பாதுகாப்பில் அலட்சியம்...

எந்தவோர் அமைச்சரவையிலும், நிதி, உள்துறை, பாதுகாப்பு, மனிதவளம், சுகாதாரம், வெளியுறவு உள்ளிட்ட அமைச்சகங்களுக்குத் தனித் தனியான கேபினட் அந்தஸ்த்துடன் கூடிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவதுதான்

எந்தவோர் அமைச்சரவையிலும், நிதி, உள்துறை, பாதுகாப்பு, மனிதவளம், சுகாதாரம், வெளியுறவு உள்ளிட்ட அமைச்சகங்களுக்குத் தனித் தனியான கேபினட் அந்தஸ்த்துடன் கூடிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவதுதான் வழக்கம். இந்தத் துறைகளின் முக்கியத்துவம் கருதி இவை கூடுதல் பொறுப்பாக இன்னொரு அமைச்சருக்கு அளிக்கப்படுவதில்லை.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவாவின் முதலமைச்சராக மாநில அரசியலுக்கு திரும்பியதைத் தொடர்ந்து நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் மத்திய பாதுகாப்புத் துறையின் கூடுதல் பொறுப்பு மீண்டும் தரப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் நரேந்திர மோடி அரசில் மட்டும்தான் பாதுகாப்புத் துறைக்கென தனியாக அமைச்சர் நியமிக்கப்படாமல் கூடுதல் பொறுப்பாகத் தரப்படுகிறது என்கிற குற்றச்சாட்டில் தவறு காண முடியாது.
பதான்கோட், உரி உள்ளிட்ட ராணுவத் தளங்களின் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதுதான். அதேபோல, ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் பிரச்னை சுமூகமாக தீர்க்கப்படாமல் தொடர்கிறது. கடற்படையில் ஆகட்டும், தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகின்றன.
எந்த ஊழல் குற்றச்சாட்டிலும் தான் சிக்கி விடக் கூடாது என்பதற்காக முக்கியமான ராணுவத் தளவாடங்கள் வாங்குவதை ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தார் முந்தைய ராணுவ அமைச்சர் அந்தோணி. எல்லைப்புறங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்குப் போதுமான அளவு நவீன துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கூட இல்லாத நிலைமை காணப்பட்டது.
ஐ.ஐ.டி. பட்டதாரியான மனோகர் பாரிக்கரின் திறமை, முக்கியத்துவம் இல்லாத சிறிய மாநிலமான கோவாவில் வீணாக்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கருதினார். அதனால்தான் அவரை மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக்கி ராணுவத்தின் செயல்பாடுகளை முடுக்கிவிடப் பணித்தார்.
பதவியேற்றவுடன் தனது முதல் கடமையாக ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை அறிவித்தார் மனோகர் பாரிக்கர். ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி வெளிப்படைத்தன்மையுடன் விரைவாக செயல்பட வழிகோலினார். ஆனாலும்கூட, எதுவுமே எதிர்பார்த்த அளவு சுறுசுறுப்பாக நடக்காததற்கு காரணம் ராணுவ அமைச்சக அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மைதான். போதாக்குறைக்கு, கோவா பா.ஜ.க.வின் கோஷ்டிப் பூசல்களை சரி செய்வதற்கே அவருக்குப் பொழுது போதவில்லை.
பாதுகாப்பு அமைச்சகம் எதிர்கொள்ளும் சவால்களில் மிக மிக முக்கியமானவை தளவாடங்கள் வாங்குவதும், ராணுவ வீரர்களின் உற்சாகம் தளர்ந்துவிடாமல் பாதுகாப்பதும். இரண்டாவது சவால் எளிதானதல்ல. மன அழுத்தம் காரணமாக ராணுவ வீரர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டிருப்பதும், கடற்படை வீரர் ஒருவர் உயர் அதிகாரியைத் தாக்கியிருப்பதும் படைவீரர்கள் மத்தியில் காணப்படும் உற்சாகமின்மையின் வெளிப்பாடுகள்.
தலைமை ராணுவத் தளபதி விபின் ராவத், சிப்பாய்களோ, அதிகாரிகளோ தங்களுடைய குறைகளை தன்னிடம் நேரில் தெரிவிக்கலாம் என்று அறிவித்தும்கூட நிலைமை முழுமையாக சீர்ப்பட்டு விட்டதாக கருதிவிட முடியாது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், மேல் அதிகாரிகளுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்வது இப்பொழுது தவிர்க்கப்படுகிறது என்பது மட்டுமே ஆறுதல்.
உலகிலேயே மிக அதிகமான ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தளவாடங்கள் வாங்குவது என்பதைவிட தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்திச் செய்வது என்பதில் முனைப்பு காட்ட வேண்டிய நேரம் இது. ’இந்தியாவில் தயாரிப்போம்' என்கிற நரேந்திர மோடி அரசின் திட்டம் பாதுகாப்புத் துறையில் செயல்படுத்தப்பட்டால்தான் நமது ராணுவத் தளவாட தேவைக்கான செலவினத்தை குறைக்க முடியும்.
பெரும்பாலான ராணுவத் தளவாடங்களையும், உபகரணங்களையும் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களிலிருந்துதான் நாம் வாங்குகிறோம். அப்படியிருக்கும்போது இந்தியாவின் தனியார் துறையை ராணுவத் தளவாட உற்பத்தியிலிருந்து அகற்றி நிறுத்தியிருப்பது புத்திசாலித்தனமாக தெரியவில்லை. ராணுவத் தளவாட உற்பத்தியை தனியார் துறைக்குத் திறந்துவிடுவதும் அதில் தாராளமாக அந்நிய முதலீட்டை அனுமதிப்பதும் அதன்மூலம் உற்பத்தியாகும் தளவாடங்களை இந்திய ராணுவத்திற்கு பயன்படுத்திக் கொள்வதும் ஏற்றுமதி செய்வதும்தான் பொருளாதார ரீதியாக சரியான முடிவாக இருக்கும்.
மனோகர் பாரிக்கர் இந்த முயற்சியில் இறங்கினார் என்றாலும் பாதியிலேயே திசைத் திரும்பி தனது முனைப்பை கைவிட்டுவிட்டார். இனி அவரது இடத்திற்கு வரவிருக்கும் முழு நேர பாதுகாப்பு துறை அமைச்சரின் முதல் கடமை தளவாட உற்பத்தியை முடுக்கிவிடுவதாகத்தான் இருக்க வேண்டும்.
நீண்ட நாட்களாகவே இந்தியாவின் பாதுகாப்பில் காணப்படும் ஒரு முக்கியமான குறை முப்படைக்கும் சேர்த்து தலைமைத் தளபதி ஒருவர் இல்லாமல் இருப்பது. அடுத்து வரும் பாதுகாப்பு அமைச்சர் முப்படைத் தளபதியை நியமித்து அவரது பொறுப்பில் காலாட் படை, கடற்படை, விமானப் படை ஆகிய மூன்று படைகளுக்கும் இடையே சுமூகமான உறவையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துவது அவசியம்.
எல்லாவற்றையும்விட முக்கியம் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகப் பாதுகாப்புத் துறைக்கு முழுநேர அமைச்சர் ஒருவரை நியமிப்பது. பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதுகாப்பு அமைச்சராக இருப்பதற்கான தகுதி ஒருவருக்குக் கூடவா இல்லை?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com