Enable Javscript for better performance
lIFE THREATS CR|பாழாய்ப்போன கவனக்குறைவால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நிகழ்ந்து முடிந்த விபரீதங்கள்!- Dinamani

சுடச்சுட

  

  பாழாய்ப்போன கவனக்குறைவால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நிகழ்ந்து முடிந்த விபரீதங்கள்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 20th October 2018 01:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  careless

   

  மும்பை மெட்ரோ ரயிலில் குழந்தையுடன் ரயிலைப் பிடிக்கச் சென்ற அம்மா... ரயில் கிளம்பிய வேகத்தில் கை நழுவி குழந்தை தடுமாறி ரயிலடியில் விழ... அம்மா ரயிலிலும் குழந்தை ரயிலுக்கு அடியிலுமாகச் செல்லத்தொடங்க ஆபத்பாந்தவன் போல ரயில்வே காவல் அதிகாரி ஒருவர் ஓடி வந்து குழந்தையைக் காப்பாற்றினார். இந்தக் காட்சி காணொளியாக்கப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்பட நேற்று பதைபதைப்புடன் பலரும் இதைக் கண்டு இணையத்தில் மீண்டும் மீண்டும் பகிர்ந்திருக்கிறார்கள். மிகச்சிறிய கவனக்குறைவு... குழந்தையை அழைத்து வரும் அம்மா முதலில் குழந்தையை உள்ளே அனுப்பி விட்டு அதே வேகத்தில் கவனத்துடனும், விரைவுடனும் தானும் உள்ளே ஏறியிருக்க வேண்டும். இங்கே அம்மா ஏறியதும் கை நழுவியதன் காரணம் குழந்தை விளையாட்டுத்தனமாக அம்மாவின் கையை அழுத்தமாகப் பற்றாததாலும் இருக்கலாம். அல்லது அம்மா ஏதோ யோசனையுடன் குழந்தையின் கரத்தை சரியாகப் பற்றாததாலும் இருக்கலாம். கவனக்குறைவு இரண்டு பக்கமும் இருந்தாலும் காவலர் கவனிக்காமல் விட்டிருந்தால் பாதிப்பு குழந்தைக்கு மட்டுமேயாக இருந்திருக்கும். அது எத்தனை மனவேதனை தரத்தக்க விபத்தாக இருந்திருக்கும்? யோசித்துப் பாருங்கள். இந்த ஒரு விஷயம் தான் என்றில்லை.

  பலநேரங்களில் இப்படியான கவனக்குறைவு பலரது வாழ்வில்... வாழ்நாள் முழுமைக்குமாக பெருந்துக்கத்தில் ஆழ்த்தி விடத்தக்க துயர விபத்தாக மாறி விடுவதுண்டு.

  15 வருடங்களுக்கு முன்பு நட்பு வட்டத்தில் ஒரு சினேகிதிக்கு குழந்தை பிறந்தது. தலைச்சன் குழந்தை ஆண்குழந்தையாகிப் போனதில் அவளது மாமியார் வீட்டில் அனைவரும் பேரானந்தத்திலும், கொண்டாட்டத்திலும் மூழ்கி இருந்தனர். பிறந்த அடுத்தாம் மாதத்தில் தாயின் அருகே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை கட்டிலில் இருந்து நழுவி கீழே விழுந்ததில் குழந்தைக்கு ஒரு வருடமாகியும் தலை நிற்கவில்லை என்பதோடு குழந்தை தவழத்தொடங்கவும் இல்லை. பொத்தாம் பொதுவில் அனைவரையும் பார்த்துச் சிரித்ததே தவிர தாய் முகம், தந்தை முகம் எனத் தனித்தனியாகப் பார்த்துக் குழந்தை சிரிக்கவே இல்லை என்ற வருத்தம் குடும்பம் மொத்தத்திற்கும் வரத் தொடங்கியது. சில குழந்தைகள் எட்டு எடுத்து வைக்க ஒரு வயதாகும். ஆனால் இந்தக் குழந்தை கடைசி வரை எட்டெடுத்து வைக்கவே இல்லை. காரணம் மூன்றாம் மாதத்தில் குழந்தை கீழே விழுந்ததில் அதற்கு மஸ்குலர் டிஸ்ட்ரபி பாதிப்பு ஏற்பட்டிருந்ததை அவர்கள் கவனிக்க மறந்திருந்தார்கள். அதன் விளைவு அந்தக் குழந்தை தான் உயிரோடு இருந்த 14 வயது வரையிலும் எல்லோரையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே... உயிரை விட்டது. ஆம் அந்தக் குழந்தை அதன் மனதில் என்ன நினைத்திருக்கக் கூடுமென்று கடைசி வரை அதன் அம்மாவிற்கு மட்டுமல்ல யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் குழந்தை தவழவில்லை, நடக்கவில்லை, பேசவில்லை, உயிரோடிருந்தவரை சும்மா வெறுமனே தன் கண்ணெதிரே வரும் முகங்களைப் பார்த்து சிரிக்க மட்டுமே செய்தது. சாப்பிட, இடம் பெயர, இயற்கைக் கடன் கழிக்க... எல்லாவற்றுக்குமே அதற்கு யாருடைய துணையாவது தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது. இது பெற்றோரை எத்தனை மனவருத்தத்தில் ஆழ்த்தியதோ அதே அளவு கனத்துடன் குடும்பத்தினர் அத்தனை பேரையுமே மனக்காயத்தில் ஆழ்த்தியது.

  மூன்றாம் மாதத்தில் குழந்தை கட்டிலில் இருந்து எப்படி விழுந்ததென்றால்... குழந்தையின் தாய், தான் சுவரோரம் படுத்துக் கொண்டு, ஒருமாதக் கைக்குழந்தை தானே, உருண்டா விழுந்து விடப்போகிறது என்றெண்ணி குழந்தையை தன்னைத் தாண்டி படுக்க வைத்து விட்டு இந்தப் பெண் அசதியில் கண்ணசந்திருக்கிறார். எந்தத் தாயும் செய்யக்கூடாத பிழை இது! ஆனால், விதி அந்தப் பெண் அப்படிக் கண்ணசந்து விட்டார். குழந்தையை யாரிடமாவது ஒப்படைத்து விட்டு இவர் தூங்கியிருந்தால் அவர்களாவது குழந்தையைக் கவனித்துக் கொண்டிருந்திருப்பார்கள். அதனால் தான் குழந்தை கட்டிலை விட்டு நழுவியது. அது கடைசியில் உயிர்ப்பலியில் போய் முடிந்திருக்கிறது. மிகச்சிறிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய துக்கத்தில் போய் முடிந்திருக்கிறதெனப் பாருங்கள்!

  இப்படியான கவனக்குறைவுகளைத் தவிர்த்தே ஆக வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது.

  ஏனென்றால், மேற்கண்ட உதாரணங்கள் மட்டுமல்ல... கவனக்குறைவு காரணமாக மீண்டுமொரு மனதை உழுக்கும் சம்பவமொன்று கடந்த வாரத்தில் வில்லிவாக்கம் பகுதியில் நிகழ்ந்திருக்கிறது. 

  வில்லிவாக்கம் பகுதியில் இன்றைக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது குடிநீர்த்தேவைக்கு தண்ணீர் லாரிகளை நம்பியே வாழ்கிறார்கள். அந்தத் தண்ணீர் லாரிகள் இன்ன நேரத்தில் தான் வரும் என்று சொல்ல முடியாது. கடந்த வாரம் அதிகாலையில் தண்ணீர் லாரி வரவே ஒரு பெண்மணி அரக்கப்பரக்க எழுந்து தண்ணீர் பிடிக்க வீட்டை விட்டு வெளியில் வந்திருக்கிறார். கூடவே அவரது 1 வயது குழந்தையும் அம்மாவுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கியிருக்கிறது. குழந்தை இருப்பது தெரியாமல் தண்ணீர் லாரி நகரவே குழந்தை அந்த இடத்திலேயே லாரியில் அடிபட்டு துள்ளத் துடிக்க இறந்திருக்கிறது.  குழந்தை அடிபட்டது தெரிந்தோ, தெரியாமலோ லாரி தன்பாட்டில் நகர்ந்துகொண்டே இருக்க... இறந்த குழந்தையை கையிலேந்தியபடி அதன் அம்மா லாரியின் பின்னால் கண்ணீருடன் நீதி கேட்டு ஓடிய காட்சி அங்கிருந்த சர்வைலன்ஸ் கேமிராவில் பதிவாகி ஊடகங்களில் செய்தியானது. இதுவும் கூட கவனக்குறைவால் நிகழ்ந்த விபத்து தான். ஆனால், இந்த கவனக்குறைவுக்கு யாரைக் குற்றவாளியாக்குவது? தண்ணீர் லாரியின் ஓட்டுநரையா? குழந்தையின் அம்மாவையா? அல்லது அனுதினமும் தண்ணீருக்காக தன் மக்களைக் காத்திருக்க வைத்து பெரும் அல்லாட்டத்தில் ஆழ்த்தியுள்ள நம் மாநில அரசையா?

  யாரைக் குற்றம் சாட்டினாலும் இழந்த உயிர் மீளப்போவதில்லை.

  எனவே இங்கே கவனக்குறைவு தான் முதலில் தவிர்க்கப்பட வேண்டிய அத்யாவசியப் பிரச்னையாக நம் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

  சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையொன்றில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவிகள் இருவர் நடைபாதையோரம் சென்று கொண்டிருந்த பயணிகளை இடிக்காமலிருக்கும் பொருட்டு வாகனத்தை சாலையின் உட்புறம் நோக்கித் திருப்ப முயல அந்தப் பக்கம் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது மோதிக் கீழே விழ நேர்ந்தது. இந்தச் சம்பவத்தில் லாரி ஓட்டுநர் பொறுப்புமிக்க நபராகவும் நிதானமானவராகவும் இருந்த காரணத்தால் மட்டுமே லாரியின் முன் சக்கரத்தின் கீழ் சிக்க இருந்த மாணவியின் தலையும் உடலும் தப்பியது. அவர் மட்டும் உடனடியாக பிரேக்கை அழுத்தியிரா விட்டால் அந்த இரு மாணவிகளில் ஒருவர் துரதிருஷ்டவசமாக பலியாகி இருப்பார். இதுவும் கூட மாணவிகளின் கவனக்குறைவால் நொடி நேரத்தில் நிகழ்ந்த விபத்து தான். ஆனால், லாரி ஓட்டுநர் பிரஞ்சையுடன் இருந்ததால் மாணவிகள் உயிர் தப்பினர். இங்கு மாணவிகள் சற்று விவேகத்துடன் சிந்தித்திருந்தால் பின்புறம் கனரக வாகனம் வந்து கொண்டிருக்கும் போது சற்றும் யோசியாமல் வாகனத்தை சாலையின் குறுக்கே ஒடித்து திருப்பி ஓட்ட முயற்சித்திருக்க மாட்டார்கள். இம்மாதிரியான நேரங்களில் ஒரு தரப்பினரில் யாராவது ஒருவர் கவனத்துடன் இருந்தாலும் போதும் விபத்தை தவிர்த்து விடலாம் என்பதற்கு இந்த சம்பவம் நல்லதொரு உதாரணம்.

  கவனக்குறைவு ஏன் நிகழ்கிறது? பெரும்பாலான நேரங்களில் நாம் நமது பிரச்னைகளிலோ அல்லது துக்கங்களிலோ வெகு அபூர்வமாக சில நேரங்களில் சந்தோஷங்களிலோ மூழ்கிப் போய் கடந்தகாலத்திலோ, அல்லது எதிர்காலத்திலோ வாழ்ந்து கொண்டு நிகழ்காலத்தை மறப்பதினால்!

  ஒரே ஒரு நொடியில் கண்ணிமைப்பதற்குள் இப்படியான விபத்துகள் நடந்து நம்மை காலத்துக்கும் மாளாத்துயரில் ஆழ்த்தி விடுகின்றன.

  எனவே கவனக்குறைவைத் தவிர்ப்போம்... வாழ்க்கை துயரங்களைக் குறைப்போம் என்ற உறுதிமொழியை ஒவ்வொரு நொடியும் மனதில் தியானிப்போம்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai