பாகம்-19: சோலார் மேற்கூரை அவசியம் போட வேண்டுமா? அரசு விதிகள் சொல்வதென்ன?

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சரகம் வகுத்துள்ள “மாதிரி கட்டிட விதிகள்,2016- சோலார் சக்தி உபயோகம் பற்றி அறிவுறுத்துகிறது.
பாகம்-19: சோலார் மேற்கூரை அவசியம் போட வேண்டுமா? அரசு விதிகள் சொல்வதென்ன?

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சரகம் வகுத்துள்ள “மாதிரி கட்டிட விதிகள்,2016- சோலார் சக்தி உபயோகம் பற்றி அறிவுறுத்துகிறது.

சென்னைப் பெருநகரப் பகுதிக்கான வளர்ச்சி விதிமுறைகள் விதி (10) இணைப்பு XXIII-ல் கொடுக்கப்பட்டுள்ளபடி சூரிய சக்தி  சேகரிக்கும் வழிமுறைகள், பின்வரும் கட்டிடங்களில் அமைக்க வேண்டும்.

அ) தரைப்பரப்பில் 500 ச.மீ.க்கு மேலுள்ள மருந்தகங்கள் / மருத்துவமனைகள்
ஆ) தங்கும் விடுதிகள் 500 ச.மீ.க்கு அதிகமான தரைப்பரப்பு கொண்டது.
இ) 50 அறைகளுக்கு மேல் உள்ள விடுதிகள், மற்றும்
ஈ) திருமண மண்டபங்கள் 500 ச.மீ.க்கு அதிகமான தரைப்பரப்பு கொண்டது.

சென்னைப் பெருநகரப் பகுதிக்கான வளர்ச்சி குழும ஆணை எண்.01/2010 நாள்:21.01.2010 சூரிய சேமிப்பு அமைப்பு கட்டிடங்களுக்கே நிறைவுச் சான்றிதழ் வழங்கும் என கூறுகிறது.

சோலார் சக்தியைப் பற்றிப் பார்ப்போம்:
 
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy)

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பமானது சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது

சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் (solar energy) எனப்படுகிறது. சூரிய ஆற்றல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்ற மீள உருவாக்கக்கூடிய ஆற்றல்களான, காற்றாற்றல், நீர்மின்னியல், மற்றும் உயிர்த்திரள் (biomass) ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெருமளவில் துணை புரிகிறது. பூமியில் விழும் சூரிய ஆற்றலில் மிகவும் சிறிய பகுதியே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது.

சூரிய ஓளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Photovoltaic).
சூரிய வெப்பத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Solar Thermal).

சூரிய ஆற்றலை பெற்று, மின்சாரமாக மாற்றி, சேமித்து பயன்படுத்த ஏதுவாக்கும் கருவி ஒருங்கமைப்பை சூரிய ஆற்றல் ஒருங்கியம் எனலாம். அது பின்வரும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

1. பல சூரியக்கலங்கள் (solar cells) சேர்ந்த சோலார் தகடுகள்(solar panels)
2. ஒருங்கிய கட்டுப்படுத்தி (Controller)
3. மின்கலம் (battery) (மின்னாற்றலைத் தேக்கிவைக்க)
4. நேர்மாற்றி (Inverter) (தகடுகள் உற்பத்தி செய்யும் நேர் மின்சாரத்தை மாறுதிசை மின்சாரமாக மாற்ற)

நார்வே நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு

நார்வே நாடு மிக அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி செய்யும் நாடு ஆகும். நார்வே நாட்டின் 99 விழுக்காடு மின்சாரம் நீர்மின் ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சிறந்த இயற்கை நீர்வளங்களை கொண்டுள்ளதால் நீர்மின் ஆற்றல் மின் உற்பத்தி, சூரிய ஆற்றல் உற்பத்திக்கான வளங்கள் குறைவாக இருப்பினும் சூரிய மின் ஆற்றல் தர சிலிக்கான் மற்றும் சிலிக்கான் சூரிய மின் ஆற்றல் கடத்துதிறக் கலங்கள் உற்பத்தியில் உலகளவில் மிக அதிக அளவில் ஈடுபட்டுள்ளது. வளர்ந்துவரும் நாடுகளும் தங்கள் நாட்டில் புவி மாசுபடுவதை தடுப்பதற்கும் சுத்தமான மின்சார உற்பத்தி செய்வதற்கும் நார்வே ஒரு முன்னோடியாக திகழ்கிறது.


மேலும், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை, ஒரு யூனிட் கூட வீணடிப்பதில்லை.

3வது இடத்தில் தமிழகம்

கடந்த ஜூன் மாத நிலவரப்படி சூரிய மின்சார உற்பத்தி திறனில் 2010.87 மெகாவாட்டுடன் ஆந்திரா முதலிடத்தில் இருந்தது. 2வது இடத்தை 1961 மெகாவாட்டுடன் ராஜஸ்தான் பிடித்தது. தமிழகத்தின் உற்பத்தி திறன் 1697 மெகாவாட்டாக இருந்தது. கடந்த 2015-16 ஆண்டு காலத்தில் தமிழகம் 919.24 மெகாவாட் சூரிய மின் சக்தி திறனுடன் இருந்தது. ஆனால் இது கடந்த 2016-17ல் 630 மெகாவாட்டாக சுருங்கிப் போய் விட்டது. அதே காலகட்டத்தில் ஆந்திராவின் உற்பத்தி 1294 மெகாவாட்டாக அதிகரித்திருந்தது. கர்நடாகம் 882, தெலுங்கானா 759 என உற்பத்தி செய்திருந்தன.
  
வேகமாக செயல்படும் ஆந்திரா
ஆந்திராவில் சூரிய சக்தி பூங்காக்கள் அமைப்பதற்கான நிலத்தை அந்த மாநில அரசே கையகப்படுத்துகிறது. இதனால் பணிகள் துரிதமாக நடக்கிறது.

பொறுப்பை தட்டிக் கழிக்கும் தமிழ்நாடு
 
பொறுப்பை தட்டிக் கழிக்கிறதா தமிழ்நாடு?
ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களிடமே விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்கிறது மாநில அரசு. இதனால் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறதாம்.

சூரிய மின்சக்தி கொள்கை

மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார். அதன்படி, புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களில் கண்டிப்பாக சூரிய மேற்கூரை மின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படியாக இந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சோலார் பேனல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு மான்யம் என்னென்ன?
ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு மானியம் ரூ.20 ஆயிரம். மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது.

ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்–லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

ஆன்–லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் www.teda.in இ–பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்–லைனிலேயே அனுப்பப்படும்.

இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும்.

தினமும் 4 யூனிட் மின்சாரம்
ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை ‘கிரிட்’ மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலவாகும். சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்துவைத்து இரவு நேரத்திலும் பயன்படுத்த விரும்பினால் அதற்கு பேட்டரியுடன் கூடிய சோலார் பேனல் வாங்குவதற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனலுக்கு 25 ஆண்டுகள் வாரண்டியும், ஒட்டுமொத்த சிஸ்டத்திற்கும் 5 ஆண்டுகள் வாரண்டியும் அளிக்கப்படுகிறது.

கணிசமான பணம் மிச்சமாகும்?

ஒருவர் ரூ.1 லட்சம் செலவு செய்து தனது வீட்டுக்கு பேட்டரி இல்லாமல் ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தால் தற்போது மத்திய அரசு மானியமாக ரூ.30 ஆயிரம் கிடைக்கும். இத்துடன் தமிழக அரசு மானியமான ரூ.20 ஆயிரமும் கிடைத்தால், மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக கிடைக்கும். மீதமுள்ள ரூ.50 ஆயிரம் செலவு செய்தால் ஒருவர் தனது வீட்டில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்து கொள்ள முடியும். வீடுகளில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்தால் பொதுமக்களுக்கு கணிசமான பணம் மிச்சமாகும்.

மத்திய அரசின் மானியமான 30 சதவீதத்தைப் பெற்றுத் தருகிறோம். தமிழக அரசு மானியம் (ரூ.20 ஆயிரம்) உத்தரவு விரைவில் வெளியாக இருக்கிறது. அதன்பிறகு இரண்டு மானியத்தையும் சேர்த்தே பொதுமக்கள் பெறலாம். அடுக்குமாடி குடியிருப்புகளில் சோலார் பேனல் வைப்பதில் பிரச்சினை இருக்கிறது.

சோலார் வாட்டர் ஹீட்டருக்கும்…

ஏற்கனவே சோலார் பேனல் வைத்தவர்களுக்கு தமிழக அரசின் மானியம் கிடைக்காது. அரசு உத்தரவுக்கு பிறகு சோலார் பேனல் அமைப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியம் கிடைக்கும். தமிழகத்தில் இதுவரை 1,500–க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசு மானியம் பெற்று சோலார் பேனல் அமைத்துள்ளனர். அதுபோல 1,700–க்கும் மேற்பட்டவர்கள் சூரிய சக்தி மின்சாரம் மூலம் சோலார் வாட்டர் ஹீட்டர் பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் சோலார் வாட்டர் ஹீட்டர் அதிகமானவர்கள் பெற்று இருக்கிறார்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்? (FAQ)

சூரிய மின்சக்தி குறித்த தகவல்களை எங்கே பெறலாம்?
சூரிய மின்சக்தி குறித்து தெரிந்துகொள்ள, தமிழக எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.teda.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை 
E.V.K. சம்பத் மாளிகை,
5-வது தளம், எண்.68, கல்லூரிச் சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை-600 006     
தொலைபேசி : 044 2822 4830,044 2823 6592
Solar Energy Helpline No. 1800 2 33 44 77
 
சென்னை தவிர மற்ற மாவட்டத்தினர் யாரை தொடர்பு கொள்வது?
சென்னையைத் தவிர மற்ற மாவட்டத்தினர், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் அல்லது சென்னை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்தை 044-28224830, 28236592, 28222973 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சூரிய மின்சக்தி சாதனங்கள் பொருத்த தனியார் நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாமா?
சூரிய மின்சக்திக்கான சாதனங்கள் விற்கும் கடைகள், நிறுவனங்களை பொதுமக்கள் அணுகலாம். தனியார் நிறுவன முகவரி தெரியாதவர்கள், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையைத் தொடர்பு கொண்டு சூரியமின் சக்தி பிரிவு அதிகாரிகளை சந்தித்தால், அவர்கள் மூலம் சூரிய மின்சக்தி பொருத்தும் முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

சூரிய மின்சக்தி சாதனங்கள் பொருத்த அரசின் மானியம் உண்டா?
சூரிய மின்சக்தி சாதனங்கள் பொருத்த ஆகும் செலவில், மத்திய அரசு சார்பில் 30 சதவீதம் மானியம் கிடைக்கும். இதை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலமே பெற முடியும்.

தமிழக அரசின் மேற்கூரை சூரிய மின் திட்டம் என்பது என்ன?
தமிழக முதல்வரின் மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டத்தில், ஒரு கிலோவாட் சூரியசக்தி மின் உற்பத்தி உபகரணங்களை பொருத்தி, அதில் உற்பத்தியாகும் மின்சாரம், மின் வாரிய கேபிளுடன் இணைத்து பயன்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன், தமிழக அரசின் சார்பில் 20 சதவீதம் கூடுதல் மானியம் கிடைக்கும்.

நெட் மீட்டர் (இருவழிக் கணக்கீடு) என்பது என்ன?
சூரிய மின்சக்தி பொருத்தும் இடங்களில், நெட் மீட்டர் எனப்படும் இருவழிக் கணக்கீடு மீட்டர் பொருத்தப்படும். இருவழிக் கணக்கீடு மீட்டர் மூலம், சூரிய மின்சக்தி உற்பத்தியின் அளவு மற்றும் சம்பந்தப்பட்ட மின் இணைப்பில் பயன்படுத்திய மின்சார அளவு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் கணக்கிடப்படும்.

தமிழக அரசின் சூரிய மின்சக்தி திட்டத்தில் யாருக்கு அனுமதி உண்டு?
தமிழக அரசின் மேற்கூரை சூரியசக்தி திட்டத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. ஒரு இணைப்புக்கு ஒரு கிலோவாட் மட்டுமே மானியத்துடன் அனுமதி கிடைக்கும். மற்றவர்கள் மத்திய அரசின் மானியத்துடன் மட்டும், எத்தனை கிலோவாட் வேண்டுமானாலும் சூரியசக்தி பொருத்தலாம்.

சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க எவ்வளவு இடம் தேவை?
ஒரு கிலோவாட் மின் நிலையத்திற்கு, 75 சதுர அடி இடம் தேவை.

சூரிய சக்தி மின் நிலையத்திற்கு என்ன உபகரணம் பயன்படுத்தப்படுகிறது?
சூரிய மின் தகடு - பேனல், இன்வெர்டர், பேட்டரி ஆகியவை தேவை. பேட்டரி இல்லாத பட்சத் தில், 'நெட்' மீட்டர் பொருத்தி, சூரிய சக்தி மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு வழங்கலாம்.

சூரிய சக்தி மின் கட்டமைப்பு அருகில், வீட்டு உபயோக சாதனங்கள் இருக்கலாமா?
இருக்கலாம். மின் தகடுகளை தொட்டாலும், 'ஷாக்' அடிக்காது. சூரிய சக்தி கட்டமைப்பு அமைக்க, சி.எம்.டி.ஏ.,  

மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அரசு நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டுமா?
வீடுகளில் அமைக்க, யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. மின் வாரியத்திற்கு, மின்சாரத்தை விற்க விரும்பினால், 'நெட்' மீட்டர் பொருத்த, மின் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.

சூரிய சக்தி மின் நிலையங்களில், மின் உற்பத்தி இல்லாத போது, எந்த மின்சாரத்தை பயன்படுத்தலாம்?
பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம் அல்லது, மின் வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்தலாம்.

மழையின் போது, சூரிய ஒளி இருப்பின், மின் உற்பத்தி நடக்குமா?
நடக்காது.

வீட்டு மேற்கூரையில் உள்ள ஓடுகள் மேல், சூரிய மின் தகடுகளை நிறுவ முடியுமா?
ஓடுகளின் எடையை பொறுத்து, சூரிய மின் தகடு நிறுவலாம்.

சூர்யஒளி நகரங்கள் ( Solar Cities)
மத்திய புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சகம்,  சோலார் நகரங்களை உருவாக்குவதில் முனைப்புடன் இயங்குகிறது. இதன் படி 10% மின்தேவையை சூர்யசக்தியின் மூலம்  தீர்க்க முடிவு செய்துள்ளது. இவ்வழியில் தமிழ்நாட்டில் கோயமுத்தூர் உள்ளிட்ட நாடு முழுதும் 31 நகரங்களை தேர்ந்தெடுத்து, அவைகளுக்கு 50 லட்சம் வரை நிதி அளித்துள்ளது.

சோலார் சக்தியை பயன் படுத்துவதில் உலக அளவில் சீனா 78,100 MW (25.8%), ஜப்பான் 42,800 MW (14.1%), ஜெர்மனி 41,200 MW (13.6%) அமெரிக்கா 40,300 MW (13.3%), இத்தாலி19,300 MW (6.4%) இங்கிலாந்து 11,600 MW (3.8%) இந்தியா 9,000 MW (3.0%) பிரான்ஸ் 7,100 MW (2.3%) ஆஸ்திரேலியா 5,900 MW (1.9%) ஸ்பெயின் 5,500 MW (1.8%) உள்ளது.


சோலார் விமானம் பயன்படுத்துகிற இந்நாட்களில், பெரும்பாலான நாடுகளில் வருடத்தில் பாதி நாட்கள் வெய்யிலே பார்க்காத வேலையில், சோலார் சக்தியை    அதிகம் பயன்படுத்தும் போது, இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோலார் சக்தி பயன்பாட்டை அதிகமாக்க வேண்டியுள்ளது.

தொடரும்….
Lr. C.P. சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com