14. அசுரத்தனமான சிக்ஸர்களை குவிப்பதில் ரோஹித் சர்மாவுக்கு நிகர் ரோஹித் சர்மாதான்!

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய மாறுதல்களை உண்டாக்கிய வருடம் 2013.
14. அசுரத்தனமான சிக்ஸர்களை குவிப்பதில் ரோஹித் சர்மாவுக்கு நிகர் ரோஹித் சர்மாதான்!

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய மாறுதல்களை உண்டாக்கிய வருடம் 2013. இந்த வருடத்தில் இருந்துதான் ரோஹித் சர்மா இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இந்திய அணியின் துவக்க இணை எப்போதும் வலது கை ஆட்டக்காரர் ஒருவரையும், இடது கை ஆட்டக்காரர் ஒருவரையும் கொண்டிருக்கும். ஷீகர் தவான் ஒருபுறம் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலமாக இந்திய அணியில் சிறப்பானதொரு இடத்தை பிடித்துவிட, மறுமுனையில் ரோஹித் சர்மாவை களமிறக்கலாம் என்ற முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்திருந்தது.

2003க்கு முன்பாக இந்திய அணிக்காக 86 போட்டிகளில் விளையாடியிருந்த ரோஹித் சர்மா மூன்று முறை மட்டுமே துவக்க நிலை ஆட்டக்காரராக இறங்கியிருந்தார். அதிலும் சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. அதிகபட்சமாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 29 ரன்களை அடித்திருந்தார். மைய ஆட்டாக்காரராக மட்டுமே பெரும்பாலான அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மாவை துவக்கத்திலேயே களமிறக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு வெகு சிறப்பானது.

‘துவக்க ஆட்டக்காரனாக களமிறங்கியது எனது பேட்டிங் திறனை வெகுவாக மேம்படுத்திக் கொள்ள வழிவகுத்தது. களத்தில் விளையாட நிறைய நேரத்தையும், பொறுப்புணர்வையும் ஒருங்கே வழங்கியது. இந்தியாவுக்காக துவக்க ஆட்டக்காரனாக இறங்குவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. பள்ளி கல்லூரியில் இறங்கியிருக்கிறேன் என்றாலும், இந்தியாவுக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பதை கற்பனைக் கூட செய்ததில்லை. ஆனால், அணி நிர்வாகமும், சக விளையாட்டாளர்களும், புதிய பந்தைய கையாளுவதற்கான சாதூர்யம் என்னிடம் இருப்பதாக நம்பினார்கள். என் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருந்தார்கள். அவ்வாறு உங்கள் மீது ஒருவர் நம்பிக்கை வைக்கும்போது அது உங்களுக்கு கூடுதல் மனவுறுதியையும் அளிக்கிறது’. என்று கூறினார் ரோஹித்.

ரோஹித் சர்மா துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியதில் இருந்து இந்தியா பல வெற்றிகளை குவித்தது. நிலைத்த உறுதியான துவக்கத்தை பல போட்டிகளில் ரோஹித் சர்மா உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல அவரது சிறப்பான ஆட்டம் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி இருந்தது. இந்திய அணிக்கு ஏற்ற ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா மெல்ல உருவெடுத்திருந்தார். முதல் 86 போட்டிகளில், பல்வேறு நெருக்கடிகளை கடந்து வெறும் 1,978 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்த ரோஹித், துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிறகான 92 போட்டிகளில் 4583 ரன்களை குவித்திருக்கிறார். அதில் மூன்று இரட்டை சதங்களும் அடக்கம்.

ரோஹித் சர்மா தனது முதலாவது இரட்டை சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்தார். 2013-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற போட்டித் தொடரின் 7-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தனது முதல் இரட்டை சதத்தை கடந்தார். 16 சிக்ஸர்களை அப்போட்டியில் கடந்ததன் மூலமாக, ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையும் ரோஹித் சர்மாவின் வசம் வந்து சேர்ந்தது. முன்னதாக, இந்த போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 141 ரன்களை குவித்து அணியை வெற்றிப் பெற செய்தார்.

பொதுவாக தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசும்போது ரோஹித் சர்மா, ‘2013 முன்பு நான் விளையாடிய ஆட்டத்தை மறந்து விடுங்கள். நான் எனது ஆட்டத் திறனுக்காக கடுமையாக உழைத்து வருகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை 2013-ல் இருந்துதான் துவங்குகிறது. அதனால், அதன் பிறகான எனது வாழ்க்கை குறித்து மட்டும் பேசுங்கள்’ என்றே சொல்வது வழக்கம். 2013க்கும் பிறகு, ரோஹித் சர்மா பல சாதனைகளை செய்துள்ளார்.

2015 உலக கோப்பை கால் இறுதியில் வங்கதேச அணிக்கு எதிராக, 137 ரன்கள், அதே வருடத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 150 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2016 ஜனவரியில் நிகழ்ந்த போட்டித் தொடரில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்தது, அதேத் தொடரின் இறுதிப் போட்டியில் 99 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தது, அனைத்தையும் விட இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசியது என அவரது ஒவ்வொரு சிறந்த ஆட்டம் வெளிப்பட்ட போட்டிகளும் இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களாகவே இருந்திருக்கின்றன.

டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஏழு வருடங்கள் காத்திருந்த ரோஹித் சர்மா, தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் சகாப்தத்தை நிறைவு செய்யும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட அந்த டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக, களமிறங்கிய ரோஹித் சர்மா 177 ரன்களை குவித்தார். நீண்ட வருடங்களாக தன்னால் பங்கேற்க முடியாமலிருந்த டெஸ்ட் போட்டியை வெற்றி கொள்ளும் முனைப்பில் அவரது ஆட்டம் நிதானமாகவும், பொறுப்புடனும் இருந்தது.

அடுத்த டெஸ்ட் போட்டியிலும் உடனடியாக சதம் அடித்து, இந்திய அணியில் மொஹமத் அசாரூதின் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோருக்கு அடுத்ததாக இரண்டு சதங்களை தொடர்ச்சியாக இரண்டு போட்டியில் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவும் இணைந்துக் கொண்டார். அசாரூதினும், கங்குலியும் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் சதங்களை அறிமுக தொடரில் அடித்தவர்கள். ரோஹித் சர்மாவின் சாதனை அவர்களுக்கு நிகரானதாக வைத்துப் போற்றப்பட்டது. தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த வாய்ப்பொன்றை மிக இறுக்கமாக பற்றிக்கொள்ளும் வெறி ரோஹித் சர்மாவினிடத்தில் இருந்ததை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ரோஹித் சர்மா 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று முறை சதமடித்திருக்கிறார். அதில் ஒரு சதம் வெறும் 35 பந்துகளில் அடிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லரும் 35 பந்துகளில் சதமடித்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி என மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் மூன்று சதங்களை உலகளவில் கடந்த ஒரே கிரிக்கெட் விளையாட்டாளர் என்கின்ற சாதனையும் ரோஹித் சர்மாவிடம் இருக்கிறது. அதே போல, இருபது ஓவர் போட்டியில் அதிக முறை ரன் எதுவும் இல்லாமல் அவுட் ஆன இந்திய விளையாட்டு வீரர் என்கின்ற எதிர்மறையான சாதனைக்கும் ரோஹித் சர்மா சொந்தக்காரர்.

பொதுவாக, இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோஹித் சர்மா போன்ற உறுதியான ஷாட்டுகளை விளாசக் கூடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் கிடைப்பது அபூர்வம்தான். அவரது ஷாட்டுகளில் சிறு பிசகும் இருக்காது. ஒவ்வொரு ஷாட்டும் கச்சிதமாக முழுமையாக இருக்கும். மிட் ஆனில் அவர் அடிக்கின்ற சிக்ஸர்கள் அசுரத்தனமானவை. முதல் சில ஓவர்களை மட்டும் ரோஹித் சர்மா நிலைத்து நின்று கடந்துவிட்டாலே, இந்திய அணியின் ஸ்கோர் உயரப்போவது உறுதி. அதேப்போல, துவக்க ஓவர்களில் அவர் கடைப்பிடிக்கின்ற நிதானமும் விசித்திரமானது. மிக மெதுவாகவே, அவர் ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டிருப்பார். ஆனால், ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் பந்து நாலாபுறமும் சிதறி ஓடிக் கொண்டிருக்கும்.

ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் என்றாலும், முக்கியமான போட்டிகளில் இன்னமும் ஏமாற்றத்தை அளித்துவிடுகிறார் என்றே கருதப்படுகிறது. குறிப்பாக, 2015 உலக கோப்பை அரை இறுதியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெறும் 34 ரன்களை மட்டுமே எடுத்து நல்ல துவக்கத்தை இந்திய அணிக்கு கொடுக்கத் தவறிவிட்டார். அதே போல 2016 இருபது ஓவர் உலக கோப்பையிலும், 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியிலும் எதிர்பார்த்த அளவுக்கு ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடவில்லை.   

இரண்டு காரணங்கள் அவர் மிக விரைவாக ஆட்டமிழப்பதற்கு கூறப்படுவதுண்டு. முதலாவது மனோநிலை. யாராவது ஒரு பந்து வீச்சாளர் அவரது சாத்விகமான குணத்தை சீறும்போது, அவர் நிதானமிழந்து விடுகிறார். அவரது உறுதி கலையும் போது, பதற்றத்தில் பந்தின் மீதான கவனத்தை இழந்து விடுகிறார். அதனால் எளிதாக தனது விக்கெட்டை பறி கொடுத்து விடுகிறார் சர்மா. பல உதாரணங்கள் இதற்கு இருக்கின்றன. இரண்டாவது காரணம், ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடாவிட்டால், அந்த தொடர் முழுவதும் ஒருவிதமான குற்ற உணர்வில் பீடிக்கப்பட்டிருப்பது ரோஹித்தின் வழக்கமாக இருக்கிறது. ரோஹித் தனது விக்கெட்டை மிக விரைவாக பறி கொடுத்து விடும் தருணங்களை குறித்து அதிக கவலையுறுகிறார். அவரது கவலை அடுத்தடுத்த போட்டிகளில் பிரபலித்து விடுகிறது. இதனால், மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் சாத்தியத்தை கொண்டிருக்கும் ரோஹித் சர்மா பலமுறை, தன் மீதுள்ள எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகும்படி சொற்ப எண்ணிக்கையிலான ரன்களில் ஆட்டமிழந்து இருக்கிறார்.

‘யாரும் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. சில தருணங்களில் தவறு நிகழ்வது சாத்தியமானதுதான். தொடர்ந்து தோல்விகளை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அடுத்தடுத்த போட்டிகளில் மேலும் சரியான ஷாட்டுகளை எப்படி அடிப்பது, பந்தை எப்படி அணுகுவது என்பதில் மட்டும் நமது கவனத்தை குவிக்க வேண்டும்’ என்று சொல்லும் ரோஹித் சர்மா, அபரிதமான ஆற்றல் உடையவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், தனது ஆட்டத்திறனை மேலும் உறுதியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் அவ்வப்போது காயங்களினாலும், ஃபார்ம் இன்றியும் தவித்துக் கொண்டிருந்தாலும், இந்திய கிரிக்கெட் வாரியம் அவர் அணியில் இருப்பதை வெகுவாக விரும்புகிறது. அவருக்கு மேலும் மேலும் சாத்தியங்களை உருவாக்கிக் கொடுக்கிறது. ஏனெனில் அவரது திறன் மீது மிகுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இந்திய தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான சபா கரீம், ‘நாங்கள் அவருக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகிறோம். பிரத்யேகமான தனித்துவமிக்க பேட்ஸ்மேன் அவர். இத்தகைய கிரிக்கெட் விளையாட்டாளர்கள் நமக்கு கிடைப்பது அபூர்வமானது. அதனால், எங்களது முழு ஆதரவு எப்போதும் அவருக்கும் இருந்து கொண்டிருக்கும். ஏனெனில், அவரது இடத்தை வேறு யாராலும் அத்தனை எளிதாக நிரப்பிவிட முடியாது’ என்கிறார்.

சிக்ஸர் பறக்கும்……     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com