பட்டனைத் தட்டினால்..

முதன்முதலில், டிவி போன்ற மின்னணு உபகரணங்களுக்குத்தான், எழுந்துபோய் மாற்றுவதைத் தவிர்க்க, வயரால் பிணைக்கப்பட்ட பட்டன்கள் பொருத்தப்பட்ட ரிமோட்கள் வந்தன.

தினப்படி நம் கையில் சிக்கி, நம் கோபம், ஆர்வமின்மை எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு, பொறுமையற்ற நம்முடைய தாவல்களுக்கெல்லாம் அனுசரித்துக் கிடக்கும் ஒரு பொருளை உங்களுக்குத் தெரியுமா? ரிமோட் கன்ட்ரோல்தான் அது.

இதற்கும் மேலாக, பேட்டரி தனது கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கும்போது, முதுகில் படார் படாரென்று தட்டப்பட்டு, உள்ளிருக்கும் பேட்டரிகள் சுழற்றிவிடப்பட்டு, பிளாஸ்டிக் கவரால் மூடி ரப்பர் பேண்ட் இத்யாதிகளெல்லாம் கழுத்தை நெரித்தாலும், கர்மயோகியாகத் தன் கடமையைச் செய்துகொண்டிருக்கும். அது செய்யும் ஒரே சத்தியாகிரகம், சோபா இடுக்கு போன்ற இடங்களில் தலைமறைவாவதுதான். எப்படியோ ஆட்கொணர்வு மனு போடாத குறையாக, வீட்டை இரண்டாகத் திருப்பிப்போட்டு தேடிக் கண்டுபிடித்துவிடுவோம்.

ரிமோட்டுகள் மிக முக்கியமான ஒரு சாதனம். டிவிக்கு மட்டுமல்ல; கார் போன்ற வாகனங்களைத் திறக்க பூட்ட, கொஞ்சம் பசையுள்ள ஆசாமியெனில், காருக்குள் இருந்தே வீட்டின் பெரிய கதவுகளைத் திறக்க ரிமோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. சில சமயம், அரசியலவாதிகள் புது திட்டங்களைத் துவக்கிவைக்கவும்…

முதன்முதலில் ரிமோட்டுகள் போர்களின்போது பயன்படுத்தத்தான் கண்டுபிடிக்கப்பட்டன. கடற்படைக் கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகளை இயக்க ரிமோட்டுகள் பயன்பட்டன. அதற்கு முன்பாக, இப்படி ஒரு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பயன்படும் என்று நிகோலா டெஸ்லா என்பவர் ஒரு கருவியைச் செய்துகாட்டி இருக்கிறார்.

முதன்முதலில், டிவி போன்ற மின்னணு உபகரணங்களுக்குத்தான், எழுந்துபோய் மாற்றுவதைத் தவிர்க்க, வயரால் பிணைக்கப்பட்ட பட்டன்கள் பொருத்தப்பட்ட ரிமோட்கள் வந்தன. அவற்றுக்கு lazybone என்று பெயர். ஆனால், குறுக்கு ஒயர்கள் ஆபத்தானவை. கால் தடுக்கி விழுந்து நெற்றியில் புடைத்துக்கொள்ளக்கூடும். அதன்பின், ரேடியோ அலைவரிசையில் இயங்கக்கூடிய ரிமோட்கள் வந்தன. ஆனால், ரேடியோ அலைகளில் ஒரு சிக்கல் உண்டு. அவை மற்றவற்றில் குறுக்கீடு செய்யும். ஏற்கெனவே தகவல் தொடர்பு, ரேடியோ நிலையங்கள் ஆகியவை ரேடியோ அலைகளை காற்றுவெளியில் அள்ளி இறைப்பவை. மேலும், ரிமோட்டின் பயன்பாட்டு வீச்சு அதிகபட்சம் நம் வீட்டுக்குள்தான். சிலசமயம், பக்கத்து வீடு வரை. தன் வீட்டு ரிமோட்டை வைத்து பக்கத்து வீட்டு டிவியில் சேனல் மாற்றி திகிலூட்டியவர்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்.

சரி, நாம் விஷயத்துக்கு வருவோம். அதனால், ரேடியோ அலைகளின் பயன்பாடு என்பது வீட்டு உபயோகத்துக்குக் கொஞ்சம் அதிகம்தான். அதன்பின், ஒளியால் இயங்கக்கூடிய ரிமோட்டுகள் பயன்பாட்டில் வந்தன. ஆனால் அது, பிற ஒளிகளால் குறுக்கீட்டுக்கு உள்ளானது. சூரிய ஒளி, மின்சார விளக்கொளிகள்கூட சிக்கல்தான். ஆக, இந்த ஒளியின் சங்காத்தமே வேண்டாமென்று, மீயொலிகளில் (ultrasonic sound) இயங்கும் ரிமோட்டுகள் கொஞ்சநாள் புழக்கத்தில் இருந்தன. இதில் பெரிய குறுக்கீடுகள் இல்லையென்றாலும், சிலருக்குச் செவிளில் அறைந்ததுபோல ‘கொய்ங்’கென்று ஒலிகள் கேட்டதாம். நாய்கள் கொஞ்சம் மிரண்டிருக்கும். ஏனெனில், நமக்குக் கேட்காத மீயொலிகள் அவற்றுக்குக் கேட்குமே.  கடைசியாக வந்த தீர்வுதான் அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு இயங்கும் ரிமோட்டுகள்.

அத்தகைய ரிமோட்டுகளே இன்று பெரும்பான்மையாகப் பயன்பாட்டில் இருக்கின்றன. உங்கள் ரிமோட்டில் ஏதேனும் ஒரு பக்கம் ஒரு சின்ன கண்ணாடியால் ஆன பல்பு இருக்கிறதல்லவா? அது ஒரு அகச்சிவப்பு ஒளியுமிழி (infrared LED). டிவியிலோ, ஏசியிலோ ஒரு ஒளிவாங்கி பொருத்தப்பட்டிருக்கும். ரிமோட்டில் இருக்கும் ஒவ்வொரு பட்டனுக்கும் ஒரு குறிப்பிட்ட சங்கேதம் இருக்கும். அந்த சங்கேதத்தை இந்த ஒளியுமிழி வெளியிட, ஒளிவாங்கி அந்தச் சங்கேதத்தை சிக்கெடுத்து, ஓ அடுத்த சேனலா என்று புரிந்துகொண்டு மாற்றிவிடும்.

இதிலும் குறுக்கீடுகள் உண்டு. சூரிய ஒளியில் அகச்சிவப்புக் கதிர்கள் உண்டு. ஆனால், 980 நேனோ மீட்டர் (குத்துமதிப்பாய் ஒரு மி.மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு) அலைநீளம் உள்ள அகச்சிவப்பு அலையையே பயன்படுத்துகிறார்கள். மாடுலேஷன் (modulation) என்கிற ஒரு நகாசு வேலையின் மூலமாக குறுக்கீடுகளைச் செதுக்கிவிட்டு, குழப்பங்களைக் குறைத்துவிடுகிறார்கள்.

சில ரிமோட்டுகள், கருவியின் நேரே வைத்து இயக்கினால் மட்டுமே வேலை செய்யும். கொஞ்சம் ஆற்றல் அதிகமான ஒளியுமிழி எனில், நீங்கள் சுவற்றுப் பக்கம் திருப்பி பட்டனை அழுத்தினால்கூட வேலை செய்யும்.

ரிமோட்டுகளின் பட்டன்கள் மொத்தமாக ஒரே வார்ப்பில் செய்யப்படும். தனித்தனியாக ஒட்டவைப்பதெல்லாம் கிடையாது. அந்த பட்டன்கள் அழுத்தப்படும்போது, அவற்றின் கீழ் இருக்கும் மின்சுற்றுகள் உயிர்பெற்று, அந்த பட்டனுக்கான சங்கேதத்தை ஒளியுமிழிக்கு அனுப்பிவிடும். ஏசி ரிமோட் செயல்பாடும் இதேதான். இதில் பெரிய பாதுகாப்பெல்லாம் தேவைப்படாததால், ஒரு ஏசி அல்லது டிவியின் ரிமோட் அதே மாடலைச் சேர்ந்த எல்லா கருவிகளுக்கும் பொருந்தும்.

கார் போன்ற வாகனங்களைத் திறக்கும் ரிமோட்டுகள், ரேடியோ அலைவீச்சில் இயங்குபவை. அவை எந்த அலைவரிசையில் பேசுகின்றன எனக் கண்டுபிடிக்க முடிந்தாலும், அந்தப் பரிபாஷை புரியாது. பாதுகாப்புக் காரணங்களால் இவ்வகை ரிமோட்கள் கற்புக்கரசனாக / கரசியாகத் தயாரிக்கப்படும். கதவுகளைத் திறக்கும் ரிமோட்களும் இதே கரசன் / கரசிகள்தான்.

அடுத்ததாக gesture recognition என்னும் கையசைவுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் கருவிகள்தான் சமீபத்திய தொழில்நுட்பம். அபிநயம் பிடித்து சேனல் மாற்றலாம். ஆனால், பின்மண்டையில் தட்டி ரிமோட்டை வேலை செய்ய வைப்பதுதான், சாலச் சுகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com