புரியல+தெரியல = (அதனாலேயே) முடியலை!

நம் மனப்பான்மை உருவாகுவதில் நம்முடைய யோசிப்பு, கண்ணோட்டம், மற்றவரின் கருத்துகளை எப்படி எடுத்துக் கொள்கிறோம்,
புரியல+தெரியல = (அதனாலேயே) முடியலை!

நம் மனப்பான்மை உருவாகுவதில் நம்முடைய யோசிப்பு, கண்ணோட்டம், மற்றவரின் கருத்துகளை எப்படி எடுத்துக் கொள்கிறோம், இவை எல்லாவற்றிற்கும் பங்கு உண்டு.

பல முறை பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு, அத்துடன் நம்முடைய எதிர்பார்ப்புகளையும் கலந்து, அதையே நம்முடைய அடையாளமாக அமைத்துக் கொள்வோம். போகப் போக நம் இயல்புகள் பின் தங்கி விடும். அதன் விளைவே, பலமுறை, நம்மை பற்றி பிறர் சொல்வதை போலவே இருக்க முயற்சிப்போம்; நாளடைவில் அவர்கள் எண்ணப்படியே இருந்து விடுவோம். நாமாக யோசிக்க மாட்டோம்.

இப்படி ‘நம் அடையாளத்தை’ அமைப்புவதால் விளையும் விளைவுகளை இங்கு புரிந்து கொள்ளலாம். இவற்றை புரிந்து கொள்ள, நாம் மாணவர்களின் செயல்பாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இங்கு மதிப்பெண்கள் என குறிப்பிடுவதில் நமக்குக் கிடைக்கும் சான்றிதழ்கள், வேலையில் கிடைக்கும் பாராட்டு எல்லாம் அடங்கும்.

புரியல+தெரியல = (அதனாலேயே) முடியல

நமக்குத் திறமை இருக்கும். இருந்தாலும், மற்றவர்களும் சரி, நாமும் சரி, அதிக மதிப்பெண்களைப் பெறுவதைக் குறித்தே அதிக கவனம் செலுத்துவோம், மதிப்பெண்களைச் சுற்றியே மற்றவரின் கேள்விகளும் இருக்கும். இந்த மதிப்பெண் அங்கீகாரம் பெற நாம் என்னென்ன வழிகளைப் பின்பற்றுகிறோம் என்பதை ஆராயலாம்.

இப்படி மதிப்பெண்களையே பின் தொடர்வதின் விளைவு புரியல, தெரியல, என்பதினால் ‘முடியல’ என்றாகிவிடும். எதனால் புரியல-தெரியல என்றால் ‘முடியல’/ ‘முடியவில்லை’ என்பதாகிறது? மதிப்பெண்களுக்கும் இந்த ‘புரியல- தெரியல- முடியல’ விற்கும் உள்ள நெருக்கமான உறவை முதலில் புரிந்து கொள்வோம். இவற்றுக்குள் நடக்கும் அம்சங்களையும் கொஞ்சம் பார்க்கலாம்.

i. ‘மதிப்பெண் தான் நான் : என் அடையாளம்

மதிப்பெண்களுக்கு, ‘மதிப்பெண் தான் நான் : அதுவே என் அடையாளம்’ என்றொரு அங்கீகாரத்தை தருவதால், நம்மைப் பொறுத்தவரை மதிப்பெண்ணே மதிப்பினை சேர்க்கும் என்று எண்ணுவோம்.

நிறைய மதிப்பெண் பெறுவோரே புத்திசாலி என்று எல்லோரும் ஏற்றுக் கொள்வதாலும் அதிக மதிப்பெண் பெறுவது மட்டும் நம்முடைய குறிக்கோளாகும். அதிக மதிப்பெண் பெறுபவரே வெற்றி பெறுவார் என்றும், எல்லோராலும் மதிக்கப்படுவார் என்று எண்ணுவதால், மதிப்பெண்ணினால் கிடைக்கும் முழு மரியாதையைத் தக்க வைக்க அதிக மதிப்பெண்கள் பெற்றுக் கொண்டே இருக்க முயற்சிப்போம். மதிப்பெண்கள் அதிகரிக்க, புகழும் கூடுகிறது!

மீண்டும் மீண்டும் எடுக்கும் மதிப்பெண்களே நம் அங்க அடையாளம் போல் சேர்ந்து விடுவதால் நம்முடைய இன்னொரு அடையாள அட்டையாகிறது! நம்முடைய பெயர் போல் இதுவும் நிலைத்து நிற்கிறது. அதிக மதிப்பெண்கள் நாம் அணியும் ஒரு கவசமாகிறது.

அதாவது ‘கிடைக்கும் மதிப்பெண் தான் நான். அதுவே என் 'அடையாளம்’ என்றே இருப்போம். நம் மதிப்பெண்களை தெரிவிக்கின்ற பொழுதிலும் அதை பெருமையாக சொல்லிக் கொள்வோம். மேலும், நம் புத்திசாலித்தனத்துக்கு எப்படியும் மதிப்பெண்கள் வந்து விடும் என்று உறுதியாக இருப்போம்.

ஏதோ காரணத்தினால் யாரெல்லாம் 60-70 எனக் ‘குறைந்த’ மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அவர்கள் கஷ்டப்பட்டு படிப்பவர்கள் என்றும், பல முறை சந்தேகங்களைக் கேட்டுப் புரிந்து கொண்டு படிப்பார்கள், என்றும் பல ட்யூஷன்களுக்கு செல்பவர் என்றும், ஆக மொத்தம் அவர்கள் புத்திசாலிகள் அல்ல, முன்னேறக் கஷ்டப் படுபவர்கள் என்று எண்ணுவோம்.

இந்த மதிப்பெண் வித்தியாசத்தினால் அதிக மதிப்பெண் பெறுவோர், ‘சிறந்தவன்’ பட்டம் பெற்றுவிடுகிறார்கள். இதைத் தக்க வைத்துக் கொள்ள எப்பொழுதும் அதிக மதிப்பெண் தேவையாகிறது!

குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை ‘எல்லாவற்றிலும்’ பின் தங்கி இருப்பதாக கருதுவதுண்டு. அவர்களுடன் இணைய தயக்கமும் இருக்கும். வீட்டிலும் அவர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதனால் தான் என்றைக்காவது நாம் பெறும் மதிப்பெண் குறைந்து, பாதிப்பு வந்து விட்டால், நாம் படும் பாடே பாடு!

உடனே, அவமானம் சூழ்ந்து கொள்ளும், தைரியம் தளர்ந்து விடும், குற்ற மனப்பான்மையுடன், வெறுப்புடன் ‘நான் சுத்த வேஸ்ட்’ என்று பட்டம் சூட்டிக் கொள்வோம், நம் கவசம் + அடையாளம் தொலைந்திடுமோ என்று அஞ்சுவோம்.

இது வெளிப்படும் விதங்கள் ஒவ்வொருக்கு வெவ்வேறு விதங்களில் தென்படும்: சட் சட்டென்று கண் கலங்கிவிடும், வெட்கம், தயக்கம் சூழ்ந்துக் கொள்ளும் அவ்வப்போது தலை சுற்றுவது போலத் தோன்றும், கண்மயங்குவது போல் தோன்றும், இருந்தாலும், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கேட்கும், தெரிந்திருக்கும். நம்முள் சலிப்பு, சோர்வு, பதற்றம், தயக்கம் நம் மன விளும்பில் தளும்பும். இப்படி ஏதேதோ விதத்தில் மனம் (மனநலம்) தளருவதைத் தான் உடல் இவ்வாறு வெளிப்படுத்துகிறது. உஷார்!! இதை அறிந்துக் கொள்வது அவசியம். மனதில் தோன்றுவதை உடலின் அசைவுகள் பிரதிபலிக்கும்.

இதனால் படிப்பில் கவனம் சிதறிவிடும், மதிப்பெண் குறையும். இப்படி இன்னும் குறைவது மேலும் நம்மை ஆட்டிவைக்கும். இந்த (மதிப்பெண் - அடையாளம் - மதிப்பெண் குறைவு - பதட்டம் - மேலும் மதிப்பெண் குறைவு) என்ற வட்டத்திற்குள் சிக்கிக் கொள்வோம்.

ii. மதிப்பெண்களே விலங்காகிறது

இப்படி ஆகிவிடும் என்று அஞ்சுவதால்தான் மதிப்பெண் நமக்கு விலங்காய் உருவெடுகிறது. நம்முடைய மனப்பான்மை இவ்வாறு இருந்து விட்டால், அப்படியே நிலைப்பதும் உண்டு. இதன் விளைவுகள் என்ன என்று இங்கு பார்ப்போம்.

‘நிறைய மதிப்பெண்’, ‘சிறந்தவன்’ என்று பட்டம் பெற்ற அடையாளங்கள் நம்மை விட்டு விலகாமல் இருக்க நாம் பல விதத்தில் முயல்வோம். முயல்வது என்றும் நன்றே!  ஆனால், நம் முயற்சி: பாடத்திலோ, டீச்சர் கேள்வி கேட்டாலோ, சந்தேகங்கள் இருந்தாலோ இப்படிப் செய்வோம்:

மாட்டேன், நான் கையைத் தூக்க மாட்டேன்.

சந்தேகம் கேட்க மாட்டேன்.

எனக்குப் புரியலேன்னு யாருக்கும் தெரியக் கூடாது

கேள்விக்குப் பதில் தெரிந்திருக்கலாம் ஆனால் அச்சத்தில்:

நான் சொல்ற பதில் தப்பா இருந்தா?

'சரியாக இல்லை என்றால் டீச்சர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

 ‘இது கூட தெரியலன்னு! அப்டின்னு கருதி விட்டால்?’

 ப்ரெண்ட்ஸோட, கும்பலா போகும் போது ‘விளக்கம் கேட்பேன்

(நண்பர்கள் போகவில்லை என்றால்?)

‘(வகுப்பில் ஆசிரியர் கேள்விகள் கேட்டாலும் சரி எனக்கு சந்தேகங்கள் இருந்தாலும், கண்கள் கீழே பார்த்திருக்கும்)’

மொத்தத்தில், நம் வகுப்புத் தோழர்களுக்கோ, இல்லை ஆசிரியருக்கோ நம் குறை தெரிந்து போய் விடுமோ என்ற அச்சத்தில் இப்படிச் செய்வோம். நமக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். இருந்தும் நம் சந்தேகங்களைக் கேட்காமல் இருந்து விடுவோம். இப்படிச் செய்வது, நாம் அணிந்திருக்கும் மதிப்பெண்கள் என்ற கவசங்களையும், அடையாளங்களையும் காப்பாற்றவே. எங்கே நம்முடைய இந்த அடையாள கவசங்கள் கழன்றுவிடுமோ என்று அஞ்சுவோம். இதனாலேயே, ‘தெரியவில்லை’ என்றாலும் சரி ‘புரியவில்லை’ என்றாலும் சரி, மொளனமாக இருப்போம். அதனால் தான் தெரியவில்லை+புரியவில்லை= முடியவில்லை

பதில் தெரிந்தால், ‘இது சரியா? தப்பா’? என்று மனதிற்குள் அலை மோதி, நமக்குள் எழும் போராட்டத்தில் மூழ்கி விடுவோம். சந்தேகங்களும் நீங்காமல் இருந்து விடுகின்றன. இப்படிச் செய்தால் மதிப்பெண் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதையும் அறிவோம். அதனால், குழப்பம் கலந்த பயம் அதிகரிக்கும்.

இப்படி, நாம் செயல் படுவதற்கு பல மன ஜோடிகள் காரணம். அவற்றில் சில ஜோடிகள்: ஜோடி 1. தோல்வியே நெருங்காதே, தூர நில், ஜோடி 2.  நம் நலத்தை மட்டும் காப்போம்; உதவி செய்ய மறுப்போம், ஜோடி 3:பாராட்டு மட்டும் போதும் / பாராட்ட மாட்டாரா?, ஜோடி 4: பாராட்டை நாடுவது / ஓரவஞ்சகம்! இவற்றை, அடுத்த வரும் பகுதியில் பார்ப்போம்.

- மாலதி சுவாமிநாதன், மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com