பிரச்னையை கண்டு ஓடாதீர்கள்!

வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னை என்றால் அதை விட்டுத் தூர விலகவே நாம் எத்தனிப்போம்
பிரச்னையை கண்டு ஓடாதீர்கள்!

வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னை என்றால் அதை விட்டுத் தூர விலகவே நாம் எத்தனிப்போம். நம்முடன் இருப்பவர்களும் கூட, 'பிரச்னைக்கு தீர்வு தெரியவில்லை என்றால், அதை விட்டுவிடு. நடப்பது நடக்கட்டும் என்று சரணடைந்து விடு' என்றே சொல்கிறார்கள். பிரச்சினையை நீங்கள் விட்டுவிடுவீர்கள்… ஆனால் பிரச்னை பலநேரங்களில் உங்களை அவ்வளவு சுலபமாக விட்டுவிடாதே! வங்கியில் கடன் வாங்கிவிட்டு, அதைத் திரும்பக் கட்டமுடியாமல் தவிப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள் தானே? அக்கடனை விட்டு அவர்கள் ஓடநினைத்தாலும், வங்கி அவர்களை விடுவதில்லையே! வாழ்க்கையும் இதுபோலத்தான் – வாழ்வில் நீங்கள் சந்திக்க நேரிடும் சூழ்நிலைகளும் ‘கடன்’ போன்றதுதான். அதற்கான விலையை நீங்கள் கொடுக்கத்தான் வேண்டும் – பணத்தைக் கொண்டு அல்ல, உங்கள் வாழ்வைக் கொண்டு. நீங்கள் புத்திசாலியாக இருந்தால் அதற்கென ஒருவிலை தருவீர்கள், இல்லையேல் அதற்கு வேறுவிலை தர நேரிடும்… எது எப்படியோ… அதற்கான விலையை மட்டும் தந்தே ஆகவேண்டும்.

நமக்கிருக்கும் பிரச்னைகள் எல்லாம் பிரச்சினையாக இருப்பது, அவற்றை நாம் பிரச்னையாகப் பார்ப்பதால்தான். நிஜத்தில் பார்த்தால் வாழ்வில் பிரச்னைகள் என்று எதுவும் கிடையாது… இருப்பது சூழ்நிலைகள் மட்டும்தான். ஆம்… ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான சூழ்நிலை. அவற்றைப் ‘பிரச்னை’யாகப் பார்த்தால், அவை பிரச்னையாக மாறிவிடும். ஆனால் அதையே அற்புதமான வாய்ப்பாகப் பார்த்தால், அது அவ்வாறே அற்புதமான வாய்ப்பாக மாறிடும். இப்போது எங்கோ யாருக்கோ கல்யாணம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவருக்கோ அதில் சிறிதும் இஷ்டமில்லை. இது அவருக்கு பெரும் பிரச்னையாக ஆகிறது. இது அவருள் எந்த அளவிற்கு பாதிப்பை உருவாக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதுவே வேறொருவர் விருப்பத்தோடு கல்யாணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்… அவரின் வாழ்வில் அதுவே பொன்னாளாக உருவெடுக்கும். ஒரே சூழ்நிலைதான்… ஆனால் அதை பிரச்னையாக மாற்றிக் கொள்வதும், அற்புதமாக வைத்துக் கொள்வதும், அதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதைப் பொருத்தே அமைகிறது.

இங்கு பலரின் பிரச்னை… அவர்களுக்கு அந்த சூழ்நிலை வேண்டும், ஆனால் அதற்கான விலையைக் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. உதாரணத்திற்கு, கடையில் நீங்கள் பார்க்கும் துணிகள் உங்கள் மனதைக் கவர்கின்றன… ஆனால் அதன் விலையை ஏற்க உங்களுக்கு மனமில்லை. இதற்கான ஒரே தீர்வு திருட்டுதான். ‘சரி!’ என்று திருடனாகிவிட்டால், எல்லாமே இலவசம்தான்… ஆனால் ஒன்று, எப்போது ‘அரசு விருந்தாளி’ ஆக நேருமோ என்ற பயத்திலேயே ஒவ்வொரு கணத்தையும் கழிக்கநேரிடும். வாழ்வில் எது வேண்டும் என்றாலும், அதற்கென ஒரு விலை உண்டு. அந்த விலை உங்கள் வாழ்விற்கு ஏற்கக்கூடியதாக இருக்கிறதா, இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

ஒரு பொருள் பத்து ரூபாய் என்றால், அதை நீங்கள் வாங்க நினைக்கலாம்… ஆனால் அதுவே பதினொன்று ரூபாய் என்றால் அதை நீங்கள் வாங்க மறுக்கலாம். இது முழுக்க முழுக்க உங்கள் தீர்மானம். அதே போல்தான் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையும். இது பணம் சார்ந்த சூழ்நிலைகளுக்கு மட்டுமல்ல. வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைக்குமே ஒரு விலை உண்டு. அந்த விலை ஏற்கக்கூடியதா, இல்லையா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் மட்டும்தான் முடிவுசெய்ய முடியும். வேறொரு கோணத்திலிருந்து பார்த்துவிட்டு, அதைத் தேவையற்ற, வீணான செயலாக நான் கருதலாம்… ஆனால் அதே சூழ்நிலை உங்களுக்குப் பெருமதிப்புள்ளதாக இருக்கலாம். அதனால் இது வேறுயாரோ முடிவு செய்வதல்ல.

அந்த சூழ்நிலைக்குத் தேவையான விலையைக் கொடுக்க உங்களுக்கு விருப்பமா, இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள். முடிவெடுத்த பின், சந்தோஷமாக அந்த விலையைக் கொடுத்துவிடுங்கள். விருப்பமின்றி அந்த விலையைக் கொடுத்தால், அது கிடைத்தும் நீங்கள் அவதியுறுவீர்கள். ஒரு முடிவை எடுத்தபின் அதில் சரி, தவறு என்று எதுவுமில்லை. ‘நல்ல வாழ்க்கை’ என்றெல்லாம் எதுவுமில்லை. ஆனால் ஏதோ ஒன்றில் முழுமனதோடு உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொண்டால், உங்கள் வாழ்க்கை உங்களுக்கு அற்புதமாகவே இருக்கும். எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் அதில் முழுமையாய் நீங்கள் ஈடுபட்டால் உங்கள் அனுபவத்தில் அது அற்புதமாகவே இருக்கும். வேறொருவருக்கு நீங்கள் செய்வது அர்த்தமற்றதாக இருக்கலாம், முட்டாளத்தனமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் உங்கள் அனுபவத்தில் அது உயரியதாக இருக்கிறது… அவ்வளவுதான் வேண்டும்.
 
எந்த ஒரு சூழ்நிலையும் வளைக்கமுடியாத, மாற்றமுடியாத ஒன்றல்ல. உங்களுக்குப் பிடிக்காத, அல்லது வேண்டாத சூழ்நிலையில் தற்போது இருக்கிறீர்கள்… அதில் இருக்கவேண்டாம் என்று எண்ணுகிறீர்கள் என்றால், அந்தச் சூழ்நிலையை சற்றே கூர்ந்து கவனியுங்கள். அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் உங்களுக்குத் தென்படும். உதாரணத்திற்கு, மிகவும் அடைத்து வைத்தாற் போன்று உணர்கிறீர்கள்… கொஞ்சம் காற்று வேண்டும் என்று தோன்றுகிறது என்றால், ஜன்னலைத் திறந்து வையுங்கள். அதுவே போதும். இல்லை… அங்கிருந்து வெளியே செல்லவேண்டும் என்றால், கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்லுங்கள். இது முழுக்க முழுக்க உங்கள் தேர்வுதான். ஆனால் இதில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதற்கென்று குறிப்பிட்ட பின்விளைவுகள் இருக்கும். அதைச் சந்திக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்பதுதான் கேள்வியே.

வாழ்க்கை என்பது சூழ்நிலைகளின் கோர்வை. நீங்கள் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்லும்போது, நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் உங்களுக்குப் பரிச்சயமற்றதாக இருப்பதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். அவற்றை எப்படிக் கையாளவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாத பட்சத்தில், அவை உங்களுக்குச் சவாலாக அமையலாம்… ஆனால் அவையே பிரச்னைகள் அல்ல. உண்மையில் பிரச்னை என்பது உங்கள் வாழ்வில் ‘புதுப்புது’ சூழ்நிலைகள் இல்லாமற் போவதுதான். அப்போது வாழ்க்கை தேங்கி நின்றிடும். தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் நீங்கள் இருக்க விரும்பினால், உங்களுக்குப் பரிச்சயமல்லாத, உங்களுக்குக் கையாளத் தெரியாத புதுப்புது சூழ்நிலைகளை எதிர்கொண்டு கொண்டே இருப்பீர்கள். அதனால் உங்கள் வாழ்வில் ‘பிரச்னை’களை அதிகம் எதிர்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்வை மாபெரும் சாத்தியக்கூறாக நீங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நன்றி : ஈஷா மையம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com