இளையராஜா - எஸ்பிபி காப்புரிமை மோதல்: சொல்லாத செய்திகள் என்னென்ன? 

பாடகர் எஸ்பிபி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ப்ளானோ என்ற இடத்தை தலைமையிடமாக  கொண்டு இயங்கி வரும் ...
இளையராஜா - எஸ்பிபி காப்புரிமை மோதல்: சொல்லாத செய்திகள் என்னென்ன? 

பாடகர் எஸ்பிபி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ப்ளானோ என்ற இடத்தை தலைமையிடமாக  கொண்டு இயங்கி வரும் “இண்டஸ் எண்டர்டைன்மெண்ட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து 'எஸ்பிபி-50'என்ற இசை நிகழ்ச்சியை நடத்துவதாக ஒப்புக் கொண்டு வரும் மார்ச் 24- அன்று இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

முன்னதாக இந்நிறுவனம்தான் டல்லாஸில் இளையராஜாவின் 1000 படங்களுக்கு இசையமைத்தைக் கொண்டாடும் வகையில்  - “Maestro 1000 at Dallas”, என்ற நிகழ்ச்சியை 2016 இல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. .

நிகழ்ச்சிக்கான தயாரிப்பு பணிகளில் எஸ்பிபி  மற்றும் குழுவினர் ஈடுபட்டிருக்கும் வேளையில்தான், தான் இசை அமைத்த பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முன்னதாக இளையராஜா கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய பாடல்களின் காப்புரிமை பிரச்சினைக்காக போராடி  வருகிறார். இது தொடர்பாக கோர்ட்டிலும் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ‘இளையராஜாவின் பாடல்களை  காப்புரிமை பெறாமல் வெளியிடக் கூடாது’ என்று ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

இளையராஜாவின் நோட்டீசுக்கு முகநூலில் பதில் அளித்த எஸ்.பி.பி, ''இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன்”, என்று கூறியிருந்தார்.

இளையராஜாவின் காப்புரிமை நோட்டீசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இளையராஜா பாடல்களை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தவே எதிர்ப்பு தெரிவித்து பாடகர் எஸ்.பி.பி.-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும், அதை சட்டரீதியாக அணுகாமல், எஸ்பிபியை பேச வைத்து சிலர். சென்சேஷனல் ஆக்கியிருக்கிறார்கள்.

முதலில் பாடல்களின் காப்புரிமை சட்டம் என்ன சொல்கிறது?

காப்புரிமை சட்டம், 1957 பிரிவு 13.(அ) இசையையும், பிரிவு 13.(ஆ) திரைப்படங்களின் பதிப்புரிமையும் பற்றி சொல்கிறது . இந்த சட்டப்பிரிவுகள் இந்தியா முழூமைக்கான பதிப்புரிமை பற்றிக் கூறுகிறது.

திரை இசையை பொறுத்தவர பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடலைப் பாடுபவர் எனும் 3 முக்கிய பிரிவினரைக் கொண்டு திரையிசைப் பாடல்கள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் பாடல்களை, படத்தின் தயாரிப்பாளர் விலை கொடுத்து வாங்குவதும், பின்னர் அவற்றை, இசை நிறுவனங்களுக்கு விற்பதும் வழக்கம்.

இதில்  பாடல் வரிகளுக்கான காப்புரிமை பாடலாசிரியருக்கும், இசைக்கான காப்புரிமை இசையமைப்பாளருக்கும் சொந்தமாகிறது. இரண்டும் இணைந்த திரையிசைப்  பாடலுக்கான காப்புரிமை, இசை நிறுவனங்களுக்கு சொந்தம் என்கிறது காப்புரிமைச் சட்டம். மேலும், பாடலைப் பாடியவர்களுக்கு 50 வருடங்களுக்கு performer உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, பொது நிகழ்ச்சிகளில் ஒரு பாடகரின் பாடல்கள் வணிக ரீதியாக உபயோகிக்கப்படும்போது அதற்கான ராயல்ட்டியை பாடகருக்குத் தரவேண்டும்.  இந்த காப்புரிமையை, குரலுக்கு பாடலாசிரியரும், இசை மற்றும் மெட்டுக்கு இசையமைப்பாளரும்,  மொத்த உரிமை தயாரிப்பாளருக்கும் உண்டு. ஆனால் ஒப்பந்தப்படி சில நேரங்களில் பாடலின் உரிமைகளை இசையமைப்பாளரே வைத்துக் கொள்வதுண்டு.

பிரிவு.22-இன் படி  காப்புரிமையின் கால அளவு வெளியிடப்பட்ட இலக்கிய, நாடக, இசை மற்றும் கலைத்திறன், வெளியிடப்பட்ட இலக்கிய, நாடக, இசை மற்றும் கலைத்திறன் படைப்புகளுக்கான கால அளவு, அவற்றின் ஆசிரியரின் ஆயுள்காலமும் அவரது மறைவிற்குப் பின் அறுபது ஆண்டுகளும் ஆகும். கூட்டு பதிப்புரிமையில் அவர்களில் யார் இறுதியாக இறக்கிறாரோ அவரது மறைவிற்குப் பின் 60 ஆண்டு காலம் ஆகும்.

பிரிவு.51-இன் படி காப்புரிமையின் உரிமை மீறல்(Copyright infringed) பின்வரும் செயல்கள் உரிமை மீறல்களாகும்:

அ) உடமையாளர் அல்லது பதிவாளரால் வழங்கப்படும் ஓர் உரிமம் இல்லாமல் அல்லது அவர்களின் நிபந்தனைகளுக்கு முரணாக

I.              உடைமையாளரின் தனி உரிமையினை மீறி எதையாவது செய்யும் போது அல்லது

II.             எந்த இடத்தையாவாது ஆதாயத்திற்காக்க அனுமதிக்கும் போது

ஆ) யாரேனும் படைப்பின் உரிமை மீறி நகல்களை

I.              விற்பனைக்கு அல்லது வாடகைக்கு விடும்போது அல்லது வர்த்தகம் வாயிலாக காட்சிக்கு வைக்கும் போது அல்லது முயற்சிக்கும் போது

II.             வர்த்தக நோக்கத்திற்காக விநியோகிக்கும் போது

III.            வர்த்தகம் வாயிலாக காட்சிக்கு பொதுமக்களிடம் வைக்கும் போது

IV.            இந்தியாவில் இறக்குமதி செய்யும் போது

பதிப்புரிமைக்கான தகுதியை பிரிவு 13(2) படைப்பானது முதன் முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்டிருந்தால், அதற்கு காப்புரிமை உண்டு. பெர்ன் இலக்கிய மற்றும் கலைத்திறன் படைப்புகளின் பாதுகாப்பு உடன்பாடு மற்றும் யூனிவெர்சல் காப்புரிமையின் வாயிலாக சர்வதேச காப்புரிமை கிடைக்கிறது.

எப்படியாயினும், தற்போது எஸ்.பி.பி – இளையராஜா நட்பும் காப்புரிமை என்ற பெயரில் பிரிந்துள்ளது என்பது இருவருக்குமே நல்லதல்ல

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com