அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே..

மைட்டோகாண்ட்ரியாவில் இருக்கும் டி.என்.ஏ.தான் அசல் தாய்வீட்டுச் சீதனம். ஆச்சி மசாலாவெல்லாம் கிடையாது.

கடந்த சில மாதங்களாக யார் வாரிசு என்ற தகராறும், சில வாரங்களாக ஒரு மூன்றெழுத்து நடிகரை தன் பிள்ளை என வழக்குத் தொடர்ந்த ஒரு வயதான தம்பதியும், திடீரென்று தான் இருபெரும் அரசியல் தலைவர்களுக்குப் பிறந்த பிள்ளை என வந்து நிற்கும் ஒரு பெண்ணும் என தினுசு தினுசாய் கேள்விப்படுகிறோம்.

ஊர்ப்பக்கம் மூத்த பிள்ளைகள், “உன்னய தவிட்டுக்கு வாங்கியாந்தாங்க, தெரியுமா?” என்று இளைய பிள்ளைகளுக்கு ஷாக் கொடுத்து அழவிடுவார்கள். வெளிநாடுகளில் “you know you were adopted” என்று கதிகலங்க வைப்பார்கள். இந்தப் பெற்றோர் - பிள்ளை தகராறு உலகப் பொதுத் தகராறு. வசவுகளில் பிறப்பைச் சந்தேகிக்கும் வசவுகள், வெட்டு குத்து வரையெல்லாம் கொண்டுபோய்விடும். “பாக்க அப்பன அப்புடியே உரிச்சு வெச்சிருக்கான்”, “அவளுக்கு அப்படியே அவ பாட்டி ஜாடை” என்று பொதுவில் வழங்குவதெல்லாம் இந்தப் பஞ்சாயத்தைத் தீர்க்கப் போதாது. இன்றைய தேதிக்கு, இதற்கான தீர்வை அறிவியல் வைத்திருக்கிறது‌. சற்றே செலவாகும் என்றாலும், நாம் முதலில் பார்த்த சில பெரிய இடத்து வழக்குகளில் சிக்கலைத் தீர்க்க உதவும்.

முதன்முதலில், ரத்த வகையை வைத்துதான் இந்தப் பெற்றோர் - பிள்ளை பஞ்சாயத்துகளைத் தீர்க்க ஆரம்பித்தார்கள். நம்‌ ரத்த வகை என்பது நம் ரத்தத்தில்‌‌ என்ன ஆன்டிஜென் இருக்கிறது என்பதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. ஆன்டிஜென் A மற்றும் ஆன்டிபாடி B இருந்தால், அது A ரத்த வகை. ஆன்டிபாடி A மற்றும் ஆன்டிஜென் B இருந்தால், அது B ரத்த வகை. ரெண்டு ஆன்டிஜெனும் இல்லாமல், A, B இரண்டு வகை ஆன்டிபாடிகளும் இருந்தால், அது O. A, B என்ற இரு ஆன்டிஜென்களும் இருந்து, ஆன்டிபாடிகளே இல்லையெனில், அது AB வகை. இவைதவிர, பாம்பே ரத்த வகையெல்லாம் இருக்கிறது. அதைப்பற்றி தனியாக ஒருதபா‌ ஜல்லியடிக்கலாம். பெற்றோர் இருவருமே ஆன்டிஜென்களே‌ இல்லாத O ரத்தப் பிரிவினர் என்றால், பிள்ளையின் ரத்தத்திலும் ஆன்டிஜென்கள் இருக்க முடியாதல்லவா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். ஆனால், இந்த ரத்த வகையை வைத்துச் சோதித்தல், யார் பெற்றோர் அல்ல என்பதைத் தீர்மானமாகச் சொல்லுமே அன்றி, யார் பெற்றோர் என்று சொல்லாது. அங்குதான் டி.என்.ஏ. உதவிக்கு வருகிறது.

முதலில், டி.என்.ஏ. பற்றி ஒரு மூன்று மார்க் கேள்வி அளவுக்குப் பார்த்துவிடுவோம். டிஆக்ஸிரிபோ-நியூக்ளிக்-ஆசிட் (Deoxyribo Nucleic Acid – DNA). என்பதே அதன் விரிவாக்கம். சும்மா தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் நமது மரபுப் பொருள் (genetic material). உண்மையான பரம்பரைச் சொத்து. நம்‌ உடலில் இருக்கும் எல்லா செல்களிலும் இந்த டி.என்.ஏ. இருக்கும். செல்களுக்குள் இரு இடங்களில் டி.என்.ஏ. காணப்படுகிறது. ஒன்று, செல்லின் கருவுக்குள் (nuclear DNA). மற்றொன்று, செல்லின் பேட்டரியான மைட்டோகாண்ட்ரியா (mitochondria) என்னும் அமைப்புக்குள் (mitochondrial DNA or mtDNA). இந்த டி.என்.ஏ.தான் நம் நடை, பாவனை, குரல், நிறம், வழுக்கை விழுமா விழாதா?, சுகர் வருமா வராதா போன்ற சங்கதிகளை ஒளித்துவைத்துக்கொண்டிருக்கிறது.

செல் தேமேயென்று இருக்கையில், பேச்சிலர் ரூம்போல கொச கொசவென்று திரிதிரியாக இருக்கும் டி.என்.ஏ. செல் இரண்டாகப் பிரிகையில், ராணுவ ஒழுங்கோடு குரோமோசோம்களாக மாறிவிடும். அந்த ஒழுங்குதான் விந்தை. குரோமோசோம்கள் என்பவை ராணுவ ஒழுங்கு உள்ள குறிப்பிட்ட வடிவம் பெற்ற டி.என்.ஏ. மூலக்கூறுகள். குர்குரே சிப்ஸைப்போல இருக்கும் இதை உள்ளே ஜூம் செய்து பார்த்தால் டி.என்.ஏ. தெரியும். ஒவ்வொரு செல்லுக்குள்ளும் லட்சக்கணக்கான அணுக்களோடும், தகவல்களோடும் டி.என்.ஏ. இருக்கிறது. லட்சக்கணக்கில் சரடு விட்டிருந்தாலும், டி.என்.ஏ.வின் மொழியில் நான்கே எழுத்துகள்தான். அடினைன் (Adenine - A), குவானைன் (Guanine - G), தைய்மின் (Thymine - T), சைட்டோசின் (Cytosine - C). இந்த நான்கும், எந்த வரிசையில் இருக்கிறது என்பதுதான் என்னை சிவராமனாகவும், உங்களை உங்களாகவும், அதாவது நம்மை நாமாக ஆக்குகிறது.

அம்மாம் பெரிய டி.என்.ஏ. இருந்தாலும், நமக்கும் ஒரு வாழைப்பழத்துக்கும் கிட்டத்தட்ட 50 சதவீத டி.என்.ஏ. ஒன்றுபோல்தான் இருக்கும். நமக்கும் மனிதக்குரங்குக்கும் 99 சதவீத டி.என்.ஏ. ஒன்றுதான்‌‌. அவ்வளவு ஏன், உங்களுக்கும் எனக்கும் 99.9 சதவீத டி.என்.ஏ. ஒன்றுதான்‌. பாக்கி 0.1 சதவீதம்தான், உங்களையும் என்னையும் வேறுபடுத்துகிறது‌. சரி, அந்த டி.என்.ஏ.வாவது சொந்தமாக நம்முடையதா என்றால் இல்லை‌. நம்மில் இருக்கும் டி.என்.ஏ.வில், பாதி அம்மாவிடம் இருந்தும், மற்றொரு பாதி அப்பாவிடம் இருந்தும் வந்தது‌. ஆனால், எந்தப் பாதி அப்பாவிடம் இருந்தும், எந்தப் பாதி அம்மாவிடம் இருந்தும் வந்தது என்பதில்தான், நமக்கும் நம் உடன் பிறந்தவர்களுக்கும் வேறுபாட்டை உண்டாக்குகிறது. அப்பொழுது, ஒருவரின் டி‌.என்.ஏ.வை பெற்றோரின் டி.என்.ஏ.வுடன் ஒப்பிட்டால், இன்னார்தான் பெற்றோர் என்பதை துல்லியமாகச் சொல்லிவிடலாம். ஆனால், எப்படி ஒப்பிடுவது?

இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல்முறைக்கு, RFLP என்று பெயர். Restriction Fragment Length Polymorphism என்று சொல்வார்கள். அதாவது, டி.என்.ஏ.வை வெட்டுகிற சில என்ஸைம்கள், அதைச் சில குறிப்பிட்ட இடங்களில்தான் வெட்டுவேன் என்று அடம்பிடிக்கும். அப்படி ஒரு டி.என்.ஏ.வை என்ஸைம்களை கொண்டு வெட்டச் சொன்னால், கூறுபோட்டு வைத்துவிடும். பின் அதனை எலெக்ட்ரோஃபாரஸிஸ் (Electrophoresis) மூலம் ஆய்வு செய்தால், வெட்டப்பட்ட பகுதிகள் அதன் எடைவாரியாக தனித்தனியே வரும்‌. அதனை சில கதிரியக்க முறைகளால் புலப்படுமாறு செய்கிறார்கள். நம் டி.என்.ஏ.வில், பாதி அம்மா, மீதி அப்பா எனில், நம் டி.என்.ஏ. வெட்டப்படும் இடங்கள், அப்பா அல்லது அம்மா டி‌.என்.ஏ. வெட்டப்படும் இடத்துடன் ஒத்துப்போக வேண்டும் அல்லவா? அப்படி ஒத்துப்போனால், பெற்றோர் மற்றும் பிள்ளைகளைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இந்த டி.என்.ஏ. சோதனைக்கு அதிக அளவு டி.என்.ஏ. தேவை‌‌‌. அவ்வளவு டி‌‌.என்.ஏ. கிடைக்கவில்லை, கொசுறுதான் கிடைத்தது என்றால், அதற்கும் ஒரு வழி உண்டு‌.

PCR. ஏதோ தெலுங்குப் பட ஹீரோ மாதிரி இருக்கும் இந்தப் பெயர், உண்மையில் மிகைப்படுத்தலில் அக்மார்க் தெலுங்கு சினிமாவை மிஞ்சிவிடும். PCR என்பது Polymerase Chain Reaction என்பதன் சுருக்கம். கிடைத்த டி.என்.ஏ.வை சுமார் மூன்று மணி நேரத்தில் பத்து லட்சம் மடங்கு பெருக்கிவிடும். இந்தப் பெருக்கலை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் நடத்துகிறார்கள். நம் டி.என்.ஏ.வில் சில பகுதிகள் தேய்ந்த ரிக்கார்டு மாதிரி. A, C, T, G ஆகியவற்றால் ஆன 2-10 மூலக்கூறு தொகுதி திரும்பத்திரும்ப வரும். அது எத்தனை முறை வருகிறது என்பதே நமக்குள் வேறுபாடு. உதாரணமாக, A-T-A-C என்கிற தொகுதி ஒரு இடத்தில் எனக்கு 12 தடவை வந்திருக்கலாம். உங்களுக்கு 17 தடவை வரலாம். இதனை STR (Short Tandem Repeats) என்பார்கள். இதுவும் அப்பா அம்மாவிடம் இருந்து பெற்றதுதானே. அப்படியிருக்கையில், இதனை ஒப்பிட்டாலும் தெரிந்துவிடும் அல்லவா. அப்படி ஒப்பிட்டுச்சொல்வது இன்னும் துல்லியம். இன்றைய டி‌‌.என்.ஏ. சோதனைகளில் பெரும்பான்மை PCR முறைதான்.

அடுத்த முன்னேற்றமாக, தந்தையைக் கண்டுபிடிக்க இந்தப் பெற்றோர் - பிள்ளை தகராறில் Y குரோமோசோமை ஒப்பிடுகிறார்கள். காரணம், Y குரோமோசோம் தந்தையிடம் மட்டுமே இருக்கும். தாய் யாரென்பது என்பது தகராறெனில், நாம் தொடக்கத்தில் பார்த்த மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ.வை ஒப்புடுகிறார்கள். கருமுட்டையை விந்தணு துளைக்கும்போது அதன் தலைப்பகுதி மட்டும்தான் கேட்பாஸ் வாங்கி உள்ளே போகும். மைட்டோகாண்ட்ரியா இருக்கும் நடுப்பகுதி துண்டிக்கப்பட்டுவிடும். ஆக, முதலில் உருவாகிற செல்லில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா தாயினுடையது எனில், அதனுள் இருக்கும் டி.என்.ஏ.வும் தாயினுடையதுதானே? மைட்டோகாண்ட்ரியாவில் இருக்கும் டி.என்.ஏ.தான் அசல் தாய்வீட்டுச் சீதனம். ஆச்சி மசாலாவெல்லாம் கிடையாது.

துல்லியமாக ஆய்வுகள் நடத்தப்பட்டால், டி.என்.ஏ. சோதனை பளிச்சென்று உண்மையை உடைத்துவிடும். உங்களின் வாய்க்குள் இருக்கும் சிறு துளி எச்சில் போதும். கச்சிதமாக, லேபும் லேபும் வைத்த மாதிரி உறுதிப்படுத்திக்கொண்டுவிடலாம். கொஞ்சம் செலவாகும், பரவாயில்லை. தவிட்டுக்குக் கொடுத்தார்களா? தத்து எடுத்தார்களா என்று மறுபேச்சின்றி தெரிந்துவிடுமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com