இந்தப் புத்தகங்கள் எல்லாம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன... ஏன்? தெரிந்து கொள்ளுங்கள்!

1936 ஆம் ஆண்டு காத்ரின் மேயோவின் ‘தி ஃபேஸ் ஆஃப் மதர் இந்தியா’ எனும் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி குறித்த தவறான தகவல்களை இப்புத்தகம் முன் வைத்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டதாக
இந்தப் புத்தகங்கள் எல்லாம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன... ஏன்? தெரிந்து கொள்ளுங்கள்!

சர்வதேச அளவில் இந்தியாவுக்கான அடையாளமென்பது ‘வேற்றுமையில் ஒற்றுமை கொண்டாடும் நாடு’‘ என்பதாகவே இன்று வரையிலும் நிலைத்திருக்கிறது. தனது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கொள்கையை எச்சூழலிலும் கைவிடாதிருக்கவும், தேச விடுதலைக்குப் பின் தனக்குத்தானே வடிவமைத்துக் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பு கெடாது இருக்கவும், மக்களிடையே ஒற்றுமை நிலவச் செய்யவும், நீண்ட நெடிய பாரம்பர்யம் கொண்ட இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இலக்கியப் படைப்புகளை களையெடுக்கவும் எளிமையாகச் சொல்வதென்றால் சர்ச்சைக்குரிய இலக்கியப் படைப்புகள் அவை... நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், தன் வரலாறு, அனுபவப் பகிர்வுகள் என எந்த வடிவத்தில் இருந்தாலும் அவற்றிற்கு முற்றிலுமாகத் தடைவிதித்து இந்தியாவுக்குள் அவற்றைப் புழங்கவொட்டாமல் அழித்தொழிக்கும் கடுமையான நடவடிக்கையை இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இன்று நேற்றல்ல... இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே கூட இப்படியான கடுமையான நடவடிக்கைகள் இங்கே அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.

பாரதிக்கும் தடையுண்டு!

அதற்கொரு சிறந்த உதாரணம் 1910 ஆம் ஆண்டில் வெளியான மகாகவி பாரதியாரின் ’ஆறில் ஒரு பங்கு’ எனும் சிறுகதைத் தொகுதி. வெறும் மூன்றணா விலை வைத்து பாரதியால் வெளியிடப்பட்ட அந்த சிறுகதைத் தொகுப்புக்கு தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பு என்ற சிறப்பு அங்கீகாரம் உண்டு. ஆனால், அன்றைய பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் அப்புத்தகத்தை மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டக்கூடிய விதத்திலான கருத்தாக்கங்களை விதைக்கக் கூடிய புத்தகம் என்று காரணம் காட்டி அப்புத்தக புழக்கத்திற்கு பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளில் தடை விதித்தது. இந்தியாவில் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட முதல் தடையாக இதைக் குறிப்பிடலாம்.

அதையடுத்து 1924 ஆம் ஆண்டு பெயர் குறிப்பிடப்படாத எழுத்தாளர் ஒருவரது ‘ரங்கீலா ரசூல்’ எனும் உருதுப் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. முகமது நபிக்கு பெண்களுடன் இருந்த தொடர்பை முன்வைத்து விஷமத்தனமாக விமர்சித்து எழுதப்பட்ட இப்புத்தகத்திற்காக அதன் வெளியீட்டாளர் இஸ்லாமிய இளைஞன் ஒருவனால் கொலை செய்யப்பட்டார். கொலையாளிக்கு பிரிட்டிஷ் அரசு தூக்கு தண்டனை விதித்ததோடு இவ்விவகாரம் முடிவுக்கு வந்தது.

1934 ஆம் ஆண்டு வெளிவந்த மேக்ஸ் வில்லியின் ‘ஹிண்டு ஹெவன்’ எனும் புத்தகம் இந்தியாவில் கோலோச்சிய கிறிஸ்தவ மிஷினரிகளின் ஆதிக்கம் மற்றும் அவற்றின் இந்தியச் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததோடு பதில் அளிக்க இயலாத காட்டமான கேள்விகளையும் எழுப்பின. எனவே இந்தப் புத்தகமும் அன்றைய பிரிட்டிஷ் அரசால் தடை  செய்யப்பட்டதோடு இன்றளவும் அந்தப் புத்தகத்திற்கான தடை நீடிக்கவும் செய்கிறது.

இதே ரீதியில் 1936 ஆம் ஆண்டு காத்ரின் மேயோவின் ‘தி ஃபேஸ் ஆஃப் மதர் இந்தியா’ எனும் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி குறித்த தவறான தகவல்களை இப்புத்தகம் முன் வைத்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

1936 ஆம் ஆண்டு ஆர்தர் மில்ஸின் ‘தி லேண்ட் ஆஃப் லிங்கம்’ எனும் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. காரணம் இந்துக்களின் லிங்க வழிபாட்டு முறையை ஆபாசமாகச் சித்தரிக்கும் வகையில் அப்புத்தகம் படைக்கப்பட்டிருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. 

1955 ஆம் ஆண்டில் இந்துக்களின் பேரபிமானத்திற்கு உரிய இதிகாசமான ராமாயணத்தை பகடி செய்யும் வகையில் வெளிவந்த ஆபுரே மேனனின் ‘ராமா ரீடோல்டு’ எனும் புத்தகம் மத ரீதியிலான அனலைக் கிளப்பி இந்து, முஸ்லீம் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் எனக்கருதி தடை செய்யப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்டவை அனைத்துமே மதரீதியிலான சர்ச்சையைக் கிளப்புவை எனக் காரணம் காட்டி தடை செய்யப்பட்டவை. 

1959 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் காம்பெல் எழுதிய ‘ஹார்ட் ஆஃப் இந்தியா’ எனும் புத்தகத்துக்கு  முதன்முறையாக அரசியல் காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டது. மேற்கண்ட புத்தகம் இந்திய அதிகார மட்டம் மற்றும் அவை உருவாக்கிய பொருளாதாரக் கொள்கைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னகத்தே கொண்டிருந்த காரணத்தால் மதம் அல்லாத பிற காரணங்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்டது.

அதையடுத்து 1960 ல் ஆர்தர் கோஸ்ட்லரின் ‘தி லோட்டஸ் அண்ட் தி ரோபோட்’ எனும் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. புத்தக ஆசிரியர் இந்தியா மற்றும் ஜப்பானில் தனக்கு ஏற்பட்ட, தாம் சந்தித்த பயண அனுபவங்களை அதில் பதிவு செய்திருந்தார்... ஆயினும் அப்புத்தகத்தில் மகாத்மா காந்தி எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்ற காரணத்துக்காக அது தடை செய்யப்பட்டது.

1963 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய சீனப்போரை கதைக்களமாகக் கொண்டு வெளியான பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘அன் ஆர்ம்டு விக்டரி’ எனும் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

1964 ஆம் ஆண்டில்  ‘ஆன் ஏரியா ஆஃப் டார்க்னஸ்’ எனும் புத்தகம் இந்தியாவையும் அதன் மக்களையும் தவறாகச் சித்தரிப்பதாகக் காரணம் காட்டி தடை செய்யப்பட்டது.

1988 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ எனும் புத்தகத்திற்கு இஸ்லாமியர்களின் மதச் சம்பிரதாயங்களை கேலிக்குரியதாக்கி விமர்சிக்கும் புத்தகம் எனும் வகையில் தடை விதிக்கப்பட்டது. அதன் மூலமாக உலக அளவில் இந்தப் புத்தகத்திற்கு தடை விதித்த முதல் நாடு எனும் பெயர் இந்தியாவுக்கு கிடைத்தது.

மேற்கண்ட புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை என்பது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் செல்லுபடியாகும். அப்படிப்பட்ட ஒருங்கிணைந்த தடை அந்தப் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அவை தவிர, இந்தியாவுக்குள் சில மாநிலங்களில் மட்டும் தடை விதிக்கப்பட்ட புத்தகங்கள் என்றும் தனியொரு பட்டியலுண்டு.

மாநில அளவில் மட்டும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள்...

அந்த வகையில் 1944 ஆம் ஆண்டில் தயானந்த சரஸ்வதி எழுதிய ‘சத்யார்த் பிரகாஷ்’ என்ற நூலுக்கு அன்றைய சிந்து மாகாணத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தடைக்கான காரணம் சிந்து மாகாணம் அப்போது இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் இந்து மதத் துறவியான தயானந்த சரஸ்வதியின் நூலுக்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அதே விதமாக 1969 ல் தந்தை ஈவெரா பெரியாரின் ‘ராமாயண : அ ட்ரூ ரீடிங்’ எனும் புத்தகத்திற்கு உத்தரப் பிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டது.

சார்ச்சைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவரான தஸ்லீமா நஸ் ரீனின் படைப்புகளுக்கு மேற்கு வங்கம் மற்றும் வங்காள தேசத்தில் தடை நீடிக்கிறது.

2006 ஆம் ஆண்டில் வெளியான ‘தி டாவின்ஸி கோட்’ எனும் புத்தகத்திற்கு நாகலாந்தில் இன்றளவும் தடை நீடிக்கிறது.

2009 ஆம் ஆண்டில் வெளியான...  ஜஸ்வந்த் சிங்கின் ’ஜின்னா: இந்தியா, பிரிவினை, சுதந்திரம் எனும் புத்தகத்திற்கு குஜராத்தில் தடை விதிக்கப்பட்டு பிறகு அகற்றப்பட்டது.

இப்படி இந்திய அரசாங்கம் தடை விதித்த புத்தகங்களின் பட்டியல் என்பது  இந்திய விடுதலைக்கு முன்பிருந்து தொடங்கி விடுதலைக்குப் பின்னான இன்று வரையிலும் அதன்பாட்டில் நீண்டு கொண்டே செல்கிறது. இவற்றிலிருந்தும் ஒரு டாப் டென் பட்டியல் தயாரித்தோம் என்றால் அதில் கட்டாயம் இந்தப் 10 புத்தகங்கள் உண்டு. அவை என்னென்ன என்று பார்க்கலாமா?

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டாப் டென் புத்தகங்கள்...

1.
முதலிடம் பெறுவது சல்மான் ருஷ்டியின்   ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ எனும் புத்தகம். இறைதூதரான முகமது நபியை அவமதிக்கும் விதத்தில் இருந்ததால் இந்தியாவில்  இந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

2.
இரண்டாமிடம் பெறுவது ‘விண்டி டூனிகர்’ எழுதிய ‘தி ஹிண்டுஸ் : ஆன் ஆல்டர்னேட்டிவ் ஹிஸ்டரி’. இப்புத்தகம் இந்துக் கடவுளர்களை கேலிக்குரிய வகையில் சித்தரித்ததால் இந்தியாவில் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

3.மூன்றாமிடம் பெறும் நூல் ராம் ஸ்வரூபின் அண்டர்ஸ்டாண்டிங் இஸ்லாம் த்ரூ ஹாடிஸ். இஸ்லாமிய மதம் குறித்த கடுமையான விமர்சனங்களை முன் வைப்பதால் இப்புத்தகம் தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

4. ஆபுரே மேனனின் ‘தி ராமாயணா’

5.  ஐந்தாமிடம் பெறுகிறது ஜஸ்வந்த் சிங் எழுதிய ‘ஜின்னா: இந்தியா- பிரிவினை- விடுதலை’ 

6. ஆறாமிடம் பெறும் நூல் சீமர் ஹெர்ஷ் எழுதிய ‘தி ப்ரைஸ் ஆஃப் பவர்’  இந்தப் புத்தகம் அன்றைய பாரதப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயை சி ஐ ஏ இன்ஃபார்மராகச் சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டி இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

7 ஏழாமிடம் பெறும் புத்தகம் சர்ச்சைக்குரிய வங்க எழுத்தாளரான தஸ்லீமா நஸ் ரீனின் ‘லஜ்ஜா’  1993 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு வெளியான நூல் மத ரீதியிலான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நிரம்பியதாகக் காரணம் காட்டியதோடு இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறப்பட்டு இந்நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

8 பட்டியலில் 8 ஆம் இடம் பெறுவது வி.எஸ் நைபாலின் ‘ஆன் ஏரியா ஆஃப் டார்க்னஸ்’. தமது இந்தியப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இந்தியாவை மட்டரகமாகச் சித்தரிக்க முற்படும் விஷமத்தனமான முயற்சி என்ற பெயரில் இந்தப் புத்தகம் இங்கு தடை செய்யப்பட்டது.

9. பட்டியலில் ஒன்பதாம் இடம் பெறுகிறது அலெக்ஸாண்டர் கேம்பெல்லின்  ‘தி ஹார்ட் ஆப் இந்தியா’ புத்தகம். மதம் தொடர்பான காரணங்களுக்காக அன்றி அரசியல் அதிகார மையங்களையும் இந்தியப் பொருளாதாரத்தையும் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விகளையும், விமர்சனங்களையும் இப்புத்தகம் முன் வைத்ததால் இந்தியாவில் இது தடை செய்யப்பட்டது.

பட்டியலில் 10 ஆம் இடம் பெறும் புத்தகம் ஹாமிஷ் மெக்டொனால்டின் ‘தி பாலியெஸ்டர் பிரின்ஸ்’ தொழிலதிபர் திருபாய் அம்பானியின் குடும்பத்தை பொதுவெளியில் தவறான கோணத்தில் சித்தரிப்பதாகக் குற்றம்சாட்டி இந்தப் புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

இவ்விதமாக இந்தியாவில் புத்தகங்களுக்கு தடை விதிக்கப்படுவதும்.... சில புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் பின்னர் நீக்கப்பட்டு அவை தங்கு தடையின்றி புத்தகச் சந்தையில் கிட்டுவதும் பிறகு மீண்டும் ஏதாவது ஒரு புத்தகத்திற்கு அரசியல், மதம், பொருளாதாரம், கடவுள் நம்பிக்கை, மக்கள் விரோத மனப்பான்மை, புரட்சி என்று ஏதெனும் காரணங்கள் கற்பிக்கப்பட்டு தடை விதிக்கப்படுவதும் தொன்று தொட்டு நடத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. 

அந்த வழக்கத்தின் நீட்சியாகத்தான் தற்போது தமிழர் தேசிய முன்னணி இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் அவர்களின் ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் புத்தகத்திற்கு நேற்று உயர்நீதி மன்றத்தில் விதிக்கப்பட்ட தடையையும் அணுகவேண்டியதாக இருக்கிறது.

இந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது 2006 ஆண் ஆண்டில். அப்போது அரசால் கைப்பற்றப்பட்ட சுமார் 10 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை தற்போது உயர்நீதிமன்றம் அடியுடன் அழிக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பின் மூலமாகத் தனது எழுத்துரிமை பறிக்கப்பட்டதாகக்கூறும் அவர், ஒரு மலையாள எழுத்தாளரின் படைப்புக்கு மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் வண்ணம் எழுதப்பட்ட நூல் எனக்கூறி கடந்த மாதம் வழக்குப் போடப்பட்ட போது அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவும் மற்ற இரு நீதிபதிகளும் இணைந்து, நாம் சர்வாதிகார நாட்டில் வாழவில்லை, ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். சுதந்திரமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒரு எழுத்தாளரின் படைப்பு குறித்து அவரின் வாசகர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை. என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே இந்தத் தீர்ப்பு குறித்து வழக்குரைஞர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப் போவதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com