பாகம்-4 : சொத்தை பதிவு செய்வது எப்படி? முழுமையான தகவல்!

சொத்து ஆவணங்களை பதிவு செய்வதன் நோக்கம் மேற்படி ஆவணம் செயல்படுத்தப்பட்டது என்பதை உலகுக்கு தெரிவிப்பதற்காகவே ஆகும்.
பாகம்-4 : சொத்தை பதிவு செய்வது எப்படி? முழுமையான தகவல்!


பதிவுத்துறை ஆவணங்கள்
சொத்து ஆவணங்களை பதிவு செய்வதன் நோக்கம் மேற்படி ஆவணம் செயல்படுத்தப்பட்டது என்பதை உலகுக்கு தெரிவிப்பதற்காகவே ஆகும். ஆவணத்தை பதிவு செய்வதனாலேயே மட்டும் சொத்தின் மீது உரிமை கோர முடியாது. ஆனால், பதிவானது செயல்பாட்டிற்கான ஆதாரமாக விளங்குகிறது. பதிவுச் சட்டம், 1908 பதிவு சம்பந்தமான அதிகாரங்களையும் வழிமுறைகளையும் வழங்குகிறது.

வில்லங்க சான்றிதழில் என்ன தகவல்கள் கிடைக்கும்?
சர்வே எண், மொத்த பரப்பு, நிலத்தின் நான்கு எல்லைகள், ஆவண எண், சார் பதிவாளர் அலுவலகத்தில் குறிபிட்டுள்ள தொகுதி மற்றும் பக்கங்கள், சொத்தின் தன்மை, கை மாறிய மதிப்பு, பதிவு செய்யப்பட்ட நாள், சொத்தை வாங்கியவர் மற்றும் விற்பனை செய்தவர், ஜெனரல் பவர் அட்டார்னி வாங்கியவர்கள் அடமானம் வைத்தவர் மற்றும் பெற்றவர், சொத்தை வாங்க, விற்க ஒப்பந்தம் போட்டவர்கள், பெயர்கள் இடம்பெறும். கேட்கும் வருடத்தில் அல்லது வருடங்களில் எந்த பரிமாற்றமும் இல்லை எனில் இல்லை (நில்) என பதிவு தரப்படும். 

இந்த வில்லங்க சான்றிதல் முழு நம்பக தன்மை உடையதா?
சரியான முறையில் நாமே நேரடியாக அல்லது நன்கு விவரம் அறிந்த நம்பிக்கையானவர்கள் மூலம் சொத்தை பதிவு செய்த சார் பதிவாளர் அலுவலகத்தில் பெறப்படும் வில்லங்க சான்றிதழ் நம்பக தன்மை கொண்டது. இருந்தாலும் தவறுகள் நடக்க வாய்ப்பும் உண்டு. ஆனாலும் ஒரு சொத்தின் முழு உரிமை உடையவரை கண்டு கொள்ள இந்த சான்றிதழ் மட்டும் போதுமானதல்ல. சர்வே எண்களை மாற்றி, மொத்த பரப்பு நான்கு எல்லைகள் அவற்றின் அளவுகளை கூட்டி அல்லது குறைத்து குறிப்பிட்டு தேடும் வில்லங்க சான்றிதழ் விண்ணப்பத்தில் தகவல்கள் முழுமையாகக் கிடைக்காது. 

மேலும் அறிந்து கொள்ள.. முந்தைய கட்டுகரைகள்..

பாகம்-1 அங்கீகார மனை: சொத்து வாங்கும் போது தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
பாகம்-2.. நகரங்களில் இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
பாகம்-3 சொத்து வாங்குபவர்கள் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்!

சொத்தின் உரிமையாளர் சம்மதம் இன்றி, சொத்தின் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதுதான் உண்மையான வில்லங்கம் ஆகும். மற்றவையெல்லாம் வில்லங்கச் சான்றை பதிவு குறிப்பு சான்று  எனலாம்.

வழிகாட்டி மதிப்பு (Guide Line Value)
ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து மதிப்பீடு செய்யப்பட்டு அரசு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு வழிகாட்டி மதிப்பு என்று பெயர்.

பதிவு செய்து கொள்ள கால அவகாசம்
செயல்படுத்திய  ஆவணங்களை, அந்த சொத்துள்ள அதிகார எல்லைக்குள் இருக்கும் சார் பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளரிடம் நாடி பதிவு செய்து கொள்ள வேண்டும். 

அதற்கென கால அவகாசம்:-

  • ஆவணம் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 4 மாதம்
  • மாவட்ட பதிவாளர் தாமதத்தை ஏற்றுக் கொண்டு அபராதத் தொகையுடன் பதிவு செய்ய உத்தரவிடுவார்  
  • உயில்களை பதிவு செய்ய கால அவகாசம் இல்லை

எண்

கால தாமதம்

அபராதத் தொகை

1

ஒரு வாரம் வரை

பதிவுத் தொகையில் 25 %

2

ஒரு மாதம் வரை

பதிவுத் தொகையில் 75 %

3

4 மாதங்கள் வரை

பதிவுத் தொகையில் 100 %

ஆவணத்தின் வகைகள்

A) அதிகார ஆவணம் (Power of Attorney)

ஒரு காரியத்தை நேரிடையாக செய்ய இயலாத போது தமக்கென்று ஒரு முகவரை (Power of Attorney Agent) வைத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இந்த அதிகார ஆவணம் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்க விற்க, நிலத்தில் கட்டடம் கட்ட, அதற்கான ஆட்களை வேலையில் அமர்த்த, நம் இடத்தை வாடகைக்கு விட, ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்ய, நமது சார்பில் வழக்கு தொடர அல்லது எதிர்த்து வழக்காட என பல அலுவல்களுக்கும் அதிகார முகவரை நியமிக்கலாம். 100 ரூபாய் முத்திரைப் பத்திரத்தில் எழுதிக்கொள்ளலாம்.

வெளிநாடுகளில் எழுதப்படும் அதிகார ஆவணம், அந்த நாட்டு தூதரக அதிகாரியின் முன் கையொப்பம் இடப்பட வேண்டும். சான்றுக்கு அதிகாரியின் கையொப்பமும், அலுவலக முத்திரையும் அதில் பதிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, இப்படி எழுதப்பட்டு நம் நாட்டுக்கு வந்தபின் நான்கு மாத காலத்துக்குள் அதை சார்பதிவகத்தில் பதிவு செய்ய வேண்டும்

B) விற்பனை ஒப்பந்தம் (Sale Agreement)
சொத்து வாங்க வேண்டும் என்று நினைத்து, முடிவு செய்யும் கணத்தில், உங்களிடம் முழுத்தொகை இல்லாமல் இருக்கலாம். வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடன் வாங்க வேண்டியிருக்கலாம். அதற்கு மூன்று அல்லது நான்கு மாத கால அவகாசம் இருக்கலாம். அந்த காலங்களில் காத்திருக்காமல் மொத்த பணத்தையும் மாற்றிக் கொள்வதற்கு முன்னால், ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து ஒப்பந்தத்தை எழுதிக் கொள்வது விற்பனை ஒப்பந்தமாகும்.

C) விற்பனைப் பத்திரம் (Sale Deed)
அதிகார ஆவணம், விற்பனை ஒப்பந்தம் மூலமாக அல்லது நேரடி விற்பனையாளரிடமிருந்து முழு தொகை கொடுத்து ஒரு அசையா சொத்தை வாங்குவது விற்பனை ஆகும். அதற்காக போடப்படும் பத்திரம் விற்பனைப் பத்திரம்.

சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.

1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. சொத்தின் அளவு
4. சொத்து விற்கப்படும் தொகை
5. சொத்து விவரம்

சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.

 

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின் வரும் முழு விவரங்கள் இருக்கும்.

  1.  பதிவு எண் மற்றும் வருடம்
  2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
  3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
  4. புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
  5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
  6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
  7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
  8. மொத்தம் எத்தனை தாள்கள்
  9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்
     

D) செட்டில்மெண்ட் பத்திரம் (Settlement Deed) 
குடும்ப உறுப்பினர்களுக்குள் செய்து கொள்ளும் சொத்து உரிமை மாற்றம் தான செட்டில்மெண்ட் பத்திரமாகும். அன்பின் அடிப்படையிலும், பாசம் மற்றும் பரிவு காரணமாக  தந்தை அல்லது தாய் தன் சுயார்ஜித சொத்தை அல்லது தனிப்பட்ட சொத்தை எழுதி வைப்பதாகும்.  செட்டில்மெண்ட் சொத்துக்களை பொறுத்தமட்டில் அவருக்கு வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் உரிமை அல்லது தானாதி வினிய விற்கிரய உரிமை கொடுக்கப்படலாம். செட்டில்மெண்ட் உரிமையை திரும்ப பெரும் உரிமையை தக்க வைத்துக் கொள்ளலாம். கூட்டுக் குடும்ப சொத்தை கர்த்தா என்றழைக்கப்படுபவர் செய்தால் அது செல்லாது.

E) பாகப் பத்திரம் (Partition Deed)
இவ்வகை பத்திரம் கூட்டுக் குடும்பத்திலுள்ள நபர்களோ உரிமையாளர்களோ தங்களுக்கு உரிய பங்குகளை தனித்தனி ஷெட்யூல் மூலம் பிரித்துக் கொள்வதாகும்.

F) விடுதலைப்பத்திரம் (Release Deed)
சொத்தில் கூட்டு உரிமை உள்ளவர்களில் ஒருவர் மற்ற பங்குதாரர்களுக்கு தங்கள் உரிமையை விட்டுக்கொடுத்தல் அல்லது விடுதலை செய்து கொடுப்பதாகும். இந்த வகை ஆவணங்கள் மூலம் மட்டுமே ஒருவர் சொத்தில் உரிமையை பெற முடியாது.

G) பரிவர்த்தனைப் பத்திரம் (Exchange Deed)
அனுபவிக்கும் முறையில் வசதியினை கருதி  ஒருவர் தன் சொத்தை மற்றவர்களுக்கு கொடுத்து அதற்கு பதிலாக வேறு சொத்தை பரிவர்த்தனையாக பெறுவதற்கு பரிவர்த்தனை பத்திரம் செய்து கொள்ளலாம்.

H) குத்தகை ஆவணம் (Lease Deed)
சொந்தமாக வீடு அல்லது வணிக உபயோகத்திற்கு கட்டடம் இல்லாதபோது, நாம் இடத்தை வாடகைக்கு விடுவோம் அல்லது வாடகைக்கு எடுப்போம். அதற்காக போடப்படும் ஒப்பந்தம் குத்தகை/வாடகை ஒப்பந்தமாகும். அதில் எவ்வளவு காலம், ஆண்டு அல்லது மாத வாடகை எவ்வளவு, என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதை பற்றிய விபரங்கள் இருக்கும். 
 
I) உயில் ஆவணம் (Will)
உயில் என்பது ஒருவர் இறப்பதற்கு முன்னர், தனது சொத்துக்கள் குறித்து எழுதப்படும் ஆவணம் ஆகும். சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக அந்த நபர் இறந்ததும், தாவாக்கள் - வழக்குகள் - சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உயில் எழுதி வைக்கப்படுகிறது. உயில் எழுதுபவர் அவர் விருப்பப்படி, அவரது சொத்துக்களை, அறக்கட்டளைகள் உட்பட எந்தக்காரியத்திற்கும் எழுதிவைக்கலாம். தான் இறந்தபிறகு தன்னுடைய சொத்து எப்படிப் பிரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தை எழுதிவைக்கும் ஆவணமே உயில் எனப்படும். உயிலில் கண்டகுறிப்பைக் கொண்டு எளிதில் கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். உயிலினை உருவாக்கிய பின்னர் வேறொர் ஆவணத்தின் மூலமாக அந்த உயிலில் சேர்த்தோ, மாறுதல் செய்தோ அந்த ஆவணத்தை உயிலோடு சேர்த்து உயிலெனக் கொள்ள வேண்டும். அது உயிலிணைப்பு எனப்படும்.

இந்துக்கள், முஸ்லிம்களைத் தவிர, ஏனையோர் திருமணத்திற்குப் பின்னர், மற்றொரு புதிய உயில் எழுதவேண்டும். திருமணத்திற்குப் பின்பு புதிய உயில் எதுவும் எழுதப்படவில்லை என்றால், அந்த நபர் இறந்த பின்னர் வாரிசுரிமைச் சட்டப்படி சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டும்.

ஒரு உயில் மூலம் பயனடைபவர்கள் அல்லது அவர்களின் கணவனோ மனைவியோ அந்த உயிலில் சாட்சிக் கையெழுத்திடக்கூடாது. அப்படிக் கையெழுத்திட்டால், அது உயில் சட்டபடி செல்லுபடியாகும் என்றாலும், அதன் மூலம் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. எழுதிவைக்கப்பட்ட பயன்களை அவர்கள் அனுபவிக்க முடியாது.

j) திருத்தல் ஆவணம் (Amendment Deed)
பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் எந்தத் திருத்தம் செய்யப்படுவதாக இருந்தாலும் பிழை திருத்தல் ஆவணம் மூலம் தான் செய்யப்படும். எல்லா பிழை திருத்தல் ஆவணத்திற்கும், அதிலுள்ள கவனக்குறைவால் ஏற்பட்ட பிழைகளுக்காக கூடுதல் முத்திரை வரியோ கட்டணமோ வசூலிக்கப்பட மாட்டாது.

தாய் பத்திரத்தில் சர்வே எண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் ஆகிய மற்ற குறிப்பிட்ட விஷயங்கள் தாய் பத்திரத்தில் உள்ளபடியே இருந்தால், பிழை திருத்தம் செய்து கொள்ளலாம்.

பதிவு செய்த விற்பனை ஆவணத்தை ரத்து செய்வது எப்படி?
பதிவுத்துறைத்தலைவரின் சுற்றறிக்கை எண்.39789/இ1/2007 நாள் 5.10.2007 இlன் படி,  பதிவுச் சட்டம் பிரிவு 34A-ன்படி பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் கிரைய ஆவணங்களில், கிரையம் பெறுபவரும் கையொப்பமிட வேண்டும் என்ற நெறிமுறை 14.2.2001 முதல் அமுல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.  இந்நிலையில், இவ்வாறு பதிவு செய்யப்பட்ட கிரைய ஆவணங்களை ரத்து செய்யும்போது, கிரைய ஆவணத்தில் எழுதிக் கொடுத்தவரல்லாமல், எழுதிப்பெற்றவரோ அல்லது அவரது முகவராலோ,  ஒப்புதல் கையொப்பமிடப்பட்டு பதிவு  அலுவலர் முன் ஆஜராகி மேற்படி கிரையரத்து ஆவணத்தை எழுதிக் கொடுத்ததை ஒப்புதல் அளித்தால் மட்டுமே, பதிவு செய்தல் வேண்டும்.

விற்றவர், வாங்கியவர் இருவரும் வந்து ரத்து செய்தாலும் கூட அந்த ரத்து முறைப்படியான மறுவிற்பனை ஆவணத்தின் மூலமே செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மேற்படி பதிவானது, சட்டப்படி நடைமுறைப்படுத்தப்படாது என்று ஆவணத்தில் மேற்குறிப்பு செய்யப்படும். 

பதிவுக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? (Check-List)

  1. உரிய முத்திரைத் தீர்வையுடன் கூடிய எழுதி கையாப்பமிடப்பட்ட ஆவணம்
  2. பதிவுக்கு முன் அலுவலர் முன் தோன்றவும் வேண்டும்
  3. வீடு இருந்தால் அதன் முழு விவரம் அடங்கிய படிவம், வரைபடம், மனைப்பிரிவின் அங்கீகாரம் பெற்ற நிலப்படம்.
  4. ஆவணதாரர்களின், சாட்சிகளின் புகைப்பட அரசு/அரசுசார்பு அடையாள அட்டைகள் அசலில் மற்றும் சீராக்கப் படிவத்துடன்.
  5. பதிவுக் கட்டணம் ரூ. 1000/-க்கு மேல் இருந்தால் கேட்பு காசோலை, முத்திரைத் தீர்வை இட்டது குறைவாக இருப்பின் குறைவுத் தொகை ரூ. 1000/-க்கு மிகுமானால் அதற்கான கேட்பு காசோலை
  6. ஆவணதாரர்களை நன்கு அறிந்த இரண்டு சாட்சிகள் (சாட்சிகளை அழைக்காது சென்றுவிட்டு தெரியாத நபரை சாட்சி கையெழுத்து போட வைக்கும் போது, பின் நாளில் சொத்துப் பிரச்சனை வந்தால் சாட்சி சொல்ல ஆளைத் தேடிப் போனால் கிடைக்கமாட்டார்கள். கிடைத்தாலும் சாட்சி சொல்ல சிக்கல் வருவதுண்டு.
  7. தாய்ப்பத்திரங்கள் அல்லது தாய்ப்பத்திரங்கள் வங்கியில் இருப்பின் அதற்கான வங்கிச்சான்று மற்றும் தொலைந்து போயிருந்தால் அதற்கான காவல்துறை சான்று
  8. விவசாய நிலம் என்றால் அரசு வழங்கிய பட்டா முதலிய வருவாய்த்துறை சான்றுகள்(பட்டா/ வட்டாச்சியரால் வழங்கப்படும்10(1) குறிப்பாணை )
  9. வீடு என்றால் விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் உள்ள சொத்துவரி முதலிய விவரங்கள். 
  10. வாரிசு முறைப்படி சொத்து வந்திருந்தால் சொத்து உரிமையாளரின் வாரிசு இவர்தான் என்பதை நிலைநாட்ட வாரிசுச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ்
  11. சொத்து பற்றிய நடப்பு வில்லங்கச் சான்று விற்பவர், எழுதிக்கொடுப்பவர் பெயரில் இருக்க வேண்டும் (கடந்த 10 நாட்களுக்குள் வாங்கி இருக்க வேண்டும்)
  12. ஆலய, வக்பு நிலம் என்றால் தடையின்மைச் சான்று (NOC)
  13. விவசாய நிலம் மனைப் பிரிவு ஆக்கப்படுமானால் மாவட்ட ஆட்சியரின் தடையின்மை சான்று 
  14. மனைப்பிரிவுக்கான DTCP/CMDA அனுமதி ஆணை.
  15. ஆவணதாரர்களில் வயோதிகம் காரணமாக வர இயலாதவர்கள் மருத்துவமனைகளில் உள்ளவர்கள் பொருட்டு பதிவாளர் அங்கே வர வேண்டுமென்றால் முன்பே மருத்துவர்களிடம் சான்று பெற்று உரிய கட்டணம் செலுத்தி பதிவாளரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
  16. குறைவு முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டுமென்றால் அதற்கு தனியான விண்ணப்பம்
  17. இரண்டாம், மூன்றாம் படி ஆவணங்கள் (Duplicate,Triplicate) பதிவு செய்ய தனியே விண்ணப்பம்.
  18. ஆவணதாரர்களில் எவரேனும் பதிவு அன்று வர இயலாவிட்டால் அவர்களுக்காக ஆவணத்தை (வந்தவர்கள் பொறுத்து பதிவை முடித்து) நிலுவையில் வைக்க தனியே விண்ணப்பம்.
  19. பொது அதிகார ஆவணத்தின் மூலம் பதிவு செய்ய வரும்பொழுது பொது அதிகாரம் வழங்கிய முதல்வர் (PRICIPAL) உயிரோடிருக்கிறார் என்பதற்கான சான்று
  20. ரூ.7 நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டப்பட்ட  பட்டா மாறுதல் விண்ணப்பம்.
  21. ரூ.5 லட்சம் மதிப்பிற்கு மேலுள்ள சொத்துக்களை விற்கும் பொழுது, விற்பவரின் PAN/GIR எண்ணை குறிப்பிட வேண்டும்

ஆவண பதிவு நடைமுறைகள் ஒன்றன் பின் ஒன்றாக!
முத்திரைதாள்களில் கிரயப்பத்திர விவரங்களை டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்ப்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும், மறுபுறம் சொத்து விற்பவரும் கையெழுத்து இட வேண்டும். 

சார்பதிவாளரிடம் இந்த கிரயப்பத்திரத்தை பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.

சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை ஆகியவற்றையும் மற்ற விவரங்களையும் சரிபார்த்து, பதிவு இலக்கம் அளிப்பார். பதிவுக்கட்டணம் செலுத்திய பின், முதல் முத்திரைத்தாளின் பின்புறம் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும்.

புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர். இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக்கட்டணம் செலுத்திய ரசீதில், சார் பதிவாளரும், சொத்து வாங்குபவரும் கையொப்பம் இட வேண்டும். 

பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு, ரசீது காட்டி, சொத்து வாங்குபவர் பெற்றுக் கொள்ளலாம்.

வேறு யாரேனும் வாங்க வேண்டியிருப்பின், அந்த நபரும் ரசீதில் கையொப்பமிடவேண்டும். நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்(சர்வே எண்) அமைந்திருக்கலாம்.

47 A அல்லது RDO பத்திரம் என்பது என்ன?

பத்திரப்பதிவின் போது வழிகாட்டி மதிப்பீட்டில் 8 சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அதிகம் என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்து மதிப்பு நிர்ணயம் செய்து, அதில் 8 சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்கலாம். சார்பதிவாளர் இப்பத்திரத்தை பதிவு செய்து விட்டு பெண்டிங் டாக்குமென்ட் என முத்திரை இட்டுவிடுவார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென ஒரு பிரிவு இருக்கிறது. அங்குள்ள அலுவலர் குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றியுள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து, வழிகாட்டி மதிப்பு சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார். வழிகாட்டி மதிப்பு சரியாகவே உள்ளது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில், அதற்கு நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8 சதவீதத்தை செலுத்த வேண்டும். அல்லது அவர் நிர்ணயித்த மதிப்புக்கும் நாம் நிர்ணயித்த மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தில் 8 சதவீதத்தை செலுத்த வேண்டும். 

அதன் பிறகே பதிவு செய்த பத்திரம் நம்மிடம் ஒப்படைக்கப்படும். இம்முறைக்கு 47 A பிரிவு என்று பெயர். குறிப்பிட்ட காலத்துக்குள் மீதித்தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தை பெற வேண்டும். இல்லையெனில், அது மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அதன் பிறகு அங்கு சென்று வித்தியாசத் தொகையைச் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

தொடரும்……..
C.P.சரவணன், வழக்கறிஞர் 
தொடர்புக்கு - 9840052745
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com