16. பாகிஸ்தான் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் பாபர் அஸாம் (Babar Azam).
16. பாகிஸ்தான் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் பாபர் அஸாம் (Babar Azam). 23 வயதே நிரம்பியிருக்கும் இந்த இளைஞரைதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. 2015-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியொன்றில் அறிமுக வீரராக களமிறங்கிய பாபர் அஸாம், மூன்றே ஆண்டுகளில் பலதரப்பட்ட சாதனைகளுக்கு உரியவராக உயர்ந்திருக்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பாபர் தற்போது வகித்து வரும் இடம் - இரண்டு. முதல் இடத்தை பிடித்திருக்கும்  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்ததாக, தரவரிசை பட்டியலில் பாபர் அஸாம் நிலைகொண்டிருக்கிறார்.

முன்னதாக, பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஒருவர் தரவரிசை பட்டியில் முதல் சில இடங்களில் ஒருவராக இடம்பெற்றிருப்பது மிக நீண்ட காலத்துக்கு பிறகே நிகழ்ந்திருக்கிறது. அந்த அணியின் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களான இம்ஸமாம் அல் ஹக், ஷாகித் அப்ரிதி, அன்வர் முதலியானவர்களுக்கு பிறகு அந்த அணி ஒரு நிலையான உறுதியான ஆட்டக்காரரை அடையாளம் காணும் சாத்தியங்கள் இன்னமும் உருவாகமல் இருக்கிறது. மிஸ்பா வுல் ஹக் போன்றோர் சில பல காலம் அணியில் நீடித்திருக்கிறார்கள் என்றாலும், அவர்களிடமிருந்து ஒரு நினைவுக்கூரத்தக்க சிறப்பானதொரு ஆட்டம் வெளிப்படாமல் இருந்தது.

பாகிஸ்தான் அணியில் சொல்லும்படியான காலம் வரையிலும் கேப்டனாக பதவி வகித்தவர்தான் மிஸ்பா வுல் ஹக் என்றாலும், அவர் சர்வதேச அளவில் ஒரு சதத்தை கூட பூர்த்தி செய்திருக்கவில்லை. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அணி பல காலமாகவே பயணித்துக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் அணி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட்டில் தனது முழுமையான ஆதிக்கத்தை செலுத்தியதில்லை. சர்வதேச போட்டிகள் முதல்முதலாக துவங்கியபோது மேற்கிந்திய தீவுகள் அடுத்தடுத்த இரண்டு உலக கோப்பைகளை கைப்பற்றியதன் வழியாக, ஆரம்ப கால கிரிக்கெட்டில் தனது முழுமையான ஆதிக்கத்தை செலுத்தியதைப் போலவோ, அல்லது ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகள் கிரிக்கெட்டின் மீது குறிப்பிடத்தக்க கால அளவில் நிகரற்ற சாதனைகளை செய்திருப்பது போலவோ பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரலாறு நெடுகிலும் தொடர்ச்சியான சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஒரு போட்டியில் அதீதமான வெற்றியையும், மற்றொரு போட்டியில் தரைமட்டத்துக்கு சரிந்து வீழ்ச்சியுறுவதும்தான் இதுவரையிலும் பாகிஸ்தானின் ஆட்டப் போக்காக இருந்திருக்கிறது.

பாகிஸ்தான் என்பது எப்போதுமே அதனது பவுலர்களை சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கும் அணி. இந்தியா அபாரமான பேட்டிங் வரிசை கொண்ட கிரிக்கெட் அணியென்றால், பாகிஸ்தான் அபாரமான பவுலிங் வரிசை கொண்ட கிரிக்கெட் அணியென்று உறுதியாக சொல்லலாம். இம்ரான் கான், வாஸின் அக்ரம், சுழல்பந்து வீச்சாளரான சக்லைன் முஷ்டாக், ஷோயப் அக்தர், வக்கார் யூனிஸ், ஆமீர் என உலக கிரிக்கெட் வரலாற்றின் முக்கியத்தும் வாய்ந்த சிறந்த பவுலர்கள் அனைவரும் பாகிஸ்தானை சார்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதோடு, பந்து வீச்சாளர் ஒருவர் அணியின் தலைமை பொறுப்பை வகிக்கும் போக்கையும் பாகிஸ்தான்தான் உருவாக்கியது.

1975-ல் இருந்து இன்றைய காலகட்டம் வரையிலும் நிகழ்ந்துள்ள உலகக் கோப்பை போட்டி தொடர்களில் வென்ற அணியின் கேப்டன் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரேயொரு பவுலர் இம்ரான் கான் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்களின் கரம்தாம் ஓங்கியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ நெடுங்காலம் நிலைத்திருக்கும் முழுமையான பேட்ஸ்மேன்கள் அதிகளவில் அவ்வணியில் உருவாகவில்லை.

அவ்வப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் சிலர் சூதாட்ட புகார்களில் சிக்கிக் கொள்வதும், பயிற்சியாளர்களிடத்தில் உண்டாகின்ற மோதல்கள் மற்றும் அணியின் தலைமைக்கு கட்டுப்படாதது போன்ற குற்றச்சாட்டுகளால் பல முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த விளையாட்டாளர்களை இழந்திருக்கிறது.

வெகு சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பலராலும் அவரது ஆட்டத் திறனின் காரணமாக புழகப்பட்டவர் உமர் அக்மல். பாபர் அஸாமை போலவே மிகச் சிறிய வயதிலேயே அணியில் இடம்பெற்றிருந்த உமர் அக்மல் எந்தவொரு அதீத வேகம் கொண்ட பந்து வீச்சாளர்களையும் வெகு அசால்ட்டாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவராக இருந்தார். மிகக் குறைந்த உயரம் கொண்டவர்தான் என்றாலும், தொடர்ச்சியாக இமாலைய சிக்ஸர்கள் அடிப்பத்தில் அவர் கில்லாடியாக இருந்தார்.

எனக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் விருப்பமான பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் என்றால் உமர் அக்மல்தான். அவர் அணியில் இடம்பெற்றிருந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு அணியிலும் பலமான அதிரடி ஆட்டக்காரர் ஒருவர் இயல்பாகவே உருவாகியிருந்தார். இந்திய அணியில் தோனியின் சம்ராஜ்யம் விரிந்திருந்த காலக்கட்டம் அது. அதே போல ஆஸ்திரேலியாவில் வாட்சன் மற்றும் வார்னர், இங்கிலாந்தில் கெவின் பீட்டர்சன், தென் ஆப்பிரிக்காவில் ஏபி டிவில்லியர்ஸ், நியூசிலாந்தில் ரோஸ் டெய்லர் என உலகம் முழுக்க அதிரடி ஆட்டக்காரர்கள் உதயமாகிக் கொண்டிருந்த காலக்கட்டமது. அந்த சூழலில் பாகிஸ்தான் அணிக்கு அதன் மைய நிலையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய விளையாட்டாளர் ஒருவரின் தேவை அதிகரித்திருந்தது.

அந்த பொறுப்பை உமர் அக்மல் இயல்பாக கையகப்படுத்திக் கொண்டு, நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கால்களை மடக்கி ஸ்கொயர் லெக் பகுதியில் அவர் அடிக்கின்ற சிக்ஸர்களை வெகுவாக என்னை கவர்ந்திருந்தது. அவரை விரைவில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிற்கு முன்னுயரக் கூடிய விளையாட்டாளர் என்றே நான் கருதியிருந்தேன். முன்னாள் அதிரடி மன்னனான அப்ரிதியுடன் இவர் இணைந்து ஆடிய பல இன்னிங்ஸ்கள் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆனால், அவர் அணியில் தொடர்ந்து இடம்பெற முடியாமல் போனது மிகவும் துன்பகரமானதே.

இவரது மற்றைய இரண்டு சகோதரர்களும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியவர்கள்தான். மூத்த சகோதரர் கம்ரான் அக்மல் பல காலம் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர். அபாயகரமான சமயங்களில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலமாக, பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிந்து வந்ததன் காரணமாக, மொயின் கானுக்கு பிறகு, நீண்ட காலம் பாகிஸ்தான் அணியில் நிலைத்திருந்த விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேனாக கம்ரான் அக்மல் இருந்துக்கொண்டிருந்தார்.

ஆனால், மோசமான பார்ம் காரணமாக தற்போது கம்ரான் அக்மல் அணியில் இருந்து விலகியிருக்க வேண்டிய சூழல். உமர் அக்மலோ அணி வீரர்களிடத்தில் கட்டுக்கோப்புடன் பழகவில்லை எனும் காரணத்தால் ஓரம் கட்டப்பட்டார்.  இவர்களது மற்றொரு சகோதரர் ஆத்னன் அக்மல் சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்ததால், ஒரு நிலையான இடத்தை பாகிஸ்தான் அணியில் பிடிக்கவேயில்லை. தற்போது வளர்ந்து வரும் இளைய நம்பிக்கை நட்சத்திரமான பாபர் அஸாம், இந்த மூன்று சகோதரர்களின் குடும்பத்தை சேர்ந்தவரே. பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இந்த மூன்று சகோதரர்களின் தூரத்து உறவினரே பாபர் அஸாம்.

அடிப்படையில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த குடும்ப உறுப்பினர்களின் காரணமாக, பாபர் அஸாமின் நுழைவு எளிதாகவே இருந்தது. நல்லதொரு ஆட்டத்தை மைய ஓவர்களில் வெளிப்படுத்த வேண்டுமென்கின்ற நோக்கில் பாபருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும், பாபர் துவக்க காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. துவக்க நிலை தடுமாற்றங்கள் பலவும் இவருக்கும் இருந்திருக்கிறது. கிட்டதட்ட துவக்க காலத்தில் பெரிதான எந்தவொரு சலனத்தையும் பாபர் ஏற்படுத்தியிருக்கவில்லை என்றே சொல்லலாம்.

ஆனால், 2016-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று சதங்களை அடித்ததற்கு பிறகுதான், அவரின் முக்கியத்துவம் அணியினருக்கும், சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டது.

அதிலிருந்து, பாபர் ஒன்றின் பின் ஒன்றாக பல சாதனைகளை குவித்து வருகிறார். தனது 6வது, 7-வது மற்றும் 8-வது சதத்தை விரைவாக அடைந்த பாகிஸ்தானிய வீரர், உலகளவில் ஆயிரம் ரன்களை மிக விரைவாக குவித்த இரண்டாவது வீரர், 33 போட்டிகளுக்குள் 7 சதங்களை பூர்த்திச் செய்த ஒரே விளையாட்டாளர் என பல சாதனைகளை பாபர் அஸாம் அதற்குள்ளாகவே படைத்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் விமர்சகர்களை அவரை கோலிக்கு நிகராக வைத்து கொண்டாடுகிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களை அணியை உறுதியுடன் முன்னகர்த்திச் செல்வதற்கு ஏற்ற வீரராக அவரை கருதுகிறார்கள். அதனால்தான் மிகக் குறுகிய காலத்திற்குள் அவரை அணியின் துணைக் கேப்டனாகவும் உயர்த்தியிருக்கிறது.

தன் மீது குவிந்துள்ள பொறுப்புகளையும், எதிர்பார்ப்புகளை முழுமையாக உணர்ந்தே இருக்கும் இந்த 23 வயது இளைஞர் தனது முன் மாதிரியாக கொண்டிருப்பது விராட் கோலியைதான். கோலியைப் போல ஆட்டத்திறனிலும், வளர்ச்சியிலும் பாபர் அஸாம் நல்லதொரு நிலையை அடைவார் என்று பலரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக அவர் விளையாடி ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்ததன் மூலமாக, அந்த போட்டியில் அவர்தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். எதிர்வருகின்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி உலக கோப்பையில் பங்கேற்பதற்கான ஒரு தன்னம்பிக்கையையும், அடித்தளத்தையும் பாபருக்கு வழங்கும் என கருதப்படுகிறது. கோடிக்கணக்கான கண்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்பிக்க செய்வாரா பாபார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிக்ஸர் பறக்கும்…...     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com