16. இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம்(3)

ரஹ்மானின் சூஃபி பாடல்கள் பற்றிக் கடந்த இரண்டு வாரங்களாகக் கவனித்துக் கொண்டு வருகிறோம். இவ்வாரமும் தொடர்வோம்.
16. இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம்(3)

ரஹ்மானின் சூஃபி பாடல்கள் பற்றிக் கடந்த இரண்டு வாரங்களாகக் கவனித்துக் கொண்டு வருகிறோம். இவ்வாரமும் தொடர்வோம்.

2004ல், ‘Meenaxi: Tale of Three Cities’ என்ற பெயரில் ரஹ்மானின் மிகச்சிறப்பான ஆல்பம் ஒன்று வெளியானது. பிரபல ஓவியர் எம்.எஃப். ஹுஸைன் எழுதி இயக்கியிருந்த படம் அது. கான் திரைவிழாவில் திரையிடப்பட்ட படம். விமர்சக ரீதியிலும் நல்ல பெயர் வாங்கியிருந்த படம். அந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் பலருக்கும் நினைவிருக்கும். அவற்றில் இரண்டு பாடல்கள், தமிழில் ‘சக்கரகட்டி’ படத்தில் மறுபடி உபயோகப்படுத்தப்பட்டன. இந்தப் படத்தின் பாடல்களுக்காக, எம்.எஃப்.ஹுஸைன், ரஹ்மானை ப்ராக் நகருக்கு அனுப்பினார்.

இந்தப் படத்தில், ‘நூர் உன் அலா நூர்’ என்ற ஒரு பாடலை எம்.எஃப். ஹுஸைன் எழுதினார். இது ரஹ்மான் இசையமைத்த இரண்டாவது சூஃபி கவ்வாலி. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியானதுமே மிகப்பெரிய பிரச்னை வெடித்தது. இந்தப் பாடலில், குரானில் இருந்து எடுத்தாளப்பட்டு சற்றே மாற்றப்பட்ட வரிகள் இருந்ததுதான் காரணம். இதனால் இந்தியா முழுதும் முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. எம்.எஃப். ஹுஸைனின் பதில்கள் பயனளிக்கவில்லை. இதனால் படத்தை எம்.எஃப்.ஹுஸைன் திரையரங்குகளில் இருந்து அகற்ற நேரிட்டது. குரானில் இருந்து எடுத்த வரிகளை, தபுவை வர்ணிக்கும் வகையில் ஹுஸைன் மாற்றியமைத்ததே காரணம்.

அந்த நூர் உல் அலா நூர் பாடலை சற்றே கவனிப்போம்.

பாடலைப் பாடியவர்கள், முர்தஸா கானும் காதிர் கானும். நாம் சென்ற கட்டுரையில் கவனித்த குலாம் முஸ்தஃபா கானின் புதல்வர்கள். ஃபிஸா படத்தின் ‘பியா ஹாஜி அலி’ பாடலைப் பாடியவர்கள். இன்னும் கூட ரஹ்மானின் சில பாடல்களைப் பாடியுள்ளனர்.

’நாலாபக்கமும், அத்தனை திசைகளிலும்

ஒளி நீக்கமற நிறைந்திருக்கிறது

தெய்வீகத்தின் ஆற்றல் நிறைந்த இந்த ராஜகம்பீரமான ஒளி

இருட்டைத் துளைத்து அகற்றுகிறது

நீ அங்கே இருக்கிறாய்; இங்கே இருக்கிறாய்

எப்பக்கமும் எல்லா இடங்களிலும் நீயே

இந்த ஒளி, என்னவொரு அருமையான ஒளி!

உன்னையல்லால் வேறு யார் இப்படிப்பட்ட ஒளியில் திகழ இயலும்?

இருளினிடம் நான் வினவினேன்

பதிலே வரவில்லை. இருள் பேசாமலேயே இருந்துவிட்டது

தீபத்திடம் கேட்டேன்..ஆனால் அது வெட்கத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டது

பறவை ஒன்றிடம், இந்தப் பயணம் எங்கே என்று கேட்டேன்

அமைதியிடம், குரல் எங்கிருந்து வருகிறது என்று கேட்டேன்

பூக்களிடமும், இலைகளிடமும், வண்ணங்களிடமும் இருந்து ஒரு குரல் கேட்டது

”நாலாபக்கமும், அத்தனை திசைகளிலும்

ஒளி நீக்கமற நிறைந்திருக்கிறது”

திரைகளை அகற்றியதும்

உனது கம்பீரமான அழகைக் கண்டேன்

ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து

உனது இருப்பிடத்தை அடைந்தேன்

எனது பார்வையை உயர்த்தி

உனது அழகைக் கண்டுகொண்டேன்

தேனீக்கள் சதா எழுப்பும் ஒலியில்

வளையல்கள் எழுப்பும் சிணுங்கல் ஒலியில்

காதலர்களின் இதயம் எழுப்பும் துடிப்பான ஒலியில்

பிரிந்துவிட்ட காதலர்களின் கண்களில்

ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு இனிமையான இசையிலும்

ஒவ்வொரு துடிப்பிலும், ஒவ்வொரு இசையிலும்

நீ மட்டுமே.. உன்னையல்லால் வேறு யாரும் இல்லை

நாலாபக்கமும், அத்தனை திசைகளிலும்

ஒளி நீக்கமற நிறைந்திருக்கிறது

இதயத்தின் மோகம் கலந்த திகைப்பு நீயே

மனதின் புரிந்துகொள்ளமுடியாத குழப்பங்கள் நீயேதான்

எல்லாக் கேள்விகளையும் தூரமாக எடுத்துச்சென்றுவிடு; எதையும் கேட்காதே

ஒருபோதும் எதையும் கேட்டுவிடாதே

வாழ்க்கை எப்போதுமே மர்மம் நிறைந்த புதிராகவே இருக்கிறது; இருந்துவந்துள்ளது

எப்போதும் அப்படியே இருக்கின்றது

உனக்கு அந்தப் புதிருக்கு விடை தெரிந்துவிட்டால் என்னாகும்?

இதுவரை யார் அந்த மர்மத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்”

சிலர் அதனைக் காதல் என்பர்

சிலரோ, பக்தி என்பர்

அதனை மனப்பிறழ்வு என்றோ பைத்தியக்காரத்தனம் என்றோ எப்படி அழைத்தாலும்

உன் மேல் உண்டான காதல் எனது மட்டுமே

நாலாபக்கமும், அத்தனை திசைகளிலும்

ஒளி நீக்கமற நிறைந்திருக்கிறது’

வழக்கப்படி இப்பாடலிலும் சூஃபித்தன்மை நிறைந்திருப்பதைக் கவனியுங்கள்.

இந்தப் பாடலை நிதானமாகக் கேட்டுப்பாருங்கள். இது ரஹ்மானின் அவ்வளவாகப் புகழ்பெறாத கவ்வாலி. பெரும்பாலும் ரஹ்மானின் கவ்வாலிகள் என்றாலே பியா ஹாஜி அலி, கரீப் நவாஸ், அர்ஸியா(ன்), குன் ஃபயா குன் ஆகிய பாடல்களே பலருக்கும் நினைவு வரும். ஆனால் இன்னும் சில கவ்வாலிகளும் உண்டு. இப்பாடல், சுபாஷ் சந்திர போஸ் படத்தில் வரும் Zikr, Al Risalah படத்தில் வரும் மர்ஹபா யா முஸ்தஃபா ஆகியவை இவற்றில் முக்கியமானவை. ஆனால் பெரும்பாலோரால் கேட்கப்படாதவை.

ரஹ்மானின் சூஃபித் தொடர்பு எப்படிப்பட்டது?

ரஹ்மானின் குடும்பத்துக்கும், சூஃபி ஞானியான கரீமுல்லா ஷா காத்ரிக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்தது. திலீப்பின் தந்தை சேகர் இறந்த பின்னர், திபீப்பின் தாய் கஸ்தூரி, தர்ஹாக்களுக்கு அவ்வப்போது சென்று வந்துகொண்டிருந்த சமயம். பரணி ஸ்டுடியோவில் உதவி எஞ்சினியராக இருந்த அமீர் என்பவர்தான் கரீமுல்லா ஷா காத்ரியிடம் முதன்முதலாகக் கஸ்தூரியை அழைத்துச்செல்கிறார். ’அவரது குரலையும், அவர் உர்தூவில் பேசும் சொற்பொழிவுகளையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றும் – எதுவுமே புரியாவிட்டாலும். அவரது குரலைக் கேட்கும்போதெல்லாம், துயரங்கள் கரைந்து ஓடிவிடுவது போலவே தோன்றும்’ என்பது ரஹ்மானின் தாயின் கூற்று.

ஒரு சில வருடங்களில் கரீமுல்லா ஷா காத்ரி இறந்துவிட, முஹம்மது ஹஸன் ஷா காத்ரி என்ற இன்னொரு துறவி ரஹ்மானின் குடும்பத்துக்கு அறிமுகமாகிறார். இவர் தமிழில் பேசக்கூடியவர். இஸ்லாம் பற்றிய நல்ல புரிதலை இந்தத் துறவி மூலமாகவே ரஹ்மானின் குடும்பம் பெற்றது.

கோவளத்தில் ஒரு தர்ஹாவில்தான் கஸ்தூரி இவரை முதன்முதலில் பார்க்கிறார். அன்று இரவு தர்ஹாவிலேயே கஸ்தூரி தங்க, அங்கே தங்கக்கூடாது. அதனால் பிரச்னைகள் ஏற்படும் என்று ஒரு குரல் கேட்கிறது. கோபமடையும் கஸ்தூரி, அங்கேயே தூங்கி விடுகிறார். ஆனால் நள்ளிரவில், ஏதோ காட்டுமிருகம் ஒன்று தப்பி அங்கே வந்துவிட்டதாக அனைவரும் பதற, அப்போது அதே குரல், கவலைப்படவேண்டாம் என்றும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய்த் தூங்குமாறும் கஸ்தூரிக்கு ஆறுதல் சொல்கிறது. விடிகாலையில் சீக்கிரம் எழுந்துவிட்ட கஸ்தூரி, அதே இடத்தில் முஹம்மது ஹஸன் ஷா காத்ரி அமர்ந்திருப்பதைக் கவனிக்கிறார். ‘அன்றில் இருந்து அவரை வணங்கத் துவங்கினேன்’ என்று ரஹ்மானின் தாய் சொல்லியிருக்கிறார்.

அதன்பின்னர், கஸ்தூரி, இஸ்லாத்துக்கு மதம் மாற முடிவெடுக்கிறார். கரீமா என்ற பெயரை முஹம்மது ஷா காத்ரி கஸ்தூரிக்கு வைக்கிறார். திலீப்புக்கு, அப்துல், ரஹ்மான் அல்லது அப்துல் ரஹீம் என்ற பெயரை, ஒரு இந்து ஜோதிடர் பரிந்துரைக்கிறார். அதில் ரஹ்மான் என்ற பெயர் பிடித்துவிட, அதையே திலீப் தேர்ந்தெடுக்கிறார். அதன்பின் கரீமாவுக்கு, அல்லா ரக்கா என்ற பெயர் மனதில் தோன்ற (அல்லாவால் ரட்சிக்கப்படுபவன் என்று பொருள்), ரஹ்மான், ஏ.ஆர் ரஹ்மானாக மாறுகிறார்.

இந்த மாற்றம் தீடீரென்று நிகழ்ந்தது. ரோஜா படத்தின் கேஸெட்களில் எல்லாம் திலீப் குமார் என்ற பெயர்தான் அச்சிடப்பட்டிருந்தது. ஒரு நாள் திடீரென்று திலீப் ரஹ்மானாக மாறிவிட, மணிரத்னத்திடம் தயங்கித் தயங்கி ரஹ்மான் இதைச் சொல்கிறார். திகைப்படைந்த மணி ரத்னம், சற்று யோசித்தபின்னர், ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டிருந்த அத்தனை கேஸெட் கவர்களையெல்லாம் மாற்றி, மறுபடியும் ஏ.ஆர். ரஹ்மான் என்ற பெயரை அச்சிட்டார் என்பது ரோஜா பற்றிய துணுக்கு.

’இஸ்லாத்தில் நான் கண்டுகொண்டது – நீங்கள் பணக்காரராகவோ ஏழையாகவோ கொலைகாரராகவோ அழகில்லாதவராகவோ மன்னனாகவோ சேவகனாகவோ எப்படி இருந்தாலும் சரி – இறைவன் அளவற்ற அருளை அனைவர் மீதும் பொழிகிறார். அதை எப்படிப் பெறவேண்டும் என்பதுமட்டுமே நம் கையில் உள்ளது’ என்பது ரஹ்மானின் கூற்று. சூஃபியிஸம் பற்றிய நல்ல புரிதலை இப்படியாகப் படிப்படியாக ரஹ்மான் வளர்த்துக்கொண்டார். எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல், எதையும் எதிர்பார்க்காமல், நமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இறைவன் கையில் கொடுத்துவிட்டால், அதன்மூலம் அவன் நம்மைப் பத்திரமாக எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்ப்பான் - இதுதான் சூஃபியிஸம் அவருக்கு அளித்த பெரிய புரிதல் என்று ரஹ்மான் சொல்லியிருக்கிறார்.

வரும் வாரம் ரஹ்மானின் பிற சூஃபிப்பாடல்களையும் கவனிக்கலாம்.

பாடலின் சுட்டி : 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com