6. காகஸ் தா ஏ மன் மேரா..!

கடந்த ஐந்து வாரங்களாகத் தமிழ்ப்பட இசையைக் கவனித்தோம். இந்த வாரம் ஹிந்திப்பக்கம் செல்லலாம்.
6. காகஸ் தா ஏ மன் மேரா..!

கடந்த ஐந்து வாரங்களாகத் தமிழ்ப்பட இசையைக் கவனித்தோம். இந்த வாரம் ஹிந்திப்பக்கம் செல்லலாம்.

ஆபாஸ் குமார் கங்குலி – கண்ட்வா என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, ஹிந்தித் திரைப்பட உலகில் நுழைந்து, பிரம்மாண்டமான புகழைச் சம்பாதித்து, புகழின் உச்சியில் இருக்கும்போதே இறந்து போன கிஷோர் குமாரே அவர். எனக்கு மிகமிகப் பிடித்த வெகுசில மனிதர்களில் ஒருவர்.

ஐம்பதுகளில், ஹீரோ. பாடகர். அறுபதுகளில், தயாரிப்பாளர், இயக்குநர், வசனகர்த்தா.. பாடலாசிரியர்.. நடிகர், இசையமைப்பாளர்.. இத்தனை விஷயங்களையும் ஜாலியாகச் செய்த மனிதர். இவ்வளவுக்கும் மேல், மனிதருக்கு ஒன்றின் பின் ஒன்றாக நான்கு திருமணங்கள் வேறு. எக்ஸெண்ட்ரிக் என்றும் பெயரெடுத்தவர். ’கிஷோர் குமார் ஜாக்கிரதை’ என்று தனது வீட்டின் வாயிலில் எழுதி ஒட்டிவைத்தவர். அதே போல், பணமில்லையெனில், என் வீட்டுக்கே வந்து விடாதீர்கள் என்று ஒரு கறாரான கொள்கை வைத்திருந்தவர். ஸ்டுடியோ வரை சென்று, பணம் கொடுக்காததால் பாட  மறுத்து வீடு திரும்பிய நிகழ்ச்சிகள் ஏராளம். தன் மீது வழக்குத்தொடர்ந்த ஒரு தயாரிப்பாளரை, தனது வீட்டு அலமாரியில் இரண்டு மணி நேரம் பூட்டி வைத்தவர்.

இத்தனை விசித்திர குணாதிசயங்கள் இருந்தும், ஹிந்தித் திரையுலகம், கிஷோர் குமாரைத் தலையில் தூக்கி வைத்து மரியாதை செய்தது. அவர் என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டது. காரணம் அவரது கணீரென்ற கம்பீரமான குரல். அந்தக் குரலுக்கு இணை என்று யோசித்தால், ஓரளவுக்கு மலேசியா வாசுதேவனை மட்டுமே  உதாரணமாகச் சொல்லலாம். ஓரளவு மட்டும்தான்.

அக்காலத்தில் ஹிந்தித் திரையுலகில், அமைதியான, மென்மையான குரல்களே பின்னணிப் பாடல்களில் பிரபலமாக இருந்தது. மொஹம்மத் ரஃபி, முகேஷ், மஹேந்திர கபூர், ஹேமந்த் குமார் ஆகிய பாடகர்களே இவ்வகையில் மிகப்பிரபலமாக விளங்கிய காலகட்டம் அது. இவர்களின் திறமையில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இவர்கள் அனைவருமே பின்னணிப் பாடல்களில் உச்சம் காட்டி வந்தனர்.

கிஷோர் குமாரிடம் இருந்தது, இவர்கள் யாவரிடமும் இல்லாத ஒரு கணீர்க்குரல். நாற்பதுகளில், கே. எல். ஸாய்கல் என்ற பாடகரைப் பற்றி ஹிந்திப் பாடல் விரும்பிகளுக்குத் தெரிந்திருக்கலாம். ஹிந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் (நமது தியாகராஜ பாகவதரைப் போல்). தேவதாஸாக நடித்த சிலரில் ஒருவர். பிரம்மாண்டமான புகழைப் பெற்று, அகாலமாக இறந்து போனவர். இறந்ததற்குக் காரணம், மதுவில் திளைத்தது.

இந்தக் கே. எல் ஸாய்கலே, கிஷோர் குமாரின் ஆதர்சம். இவரது பாடல்களைத் திரும்பத் திரும்பப் பாடியே தனது குரலைக் கிஷோர் குமார் செம்மைப்படுத்தினார். இயற்கையாகவே இருந்த ஒரு கணீர்க்குரலை மேலும் மெருகூட்டி, இவர் பாடிய ஆரம்பப் பாடல்கள் பல, இன்றளவும் சூப்பர் ஹிட்டுகள். எஸ்பிபியைப் போலவே, எந்த வித இசைப்பயிற்சியும் இல்லாமல் திரையுலகுக்கு வந்தவர் இவர்.

பின்னணிப் பாடல்கள் பாடிப் புகழடைய வேண்டும் என்ற ஆசையில் பம்பாய் வந்த கிஷோர் குமாருக்குக் கிடைத்தது, நடிக்கும் வாய்ப்புகள் (இது மலேசியா வாசுதேவனுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமை). இவரது மூத்த சகோதரரான அஷோக் குமார் பெற்றிருந்த புகழின் காரணமாக, கிஷோர் குமாருக்கு நடிக்கும் வாய்ப்புகள் பல வந்தன. இதன் காரணமாக, ’ஷிகாரி (1946)’ என்ற படத்தில் நடித்தார். ’ஸித்தி (ziddi) என்ற படத்தில், பின்னணிப் பாடல் ஒன்றும் பாடி, தனது ஆசையைத் தீர்த்துக் கொண்டார். இதன்பின் வேகமாகப் புகழடையவும் ஆரம்பித்தார்.

அந்தக் காலகட்டத்தில்தான் ஹிந்திப் படங்களின் மிக பிஸியான நடிகராக மாறினார் கிஷோர் குமார். அவரது படங்களில், பாடல்களையும் அவரே பாடி வந்தார். அவரது நேரமின்மை காரணமாக, ஒரு படத்தில், கிஷோர் குமாருக்கு மொஹம்மது ரஃபி பின்னணி பாடிய விஷயமும் நடந்தது. ஷராரத் (1959) என்ற படத்தில் ‘அஜப் ஹை சாத் சாத் தெரி யே ஸிந்தகி’ என்ற பாடல்தான் அது.

அதே காலகட்டத்தில் கிஷோர் குமார் பாடிய பல பாடல்கள், மிகவும் அருமையாக இருக்கும். ஆஷா (1957) படத்தின் ’ஈனா மீனா டீகா, சல்தி கா நாம் காடி (1958) படத்தின் ‘எக் லட்கி பீகி பாகி ஸி’, (நடிப்பும் அவரே), ஃபன்தூஷ் (1956) படத்தின் ‘துக்(ஹி) மன் மேரே’, பேயிங் கெஸ்ட் (1957) படத்தின் ‘மானா ஜனாப்னே புகாரா நஹி(ன்)’, நௌ தோ க்யாரா (1957) படத்தின் ’ஹம் ஹெய்ன் ராஹி ப்யார் கே’, முஸாஃபிர் (1957) படத்தின் ‘முன்னா படா ப்யாரா  ஆகியவை சில உதாரணங்கள். ஹிந்தி இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மன், கிஷோர் குமாரைத் தொடர்ந்து பாட வைத்து, வாய்ப்புக்கள் கொடுத்து வந்தார். பர்மனைப் பொறுத்த வரை, கிஷோர் குமாரின் குரல், ஒரு அருட்கொடை என்றே நம்பி வந்தார். ஆகையால், தனது படங்களான ஃபன்தூஷ், பேயிங் கெஸ்ட், நௌ தோ க்யாரா ஆகிய படங்களில் சில அட்டகாசமான பாடல்களைக் கிஷோருக்கு வழங்கினார்.

இவ்வளவு பிஸியாக இருந்த கிஷோர் குமார், அறுபதுகளின் துவக்கத்தில், மெல்ல மெல்ல ஹிந்திப் பட உலகால் புறக்கணிக்கப்படத் துவங்கினார். ஆரம்ப அறுபதுகளில் இருந்து, 1969 வரை, மிகச் சில பாடல்களே அவரால் பாட முடிந்தது. அக்காலகட்டத்தில், சில படங்களிலும் நடித்தார். அவரே தயாரித்து, இயக்கி நடித்த படங்களான ஜும்ரூ (1961), தூர் ககன் கி சாவோன் மேய்ன் (1964) ஆகிய படங்கள், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன. எஸ். டி பர்மனின் மகனான ஆர். டி. பர்மனும், தனது தந்தையைப் போலவே, கிஷோர் குமாருக்கு வாய்ப்புகளை வழங்கினார். இதனாலேயே, படோசன் (1968) படத்தில் சில அருமையான பாடல்கள், கிஷோர் குமாருக்குக் கிடைத்தன. மட்டுமல்லாமல், படோசனில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தார். கதாநாயகன் சுனில் தத்தின் நண்பனாக, ஒரு இசையமைப்பாளராக அவர் கலக்கியிருப்பார். இந்தப்படம், தமிழில், ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்ற பெயரில் முதலிலேயே வெளிவந்துவிட்டது. அதன் காப்பி தான் படோசன். தங்கவேலு தமிழில் நடித்த கதாபாத்திரமே கிஷோர் குமார் ஹிந்தியில் செய்தது.

இப்படி இருக்கையில், கிஷோர் குமாரின் வழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை, 1969ல் வந்தது. ஆராதனா என்ற படத்தை, ஷக்தி சமந்தா என்றவர் இயக்கத் தொடங்கிய காலம் அது. அப்படத்தின் இசையமைப்பாளர், எஸ்.டி .பர்மன். வழக்கப்படி, இப்படத்தில் சில பாடல்களைக் கிஷோர் குமாருக்கு அவர் கொடுக்க, அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்த பாடல்களாக அவை மாறின. ‘மேரி சப்னோங்கி ரானி கப் ஆயேகி தூ’, ’கோரா காகஸ் தா யே மன் மேரா’, ‘ரூப் தெரா மஸ்தானா’ (பாதிக்கு மேல் ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட ஒரு பாடல்) என்ற அப்பாடல்கள், கேட்டவர்களைப் பைத்தியம் பிடிக்க வைத்தன. இதன்மூலம், கிஷோர் குமார், ஐம்பதுகளில் தான் இருந்த இடத்தை மீண்டும் பிடித்தார்.

அதன் பின் வரிசையாகப் பல சூப்பர் ஹிட் பாடல்கள் கிஷோருக்கு வெளிவந்தன. கிஷோர் குமாரின் பாடல்கள் இருந்தாலேயே, படம் ஓடும் என்ற நிலை உருவானது. ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் ஆகியவர்களின் ஆஸ்தானப் பாடகராக மாறினார் கிஷோர் குமார். அதன்பின் அவர் இறந்த 1987 வரையிலும் புகழின் உச்சத்தில் விளங்கினார்.

கிஷோர் குமாரின் முக்கியமான படமாக மாறிய ஆராதனா படத்தில் இருந்து ஒரு பாடலைத்தான் இந்த வாரம் கவனிக்கப்போகிறோம். ‘கோரா காகஸ் தா ஏ மன் மேரா’ என்ற அந்தப் பாடலைத் தெரியாத நபர்களே அப்படம் வந்தபோது இல்லை. இந்தியாவெங்கும் சூப்பர்ஹிட்டாக மாறிய ஆராதனாவின் பாடல்களில் இது முக்கியமான பாடல். எஸ்.டி. பர்மனின் இசைத்திறனை இந்தியாவெங்கும் கொண்டுசேர்த்த பாடல்.

பாடலுக்கான சுட்டி: 

அழகான லொகேஷன், அருமையான நடிகர்கள், நல்ல இசை, அட்டகாசமான குரல்கள் ஆகியவை ஒன்றாகக் கலந்தால் இப்படித்தான் இருக்கும். இப்பாடலில் கிஷோரின் குரலை கவனித்துப் பாருங்கள். எப்படியெல்லாம் அனாயாசமாக அவரது குரல் மேலும் கீழும் ஏறி இறங்குகிறது என்பதையும், அவரது குரலில் லேசாகத் தொண்டை கட்டியது போலவோ, தொண்டைக்குள் எதையோ வைத்துக்கொண்டு பாடுவது போலவோ தோன்றும் அந்தப் பாவனையையும் கவனித்தால்தான் அவரது பிரபல்யத்தின் காரணம் புரியும். லதா மங்கேஷ்கரின் குரலுக்கு அருமையான இணையாக இவரது குரல் விளங்கும்.

ஆராதனா படம் சென்னையில் பிரமாதமாக ஓடியது என்பது அக்கால ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் ஆகியவர்களை ஒரு ஆட்டு ஆட்டிய படம். தமிழ் ரசிகர்களை ஹிந்திப்படங்கள் பக்கம் திருப்பக் காரணமாக இருந்த சில படங்களில் முக்கியமான ஒரு படம் இது.

இப்படத்தின் வெற்றிக்குப் பின் சிவாஜி, வாணிஸ்ரீ & லதா நடித்து ‘சிவகாமியின் செல்வன்’ என்ற பெயரில் ஆராதனா தமிழில் ரீமேக்கும் செய்யப்பட்டது.

பி.கு - கிஷோர் குமார், நமது ஸ்ரீதர் இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஹிந்தி வடிவமான ‘பியார் கியே ஜா’ படத்தில், முத்துராமனின் வேடத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படமும் அட்டகாசமாக இருக்கும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com