Enable Javscript for better performance
Story OF Shankar IAS Academy | சங்கர் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனரின் கதை!- Dinamani

சுடச்சுட

  
  shankar_iass

   

  சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாதெமிக்கு தமிழகம் முழுவதுமே பல்வேறு கிளைகள் உண்டு. இங்கு பயின்றவர்கள் பலர் இன்று அரசு உயரதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இதன் நிறுவனர் சங்கர் நேற்று தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில் அவரது அகாதெமியில் பயிலும் மாணவர்கள் மட்டுமல்ல அங்கிருந்து பயிற்சி முடித்து தேர்வுகளில் வென்று இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக செட்டிலானவர்களும் கூட மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கான பயிற்சியினை அளித்து அவர்களின் தன்னம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த சங்கர் இன்று உயிருடன் இல்லை. அவரது தற்கொலைக்கு காரணம் குடும்பப் பிரச்னையே என்று கூறப்படுகிறது. ஆனால், சங்கரின் வாழ்க்கைச் சம்பவங்களை பின்னோக்கிப் பார்த்தால் குடும்பப் பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்ப முடியாமலாகிறது. ஏனெனில் அவரது வாழ்க்கை முழுவதிலுமாக அவர்கள் பிரச்னைகளைச் சந்திப்பதும் அதிலிருந்து உரங்கொண்டு மீள்வதுமாகப் பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

  ஒரு குக்கிராமத்தில் பிறந்து பள்ளிப்படிப்பை முடித்து குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாக முயன்று கல்லூரி செல்லத் தொடங்கிய போதே சங்கரின் பிரச்னைகள் தொடங்கி விட்டன. விவசாயக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போதே உடன் பயிலும் மாணவியை ஈவ் டீஸிங் செய்த குற்றத்திற்காக ஓராண்டு காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் சங்கர். பின்னர் ஓராண்டு சஸ்பென்சனுக்குப் பிறகு மீண்டும் மன உறுதியுடன் படிக்க வந்து பரீட்சையில் தேறி ஹரியானாவில் முதுகலை விவசாயப் படிப்பிற்கு இடம் கிடைத்து அங்கு பயிலச் சென்றார். இதன் நடுவே இவரது வாழ்வில் எதிர்பாராத திருப்பமாக எந்த மாணவியை ஈவ் டீஸிங் செய்த குற்றத்திற்காக கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டாரோ அந்த மாணவியையே பின்னாட்களில் காதலித்து  திருமணம் செய்து கொள்ளும் சந்தர்பமும் அவருக்கு வாய்த்திருக்கிறது. சங்கருடன் கல்லூரியில் பயின்ற வைஷ்ணவி அவருக்கு வாழ்க்கைத் துணையுமானார். ஆனால் இவர்களது மோதலுக்கும், காதலுக்கும், கல்யாணத்திற்கும் நடுவே ஆயிரமாயிரம் பிரச்னைகளைக் கடந்தே இன்று கட்டியுள்ள சங்கர் ஐஏஎஸ் அகாதெமி எனும் சாம்ராஜ்யக் கனவை எட்டியுள்ளனர்.

  அகாதெமி தொடங்குவதற்கு முன்பு சங்கரின் ஆசை... தான், ஒரு ஐஏஎஸ் ஆகவேண்டுமென்பதாகவே இருந்தது. அதற்காக கடுமையாக உழைத்தார். தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற முயற்சித்தார். அவரது கனவு அத்தனை சீக்கிரமாக நிறைவேறுவதற்கான வழியைக் காணோம். நடுவே குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல்களைக் களைய சங்கர் வேலைக்குச் சென்று சம்பாதித்தே ஆக வேண்டிய சூழல் நிலவியது. ஐஏஎஸ் கனவை நனவாக்க தொடர்ந்து படிப்பதா? அல்லது குடும்பச் சிக்கலுக்காக வேலைக்குப் போவதா? குழப்பத்தில் ஆழ்ந்தார் சங்கர். அப்போது சங்கருக்கு கை கொடுத்தவர் அவரது காதலியாக இருந்த வைஷ்ணவி. சங்கரின் ஐஏஎஸ் கனவு நிறைவேற வேண்டி வைஷ்ணவி டெல்லி சென்று தங்கி வேலை செய்து சம்பாதித்தார். அவருடைய சம்பளத்தில் சங்கர் படித்தார். ஆனால் இந்த தியாகத்துக்கும் ஒரு முடிவு வந்தது. சங்கரின் தந்தை மாரடைப்பால் காலமாக பின்பு வேறு வழியின்றி குடும்பச் சுமையைத் தாங்கிக் கொள்ள சங்கர் தனது குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி வகுப்புகளை விட்டு விட்டு வேறு ஏதாவது வேலை தேடி சம்பாதிக்க சென்னை வந்தார். 

  அப்போது அவர் எடுத்த முடிவு தான் சங்கர் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கும் முடிவு.

  அப்போதெல்லாம் ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளில் பயில வேண்டுமானால் டெல்லிக்கோ, பெங்களூருக்கோ செல்ல வேண்டும். இன்றைய தலைமுறையினருக்கு அந்த சிரமத்தை மாற்றி சென்னையிலும் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளைக் கொண்டு வந்து திறம் பட நடத்திய பெருமை சங்கரையே சாரும். சங்கரின் வெற்றிகளில் அவரது மனைவி வைஷ்ணவிக்கும் பங்கு உண்டு. சங்கரின் கல்லூரி வாழ்க்கை முதலே அவரைத் தொடர்ந்து வரக்கூடியவரான மனைவி வைஷ்ணவியும் சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் ஒரு ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். சங்கர் தம் மனைவியுடன் இணைந்து தான் தனது அகாதெமியை நிர்வகித்து வந்தார்.

  கல்லூரிப் படிப்பை முடித்ததும் சங்கருக்கு திரைப்படத்துறையில் நுழையும் ஆர்வமும் அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், அப்போது அவரை நல்வழிப்படுத்திய அவரது வழிகாட்டி, ஞானராஜசேகரன் என்றொரு ஐஏஎஸ் அதிகாரி இருக்கிறார். அவருக்கும் திரைப்படத்துறையின் மீது மிகுந்த ஆர்வம் இருக்கிறது. அதற்காக அவர் தனது ஐஏஎஸ் கனவை விட்டு விட்டு படமெடுக்கப் போய் விட்டாரா என்ன? ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டே அவர் மோகமுள், பாரதி மாதிரியான தரமான திரைப்படங்களை இயக்கி தனது திரைத்துறை ஆர்வத்தை தீர்த்துக் கொள்ளவில்லையா? நீயும் அப்படித்தான் எதையாவது சாதித்து விட்டு பிறகு சினிமாவில் இறங்குவதே உசிதமாக இருக்கும் என அறிவுரை கூறி இருக்கிறார். அதைத் தொடர்ந்து தான் சங்கர் ஐஏஎஸ் அகாதெமி உதயமானது என்கிறார்கள் சங்கரின் வாழ்க்கையை அருகிலிருந்து பார்த்தவர்கள். 

  அகாதெமியின் மூலமாக சங்கர் சாதித்தது அனேகம்.

  தமிழகம் முழுவதுமாக தற்போது 1000 க்கும் மேற்பட்ட சங்கர் ஐஏஎஸ் அகாதெமிகள் இயங்கி வருகின்றன.

  இந்நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக சங்கர் தற்கொலை செய்து கொண்டார் என்பது மிகுந்த ஆச்சர்யத்துக்குரிய விஷயமாகியிருக்கிறது.

  10,000 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கர் ஐஏஎஸ் அகாதெமியிலிருந்து உருவாகியிருக்கக் கூடும். அத்தனை பேருக்கும் பயிற்சி கொடுத்து இந்திய குடிமைப் பணிகளில் மிக உயர்ந்த பணியான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பண்படுத்தி, அவர்களின் அறிவைக் கூர் தீட்டி அனுப்பக் கூடிய அளவுக்கு திறன் மிக்க பயிற்சிகளை அளிக்கக் கூடியவரான பயிற்சி நிறுவனர் சங்கர் மன உறுதி இழந்து, மனக்குழப்பத்துக்கு ஆளாகி இப்படி தற்கொலை செய்து கொண்டு தன்னை நம்பிய இளைஞர்களுக்கு மோசமான முன்னுதாரணமாகியிருப்பது வேதனையான விஷயம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai