வகை வகையாய், ருசி ருசியாய் தினமும் கீரை சாப்பிடுங்க!

அரைக்கீரையை இளசான இலையாக பூச்சியில்லாமல் ஆய்ந்து கொள்ள வேண்டும்.
வகை வகையாய், ருசி ருசியாய் தினமும் கீரை சாப்பிடுங்க!


அரைக்கீரையை இளசான இலையாக பூச்சியில்லாமல் ஆய்ந்து கொள்ள வேண்டும்.

முளைக்கீரையினை தண்டு இளசாக இருந்தால் தண்டுடன் கிள்ள வேண்டும். தண்டு முற்றலாக இருந்தால் இலையாகக் கிள்ளிக் கொள்ள வேண்டும். முற்றிய தண்டினைப் பொடியாக நறுக்கிக் கூட்டு வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறுகீரை இளசாக இருந்தால் தண்டுடன்   பொடியாக நறுக்கிப் பயன்படுத்தலாம்.

அகத்திக் கீரையில் இலையை மட்டும் உருவி சுத்தம் செய்து சமைக்க வேண்டும்.

முருங்கைக் கீரையினைத் தனித்தனியாக காம்பு  நரம்பு இல்லாமல் ஆய்ந்து கொள்ள வேண்டும்.

வெந்தயக் கீரையை வேர் பகுதியினை சிறிது நறுக்கிவிட்டு  அப்படியே பொடியாக நறுக்கி உபயோகிக்கவும்.

முள்ளங்கிக் கீரையில் நடுவில் உள்ள  தண்டினை நீக்கி விட்டு இலையை மட்டும் பொடியாக நறுக்கி பொரியல்,  கூட்டிற்குப் பயன்படுத்தலாம்.

கீரைத்தண்டு இளசான கீரைத்தண்டாக வாங்கி ஆய்ந்து பொடியாக நறுக்கி பொரியல் கூட்டிற்குப் பயன்படுத்தலாம். தண்டினை நாரெடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புதினாவில் இலையை மட்டும்  ஆய்ந்து  பயன்படுத்த வேண்டும்.

பீட்ரூட் கீரையைப் பொடியாக நறுக்கி கூட்டு அல்லது பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.

புளிச்சக் கீரையில் இலைகளை மட்டும் கிள்ளிப் பொடியாக நறுக்கிப் பயன்
படுத்தவும்.

மணத்தக்காளிக் கீரையின் தண்டு தடிமனாக இருக்கும். எனவே  கீரை, காய், பூ முதலிய எல்லாவற்றையும் ஆய்ந்து பொடியாக நறுக்கி சமைக்க வேண்டும்.

எந்த கீரையாக இருந்தாலும் நறுக்கியவுடன்  பெரிய பாத்திரத்தில்  தண்ணீர் வைத்து  இரண்டு முறைக்கு மேலாக நன்றாக அலசி வடிகட்டும் கூடையில் போட்டு வடிகட்ட வேண்டும். அதுபோன்று கீரையை ஆய்ந்த உடனே அலசி நறுக்க வேண்டும். அப்போதுதான் சத்துகள் வீணாகாது.

கீரை வகைகளை குக்கரில் வேக வைத்தால் பசுமை நிறம்மாறி பழுப்பு நிறமாக மாறிவிடும்.

கீரை வகைகளை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தண்ணீர்விட்டு வேக வைத்தால் பசுமை மாறாமல் இருப்பதுடன்  ருசியும் கூடுதலாக இருக்கும்.

கீரைகளைச் சமைத்து இறுதியில்தான்  தாளிக்க வேண்டும்.  அது போன்று கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல், பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்தால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

கீரை வேகும்போது  தண்ணீர் அதிகமாக இருந்தால் வடித்து சூப் செய்யலாம்.

கீரை மசியலை பருப்புச் சட்டியில் மரமத்தினால் கடைந்தால் இயற்கையான ருசியுடன் இருக்கும். மிக்ஸியில் கடையும் போது ருசி மாறிவிடும். 

கீரை மசியலை தாளிப்பதற்கு வடகம் சிறந்தது. ருசியும் கூடுதலாக இருக்கும்.

பொதுவாக எல்லாக் கீரை சமையலுக்கும் தேங்காய்த் துருவல் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.  தேங்காய்க்குப் பதிலாக உடைத்த கடலை மற்றும் வேர்க்கடலை பொடி செய்து சேர்த்தால் ருசி  கூடுதலாக இருக்கும். அரிசியை வறுத்து பொடி செய்தும் கீரை பொரியலில் சேர்க்கலாம்.

கீரையை தினமும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அகத்திக் கீரையை வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் சாப்பிட்டால் வயிற்றிலுள்ள  பூச்சிகளை அழித்துவிடும்.

'தினம் ஒரு கீரை'  என்ற நூலிலிருந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com