மனிதனை இயக்கும் நரம்புத் தந்திகள்

தந்திக்குப் பின் தொலைபேசி அதிகம்‌ பரவியதால், தந்தி வந்திருக்கு என்னும் குரலின் அழுத்தம் தெரிவதில்லை‌ இன்றைய தலைமுறையினருக்கு.

இப்போதே டிஸ்கி போட்டு விடுகிறேன். நரம்பு, தந்தி என்றவுடன் ஏதோ வீணை‌ பற்றிய கட்டுரை‌ என்று நினைத்துவிடாதீர்கள். இசை, சினிமால்லாம் நமக்குக் கொஞ்சம்‌ தூரம்.‌ நாம் இப்போது  பேசப்போவது கொஞ்சம் வித்தியாசமான‌ ஒரு விஷயம்.

ஒரு சாக்லேட்டோ, குத்துப்பாட்டோ ஏன்‌ நம்மை உற்சாகமாக்குகின்றன. எப்படி ஒரு சோக வயலின், சிலரை பிழியப் பிழிய அழவைக்கிறது. இதற்கு எதிர்வினை‌ ஆற்று, இதற்கு கம்முனு இரு என்று எப்படித் தகவல்கள்‌ கடத்தப்படுகின்றன? சமீபத்தில் இழுத்து மூடப்பட்ட தந்தி உயிரோடு இருக்கையில், தந்தி கொடுக்கப் போயிருக்கிறீர்களா? தந்திக்குப் பின் தொலைபேசி அதிகம்‌ பரவியதால், தந்தி வந்திருக்கு என்னும் குரலின் அழுத்தம் தெரிவதில்லை‌ இன்றைய தலைமுறையினருக்கு. ஆனால், கட்டுக்கட கட்டுக்கடவென்று செய்திகள் எழுத்து எழுத்தாக மாற்றப்பட்டு அனுப்பப்படுகையில், Happy pongal, happy new year, reached safe போன்று அடிக்கடி அனுப்பப்படும் சில தகவல்களுக்கு சில எண்களைக் குறியீடாக வைத்திருப்பார்கள். அந்தச் சங்கேதத்தை மட்டும் அனுப்பிவிட்டால், எதிர்முனையில் இருப்பவர், கீழத்தெரு சரவணனுக்கு ஒரு பொங்கல் வாழ்த்து பார்சல்‌ என்று அனுப்பி வைத்துவிடுவார்.

ஒரு நரம்பு செல்லின் வடிவத்தை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். செல்லின் கரு ஒரு ஆஃப்பாயில் வடிவத்தை ஒத்திருக்கும். கருவையும் அதைச்சுற்றி இருக்கும் பகுதிக்கும் சோமா (soma) என்று பெயர். இந்த சோமாவில் இருந்து எக்கச்சக்கமாகக் கிளைபரப்பி நிற்கும் அமைப்புக்கு டென்ட்ரைட் (dendrite) என்று‌ பெயர். இதுதான் பிற நியூரான்களில் இருந்து செய்திகளை வாங்கும். அதே சோமாவில் இருந்து ஒரு வால் முளைத்து நீளும். அதற்கு ஆக்ஸான் (axon) என்று பெயர். ஆக்ஸான்கள், முனையில் கிளை பரப்பியிருக்கும். ஆக்ஸான்கள்தான் பிற நியுரான்களுக்கு சமிக்ஞைகள் அனுப்புபவை.

ஆரம்பத்தில் நரம்பு மண்டலத்தை, அதன் பல்வேறு‌ உட்பிரிவுகளை, இயக்கத்தைப் புரிந்துகொள்கையில், அவை தொடர்புகொள்வது பெரும்பாலும் நுண்ணிய மின்சாரத்தால் என்று நினைத்தார்கள். அதுவும் வீட்டு ஒயரிங்போல் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இரண்டு நியூரான்கள்‌ ஒன்றோடொன்று தொடுவதில்லை. இந்த இரண்டு நியூரான்களுக்கு இடைப்பட்ட பகுதியை சைனேப்டிக் க்ளெஃப்ட் (synaptic cleft) என்கிறார்கள்‌. மிகமிகச் சிறிய இடைவெளி அது. எதிர்பாராமல் திடீரென்று நடுரோட்டில் நிற்கும் சென்னை மாநகரப் பேருந்துக்குப் பின்னால் வந்து, it’s a matter of life and death என்ற வகையில் பைக்கின் பிரேக் பிடித்து நிறுத்துகிற தூரத்தைவிட அதிகம்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இந்த இடைவெளியில்தான் ஆக்ஸானிலிருந்து டென்ட்ரைட்டுக்கு சமிக்ஞைகள் போகும்.

சமிக்ஞைகள் சில நேரம் கால்சியம், சோடியம் போன்ற அயனிகள் நகர்வால் மின்சாரமாகப் போகும். சில சமயம், வேதிப்பொருள்கள் நகர்வாலும் போகும். நியூரான்களில் தகவல்களைக் கடத்துவதால், அவற்றுக்கு நியூரோடிரான்ஸ்மிட்டர் என்று பெயர். அப்படி நகருகிற வேதிப்பொருள் எது என்பதைப் பொறுத்து விளைவு மாறுபடும். சில வேதிப்பொருள்கள் நரம்பை தூண்டும். சிலது, பொங்கல் சாப்பிட்டதுபோல்‌ மந்தமாக இருக்கச் செய்யும். நரம்பைத் தூண்டும் வேதிப்பொருள்களுக்கு excitory neurotransmitter என்றும், மந்திக்கச் செய்யும் வேதிப் பொருள்களுக்கு inhibitory neurotransmitter என்றும் பெயர். இதைத்தவிர, வேதிப்பொருளின் உருவத்தை வைத்து அவற்றை மோனோஅமின்கள் (monoamines), அமினோ அமிலங்கள் (amino acids), பெப்டைடுகள் (peptides) மற்றும் பிற வகைகள் எனப் பிரிக்கிறார்கள்.

இந்த நரம்புக் கம்பிகள், ஒரு நியூரானின் ஆக்ஸானில் இருந்து சைனேப்ஸை தாண்டி மற்றொரு நியூரானின் டென்ட்ரைட்டில் போய் உட்காரும்‌. இதுபோல், ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நியூரானும், ஏகப்பட்ட நரம்புக் கடத்திகளை பெற்றுக்கொண்டும் அனுப்பிக்கொண்டும் இருக்கும்‌. நரம்போடு நரம்பு‌ மட்டுமல்ல, நரம்பிலிருந்து மூளை, நரம்பிலிருந்து தசை என்ற தகவல் தொடர்பையும் அவை மேற்கொள்கின்றன. சைனேப்ஸை தாண்டி மற்றொரு நியூரானின் டென்ட்ரைட்டில் போய் உட்கார, அவை தனித்தனி இடத்தை வைத்திருக்கும். அந்த இடத்தோடு அவை உருவாக்கும் வேதியியல் ரீதியிலான பிணைப்புகளை வைத்து, வந்திருப்பது யார் என்று அறிந்து, அதற்கேற்றவாறு நியூரான் செயல்படும். அளவில் ஓரளவு சிறிய மூலக்கூறுகள் என்பதால், இவற்றை உருவாக்கும் செல்கள் நியூரான்களுக்குள்ளேயே இருக்கும். ஆனால் சிக்கல் என்னவெனில், இவை அமினோ அமிலங்கள் அல்லது, அமினோ அமிலங்களை பட்டி டிங்கரிங் பார்த்து செய்யப்படுபவை என்பதால், உடலில் போதுமான அமினோ அமிலங்கள் இருக்க வேண்டும். உடலால் தேவையான மொத்த அமினோ அமிலங்களையும் உற்பத்தி செய்ய முடியாது‌. ஆகவே, சில அமினோ அமிலங்களுக்கு நாம் உணவை நம்பித்தான் இருக்கிறோம்.

நம் உடம்பில் அதிகம் புழங்குகிற சில நரம்புக் கடத்திகளைப் பார்க்கலாம்.

செரட்டோனின் (serotonin) - அதிமுக்கியமான நரம்புக் கடத்தி இது. உறக்கம், மன அமைதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது‌. மேலும் மன அழுத்தம், மனச்சிதைவு போன்றவற்றைத் தவிர்க்கிறது.

காமா அமினோ பியூட்டரிக் ஆசிட் (Gamma amino butyric acid or GABA) - இது ஒரு inhibitory neurotransmitter. வலி நிவாரணம், உணர்ச்சிக் கொந்தளிப்புகளை அடக்குதல் போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது

டோப்பமைன் (dopamine) - கவனம் குவிதல், நினைவுத்திறன், தசை இயக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், மூளையின் reward centre எனப்படும் பகுதியை இயக்க இது முக்கியம். இதன் அளவுகளில் ஏற்படும் மாறுபாடுகள், ஏதேனும்‌ ஒரு பழக்கத்துக்கு அடிமையாக மாற்றிவிடும்

எபினெஃப்ரின் மற்றும் நார்‌எபினெஃப்ரின் (epinephrine and nor epinephrine) - இந்த இரண்டு இந்திரன் சந்திரன் வகை நரம்புக் கடத்திகளே, உடலை ஆபத்துக்கு தயார்படுத்தலிலும், அமைதியான சூழலைக் கையாளலிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன

இம்மாதிரி நரம்புக் கடத்திகள் மற்றொரு நரம்பு செல்லில் போய் உட்காந்தவுடன், அப்படியே கொத்தாகத் தூக்கிக்கொண்டுபோய் மறுசுழற்சி செய்யப்படும். காரணம், அடுத்த நரம்புக் கடத்தி வந்து சேதி செல்வதற்கு இடத்தை காலியாக வைக்க வேண்டுமல்லவா. இப்படி உடனடி மறுசுழற்சி செய்யப்படுதல்தான், இது தொடர்பான ஆராய்ச்சிகளைக் கடினமாக்குகிறது. இப்போது ஓரளவு புரிதல் இருக்கிறது. இந்த நரம்புக் கடத்திகளைக் கொண்டு மருத்துவத்தில் பெரிய புரட்சிகளைச் செய்ய முடியும்.

1. ஒரு குறிப்பிட்ட நரம்புக் கடத்தியை, மறுசுழற்சிக்கு எடுக்கப்படுவதைத் தடுத்து, அதிக‌ நேரம் ஒரு இடத்தில் அமரவைக்க‌ முடியும். மன அழுத்தம் உள்ளவர்களுக்கு செரட்டோனில் அமரும் நேரத்தை அதிகப்படுத்தி மன அமைதியைத் தரமுடியும். எல்லா போதைப் பொருட்களும் டோப்பமைனை அதிக நேரம் தக்கவைத்து ஜிவ்வென்று இருக்கவைக்கின்றன.

2. ஒரு குறிப்பிட்ட நரம்புக் கடத்தியைப் போலவே உருவம் கொண்ட, ஆனால் அதே பண்பு இல்லாத டூப் மூலக்கூறை நரம்புக் கடத்தி அமரும் இடத்தில் அமரவைக்க முடியும். உதாரணமாக, வலி சமிக்ஞைகளைக் கடத்தும் நரம்புக் கடத்திகள் அமரும் இடத்தில், அசப்பில் அவை போலவே இருக்கும் மூலக்கூறை அமரவைத்து வலி இல்லாமல் ஆக்கலாம்.

3. உருவத்தில் கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும், பண்பில் நரம்புக் கடத்திபோல் இருக்கும் மூலக்கூறை அமரவைத்து, நரம்புக் கடத்தியின் விளைவை உருவாக்க முடியும். காப்பியில் இருக்கும் காஃபீன், புகையிலையின் நிகோடின் அப்படித்தான் வேலை செய்கின்றன.

இந்த நரம்புக் கடத்திகளின் புரிதல் மூலம் நரம்பு தொடர்பான கொடிய நோய்களான பார்க்கின்ஸன் (Parkinson's), ஷீசோஃபெர்னியா (schizophrenia) போன்றவற்றுக்கும், மனம் மற்றும் உளவியல்‌ தொடர்பான மன அழுத்தம், மனச் சிதைவு, கவனச் சிதறல், நினைவுத்திறன் குறைபாடு, கற்றல் குறைபாடு போன்றவற்றுக்குத் தீர்வு சொல்கிறார்கள். அடுத்தமுறை நல்ல இசை கேட்கும்போது ரசிக்கவைக்கும் செரட்டோனினுக்கும் நன்றி சொல்லுங்கள்!​

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com