திக்குவாய் குணமாக நம்மால் செய்யக் கூடியதென்ன?! 

மூளை சொல்வதை உடலுறுப்புகள் சரியான படி கிரகித்துக் கொள்ளாத போது தான் திக்குவாய் உள்ளிட்ட பிரச்சினைகள் வருகின்றனவாம். இந்த ஒத்திசைவு வர என்ன செய்ய வேண்டும்?

மெகஸ்தனிஸ் என்றொரு அயல்நாட்டுப்பயணி. இவர் இந்தியாவுக்கு வந்த சீனப் பயணிகள் யுவான் சுவாங், பாஹியான் வரிசையில் கிரேக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்த போது கூட வந்து இங்கே சில காலம் தங்கிச் சென்றார்.  ‘இண்டிகா’ எனும் மாபெரும் அர்பணிப்பு இவருடைய படைப்பு தான்.

இந்த மெகஸ்தனிஸுக்கு திக்கு வாய் பிரச்சினை இருந்திருக்கிறது. அதற்கான நிவாரணமாக மெகஸ்தனிஸின் ஆசிரியர் அவரை ஆற்றில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு வாய் நிறைய கூழாங் கற்களைப் போட்டுக் கொண்டு அதே நிலையில் நின்றவாறு உரக்கப் பேசிப்பழகச் சொல்லி இருக்கிறார். ஆசிரியர் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு பின்பற்றியதில் நாளடைவில் மெகஸ்தனிஸ்க்கு திக்கு வாய் பிரச்சினை குணமானதாம். அதுசரி அன்றெல்லாம் ஊரெங்கும், நாடெங்கும் ஆறுகள் செழிப்பாக இரு கரை நிரப்பி கடல் நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தன. இப்போது ஆற்றுக்கு எங்கே போவதாம்? ஆறுகள் இருந்த இடத்தில் பெருஞ்சாக்கடைகளும், பல கிராமங்களில் வண்டித் தடங்களும் தான் காணக் கிடைக்கின்றன என்கிறீர்களா?

சரி திக்குவாய் பிரச்சினை குணமாக நம்மால் இப்போது செய்யக் கூடியதென்று ஏதாவது இருக்கும் தானே?!

இதோ வர்ம ஆசான் தலைமை மருத்துவர் டாக்டர்.எஸ்.ஆர். பாலாஜி சொல்வதைக் கேளுங்கள்;
திக்குவாய் பிரச்சினை என்பது உடல் நலனோடு மனநலமும் சேர்ந்த விசயம். அதாவது நமது உடல் உறுப்புகளுக்கும், மூளைக்கும் அருமையான ஒத்திசைவு இருப்பதால் தான் நம்மால் சரியான படி நடக்க முடிகிறது, பேச முடிகிறது, எழுத முடிகிறது. மூளை சொல்வதை உடலுறுப்புகள் சரியான படி கிரகித்துக் கொள்ளாத போது தான் திக்குவாய் உள்ளிட்ட பிரச்சினைகள் வருகின்றனவாம். இந்த ஒத்திசைவு வர என்ன செய்ய வேண்டும்?

  • வசம்புப் பொடியை அருகம் புல் சாற்றில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூளைக்கும், உடல் உறுப்புகளுக்குமான ஒத்திசைவு பலப்பட்டு திக்குவாய் குணமாகுமாம்.
  • வல்லாரைக் கீரை கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பலப்படுத்தும். கல்லீரல் பலப்பட்டால் மூளை வலுவாகி நினைவாற்றல் அதிகரிக்கும், நினைவாற்றல் அதிகமானால் மூளைக்கும், உடல் உறுப்புகளுக்குமான ஒத்திசைவு சரியான விகிதத்தில் அமையுமாம். இதன் மூலமாகவும் திக்குவாய் பிரச்சினை சரியாகும்.
  • வில்வ இலைகளை காலையிலும், மாலையிலுமாக 5 அல்லது 6 இலைகளை எடுத்துக் கொண்டு நன்றாக மென்று சாற்றை விழுங்கி விட்டு 10 நிமிடங்கள் கழித்து சுண்டக் காய்ச்சிய பசும்பாலில் மிதமான சூட்டில் பனங்கற்கண்டு, சிறிது மஞ்சள் தூள் கலந்து அருந்தினாலும் திக்கு வாய் குணமாகுமாம்.
  • துளசி இலை கலந்த நீரை மண்பானையில் இரவு முழுக்க வைத்திருந்து மறுநால் இலைகளை எடுத்து விட்டு  அந்த நீரை மட்டும் அருந்தினாலும் திக்குவாய் குணமாகுமாம்.
  • தூதுவளைக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற மூலிகைக் கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் உகந்ததாம். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலின் நச்சுக்கள் எளிதில் அகற்றப் பட்டு உடல் நலம் பெறும். இதனாலும் மூளைக்கும், உடல் உறுப்புகளுக்குமான ஒத்திசைவு இணக்கமானதாகி திக்குவாய் குணமாகுமாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com