நிலவும் மலரும் பாடுது...

தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமாக இருந்த பாடகர் ஒருவர், இசையமைப்பதிலும் பெருவெற்றி அடைந்திருக்கிறாரா?
நிலவும் மலரும் பாடுது...

தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமாக இருந்த பாடகர் ஒருவர், இசையமைப்பதிலும் பெருவெற்றி அடைந்திருக்கிறாரா? நன்றாக யோசித்துப் பார்த்தால், டி.எம்.எஸ், எஸ்.பி.பி ஆகியோர் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ஆனால் பாடகர்களாகவே அவர்களை நாம் இன்றும் நினைவுகூர்கிறோம். அதேபோல் இசையமைப்பாளர்களாக இருக்கும் அனைவருமே பாடல்களையும் பாடியுள்ளனர். ஆனால் அவர்கள் நமக்கு இசையமைப்பாளர்களே. இங்குதான் ஏ.எம்.ராஜாவின் தனிச்சிறப்பை நாம் கவனிக்கவேண்டும். மிக வெற்றிகரமான பாடகராக வலம்வந்துகொண்டிருந்த சமயத்திலேயே, அட்டகாசமான இசையமைப்பாளராகவும் இருந்தவர் தமிழில் அவர் மட்டுமே.

பாடகராகப் புகழின் உச்சத்தில் இருந்தபோதே சோபா (தெலுங்கு), கல்யாணப்பரிசு, விடிவெள்ளி, தேன்நிலவு, ஆடிப்பெருக்கு ஆகிய படங்களுக்கு அருமையாக இசையமைத்திருப்பார் ராஜா. கல்யாணப்பரிசின் தெலுங்கு ரீமேக்கான பெல்லி காணுக படத்துக்கும் ராஜாவேதான் இசை. அப்படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட்டானதால் தெலுங்கிலும் ராஜா மிகவும் பிரபலம் அடைந்தார். அறுபதுகளின் தொடக்கத்தில் மெல்லெமெல்லப் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் சினிமாவில் இருந்து வெளியேறினார். தனது இறப்பு வரையிலுமே தனது இசைக்குழுவோடு சேர்ந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டே இருந்திருக்கிறார்.

இயக்குநர் ஸ்ரீதர் எழுதிய ‘திரும்பிப்பார்க்கிறேன்’ (கல்கி தொடர்) புத்தகத்தில், ஏ.எம் ராஜாவை எப்படி அவரது கல்யாணப்பரிசு படத்துக்கு இசையமைக்க அழைத்தார் என்பதைப்பற்றி சுவையாக எழுதியிருப்பார். மாடர்ன் தியேட்டர்ஸில் கதை இலாகாவில் ஸ்ரீதர் சிலகாலம் பணிபுரிந்தார். அப்போது சென்னையில் இருந்து ஒன்றாக ராஜாவும் ஸ்ரீதரும் சேலம் சென்றுவருவது வழக்கம். அப்போது ஸ்ரீதர் வெறும் கதை வசனகர்த்தா. ராஜா வெறும் பின்னணிப் பாடகர் (இந்த ‘வெறும்’ என்ற வார்த்தையை ஸ்ரீதரே உபயோகித்திருப்பதால் இங்கும் அதைப் பயன்படுத்தவேண்டியதாகிறது.) அப்படிப்பட்ட ரயில் பயணங்களில், ராஜா ஒருமுறை ஸ்ரீதரிடம், ‘உனக்கு நல்ல திறமை உண்டு. கண்டிப்பா ஒரு நாள் நீ டைரக்டர் ஆயிடுவே’ என்று சொல்லியிருக்கிறார். பதிலுக்கு ஸ்ரீதரும், ‘நீ மட்டும் என்ன? பிரம்மாதமா பாடுறே.. நல்ல சங்கீத ஞானம்.. கண்டிப்பா ஒரு நாள் இசையமைப்பாளர் ஆயிடுவே’ என்று சொல்கிறார். உடனே ராஜா, ‘அப்போ நீ டைரக்டர் ஆகும் முதல் படத்துக்கு என்னை மியூஸிக் டைரக்டரா போடுறதா சொல்லு’ என்று சொல்ல, உடனே ஸ்ரீதரும் அவசியம் அப்படியே செய்யப்போவதாக வாக்குறுதி கொடுக்கிறார்.

இந்தச் சம்பவம்தான் கல்யாணப் பரிசுக்கு ஏ.எம். ராஜா இசையமைப்பாளர் ஆனதற்குப் பின்னணிக் கதை. சொன்ன வாக்கை மறவாத ஸ்ரீதர், அப்போது கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி எனப் புகழின் உச்சத்தில் இருந்த இசையமைப்பாளர்களைத் தவிர்த்துவிட்டு, ராஜாவையே இசையமைப்பாளர் ஆக்கினார். ராஜாவும் காலத்தால் அழியாத பல அற்புதமான பாடல்களைக் கல்யாணப் பரிசுக்காக உருவாக்கிக்கொடுத்தார். ’வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட’, ’காதலிலே தோல்வியுற்றாள் மங்கை ஒருத்தி’, ’அக்காளுக்கு வளைகாப்பு’ முதலிய தேன் சொட்டும் பாடல்களை இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

கல்யாணப்பரிசின் தெலுங்கு ரீமேக்கான பெல்லி காணுக படத்தையும் ஸ்ரீதரே இயக்கினார். அதிலும் ராஜாவின் பாடல்கள் பிரமாத ஹிட்கள் ஆயின. இதே படம் ஹிந்திக்கும் சென்றது. ‘நஸ்ரானா’ என்ற பெயரில் ராஜ் கபூரை வைத்து ஸ்ரீதரே ஹிந்தியிலும் இயக்கினார் என்பது பெட்டிச்செய்தி. கல்யாணப்பரிசு, கன்னடத்திலும் எடுக்கப்பட்டது. மொத்தத்தில், இப்போதைய த்ரிஷ்யம் படம் இந்தியாவின் பலமொழிகளிலும் எடுக்கப்பட்டு ஹிட் ஆனதைப்போல், 1959லேயே நம் தமிழ் இயக்குநரான ஸ்ரீதர், தனது கல்யாணப்பரிசை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுத்து சூப்பர்ஹிட் ஆக்கினார்.

அப்படிப்பட்ட ஸ்ரீதர், சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் சித்ராலயா என்ற பெயரில் உருவாக்க, அந்த நிறுவனத்துக்கு முதல் படமாக தேன்நிலவு அமைந்தது. இப்போதும் இந்தப் படத்தைப் புன்னகையுடன் முழுதும் பார்க்கமுடியும். முழுக்க முழுக்க அவுட்டோரிலேயே எடுக்கப்பட்ட படம் இது. அப்போதைய காலகட்டத்தில் அது ஒரு சாதனை (ஸ்ரீதர் இப்படிப்பட்ட பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அடுத்ததாக இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம், முழுக்க முழுக்க செட் போடப்பட்டு இண்டோரிலேயே எடுக்கப்பட்ட படம். ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ஒரு முன் ஜென்ம த்ரில்லர். ‘நெஞ்சிருக்கும் வரை’, தமிழில் முதன்முறையாக யாருக்கும் மேக்கப்பே இல்லாமல் எடுக்கப்பட்ட படம். ’கலைக்கோயில்’, இசையமைப்பாளர் ஒருவரின் கதை. ’காதலிக்க நேரமில்லை’, தமிழின் முதல் வண்ண சமூகப்படம். ’சிவந்த மண்’, வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம்).

இப்படிப்பட்ட, தனது நிறுவனத்தின் முதல் படத்துக்கு ஸ்ரீதர் நாடிய இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜாவே. உண்மையில் கல்யாணப்பரிசை விடவும் இந்தப் படத்துக்கு அற்புதமாக இசையமைத்திருப்பார் ராஜா. ‘சின்னச்சின்னக் கண்ணிலே’, ’காலையும் நீயே மாலையும் நீயே’, ‘ஓஹோ எந்தன் பேபி’, ‘பாட்டு பாடவா.. பார்த்துப் பேசவா’, ‘ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன் (இந்தப் பாடலை ஏ.எம்.ராஜாவின் மனைவி ஜிக்கி பாடினார். பாடல், ராஜாவைப் பற்றியே ஜிக்கி மனமுருகப் பாடியதுபோலவே இருக்கும்), ’மலரே மலரே தெரியாதா’ ஆகிய அட்டகாசமான பாடல்கள் அடங்கிய படம் தேன்நிலவு.

இந்தப் படத்தில், ’நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது’ என்ற பாடல் இடம்பெறும். கதாநாயகன் ஜெமினி கணேசனும் நாயகி வைஜெயந்தி மாலாவும் தால் ஏரியில் படகில் செல்கையில் வரும் பாடல் இது. வெளிப்படையாக சொல்லப்போனால், இதுபோன்ற ஓர் அற்புதமான இன்னிசையை நான் கேட்டதே இல்லை என்றே சொல்வேன். பாடலின் ஒவ்வொரு துளியிலும் ஏ.எம்.ராஜா கற்றறிந்த இசை, பிரவாகமே எடுத்திருக்கும். என்றென்றும் நிலைத்து நிற்கும் தமிழ்ப்பாடல்களில் இந்தப்பாடலுக்குக் கட்டாயம் ஓர் இடம் உண்டு. ராஜாவின் இசையில், கஸல் பாடல்களின் தாக்கம் ஆங்காங்கே தெரியும். சிறுவயதில் இருந்தே ஹிந்திப்பாடல்களைப் பாடுவதில் ராஜா கைதேர்ந்தவரும் கூட. இந்தப் பாடலிலும் அவரது கஸல் தாக்கம் ஒருசில இடங்களில் மிளிரும். ராஜாவே தனது தேனினும் இனிய குரலால் இப்பாடலை அனுபவித்துப் பாடியிருப்பார். பாடலை எழுதியவர் கண்ணதாசன். ஒவ்வொரு வரியும் பிரம்மாதம்.

இந்தப் பாடலைக் காணும்போது, பாடலின் கேமரா கோணங்களை கவனித்துப் பாருங்கள். ஸ்ரீதரின் கோணங்கள் மிகவும் புகழ்பெற்றவை. படத்தின் ஒளிப்பதிவு, வின்செண்ட். ஸ்ரீதரின் பல படங்களை இவர்தான் ஒளிப்பதிவு செய்திருப்பார். ஜெயனன் வின்செண்ட்டின் தந்தை. அண்மையில் காலமான ஒளிப்பதிவு மேதை.

ஏ.எம்.ராஜா, நிஜத்தில் மிகவும் கறாரானவர். கண்டிப்பானவர். நல்லவர். வெளிப்படையானவர். திரைப்படங்களுக்கும் அவருக்கும் இருந்தது ஒருவித love-hate relatioship எனலாம். இதனாலேயே அறுபதுகளின் தொடக்கத்தில் மெல்ல மெல்லத் தன்னைத் திரைப்படங்களில் இருந்தே உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார். இதன்பின்னரும் எழுபதுகளில் ஒருசில படங்களுக்கு இசையமைத்தார். பாடினார். ஆனாலும் அதன்பின்னும் தொடர்ந்து பணியாற்றாமல், தனது இசைக்குழு உண்டு, தானுண்டு என்றே வாழ்ந்து மறைந்துவிட்டார்.

தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல, தென்னிந்தியத் திரையுலகத்திலேயே எப்போதாவது தோன்றும் ஜீனியஸ்களில் ஒருவர் ஏ.எம்.ராஜா. பாடகராக மட்டும் இல்லாமல், மிகச்சிறந்த இசையமைப்பாளராகவும் ஜொலித்த ஒரே நபர். ராஜாவின் பாடல்கள் இன்னும் பலநூறு ஆண்டுகள் கழிந்தும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு குரல் இன்றுமே அபூர்வமே.

சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
தந்தை பிரித்து பிரித்து வைப்பதினால் காதல் மாறுமா
மனதினிலே பிரிவு இல்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம் . . .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com