லை டிடெக்டர்

பொய்யை கண்டுபிடிப்பதற்காக வடிவமைக்கபட்ட இயந்திரம்தான் லை டிடெக்டர். ஆனால், அதற்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது, பாலிகிராஃப் (Polygraph).

உன்னை ஒன்று கேட்பேன்,

உண்மை சொல்ல வேண்டும்.

என்னை பாடச் சொன்னால்,

என்ன பாடத் தோன்றும்?

பாடுவதெல்லாம்‌ அப்புறம் இருக்கட்டும். இந்த உண்மை - பொய் பஞ்சாயத்து மிகப்பெரிய பஞ்சாயத்து. இன்றெல்லாம் அசாத்தியமாகப் பொய் சொல்லப்‌ பழகிவிட்டோம்‌. ஆன் தி வே என்று வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு பொய் சொல்கிறோம். சமூகம்‌, அரசியல், மதம் என பொய்கள்‌ இல்லாத இடமே இல்லை. பொய் சொல்லாமல்‌ இருக்க வேண்டும்‌ என்பது எல்லா நாட்டுக் கருத்துகளிலும்‌ புராணங்களிலும் இருக்கிறது. சிவனின் அடியையும் முடியையும் தேடி திருமாலும் பிரம்மனும்‌ போக, பிரம்மன் தாழம்பூவை பொய்சாட்சியாகக் கூட்டிக்கொண்டு வந்தது அரிச்சந்திரன் கதை. இப்படி ஏகப்பட்டது. எனக்குத் தெரிய, வள்ளுவர் மட்டு‌தான் யாவர்க்கும் தீமை இலாது சொலல் என்று தேவைப்பட்டால் யாருக்கும் தீங்கு இல்லாது இருந்தால் பொய் சொல்லலாம், சொன்னால் அது வாய்மைதான் என்கிறார்.

சிலருக்குப் பொய் சொல்லவே வராது. தட்டையாய் ஏதோ‌ சொல்லி அசடு வழிந்து, பின் ஒப்புக்கொள்வார்கள். ஒரு சிலர், எப்படிப்‌ பொய் சொன்னாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். மாட்டைப் பார்த்தே, அது நக்கற மாடா மேயற மாடா எனச் சொல்லக்கூடியவர்கள். காவல் துறையினருக்கு பழக்கத்தில் ‘இந்தத் திறமை’ வந்துவிடுகிறது. பேசுகிற பேச்சை வைத்து கண்டுகொண்டுவிடுகிறார்கள். தேவைப்பட்டால், காதோடு சேர்த்து ‘ரப்’பென்று விழுகிற அறையில் நிலைகுலைந்து, பெரும்பாலானோர்க்கு உண்மை கசிந்துவிடும். பேச்சின் உதறல், உடல்‌நடுக்கம், எச்சில் விழுங்குதல், வியர்த்துவிடுதல் போன்றவை அவர்களுக்குப் போதும்‌.

இதில் சிக்கல்‌ என்னவெனில், ஒன்றுமே செய்யவில்லை‌ என்றாலும், முந்தின ஆள் வாங்கிய அறையால், பயத்தில் நமக்கு இதெல்லாம் வந்துவிடும். அந்த ஆறாவது அறிவு, ஏ.ஆர். முருகதாஸின் ஏழாம் அறிவெல்லாம் நாம் சாவகாசமாக இருக்கிறவரைதான். ‌படபடப்பில்‌, பொய் கோர்வையாக வராது. காரணம் பொய்க்கு யோசிக்க வேண்டும். படபடக்கிற நேரத்தில், மூளை மொத்தமாய் ஷட்டரை இறக்கிவிட்டு உயிர்பிழைப்பதைப் பற்றி யோசிக்கும். நெருக்கடியான நேரங்களில், மூளையின் உள்புறம்‌ மறைந்திருக்கும் மிருக மூளை செயல்படுகிறது. ஆகவேதான், விசாரணை நடக்கும்பொழுது நம்மை சாவகாசமாக இருக்கவே விடமாட்டார்கள். ஆனால், வாய்மொழியாக இது ‌பொய் இது உண்மை என சொல்லிவிட முடியாது. நாம்தான் இயந்திரம் சொன்னால்‌ நம்புவோமே. அப்படி பொய்யை கண்டுபிடிப்பதற்காக வடிவமைக்கபட்ட இயந்திரம்தான் லை டிடெக்டர். ஆனால், அதற்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது, பாலிகிராஃப் (Polygraph).

அதென்ன பாலிகிராஃப். ஒரே ஒரு எம்பிபிஸ் டாக்டர் மட்டும் இருந்தால் அது கிளினிக். ஒரு கார்டியாலஜிஸ்ட், ஒரு கேஸ்ட்ரோஎன்ட்ராலஜிஸ்ட் போன்ற சிலபல ஜிஸ்ட்கள் இருக்கும் மருத்துவமனையை பாலிகிளினிக் என்று சொல்கிறோம் அல்லவா? அதுபோல், பல கிராஃப்கள் இணைந்ததை பாலிகிராஃப் என்கிறார்கள்‌. விசாரிக்கப்படும் ஆசாமியின் இதயத்துடிப்பு, தோலில்‌ ஏற்படும் மின்தடை மாற்றம் போன்ற பல கருவிகளின் கோழி கிறுக்கல்களை வைத்து, ஆசாமி புளுகுகிறானா என்று கண்டுபிடிக்க முயற்சி செய்வது. இதில், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று சொல்ல முடியாதுதான் என்றாலும், தோராயமாய்ச் சொல்ல முடியும்.

ஆனால், அதற்குமுன் விசாரிக்கப்படும் ஆசாமியிடம் சில அடிப்படைக் கேள்விகள் கேட்பார்கள். அப்போது இந்தக் கருவிகள் கிறுக்குவதை கவனிப்பார்கள். அவ்வப்போது காந்தியை நீ சுட்டுக் கொன்றாயா? போன்ற கேள்விகளைக் கேட்டு, உண்மைக்கு எப்படி கிறுக்குகிறது, பொய்க்கு எப்படி கிறுக்குகிறது என கணிப்பார்கள். அப்புறம்தான், “சொல்லுங்க, பதினைந்தாம் தேதி ராத்திரி நீங்க லோகேஷ பாக்கப்போனீங்களா?” என்று இறங்குவார்கள். அந்தக் கிறுக்கல்கள் மேற்சொன்ன எந்தக் கிறுக்கலோடு ஒத்துப்போகிறது எனப் பார்த்து உண்மை, பொய் என்று சொல்வார்கள்.

சிக்கல் என்னவெனில், இந்த உண்மை, பொய்யைத் தவிர இன்னும் ஏகப்பட்ட உணர்ச்சிகளுக்கும் இந்த கருவிகள்‌ எக்குத்தப்பாய் கிறுக்க ஆரம்பிக்கும். கேள்வி கேட்கும் ஆள் அனுஷ்கா, நயன்தாரா போலெல்லாம் இருந்தால், காந்தியைக் கொன்றது யாரென்று கேட்டாலே படபடவென்று வரும்; இதயத்துடிப்பு எகிறும். அதற்காக காந்தியைக் கொன்ற குற்றத்துக்காகவெல்லாம் கைது பண்ண முடியாதே. அந்தக் கருவியின் பெரிய பின்னடைவு, அதனால் உணர்வுகளை நுணுக்கமாகப் பிரித்தறிய முடியாது.

இதெல்லாம் பரவாயில்லை. இவ்வளவும் தெரிவதற்கு முன் கொடூரம். ஐரோப்பா முழுக்க விசாரணை என்றாலே கொடுமைப்படுத்துதல்தான். விதவிதமாகக் கொடுமைப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்துவிடுவார்கள். அவர்கள் நம்பிக்கை‌ என்னவெனில், குற்றமுள்ளவனுக்கு வலி அதிகமாகத் தெரியும் என்பது. கொதிக்கக் கொதிக்க வெந்நீரை மேலே ஊற்றினால், நானெல்லாம்‌ முதல் மக்கிலேயே எல்லாவற்றையும் நான்தான் செய்தேன் என்று அப்ரூவர் ஆகிவிடுவேன்.

ஆஸ்திரேலிய மற்றும் ஆப்பிரிக்கப் பழங்குடிகளில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு நெருப்புக்கோழி முட்டையை கையில் பிடித்துக்கொள்ளச் சொல்லி கேள்விகள்‌ கேட்பார்களாம். பொய் சொல்கிறான் என்றால் பதட்டத்தில் முட்டையை உடைத்துவிடுவானாம். பின் கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல் வளரவும், இந்த மூச்சு, இதயத்துடிப்பு இத்யாதியெல்லாம் பாதிக்கிறது எனக் கண்டுகொண்டார்கள்.

1921-ல் முதல் பாலிகிராஃப் கருவியை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜான் அகஸ்டஸ் லார்சன் என்பவர் கண்டுபிடிக்கிறார். பி‌ன் அப்படியே முன்னேறி, 1990-களில் கணினிமயமாக்கப்பட்டது. அமெரிக்காவில் இன்னமும் இதை வழக்குகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில், 2008-ல் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பையனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிடம் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், 2010-ல் உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிகிள் இருபதின் மூன்றாவது உட்பிரிவான (Article 20(3) of the Indian constitution, Right against self incrimination) ஒருவரின் ஒப்புதல்களை, வாக்குமூலங்களை அவருக்கு எதிராகப் பயன்படுத்துதல் தவறு என்பதைச் சுட்டிக்காட்டி, பாலிகிராஃபுக்கு தடைவிதித்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் விரும்பிக் கேட்டால், இந்தச் செயல்முறையை மேற்கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தது.

இதன் கேள்வி கேட்கும் முறைமேல் அறிவியலாளர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். நிரபராதிகளின் பயத்துக்கும், குற்றவாளியின் பதட்டத்துக்கும் இந்தக் கருவிக்கு வேறுபாடு தெரியாது என்கிறார்கள். இதற்கு மாற்றாக, ஜப்பானில் guilty knowledge test அல்லது concealed information test என்று ஒன்றை மாற்றாகப் பயன்படுத்துகிறார்கள். நீ கொலைசெய்யப்‌பயன்படுத்திய கத்திக்கு‌ மரக்‌ கைப்பிடியா? ப்ளாஸ்டிக் கைப்பிடியா? போன்ற குற்றாவாளிக்கு மட்டுமே தெரிந்த கேள்விகளைக் கேட்டு, சரியான விடைகளுக்கு அவர்கள் உடலில் ஏற்படும் மாறுதல்களை பாலிகிராஃப் மூலம் அளவிடுகிறார்கள். இது ஓரளவு நேர்த்தியாக இருக்கிறது.

ஆனால்‌, நம்மூரில் போட்டித் தேர்வு ஒன்று இருந்தால், அதற்கு குறுக்கு வழி‌ ஒருத்தன் கண்டுபிடிப்பான் அல்லவா? அதுபோல, பாலிகிராஃப் சோதனையில் பாஸாவது எப்படி என்று புத்தகம் போடாத குறையாக, இதில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து பட்டியலிட்டுவிட்டார்கள். பொய் சொல்லும்போது உடலில் எங்காவது சுருக்கென்று வலிப்பதுபோல் எதையாவது செய்துகொண்டால், இந்தக் கருவியால் வித்தியாசம்‌ கண்டுகொள்ள‌ முடியாது எனச் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, நகக்கண்ணில் ஊசி ஏற்றுதல் போன்ற கொடூர விசாரணை முறைகளுக்கெல்லாம் இது எவ்வளவோ தேவலாம். 2003-ம் ஆண்டில், உலகை மாற்றிய 200 கருவிகள் பட்டியலில் பாலிகிராஃபும் இடம்பெற்றிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com