட்டது. கிராமம் முழுதும் வழங்கப்படுவது “திகாத்” ஆகும்.

தனி இனாம்கள்
பிராமணர்களுக்கு வழங்கபெறும் தனிக் கொடைகள் “பிரம்மதாயம்" என்ற பெயரில் அழைக்கப்பட்டன. 

I. கோவிலில் ஓதும் பணிக்கு “அத்தியானம்”, 
II. கோவிலில் மகாபாரதம் படிக்கும் பணிக்கு “பாரதி”,
III. பிராமணர்களை பேணுவதற்கு “பட்டு விருத்தி", 
IV. நாட்காட்டி பிராமணர்களுக்கு “பஞ்சாங்கம்”
V. கோவிலில் புராணம் சொல்லும் பணிக்கு  “புராணம்”
VI. ஓதுவதற்கு “விருத்தி"
VII. பிராமண இனத்திற்கு கிராமமாக கொடுத்தது “அக்ரஹாரம்”
VIII. பிராமண இனத்திற்கு கிராமமாக கொடுத்தது ஆனால் வரி செலுத்த வேண்டும் “தர்மாசனம்”
IX. குறிப்பிட்ட பிராமண குடும்பத்திற்கு கிராமமாக கொடுத்தது “ஸ்ரோதியம்”
X. முகம்மதியர் மற்றும் பிராமணர் அல்லாதாருக்கு கொடுத்தது “கைராட்டி”

பொதுச் சேவை மான்யங்கள்
சத்திரம், தண்ணீர் பந்தல், போன்றவற்றிற்கு வழங்கப்பட்டது “தர்மதாயம், இனாம்" எனப்பட்டது.  குளங்கள், கிணறு , வாய்க்கால் போன்றவற்றை பராமரிக்க  “தசபந்த” இனாம் வழங்கப்பட்டது.

கிராம ஊழியர்கள் இனாம்
1895-ஆம் ஆண்டு பரம்பரை கிராம அலுவலர் சட்டம் இயற்றப்பட்டது. அதன் மூலம் கிராம கர்ணம், மணியக்காரர், தலையாரி, வெட்டியான் போன்றோருக்கு மரா, ருஸம்ஸ் போன்ற இனாம்கள் வழங்கப்பட்டன.

தனிப்பட்ட சேவைக்காக வழங்கப்பட்ட நிலங்கள்
I. அமரம்
II. தொரத்தனம்
III. ஜீவிதம்
IV. காட்டுப்பாடி மானியம்
V. முகாசா
VI. கசவர்க்கம்

சமயம் அல்லது அற நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட மான்யங்கள்
சமயம் தொடர்பாக வழங்கப்படும் மான்யம் கோயில்கள், மடங்கள் மட்டுமின்றி பணியாளர்களுக்கு தேவதாயம் என்ற பெயரில்  வழங்கப்பட்டது. திருப்பணிகளுக்கு வழங்கப்பட்ட கொடை “கட்டளை” எனப்பட்டது.

சொத்துரிமையும் இந்திய சட்டமும்
மனிதனின் உரிமைகளில் முக்கிய பங்கு அவனின் சொத்திற்கான உரிமையாகும் (Right to property). இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாக ஷரத்து 19(1) (f), 44-வது திருத்தச் சட்டதின் வாயிலாக நீக்கப்பட்டது. தற்போது ஷரத்துகள் 31A, 31B, 31C, 300A ஆகியவைச் சொத்துரிமைக்கானதாகும்.

“பட்டா” [Patta]
பட்டா என்பது நில உடைமை பதிவேடு ஆகும். வருவாய் நிலை ஆணை எண்.27-இல் ஒவ்வொரு இரத்துவாரி உரிமையாளரும் பட்டா அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு படாப் பதிவுப் புத்தகச் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு பட்டா விவரக் குறிப்புப் புத்தக விதிகள்,1987 இன் படி வழங்கப்படும் பட்டா,  ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுகிறது. மேலும் பட்டாவில் இருக்கும் விவரங்கள்:

I. மாவட்டத்தின் பெயர்,
II. வட்டத்தின் பெயர்,
III. கிராமத்தின் பெயர், 
IV. பட்டா எண், 
V. உரிமையாளர் பெயர்,
VI. உரிமையாளரின் உறவு,
VII. புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision)
VIII. நிலத்தின் வகை: நன்செய்/புன்செய்
IX. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்கள்.

சிட்டா [Chitta]
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா ஆகும்.
 
சிட்டாவிலிருக்கும் விவரங்கள்
I. இலக்க எண்
II. மாவட்டத்தின் பெயர்,
III. வட்டத்தின் பெயர்,
IV. கிராமத்தின் பெயர், 
V. பட்டா எண், 
VI. உரிமையாளர் பெயர் 
VII. புல எண்ணும், உட்பிரிவும், ( Survey Number and Subdivision ),
VIII. நிலத்தின் வகை: நன்செய்/புன்செய்
IX. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்கள்.
X. தீர்வை

“அ” பதிவேடு [ ‘A’ Register]
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும். 

“அ” பதிவேடு சான்றிலுள்ள விவரங்கள் [ ‘A’ Register Extract]
I. மாவட்டத்தின் பெயர்,
II. வட்டத்தின் பெயர்,
III. கிராமத்தின் பெயர், 
IV. பட்டா எண், 
V. உரிமையாளர் பெயர் 
VI. புல எண்ணும், உட்பிரிவும், ( Survey Number and Subdivision ),
VII. பழைய புல எண்ணும், உட்பிரிவும்
VIII. நிலத்தின் வகை :நன்செய் நிலம்/புன்செய் 
IX. அரசு/ரயத்துவாரி
X. பாசன ஆதாரம்
XI. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்கள்.
XII. மண் வயனமும், ரகமும்
XIII. மண் தரம்
XIV. தீர்வை
XV. மொத்த தீர்வை
XVI. குறிப்பு

நில அளவு புல படம் [FIELD MEASUREMENT BOOK( FMB)]
நிலத்திற்கான அமைப்பு, உட்பிரிவு இவைகளை நில அளவு புல படம்  (FMB)  காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எ‎ண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் எ‎ன்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சர்வே எண்ணிற்கும் தனியாக வரைபடம் இருக்கும். மேலும் அந்த புலத்தில் உள்ள கிணறு, வீடு, வழிநடைபாதை, வண்டிப்பாதை, கோவில், நீர்நிலைகள் முதலியவைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.


இடவியல்படம் (Topograph)
இடவியல்படம் என்பது குறிப்பிட்ட சர்வே எண்ணின் இட அமைவை குறிக்கும் விரிவான படமாகும்.

தொடரும்…

C.P.சரவணன், வழக்கறிஞர் 
தொடர்புக்கு - 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com