இறகினில் இருக்கு விஷயம்!

மருத்துவ உபகரணங்கள், அறுவை உபகரணங்களின் பரப்பில் இப்படிப்பட்ட அமைப்பை உருவாக்க முடிந்தால், அதன்மூலம் ஒரு நோயாளியிடம் இருந்து இன்னொரு நோயாளிக்கு நோய் பரவுதலைத் தடுக்க முடியும்.

கொஞ்சம் கொடூரமாக ஆரம்பிக்கிற மாதிரி இருந்தாலும் பரவாயில்லை. பண்டைய அரச தண்டனைகள் பலதும் மிகக் கொடூரமானவை. குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வரை சித்ரவதை செய்; செத்துவிட்டால் சந்தேக லிஸ்டில் ஒரு ஆள் காலி. அடுத்தவனைக் கொண்டுவா. சித்ரவதை செய். அந்தக் கருவிகளையும் முறைகளையும் பற்றிக் கேள்விப்பட்டாலே உடலெல்லாம் என்னவோ செய்யும். அதில் கழுவேற்றுதல் என்று ஒரு முறை உண்டு. தண்டனை பெற்ற ஆளை அப்படியே ஒரு கம்பத்தில் அடிவழியாகச் சொருகி விடுவார்கள். புவியீர்ப்பால் அவன் கீழிறங்க கீழிறங்க, கம்பம் அப்படியே மேல்நோக்கி துளைத்துக்கொண்டு நகரும். மோசமான தண்டனை இது. ஒரே ரத்த வ்ளார்.

சரி, சிறுவயதில் தும்பி பிடிக்க அலைந்திருக்கிறீர்களா? பசுமையான புல்வெளிகளுக்கு நடுவே தும்பியைத் துரத்திப் பிடித்தல் நல்ல பொழுதுபோக்கு. அதன் இறக்கைகளை கவனித்திருக்கிறீர்களா? ஒளி புகக்கூடிய நிறமற்ற இறக்கைகள் அவை. ஆனால் அதே நேரத்தில், நீலம் பச்சை என லேசாய் டாலடிக்கும். என்னய்யா இவன் சம்பந்தமே இல்லாமல் கழுவேற்றலையும், பூச்சி பிடித்தலையும் பற்றிப் பேசுகிறான் என்று நினைக்காதீர்கள்; இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

தட்டான், தும்பிப் பூச்சிகளின் இறகுகளில் இருக்கும் சில அமைப்புகள், பாக்டீரியாக்களை கழுவேற்றம் செய்கின்றனவாம். அவற்றின் இறகுகளின் பரப்பில் குச்சி குச்சியாய் அமைப்புகள் இருக்கின்றன. அவற்றை Nano Pillars என்று அழைக்கிறார்கள். இந்த அமைப்புகளால் அவற்றுக்கு இரண்டு நன்மைகள்.

இறகுகள் ஈரமாகாது. நீரால் இறகை நனைக்க முடியாது. சில இலைகளின் பரப்பிலும் நீர் பரவ முடியாமல் போவதற்கு இதுபோன்ற தூண்கள்தான் காரணம்.

பெரும்பாலும், ஈரம் நிறைந்த அழுக்கான இடங்களில் வாழ்கிற இந்தப் பூச்சிகளுக்கு கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். அவற்றின் பிழைப்பே இறகுகளை நம்பித்தான் என்னும்போது, இறகுகளில் எந்தவிதமான கிருமித் தொற்றையும் அனுமதிக்கக் கூடாது. இதற்கென்று கிருமிநாசினிப் பொருட்களை இறகுகளில் சுரந்தால், இறகுகள் கனமாகிவிட வாய்ப்பு உண்டு. அதனால், வேதியியலை ஆயுதமாகப் பயன்படுத்தாமல், இயற்பியலை ஆயுதமாகப் பயன்படுத்திக் குத்திக் கிழிக்கின்றன.

பாக்டீரியா, பூஞ்சை அவற்றின் சிதல்விதைகள் (Spores) இவை அனைத்தும் ஒரு பரப்பில் வந்து அமரும்போது, அவை முதலில் அந்தப் பரப்பில் பரவலாக அமைந்து, அதன்பின் செல்களின் மேலுறையைக் கரைக்கும் புரதங்களைச் சுமந்து உள்நுழையும். குச்சி குச்சியாய் பரப்பு இருக்கையில், அதன்மேல் வந்து அமரும் நுண்ணுயிரிகள் நெளிந்து வளைந்து பரப்புக்குப் போகப் பார்க்கையில், அவற்றில் மேலுறை கிழிந்து இறந்துபோகின்றன.

ஆராய்ச்சியாளர்கள், முதல்முதலில் இதை சிக்காடா (Cicadas) என்னும் சில்வண்டுகளில் கவனித்திருக்கிறார்கள். அதன் இறகிலும் இந்த அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், பாக்டீரியாக்களில் மிகப் பரவலானதும், அதிகமாகத் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடியதுமான ஸ்டஃபைலோகாக்கஸ் (Staphylococcus aureus), சுருக்கமாக S.aureus; செல்லமாக (!!) Staph என்னும் பாக்டீரியா, சில்வண்டுகளின் இந்த அரணை உடைக்கின்றன. தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்ரமாதித்தனைப்போல், ஆராய்ச்சியாளர்கள் அதே மாதிரி இருக்கும் பூச்சிகளில் ஆய்வு செய்யப்போய் சிக்கியதுதான் இந்த தட்டான்பூச்சி. அதன் இறகை ஸ்கேன் செய்து எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப் ‌என்னும் கருவியின் அடியில் வைத்துப்பார்த்தால், இந்த நானோ தூண்கள் தெரிகின்றன. ஆனால், சில்வண்டுகளில் இருந்ததுபோல் இல்லாமல், ஒல்லியாக அதேசமயம் வேறு வேறு உயரங்களில் இருந்ததனால், தட்டான்களின் இறகில் வந்து பாக்டீரியாக்கள் அமருகையில், கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுகின்றன. அதனையும் அந்த எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் வைத்துப் பார்த்து உறுதி செய்திருக்கிறார்கள். இது, பாக்டீரியாக்களின் உருவத்தைப் பொறுத்து சொல்லப்படும் வளைந்த, உருண்டை, நீளம் என எல்லாவற்றையும் குத்திக் கிழிக்கிறது. மேலும், செல் மேலுறையில் அடர்த்தியை வைத்து வேறுபடும் க்ராம்‌ பாஸிடிவ், க்ராம் நெகட்டிவ் (gram positive and gram negative) என்று பாரபட்சம்‌ பார்க்காமல் வைத்து செய்கின்றன.

இந்த விந்தையில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவெனில், இதேபோன்ற நானோ தூண்கள்‌ கொண்ட ஒரு பரப்பு அமைப்பை நம்மால் செயற்கையாக உருவாக்க முடியுமெனில்,‌ அந்தப் பரப்புகளை நுண்ணுயிரிகள் அண்டாது. பளிச்சென்று மின்னவைக்கும் 99.9 சதவீத கிருமிகளை‌ அழிக்கும் வேதிப்பொருட்கள் தேவையில்லை. இந்தக் கண்டுபிடிப்பால், முக்கியமாகப் பயனடைய இருப்பது மருத்துவத் துறைதான். உடலுக்குள் வைக்கக்கூடிய மாற்றுப் பொருட்களில் (Implants) கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். உதாரணம் - மூட்டுமாற்று அறுவை சிகிச்சை. உள்ளே வைத்தபின் தொற்று ஏற்படுமாயின், ஒட்டுமொத்த அறுவை சிகிச்சையுமே வேணாகிவிடும். ஆக, அந்தப் பொருட்களின் மேற்பரப்பில்‌ இப்படி நானோ தூண்களுடன் கூடியவாறு அமைத்தால், அவற்றில் கிருமித்தொற்றுகள் ஏற்படாது. அடுத்ததாக மருத்துவ உபகரணங்கள், அறுவை உபகரணங்களின் பரப்பில் இப்படிப்பட்ட அமைப்பை உருவாக்க முடிந்தால், அதன்மூலம் ஒரு நோயாளியிடம் இருந்து இன்னொரு நோயாளிக்கு நோய் பரவுதலைத் தடுக்க முடியும்.

சாமானியனுக்கும் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு. கழிப்பறை பேஸின்கள், பாத்திரம்‌ தேய்க்கும் இடம், எல்லோரும் தொட்டுப் புழங்குகிற பொருட்கள் போன்றவற்றை இவற்றில் செய்வதன் மூலம் சுகாதாரம் பேணலாம். ஆசைப்படுவதற்கு காசா பணமா என்று இன்னும் கொஞ்சம்‌ யோசித்தால், நான்‌ இரண்டு விஷயங்களில் கேட்பேன். ஒன்று, கைபேசிகளின் மேற்புறங்கள். இப்போது அதில் இல்லாத நுண்ணுயிரியே இருக்காது. அதில் நானோ தூண்கள் இருக்குமாறு வடிவமைத்தால் நலம். அடுத்தது ரூபாய் நோட்டு. நம் கைகளில் சிக்கி பாடாய்ப் படுகிறது. உண்மையில், நோய் சுமக்கும் காரணிகளில் (disease vectors) கொசுவையெல்லாம்கூட பின்னுக்குத் தள்ளுகிற தகுதி உண்டு. வெளில எதுவும் சாப்பிடல, திடீர்னு சளி என்பவர்கள் பஸ்ஸில் சில்லறை மாற்றியிருக்கலாம். அந்த ரூபாய்த் தாளில் இருந்து உங்களுக்கு சளி பிடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ரூபாய்த் தாள்களை‌ நானோ தூண்களுடன் செய்ய முடியுமாயின் அது மிகப்பெரும் சாதனை.

இந்த செயற்கை‌ நானோ தூண்கள் உள்ள பரப்புகளைச் செய்யும் முறையை ஏற்கெனவே வடிவமைத்துவிட்டார்கள். தேவையான தொழில்நுட்பமும்‌ நம்மிடம் இருக்கிறது. பெரிய அளவிலான உற்பத்திக்கு‌ ஏற்றவாறும் இருக்கிறது. விரைவில்‌ வரும். அதுவரை சோப் போட்டு கை‌ கழுவுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com