9. பூ வாசம் புறப்படும் பெண்ணே

தமிழில் 2002-ல் இருந்து ஐந்தாறு வருடங்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த பல பாடல்களுக்கு வித்யாசாகர் சொந்தக்காரர்.
9. பூ வாசம் புறப்படும் பெண்ணே

தமிழில் 2002-ல் இருந்து ஐந்தாறு வருடங்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த பல பாடல்களுக்கு வித்யாசாகர் சொந்தக்காரர். அதற்கு முன்னரே ஜெய்ஹிந்த், கர்ணா ஆகிய படங்களின் சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் மிகுந்த பிரபலமடைந்திருந்தவர்தான் என்றாலும், மேற்சொன்ன காலகட்டங்களில் தொடர்ந்து பல தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்து, இன்றும் பிரபலமாக இருக்கும் பல பாடல்கள் இவரது முத்திரையை அழுத்தமாக நிலைநாட்டும்.

நல்ல மெலடிகள், துடிப்பான, வேகமான பாடல்கள் ஆகிய இரண்டு வகைகளிலுமே வித்யாசாகர் இலகுவாகப் பல பாடல்களை வெளியிட்டிருக்கிறார்.

ராபர்ட் ராஜசேகரன் இரட்டையர்களில் ராஜசேகரன் இயக்கிய ‘பூமணம்’ படத்தின் மூலம் 1989ல் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் வித்யாசாகர் (இப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியவர் எஸ்.ஏ. ராஜ்குமார்). அதற்கு முன்னரே இந்த இயக்குநர்களின் ‘பறவைகள் பலவிதம்’ படத்தின் பின்னணி இசையை மட்டும் அமைத்திருந்தாலும், பூமணம் படத்தில்தான் பாடல்களுக்கு முதன்முறையாக இசையமைத்திருந்தார். சென்னையின் அக்கால அறிமுக இசையமைப்பாளர்களின் வழக்கப்படியே, இவருக்கு இசை சொல்லிக்கொடுத்தவர் தன்ராஜ் மாஸ்டர். இவருடன் ரஹ்மானும் தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்றதாக இவரைப் பற்றிய தகவல்கள் மூலம் தெரிகின்றது.

இளையராஜா இசையமைத்த ’16 வயதினிலே’ படத்தில் இருந்து அவரிடம் பணியாற்றத் துவங்குகிறார் வித்யாசாகர். அது அவரது பனிரண்டாவது வயது என்றால் ஆச்சரியமாக இருக்கும் (இவரைப்போலவே ரஹ்மானும் மிகச்சிறு வயதில் இளையராஜாவிடம் பணிபுரிந்திருக்கிறார். கீபோர்டில் அக்காலகட்டத்தில் ரஹ்மான் முத்திரை பதித்தவராக இருந்ததால் அவரை அப்போது கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். டி.ராஜேந்தர் உட்பட). இப்படிப் பல வருடங்கள் பணிபுரிந்துவிட்டுத்தான் முழுமையான இசையமைப்பாளராகப் பூமணம் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.

இப்படத்துக்குப் பின் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘சீதா’ படத்துக்கு இசையமைக்கிறார் வித்யாசாகர் (இப்படத்தின் அசோசியேட் இயக்குநர் ஷங்கர் என்ற இளைஞர்! அப்படத்திலேயே இப்படித்தான் இவரது பெயர் வருகிறது.சங்கர் என்று அல்ல – ‘ஷங்கர்’ என்று). இதன்பின் 1990ல் ‘நிலா பெண்ணே’, ‘ஆத்தா நான் பாசாயிட்டேன்’ ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார். இக்காலகட்டத்தில் வித்யாசாகரின் பின்னணி இசையும் பாடல்களும் அப்படியே இளையராஜாவை நினைவுபடுத்துகின்றன. இருவருக்கும் துளிக்கூட வித்தியாசம் கண்டுபிடிக்க முடிவதில்லை. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் யாருமே இப்படங்களுக்கு இசை இளையராஜா என்றே சொல்வார்கள். ஆத்தா நான் பாசாயிட்டேன் படத்துக்குப் பின் நான்கு வருடங்களுக்குச் சரமாரியாகத் தெலுங்குப் படங்கள். கிட்டத்தட்ட முப்பது படங்கள். இந்த நான்கு வருடங்கள்தான் வித்யாசாகர் தனது தனித்தன்மையை வளர்த்திக் கொண்ட வருடங்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியும். இளையராஜாவின் சாயலிலிருந்து தனக்கே உரிய மெலடிகள், துள்ளலான பாடல்கள் என்று வித்யாசாகர் வளர்ந்த காலகட்டம் இது.

அப்போதுதான் 1994ல் அர்ஜுன், தனது ’ஜெய்ஹிந்த்’ படத்துக்காக வித்யாசாகரைத் தமிழுக்கு மீண்டும் அழைத்து வருகிறார். ‘முத்தம் தர ஏத்த எடம்’, ‘கண்ணா என் சேலைக்குள்ள’, ’போதையேறிப் போச்சு’, ’ஊத்தட்டுமா ஊத்தட்டுமா’, ’தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்’ ஆகிய ஐந்து பாடல்களுமே சூப்பர்ஹிட் ஆயின. என் பள்ளி நாட்களில் வெளியான பாடல்கள். இசைத்தட்டு நூலகத்தில் வேலை செய்து வந்ததால் இப்பாடல்கள் துல்லியமாக இப்போதும் நினைவு உள்ளன. இப்பாடல்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் இசைக்கருவிகளிலும், இசையிலும் ஒருவித ஹிந்தி சாயல் இருக்கும். கேட்பதற்கு அட்டகாசமாகவும் இருக்கும்.

ஜெய்ஹிந்துக்கு அடுத்த படம் ‘கர்ணா’. இப்போது வரை பலரது விருப்பத்திற்குரிய பாடலான ‘மலரே…மௌனமா’ பாடல் இப்படத்தில்தான் இடம்பெற்றது. இதிலும் ‘ஏ ஷப்பா’ பாடல் ஹிந்திச் சாயல். ’கண்ணிலே கண்ணிலே சன் டிவி’, ’ஹல்லோ மிஸ் செல்லம்மா’ (இதில் கவுண்டமணியின் வசனங்கள் புகழ் பெற்றவை), ’புத்தம் புது தேசம்’ ஆகிய பாடல்கள் ஹிட் ஆயின. ’ஆல மரமுறங்க’ என்ற குட்டிப் பாடலும் உண்டு.

இதன் பிறகு ஒருசில தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்த வித்யாசாகர், முழுமூச்சாகத் தமிழில் இறங்கினார். ‘வில்லாதி வில்லன்’, ஆயுத பூஜை’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’, ’முறைமாமன்’, ‘பசும்பொன்’, ஆகிய படங்கள் வெளியாகின்றன. இவற்றிலும் இப்போது வரை மறக்கமுடியாத பாடல்கள் உண்டு. ‘தாமரப் பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணிக்கும் சண்டையே வந்ததில்ல’ பாடல் நினைவிருக்கிறதா? எந்தப் படம் என்று யோசித்துப் பாருங்கள். வில்லாதி வில்லன் பாடல்களில் ‘நக்மடோரியல் டச்’ என்று இயக்கிய சத்யராஜே வர்ணிக்கும் அளவு துள்ளலான பாடல்கள் இடம்பெற்றன.

இப்படங்களுக்குப் பிறகுதான் வித்யாசாகர் மலையாளத்தில் நுழைகிறார். முதல் படம் ‘அழகிய ராவணன்’. முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள மாநில விருது கிடைக்கிறது. அதற்குப் பின் ‘இந்திரப்ரஸ்தம்’ படத்துக்கு இசைமைத்துவிட்டு மறுபடியும் தெலுங்குப் பக்கமும் தமிழ்ப்பக்கமும் வந்துவிடுகிறார் வித்யாசாகர். வரிசையாகப் பல தமிழ்ப்படங்கள் (ப்ரியம், கோயமுத்தூர் மாப்பிள்ளை, சுபாஷ், செங்கோட்டை, டாட்டா பிர்லா, முஸ்தஃபா, நேதாஜி). இவற்றுக்குப் பின்னர் மறுபடியும் மூன்றாவது மலையாளப்படமாக ’கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து’. இதிலும் விருது (Kerala Film Critics Award). பின்னர் வரிசையாகப் பல தமிழ், தெலுங்கு & மலையாளப் படங்கள். இவற்றில் மலையாளத்தில் மட்டும் மறுபடியும் கேரள மாநில விருது (பிரணயவர்ணங்கள், நிறம், தேவதூதன், சந்த்ரனுதிக்குந்ந திக்கில்).

பின்னர்தான் தமிழில் ’தில்’ வெளியாகிறது. தரணி. உடனடியாகப் ‘பூவெல்லாம் உன் வாசம்’. பின்னர் ’வில்லன்’, ‘ரன்’, ‘தூள்’, ‘அன்பே சிவம்’, ‘கில்லி’ ஆகிய படங்கள். இடையே பலப்பல மலையாளப்படங்கள். இந்தக் காலகட்டத்திலெல்லாம் வித்யாசாகர் என்றால் தெரியாத ஆளே தமிழகத்தில் இல்லை என்ற அளவு வித்யாசாகர் பிரபலம். ’அப்படிப் போடு’ பாடல் இன்றும் பெங்களூரிலும் வட இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல பப்களில் போடப்படுகிறது. இந்தியா முழுக்கப் பிரபலம் அடைந்த பாடல் அது.

இந்தக் காலகட்டத்துக்குப் பின் வித்யாசாகர் ஏராளமான படங்களுக்கு இன்று வரை இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.

வித்யாசாகரின் தனித்தன்மை என்ன? ஏன் அவரது பாடல்கள் இன்றும் மனதுக்கு நெருங்கியவையாக இருக்கின்றன? இதை யோசித்தால், அவரது பாடல்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் இசைக்கருவிகள், சற்றே வடநாட்டுப் பாணியில் இருக்கின்றன. அதேசமயம், அவற்றை வைத்துக்கொண்டு அவர் அமைக்கும் இசையோ, ஒன்று – மிகவும் நுட்பமான, மனதைக் குழைத்து இழுக்கும் அற்புதமான மெலடியாக இருக்கிறது; அல்லது, கேட்டதும் எழுந்து ஆடவைக்கும் மிகத்துடிப்பான இசையாக இருக்கிறது. ‘இத்தனூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா’, ‘தேரடி வீதியில் தேவதை வந்தா’, ‘காதல் பிசாசு’, ’மச்சான் மீச வீச்சருவா’, ’சீச்சீச்சீ என்ன பழக்கமிது’, ‘எல மச்சி மச்சி’, ’தாம் தக்க தீம்தக்க தையத்தக்க கூத்து’, ’வாடியம்மா ஜக்கம்மா’, ‘அர்ஜுனரு வில்லு’, ’கொக்கர கொக்கரக்கோ’ போன்ற பாடல்களை இப்போது கேட்டாலும் எவ்வளவு உற்சாகம் பீறிடுகிறது என்று யோசித்துப் பாருங்கள். அதுவே அவரது அட்டகாசமான மெலடிகளில் சில பாடல்களான ‘ஆலங்குயில் கூவும் ரயில்’, ’ஒரு தேதி பார்த்தால்’, ’பூத்திருக்கும் வனமே வனமே’, ராதை மனதில்’, ‘டிங் டாங் கோயில் மணி’, ’பொய் சொல்லக்கூடாது காதலி’, ’அன்பே அன்பே நீ என் பிள்ளை’, ’காற்றின் மொழி’, ’நீ காற்று நான் மரம்’, ’அழகூரில் பூத்தவளே’, ’கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்’, ‘சொல்லித்தரவா’ போன்ற பாடல்களில் உள்ள அற்புதமான இசையுமே மனதை நெகிழவே வைக்கும்.

இவற்றைக் கேட்டாலே வித்யாசாகர் என்று சொல்லிவிடமுடியும். காரணம் அவரது பாடல்களில் தொடர்ந்து அவர் உபயோகிக்கும் இசைக்கருவிகள், கையாளும் ராகங்கள், அவற்றின் மூலம் வெளிக்கொணரும் தனிப்பட்ட முத்திரை ஆகியன. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் இந்த மூன்றும் இருந்தாலும், தொடர்ந்து பல வருடங்கள் அப்படி இயங்குவது சாத்தியமில்லாதது. வித்யாசாகர் அமைதியாக அதனைச் செய்துகொண்டிருக்கிறார் (பெரும்பாலும் மலையாளத்தில். அவரது மலையாளப் பாடல்கள் குறித்துத் தனிக்கட்டுரையே எழுதமுடியும்).

வித்யாசாகர் இசையமைத்த ‘அன்பே சிவம்’ படத்தின் பாடல்களை மறக்கவே முடியாது. அதிலும் குறிப்பாக ‘யார் யார் சிவம்’ பாடல்.

அப்படத்தில் ஒரு காட்சி. புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனது கட்டிடத்தின் சுவற்றில் மிகப்பெரிய ஓவியம் ஒன்று அமையவேண்டும் என்று உழைப்பாளர்களை சுரண்டிக் கொழுத்த பெருமுதலாளி ஒருவர் ஆசைப்படுகிறார். மகளின் தோழர் என்பதால் ஒரு ஓவியரை வரச்சொல்லி ஓவியம் தீட்டச் சொல்கிறார். ஆஷாடபூதியாக விளங்கும் அவரது இயல்புக்கேற்ப, சிவபெருமானின் ஓவியத்தைத் தீட்டுகிறான் ஓவியன். ஆனால் அதனுள் கார்ல் மார்க்ஸும் கம்யூனிஸமும் தொள்ளாயிரத்துப்பத்தும் ஒளிந்திருக்கின்றன. அப்போதுதான் முதலாளிக்கு ஓவியன் ஒரு பொதுவுடைமைவாதி என்பது புரிகிறது.

இத்தகைய சிச்சுவேஷன் பொதுவாக எப்படி இருக்கும்? ஆனால் அதனுள்ளேயே ஓவியனுக்கும், பெருமுதலாளியின் மகளுக்கும் இயல்பாக ஏற்படும் காதலை நுழைத்து, இன்று வரை பலருக்கும் நினைவிருக்கும் ஒரு பாடலாக மாற்றியிருப்பார் திரைக்கதையமைத்த கமல்ஹாஸன். இயக்கிய சுந்தர் சியின் கருத்துகளும் இதில் இடம்பெற்றிருக்கலாம் என்றபோதிலும், கமல்ஹாஸனே இதில் தனித்துத் தெரிகிறார்.

மிகச்சில பாடல்களே கேட்டாலும் சரி, பார்த்தாலும் சரி – நன்றாக உருவாக்கப்பட்டிருக்கும். இது அப்படி ஒரு பாடல். இதன் காட்சிகள், அதனூடே இருவருக்கும் பெருகும் காதல், காதலுக்கேற்ற இசை, குரல்கள், பாடல் வரிகள் என்று சகல துறைகளிலும் உச்சம் பெற்ற பாடல் இது. வித்யாசாகரின் பாடல்களில் இப்பாடலை என்னால் மறக்கவே இயலாது.

பாடல் வெளியானபோது இசைத்தகட்டில் இது இரண்டு முறை இடம்பெற்றிருந்தது. ஒரு வெர்ஷனைப் பாடியவர் ஸ்ரீராம் பார்த்தசாரதி. இன்னொரு வெர்ஷன் விஜய் ப்ரகாஷ் பாடியது. இவற்றில் விஜய் ப்ரகாஷ் பாடிய பாடலே திரையில் இடம்பெற்றது. இரண்டுமே அட்டகாசமாக இருந்தாலும், ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடிய பாடலில் கர்நாடக இசைத்தொனி சற்றே அதிகமாக இருக்கும். விஜய் ப்ரகாஷ் பாடிய பாடல் அப்படி இல்லாமல், குட்டிக்குட்டி இடங்களில் மிகச்சிறப்பாக அவரது குரல் விளையாடியிருக்கும். எனவே இரண்டில் இதுவே சிறந்தது. அதுதான் படத்திலும் இருக்கும். பாடலை விஜய் ப்ரகாஷுடன் பாடியவர் சாத்னா சர்கம். அவரும் அருமையாகப் பாடியிருப்பார்.

பாடலை எழுதிய வைரமுத்து பிய்த்து உதறியிருப்பார். பாடல் வரிகள் உண்மையில் பிரம்மாதம். அனுபவித்து ரசிக்கலாம்.

பாடலை அவசியம் சில முறை கேளுங்கள்.

---

பூ வாசம் புறப்படும் பெண்ணே,

நான் பூ வரைந்தால்,

தீ வந்து விரல் சுடும் கண்ணே,

நான் தீ வரைந்தால்,

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்,

உயிருள்ள நானோ என்னாகுவேன்?

உயிர் வாங்கிடும் ஒவியம் நீயடி

புள்ளி சேர்ந்து, புள்ளி சேர்ந்து ஒவியம்,

உள்ளம் சேர்ந்து, உள்ளம் சேர்ந்து காவியம்,

கோடு கூட ஒவியத்தின் பாகமே,

ஊடல் கூட காதல் என்று ஆகுமே,

ஒரு வானம் வரைய நீல வண்ணம்,

நம் காதல் வரைய என்ன வண்ணம்?

என் வெட்கத்தின் நிறம் தொட்டு,

விரலென்னும் கோல் கொண்டு,

நம் காதல் வரைவோமே, வா,

ஒவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?

உற்றுப்பார்க்கும் ஆணின் கண்ணில் உள்ளது,

பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?

ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது,

நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்,

பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்,

மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல,

மடியொடு விழுந்தாயே, வா....!

பாடலின் சுட்டி: -  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com