ஒரு பசுவுக்கு நிகழ்த்தப்பட்ட துரோகம்!

ஒரு பசுவுக்கு நிகழ்த்தப்பட்ட துரோகம்!

இந்த விவகாரம் நடந்து ஒரு மாதமிருக்கலாம். எங்கள் ஏரியாவில் பசுக்களும், எருமைகளும் அதிகம். சென்னையில் ஆநிரைகள் அதிகமுள்ள இடங்களில் திருவேற்காடு பகுதியும் ஒன்று. இங்கு நான் வசிக்கும் பகுதியில் பசுக்கள் மந்தை, மந்தையாகத் திரிவதைக் காணலாம். எல்லாப்பொழுதுகளிலும் பசுக்களின் தரிசனம் இங்கு உண்டு. மாலை அலுவலகம் விட்டு வீடு திரும்புகையில் சாலையை அடைத்துக் கொண்டு தொடர்ச்சியாக அணிவகுத்து வரும் பசுக்களையும், எருமைகளையும் கண்டு சில நேரங்களில் அச்சமாகக் கூட இருக்கும். ஆனாலும் இதுவரை எந்தக் கால்நடையாலும் சாலைப் பயணிகளுக்கு எந்த வித இடையூறும் இன்றி எல்லாம் ஸ்மூத்தாகவே சென்று கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு காலத்தில் தான் திடீரென அப்படியொரு சம்பவம் நிகழ்ந்து விட்டது. இதற்கு காரணமென யாரைக் குற்றம் சாட்டுவதென்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பசுவின் உரிமையாளர்கள் என இதுவரை ஒருவரும் அதைத் தேடி வராத துக்கம் தான் நாளாக, நாளாக மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது. அடடா... இப்படி நான் வருந்தும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்து விட்டது என்று இன்னும் நான் சொல்லவே இல்லை பாருங்கள்.

முதலில் அதைச் சொல்லி முடிக்கிறேன்.

கடந்த மாதத்தில் ஒரு நாள்... மாலை வீடு திரும்பியதும் எதிர் வீட்டு அம்மாள் சொன்னார். எங்கள் வீடுகளிலிருந்து சற்றுத் தள்ளி அதே தெருவில் இருந்த காலி மனை ஒன்றில் நிறைசூல் கொண்ட பசுவொன்று உட்கார்ந்த வாக்கில் இறந்து விட்டிருக்கிறது என; எனக்கு ஒரு நொடி அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை, புரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. மாட்டை பாம்போ அல்லது வேறு ஏதேனும் விஷப்பூச்சிகளோ கடித்திருக்கலாம். அதனால் விஷமேறி காலிமனையைச் சுற்றிப் பாதுகாப்பு அரணாகப் போட்ட வேலியை உடைத்துக் கொண்டு வெளியேறத் தெம்பின்றி மாடு பகல் முழுதும் எவர் கவனமும் இன்றி உயிருக்குப் போராடி இறந்திருக்கிறது என்று நினைத்தோம் நாங்கள். சரி எப்படி இறந்திருந்தாலும், அது ஒரு உயிர், அதிலும் நிறைசூல் கொண்ட பசு, காலி மனை எவருடையதோ தெரியவில்லை. அங்கே உயிருக்குப் போராடி இறந்திருக்கிறது. உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும். என்று நினைத்து அருகில் உள்ள இரண்டு கிராமங்களுக்கும் தகுந்த ஆட்கள் மூலமாகத் தகவல் அறிவித்தோம். அது நடந்தது வெள்ளிக்கிழமை மாலை. பசுவின் உரிமையாளர்கள் என்று எவரேனும் இருந்திருந்தால் இந்தத் தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாக வந்திருப்பார்கள். ஆனால், நேரம் ஏறி, ஏறி இருள் கவிந்து கொண்டிருக்க அப்படி யாரும் வரவே இல்லை. இறந்த பசுவின் உடல் கையெழுத்து மறையும் அந்திக் கசங்கலில் அசாதரணமாகத் தீட்டிய இந்தியன் இங்க் பெயிண்ட் போல தெய்வீக சோகத்தை சுமந்து கொண்டு தேமேவென்று அப்படியே கிடந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களது மனங்களில் பாரம் ஏறிக்கொண்டே இருந்தது. இரவில் தூங்கினாலும் இறந்த பசுவின் நினைவு ஊடாடிக் கொண்டே தான் இருந்தது. 

ஆயிற்று, இரவு கழிந்து சனிக்கிழமை பிறந்து விட்டது. ஆனால் பசுவைத் தேடி யாருமே வரவில்லை. சர் இனி கதைக்காகாது என்று கார்ப்பரேஷனில் தகவல் தெரிவித்தார்கள் குடியிருப்பு வளாகம் சார்ந்த அசோசியேஷன்காரர்கள். அங்கிருந்தும் பெரிதாக எந்த விதமான பதிலோ அல்லது நடவடிக்கையோ இல்லை. கார்ப்பரேஷனில் இருந்து யாராவது வந்து பசுவின் உடலை அப்புறப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்புடனே சனிக்கிழமை முழுதும் கழிந்தது. பசு இன்னமும் அப்படியே தான் உட்கார்ந்தவாக்கில் கண் மூடியிருந்தது. அதன் உடலில் முதல் நாளில் இருந்த காவிய சோகம் மெலிதாக மறையத் தொடங்கி சருமம் வற்றிச் சுருங்கத் தொடங்கியிருந்தது இப்போது. முகத்தில் கருமை லேசாக எட்டிப் பார்த்தது. இனி தாங்காது... இது உடல் அழுகத்தொடங்குவதின் அறிகுறி. இப்படியே விட்டால் நாளை பசுவின் உடலை ஜேசிபி கொண்டு கூட அப்புறப்படுத்த முடியாத அளவுக்கு அதன் உடல் அலங்கோலமாகி விடக்கூடும். ஆனாலும் கார்ப்பரேஷன்காரர்கள் பக்கமிருந்து எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றப்படக் காணோம். இந்தப் பசுவுக்கு ஏன் இப்படியொரு கதியானது? பாவம் குட்டியை ஈன முடியாது இறந்ததோடு மட்டுமின்றி சடலத்தை எடுக்கவும் ஒரு ஏற்பாடும் ஆக மாட்டேனென்கிறதே! இதென்ன விபரீதம்? அதோடு கூட மாடு என்று ஒன்றிருந்தால் அதை விலை கொடுத்து வாங்கிய அல்லது தொழுவத்தில் வைத்து வளர்த்த உரிமையாளர் என்று ஒருவர் இருக்க வேண்டும் தானே? அவர்கள் எங்கே போனார்கள்? இப்படியா ஈவு இரக்கமின்றி இரண்டு முழு நாட்களாக பசுமாட்டைத் தேடாமல் அப்படியே விட்டு விடுவார்கள். குறைந்த பட்சம் அதன் பாலுக்காகவேனும் பசுவைத் தேடத் தோன்றவில்லையே?! இவர்களெல்லாம் என்னவிதமான மனிதர்கள்? என்று ஆற்றாமை கலந்த கோபம் தன்னைத் தானே வாட்டியது. அந்தக் கோபத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய? பசுவின் உரிமையாளர்களை சிரத்தையுடன் தேடி இருந்தால் ஒருவேளை கண்டுபிடித்திருக்கக் கூடுமொ என்னவோ? ஆனால், அங்கிருந்தவர்களான எங்களில் எவருக்கும் அதற்காக செலவிட நேரம் தான் சுத்தமாக இல்லவே இல்லாமலிருந்தது. அதனால் பசுவின் உடல் அழுகும் நாற்றம் காற்றோடு கலந்து தெருவெங்கும் வீசத் தொடங்கும் வரை கையாலாகாதவர்களாயும் அடுத்தென்ன செய்வது? என்ற குழப்பம் கொண்டவர்களாகவும் பசுவின் உடலை அகற்ற நாங்கள் மீண்டும் அசோஸியேஷன்காரர்களையே அணுகினோம்.

இறுதியில் அவர்களும் வேறு வழியின்றி சொந்த முயற்சியில் ஒரு ஜேசிபி அரேஞ்ஜ் செய்து இறந்த பசுவின் உடலை அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு எங்கோ ஓரிடத்தில் புதைத்தனர்.

இதில் யோசிக்க வைத்த இன்றளவும் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் ஒரு கேள்வி...

அந்தப் பசுவின் உரிமையாளர் யார்?

அவருக்கு ஏன் தன் பசுவின் மீது கொஞ்சம் கூட அக்கறையோ, இரக்கமோ இல்லாமல் போய்விட்டது? 

இறந்து இத்தனை நாட்களாகியும் கூட அந்தக் குறிப்பிட்ட பசுவைப் பற்றிய தேடுதலே இல்லாமலொழிந்தது எப்படி?

பொதுவாக பசுக்களை வளர்ப்பவர்கள் அவற்றின் மீது இனம் புரியாத நேசத்தையும் வளர்த்துக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். நானறிந்த வரை அப்படித்தான். அப்படி இருக்கையில் இந்தப் பசு என்ன பாவம் செய்தது.. இப்படி எவரும் தேடுவாரின்றி அனாதையாய் மரிக்க?

எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம். பசு இறந்த காலி மனையின் உரிமையாளர்களுடையது. அவர்கள் அங்கே இடம் வாங்கியதைத் தவிர எந்தப் பாவமும் அறியாதவர்கள். அவர்களுக்கு உடனே தெரிந்திருக்கப் போவதில்லை என்றாலும் இப்போது யார் மூலமாகவேனும் தெரிந்திருக்கக் கூடும் தங்களது மனையில் நிறை வெள்ளிக்கிழமையில் நிறை சூல் கொண்ட பசுவொன்று கன்று ஈன முடியாமல் அப்படியே உட்கார்ந்தவாக்கில் இறந்த சேதி. சடங்கு, சம்பிரதாயங்களில் அதீத நம்பிக்கை கொண்ட இந்துக்களிடையே இது மிக மன உளைச்சல் தரக்கூடிய சங்கதி. யார் வீட்டுப் பசுவோ, தாம் காசு கொடுத்துப்பெற்ற மனையில் வந்து உயிர் விட்டால் அந்தப் பாவம் தங்களையும் சேருமா? சேராதா? என்ற குழப்பம் வேறு இனி அவர்களை வாட்டத் தொடங்கலாம்.

ஒருவேளை மனைக்கு உரிமையானவர்கள் நாத்திகராகவே இருந்த போதும், வீடு கட்ட வாங்கிய மனையில் பசு இறந்து, அதன் உடல் மூன்று நாட்களாகியும் அப்புறப்படுத்தப் படாமல் அங்கேயே கிடந்த கொடுமையை பரவாயில்லை அதனாலென்ன? என்று ஏற்றுக் கொள்வார்களாவெனத் தெரியவில்லை.

இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இறந்த பசுவின் உரிமையாளர்கள் மட்டுமில்லை பசு இறந்து கிடந்த காலிமனையின் உரிமையாளர்களும் கூட இதுவரை அவர்களது இடத்தை வந்து ஒருமுறையேனும் எட்டிப் பார்த்ததாகத் தெரியவில்லை.

நடந்த சம்பவம் இதுநாள் வரையிலும் அவர்களுக்குத் தெரியாமலிருக்க நியாயமில்லை.

ஆனாலும், மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தான் புரியவில்லை. 

இப்படிப்பட்ட மனிதர்கள் எப்போது தான் திருந்தப் போகிறார்களோ?

பெருமாள் முருகனின் ‘பூனாச்சி’ வாசித்திருக்கிறீர்களா? அதிலொரு வெள்ளாடு வரும். அதன் பெயர் தான் பூனாச்சி. பூனாச்சி வாயிலாக கால்நடைகளின் வாழ்வில் இந்த சுயநலம் கொண்ட மனிதர்களால் நிகழ்த்தப்படும் பல்வேறு துரோகங்களைப் பற்றிப் புட்டுப் புட்டு வைத்திருப்பார் பெருமாள் முருகன். அந்த துரோகங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த பசு மாட்டுக்கு நிகழ்த்தப்பட்ட துரோகமும் கூட! அந்தப் பசுவுக்கு ஆன்மா என ஒன்றிருந்திருக்குமாயின் நிச்சயம் அது தன் இறப்பின் இறுதி நொடியில் ஒரு முறையேனும் உரிமையாளரின் உதவியை நாடி இறைஞ்சியிருக்கும். பசுவைத் தேடி வந்திராத அதன் உரிமையாளர் காணாமல் போன பசுவைத் தேடுவதைக் காட்டிலும் அப்படியென்ன அதிசயமான பணியில் மூழ்கியிருந்திருப்பார் என்பது தான் இன்று இந்த நிமிடம் வரை புரியாத புதிர்!

ஆகவே பசு வளர்ப்பாளர்களே! இதன் மூலம் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருப்பது என்னவென்றால்?

உங்களுக்கு பசு வளர்க்க வேண்டுமானால் அதைப் பொறுப்புடனும், கரிசனத்துடனும் வளர்க்கப் பாருங்கள். இல்லையேல் சும்மாவேனும் இருக்கப் பாருங்கள்.

நீங்கள் பசு வளர்த்ததும் போதும், அதை இப்படி நிர்க்கதியாக சாக விட்டதும் போதும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com