11. எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் பொறியை ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் உணரலாம்!

வரலாறு நெடுகிலும் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் அதிகப் புகழடைந்தவர்களாகவும், மிக திறன் மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள்.
11. எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் பொறியை ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் உணரலாம்!

மூன்றாம் நாயகன்: ரோஹித் சர்மா – 1

எவரிடமும் என்னை நிரூபிக்க வேண்டுமென்கின்ற அவசியம் எனக்கில்லை. என்னை நான் முழுதாக நம்பினால் போதுமானது. நான் இது வரையில் செய்திருக்கின்ற சாதனைகளை விடவும் என்னால் இன்னமும் நிறைய நிலைகளை அடைய முடியுமென்பதை நான் தனிப்பட்ட முறையில் எனக்குள்ளாக நம்ப வேண்டும். நான் நிலைக்கண்ணாடிக்கு எதிரில் நிற்கும்போதும், எனது கண்களை நேருக்கு நேராக எதிர் கொண்டு, எனது சாதனைகளை குறித்து தைரியமாக பேசும் நிலை உருவாக வேண்டும்’ – ரோஹித் சர்மா

13 நவம்பர் 2014, புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியை எதிர் கொள்ளத் தயாராக இருந்தது. இரு அணிகளுக்கும் இடையில் நடந்துக் கொண்டிருந்த போட்டித் தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டி அது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிப் பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. துவக்க ஆட்டக்காரராக இந்தப் போட்டித் தொடரில் விளையாடிய ரஹானே, ஒரு சதம் உட்பட நல்ல ஃபார்மில் இருந்தார். முன்னதாக இந்திய அணி தொடரை வென்று விட்டதால் நான்காவது ஒருநாள் போட்டியில் ரஹானேவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவருக்கு பதிலாக, சிறிய இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியிருந்த ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார்.

தனது விரல்களில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக, ரோஹித் சர்மா சிறிது காலம் ஓய்வில் இருக்க வேண்டியிருந்தது. தனது முழு கிரிக்கெட் வாழ்க்கையிலும், இவ்வகையிலான காயங்களினால் தொடர்ந்து அவதியுற்று வரும் கிரிக்கெட் ஆட்டக்காரராகவே ரோஹித் சர்மா இருந்து கொண்டிருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2007-ம் வருடத்தில் அறிமுகமான ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டியில் ஆறு வருடங்கள் கழித்து 2013-ல் தான் அறிமுகமாக முடிந்தது. தொடர் காயங்களினால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கிறது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் மீண்டும் இந்திய அணியில் விளையாடும் சந்தர்ப்பம் உண்டாகிய போது, ரோஹித் சர்மா தனது விரலில் ஏற்பட்டிருந்த காயம் குறித்தே அதிக கவலையுற்றிருந்தார். போட்டித் துவங்குவதற்கு முந்தைய இரவு முழுக்க முழுக்க, இந்த நினைப்பே அவரை குழப்பிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காயம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதில் அதிக பதற்றத்துடன் இருந்தார். ஏனெனில், இந்திய அணியில் அவர் தனது இடத்தை அழுத்தமாக தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து அதிக ஸ்கோர்களை குவிக்க வேண்டியது மிக மிக அவசியம். அதனால், விரல் குறித்தான சிந்தனை அவரை நிம்மதியுடன் இருக்க விடவில்லை.

வரலாறு நெடுகிலும் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் அதிகப் புகழடைந்தவர்களாகவும், மிக திறன் மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். இந்திய அணியின் சிறப்பே அதன் பலமான பேட்டிங் வரிசைதான் என்று பல சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால், அதன் துவக்க ஆட்டக்காரர்களுக்கு இயல்பாக கூடுதல் பொறுப்புணர்வு எப்போதும் உண்டு. ஒரு காலத்தில் சச்சின் – கங்குலியின் இணை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவர்களது தலைமையில்தான் இந்திய அணி மிகச் சிறந்த ஆட்ட வரிசை கொண்ட அணியாக உருவெடுத்தது.

அதற்கு அடுத்ததாக, சேவாக் சச்சினுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக விளையாடத் துவங்கினார். ஒருபுறம் சச்சின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் சேவாக் அதிரடியில் கலக்கிக் கொண்டிருப்பார். பந்தை ஆஃப் சைடில் விரட்டியடிக்கும் சேவாக்கின் ஸ்ட்ரோக்குகள் மிக அதிக அளவிலான ரசிகர்களை அவருக்கு உருவாக்கிக் கொடுத்தது. சேவாக் களத்தில் இறங்கினாலே பவுண்டரிகள் நாலாபுறமும் சிதறி ஓடப் போவது உறுதி எனும் நிலை இருந்தது. டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி என்றெல்லாம் பாகுபாடில்லாமல் விளாசித் தள்ளக் கூடிய கிரிக்கெட் ஆட்டக்காரராக சேவாக் இருந்திருக்கிறார். சில காலம் அவருக்கு இணையாக விளையாடிய கவுதம் கம்பீரும் முக்கியத்துவம் வாய்ந்த பல போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெறக் காரணமாக இருந்தவர்.

ஆனால் அடுத்தடுத்து, சச்சின், சேவாக், காம்பீர் போன்ற நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட்டில் நிலைத்திருந்த வீரர்கள் ஓய்வு பெற்றதும், இந்திய அணிக்கு அவர்களுக்கு மாற்றாக, திறன்மிக்க ஆட்டக்காரர்களை கண்டடைய வேண்டிய அவசியம் இருந்து வந்தது. உள்ளூர் போட்டிகளில் இருந்தும், ஐ.பி.எல் போட்டித் தொடரில் இருந்தும் பல இளைய கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாமல், சிறிது காலத்திற்குள்ளாகவே அணியில் இருந்து ஓரம் கட்டப்பட, ரோஹித் சர்மா தனது ஆட்டத்தில் ஒரு நிலைவரை கடைப்பிடிக்கும் நிதானத்தாலும், அதன்பிறகு, வெளிப்படுத்தும் அதீதமான அதிரடியாலும் அணியில் தனக்கென தனித்த இடத்தை மிக நெடிய போராட்டத்திற்கு பின்னர் தக்க வைத்துக் கொண்டுள்ளார். எனினும், அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் காயம் காரணமாக, தொடர்ச்சியாக அவரால் விளையாட முடியாமலானது.

துவக்கத்தில் மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா, மிடில் ஆர்டரில் தோனி, ரெய்னா போன்றவர்கள் இருந்ததாலும், ஒரு அதிரடி ஆட்டக்காரர் துவக்கத்தில் இருக்க வேண்டிய காரணத்தாலும் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். இதனை சேவாக் விளைவு என்றே குறிப்படலாம். அத்தகையதொரு அதிர்வை இந்திய ரசிகர்களின் மனங்களில் உண்டாக்கிப் போனவர் சேவாக். போட்டி தொடங்கும் நொடியில் இருந்தே, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிரடியை சேவாக் காலத்திலிருந்து எதிர்பார்க்க துவங்கிவிட்டார்கள். ஒரே நேரத்தில், சேவாக் உருவாக்கியிருந்த அதிரடி மரபைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், இந்திய அணிக்கும் சிக்கலற்ற நல்ல துவக்கத்தையும் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்கின்ற இரட்டை சுமை ரோஹித் சர்மாவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.   

‘எனது மனவலிமைதான் எனது பலம். நான் மிக அதிக நேரத்தை என் நண்பர்களுடனும், குடும்பத்துடனும், தனியனாகவும் செலவிட்டிருக்கிறேன். அது என்னை அமைதியுடனிருக்கவும், கிரிக்கெட் விளையாட்டில் நிதானத்தை கடைப்பிடிக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறது. இப்படி நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள எதுவும் இல்லையென்றால், தேவையற்ற குழப்பங்கள் நம்மை சூழ்ந்து சிதறடித்துவிடும். வாழ்க்கையே சூன்யமாகிவிடும்’ எனும் ரோஹித் சர்மா, தனது ஆட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிலை வரை மிக அதிக நிதானத்தை கடைப்பிடிக்கக் கூடியவர். மிடில் ஓவர்களில் இருந்தே தனது அதிரடியை துவங்குவார்.

தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, சிறிது காலம் ஓய்வில் இருந்து விட்டு, மீண்டும் அணிக்கு திரும்பிய ரோஹித் சர்மா இலங்கை எதிரான போட்டியில் முதல் பத்து ஓவர்களில் அடித்த ஸ்கோர் மொத்தமே 12 தான். காயம் குறித்த எண்ணம் இன்னமும் அவரை விட்டு விலகியிருக்கவில்லை. மெல்ல ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும், அவரது ஆட்டத்தில் ஒரு உறுதி காணப்பட்டது. நிதானமாக தேர்ந்தெடுத்து ஷாட்டுகளை அடித்துக் கொண்டிருந்தார். ஓவர்கள் மெல்ல உயர உயர அவரது ஆட்டத்தில் கூடுதல் விரைவுத்தன்மை உண்டாகியது. இருபது ஓவர்களில் அரை சதத்தை கடந்தார். இதன் பிறகு, மேலும் வேகம் கூடியது. மைதானத்தில் அனைத்து திசைகளுக்கு பந்து விரைந்து ஓடியது. களத்தில் திடமாக நின்று கொண்டு, பவுலர்களை தனது வீரியமிக்க ஷாட்டுகளால் கலங்கடித்துக் கொண்டிருந்தார்.

ஒருபுறம் இந்திய அணி வீரர்கள், சொற்ப சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துக் கொண்டிருக்க, ரோஹித் சர்மாவோ ஒட்டுமொத்தமான தனது முழு ஆட்டத் திறனையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். தனது விளையாட கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களை எல்லாம் பழி தீர்த்து விடுவதைப் போல அவரது ஆட்டம் மிக அதிக உக்கிரத்தன்மையுடன் அன்றைய போட்டியில் வெளிப்பட்டது. மெல்ல 100, 150, 200 என கடந்து, போட்டியின் முடிவில் 264 ரன்களை ஒற்றை நபராக சேர்ப்பித்திருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதற்கு முன்பு ஒருவரும் நெருங்கியிருக்காத ஸ்கோர் அது. 33 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அதில் அடக்கம். ஒரு தனி நபரின் உச்சப்பட்ச ஸ்கோராக இன்றளவும் அந்த ஸ்கோரே நீடித்திருக்கிறது. ரோஹித் சர்மா இந்த போட்டிக்கு முன்பொரு முறையும், இந்த போட்டிக்கு பின்பொருமுறையும் என மொத்தமாக 3 முறை ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த வீரர் எனும் சாதனையை கொண்டுள்ளார்.

நான் வளர்ந்த காலத்தில் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரரான அன்வரின் 194 ரன்கள் தான் தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 1997-ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அன்வர் குவித்த இந்த ரன்களை கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு எவராலும் நெருங்க முடியாமல் இருந்தது. இரட்டை சதமென்பது டெஸ்ட் போட்டிக்கு உரிய இலக்காக கருதப்பட்டது. ஆனால், 2010-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை அடித்து இந்த சாதனையை முறியடித்தார். பிறகு, சேவாக், கிரிஸ் கேயல், மார்டின் குப்டில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர்களாக இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் எவரும் ரோஹித் சர்மாவை போல ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் இரட்டை சதம் அடித்தவர்கள் இல்லை.

ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் பொறியை நம்மால் உணர முடியும். அவர் மெல்ல பந்துகளை ரன் எதுவுமின்றி கடக்கும் போதும், இத்தகையதொரு உணர்வை நம்மில் உண்டாக்கி விடக் கூடியவர். ஒவ்வொரு போட்டியில் அவர் களமிறங்கும் போதும், அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகளவில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. சேவாக் போன்றோ அல்லது தோனி போன்றோ பந்தை விளாசுவதில் இறுக்கத்தையும், முழு ஆற்றலையும் வெளிப்படுத்தாது,  நிதானமாக ரன்களை சுருட்டக் கூடிய அதிரடி ஆட்டக்காரராக அவர் இருந்துக் கொண்டிருக்கிறார். முழுமையான கிரிக்கெட் ஆட்டக்காரர் என்றே அவரை வகைப்படுத்தலாம். ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டை முதல் முதலாக விளையாடத் துவங்கிய காலத்தில் அவருக்கு இருந்த மிகப் பெரிய கனவு, ‘ஒரு நல்ல ஸ்பின் பவுலராக’ உருவாக வேண்டுமென்பதுதான்.  

சிக்ஸர் பறக்கும்……

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com