சீனாவில் தன் தந்தைக்கு அன்னையான 6 வயதுச் சிறுமியின் அயராத சேவைகள்! வைரல் வீடியோ இணைப்பு

சிறுமி இப்போது தன் தந்தைக்கு மகளாக இல்லை தாயாக மாறிசேவை செய்து கொண்டிருக்கிறாள். காலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்து கொள்ளும் ஜியா ஜியா எழுந்ததும் முதல் வேலையாகச் செய்து முடிப்பது பக்கவாதம் வந்த
சீனாவில் தன் தந்தைக்கு அன்னையான 6 வயதுச் சிறுமியின் அயராத சேவைகள்! வைரல் வீடியோ இணைப்பு

சீனாவில் 6 வயதுக்குட்டிப் பெண், பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட தன் தந்தைக்கு உதவியாக இருந்து கொண்டு பள்ளிக்கும் சென்று வருவது அவள் வாழும் பகுதியைச் சேர்ந்த மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதோடு சிறுமிக்கு ஏராளமான பாராட்டுகளையும் குவித்துள்ளது. சிறுமியின் தந்தை டியான் ஹாய்செங் சீனாவின் நிங்சியா மாகாணத்தைச் சேர்ந்தவர். 40 வயதான டியான், இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கடுமையாகக் காயமுற்றதில் அவருக்குப் பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டது. சிறுமியின் தாய்க்கு தன் கணவரது பக்கவாதப் பாதிப்பை ஏற்றுக் கொள்ளும், சகித்துக் கொள்ளும் மனமில்லாத காரணத்தால் அவர் தன் கணவரையும், 6 வயதுப் பெண் குழந்தையையும் விட்டு விட்டு தன் மூத்த மகனோடு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். முதலில் சில நாட்களுக்கு மட்டும் அங்கிருந்து விட்டு பிறகு கணவரது வீட்டுக்கு திரும்புவதாகச் சொன்ன மனைவி மீண்டும் திரும்பி வரவே இல்லை. யோசித்துப் பாருங்கள் கணவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும் போது மனைவி உடனிருந்து அன்பாலும், கரிசனத்தாலும் அவரை மீண்டும் பழையநிலைக்கு மீட்பதைப் பற்றித்தான் நாம் இதுவரை ஆசியக் கதைகள் மற்றும் திரைப்படங்களில் கண்டு களித்திருப்போம். ஆனால், சிறுமியின் தாயாரைப் போல வாழ்க்கைத்துணையின் வலிகளை உணராமல் இப்படி விட்டுச் செல்பவர்கள் விதிவிலக்குகளாக இந்தியாவிலும் இருக்கிறார்கள் தான். அதனால் இதில் என்ன புதுமை என்று பலர் நினைக்கலாம். இந்த விஷயத்தில் சிறுமி ஜியா ஜியா தான் புதுமை.

ஜியா ஜியா தன் தந்தைக்கு ஆற்றும் சேவைகளைக் காணொளியாகக் காண...

6 வயதுச் சிறுமி, அப்படியானால் இப்போது சிறுமி 1 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கலாம். 1 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் இந்தத் பிஞ்சுத் தளிரை கவனிக்கவே தனியாக ஒரு ஆள் வேண்டும். அவள் இன்னும் குழந்தை தான். ஓடினால்... எங்காவது இசகு பிசகாக விழுந்து அடிபட்டுக் கொண்டு ‘ம்மா வலிக்குது... தரை என்னை அடித்து விட்டது, என்று அழுது கொண்டு அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ புகார் கூறும் வயது! ஆனால் இவளுக்குத்தான் அம்மா காட்சியிலேயே இல்லையே. 4 வயதிலேயே ஜியா, ஜியாவையும் அவளது தந்தையையும் புறக்கணித்து விட்டு அவளது அம்மா தான் தன் அம்மா வீட்டுக்குப் போய்விட்டாரே! இப்படியான சிக்கலான தருணங்களில் தான் வாழ்க்கை அதைத் தாங்கிக் கொள்வதற்கான மனோதிடத்தையும் நம்முள் உருவாக்கி விடுகிறது. இதில் சிறுமி ஜியா ஜியாவும் விதிவிலக்கில்லை. 

சிறுமி இப்போது தன் தந்தைக்கு மகளாக இல்லை தாயாக மாறிசேவை செய்து கொண்டிருக்கிறாள். காலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்து கொள்ளும் ஜியா ஜியா எழுந்ததும் முதல் வேலையாகச் செய்து முடிப்பது பக்கவாதம் வந்த தந்தைக்குத் தேவையான மசாஜ். சுமார் அரைமணி நேரம் மசாஜ் முடிந்தவுடன் தந்தைக்கு பல் துலக்கி விட்டு முகம் கழுவித் துடைத்து சுத்தம் செய்து முடிப்பார். அதன் பின் தான் பள்ளி செல்லும் நேரத்தில் தந்தையை வயதான தாத்தா, பாட்டிகளிடம் ஒப்படைத்து விட்டுப் பள்ளி செல்லும் ஜியா ஜியா பள்ளி விட்டு வந்தது முதலே, தந்தைக்கு உணவு ஊட்டுவது, அவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை நேரம் தவறாமல் தருவது, வீட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி நாற்காலி மற்றும் மேலெழும்பியும், கீழிறக்கியும் இயக்கக் கூடிய வகையிலான தானியங்கி கம்பத்தின் மூலம் தந்தையை தூக்கி அமர வைப்பது, வீட்டைச் சுற்றி உலவச் செய்வது என  மீண்டும் தன் தந்தைக்கான உதவிகளைத் தொடங்கி விடுகிறாள்.

ஜியா ஜியாவின் தாத்தா, பாட்டி இருவரும் விவசாயிகள் என சீன மீடியாக்கள் தகவல் அளித்துள்ளன. அதனால், அவர்களால் முற்றிலுமாகத் தங்களது மகனை கவனித்துக் கொள்ள நேரம் ஒதுக்க முடியாததோடு குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக பொருளீட்டியாக வேண்டிய தேவைகளும் இருப்பதால் அவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் மகனைக் கவனித்துக் கொள்ள தங்களது சின்னஞ்சிறு பேத்தியின் உதவியை நாடுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆயினும் சிறுமி ஜியா ஜியா இதனாலெல்லாம் தான் சோர்ந்து போய் விடவில்லை என சீன ஊடகமொன்றின் நேர்காணலில் பதில் அளித்திருப்பது இந்தச் சிறு வயதில் அவளுக்கு வாய்த்திருக்கும் மன உறுதியைக் காட்டுகிறது.

தற்போது 40 வயதாகும் டியானுக்கு விபத்தில் மார்புக்கு கீழான பகுதிகளில் இயக்கமற்றுப் போய் முழுதாக இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமி ஜியா ஜியா தான் தந்தை டியானுக்கு ஒரு தாயினும் மேலான சேவைகளை அன்போடும் அக்கறையோடும் வழங்கி வருகிறாள். டியான் தன் மகள் ஜியா ஜியா பெயரில் சீன சமூக ஊடகமான குவாய்ஷோவில் ஒரு கணக்குத் துவக்கி இருக்கிறார். நம்மூர் ஃபேஸ்புக், டிவிட்டர் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் தன் மகள் ஜியா ஜியா தனக்கு ஆற்றி வரும் சேவைகள் குறித்த காணொளியை டியான் தொடர்ந்து பதிவு செய்வது வழக்கம். குறிப்பிட்ட அந்த சமூக ஊடகக் கணக்கில் ஜியா ஜியாவுக்கு 4,80,000 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்கிறது டெய்லி மெயில் பத்திரிகை. தற்போது தன் குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரத் தேவைகளை இந்த இணைய ஊடகப் பதிவுகள் ஓரளவுக்கு நிறைவு செய்வதாக டியான் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com