1. முதல் நாயகன்: விராட் கோலி

‘நான் ஒரே சமயத்தில், மனிதர்களுடன் நெருக்கமாக பழகவும், விலகியிருக்கவும் விரும்புகின்றேன்.
1. முதல் நாயகன்: விராட் கோலி

‘நான் ஒரே சமயத்தில், மனிதர்களுடன் நெருக்கமாக பழகவும், விலகியிருக்கவும் விரும்புகின்றேன். ஒரு துறவியைப் போல என்னுடைய சமூக வாழ்க்கை இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்’ - விராட் கோலி

விராட் கோலியின் இந்த ஒற்றைச் சொல்லை இந்திய கிரிக்கெட் ஆர்வலர்கள் ஜெபம் போல மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்வரவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இந்திய அணியை தலைமை ஏற்று வழி நடத்தவிருப்பவர் கோலிதான். தனது 30-வது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் விராட் கோலிக்கு காத்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால்களில் முக்கியமானது உலகக் கோப்பை.

இளம் வயதுக்கே உரிய துடிப்பும், அவ்வப்போது கொந்தளிக்கும் குணமும் உடைய கோலி, மைதானத்தில் தன் சக இந்திய அணியினரிடத்திலும் தீ கங்கை மூட்டி விடக் கூடிய வல்லமை கொண்டவர். அதிக எதிர்வினை ஆற்றாத  நிதானமான பாங்கையே, நமது இந்திய கிரிக்கெட் வீரர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்திருக்கிறார்கள். விளையாட்டை சீராக நடத்திச் செல்வதில் மட்டுமே அவர்களது முழுக் கவனமும் இருந்திருக்கிறது. இந்திய அணியின் தலைசிறந்த சாதுர்யம் மிக்க கேப்டனாக விளங்க மகேந்திர சிங் தோனி கூட ‘மிஸ்டர் கூல் கேப்டன்’ என்றே பெயரெடுத்திருக்கிறார். 

இங்திலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டி ஒன்றின்போது இந்தியா வெற்றி அடைந்ததன் பின்பாக, அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி, தனது மேலாடையை கழற்றி தலைக்கு மேலாக உயர்த்தி எதிர் அணியினரைப் பார்த்து கோபத்துடன் குரலெழுப்பியது, வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் சிக்ஸர் அடித்த பிறகு, பேட்டை சுழற்றி மைதானத்திலேயே ஆடிய நிகழ்வு என ஆங்காங்கு இந்திய வீரர்கள் தமது பொறுமையை கலைத்து எதிர்ப்பை கலகத்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும், கோலியை போல முழுமையான போர்க் குணம் உடைய, களத்தில் சீறும் வீரரை இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கண்டதில்லை. இது ஒரே சமயத்தில் ஆதரவையும், எதிர்பையும் பெற்றிருக்கிறது.

இத்தகைய எதிர்ப்புணர்வு இந்திய அணியனியினருக்கு அவசியம்தானா எனத் தொடர்ந்து விவாதங்கள் ஒருபுறம் எழுந்தபடியே இருக்கிறது. கோலி, ‘ஆஸ்திரேலிய வீரர்கள் நம்மை தொடர்ந்து வெறுப்பேற்றும் விதமாக தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் ஒருவரும் அது குறித்து பேசுவதில்லை. ஆனால், நாம் நமது எதிர்வினையை புரிந்தால் மட்டும் எல்லோரும் வரிந்துக் கட்டிக்கொண்டு விவாதிக்க தொடங்கி விடுகிறார்கள்’ என இத்தகைய விமரிசனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடனான அவரது கலந்துரையாடல்கள் பெரும்பாலும் காரசாரமாகவே இருந்திருக்கிறது. தனது ஆட்டத்திறன் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு கோலி எப்போதுமே கோபத்துடன்தான் பதிலளித்திருக்கிறார்.

தனது இருபதாவது வயதில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் அறிமுக வீரராக களமிறங்கிய கோலி, அடுத்த பத்து வருடங்களுக்குள் இந்திய அணியின் தலைமை பொறுப்பை ஏற்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். இந்தப் பத்து வருடங்களில் அவரது வாழ்க்கையில் பல சறுக்கல்களும், தொய்வுகளும், சாத்தியமற்ற வெற்றிகளுமாக இருந்திருக்கிறது. கோலியின் வளர்ச்சிக்கு தோனியின் ஆதரவு எப்போதும் இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட் ஆட்டத்தை பொருத்தவரையில் மிகவும் சவாலான காரியங்களில் ஒன்று, நடுவில் இறங்கி விளையாடுவது. வீழ்ந்து  கொண்டிருக்கும் விக்கெட்டுகளுக்கு இடையில் களமிறங்கி, பொறுமையுடன் அடுத்தடுத்த விக்கெட்டுகள் வீழ்ந்துவிடாதபடி தடுப்பதோடு, ரன்களை விரைவாக குவிக்க வேண்டிய பொறுப்பையும் நடுவில் இறங்கும் ஆட்டக்காரர்கள் சுமந்திருப்பார்கள்.

இந்தியாவில் மிகச் சிறந்த மைய நிலை ஆட்டகாரராக விளங்கியவர் ராகுல் டிராவிட். மிக நுணுக்கமான நிதானத்துடன் ரன்கள் சிறுகச் சிறுக சேர்த்து, கடைசி ஓவர்கள் வரையிலும் அணியை நகர்த்திச் செல்லும் சாமர்த்தியம் உடையவராக டிராவிட் இருந்தார். இந்தியாவின் தடுப்பு சுவர் என்றே டிராவிட் பெயரெடுத்திருந்தார். அவரைப் போலொரு நிதான ஆட்டக்காரர்கள் உலகளவில் கூட இல்லையென்றே உறுதியாக சொல்லலாம். காம்ளி, மொகமத் அசாரூதின், அஜய் ஜடேஜா, யுவராஜ் சிங், ரெய்னா போன்றவர்கள் அத்தகைய மைய நிலை ஆட்டக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்றாலும், டிராவிட்டின் மாற்றாக அவர்களை வகையிடுதல் ஆகாது. விவிஎஸ் லஷ்மண் ஒரளவுக்கு டிராவிட்டின் மாற்றாக கருதப்படும் தகுதி உடையவர் என்றாலும், அவரது முழு ஆட்டத்திறனும் டெஸ்ட் போட்டிகளில்தான் வெளிப்பட்டிருக்கிறது.

விராட் கோலி ஒரே தருணத்தில், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவராகவும், அதிரடியாக ரன்களை குவிக்கக் கூடிய திறன் மிக்கவராகவும் இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் மைய ஓவர்களின் நிதானமான ஆட்டத்திற்கு கோலியே முழு பொறுப்பு. அவ்வப்போது அடித்துத் தள்ளும் பவுண்டரிகளின் மூலமாக ஸ்கோரையும் அவர் தொடர்ந்து உயர்த்திவிட்டுக் கொண்டே இருப்பார். அவரது விக்கெட் விரைவாக வீழ்ந்துவிட்டால், பின்வரும் ஆட்டக்காரர்களின் நிலை அதோகதிதான்.

தரையில் ஊர்ந்து செல்லும்படியாக கோலி அடிக்கும் ஆஃப் டிரைவுகள் வசீகரத்தன்மையை பெற்றிருக்கும். இக்கட்டான நிலைகளிலும் பந்தை அடிப்பதில் முழு கட்டுப்பாட்டை கோலி கொண்டிருப்பது அனைவரின் புருவங்களை உயர்த்தச் செய்யும் விஷயம்.  உறுதியான முழுமையான ஆட்டக்காரராக கோலி களத்தில் பார்வைக்கு தெரிவார். கட்டுக்கோப்பான உடல்வன்மையை பயிற்சியின் மூலமாக அடைந்திருக்கும் கோலி, தொடர்ச்சியாக ஜிம்களில் அதிக நேரத்தை செலவிடும் வழக்கமுடையவர்.

‘மிக முக்கியமான போட்டித் தொடர்களுக்கு செல்லும் முன்பாக தீவிரமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலும் மனமும் ஒரு இறுக்கமான நிலையை அடைகிறது. அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட உடலில் தோற்றுவித்திருக்கும் அத்தகைய இறுக்கம், மிக முக்கிய பங்காற்றுகிறது. அவசியமான மனோதிடத்தை இந்த உடற்பயிற்சிகள் எனக்கு தருகின்றன’ என கோலி தனது பயிற்சி குறித்து தெரிவிக்கிறார். சம காலத்திய இந்திய கிரிக்கெட்டு வீரர்களிலேயே தடகள விளையாட்டு வீரருக்கு ஒப்பான உறுதியான கச்சிதமான உடலமைப்பை கொண்டிருப்பவர் விராட் கோலி மட்டும்தான்.

கிரிக்கெட் விளையாட்டு திறன் மட்டுமல்லாமல், அவரது விதவிதமான ஹேர் ஸ்டைல்களும் அவ்வப்போது பிரபலமாகி இருக்கின்றன. அவரது ஹேர் ஸ்டைல், ஆடை அலங்காரம் முதலியவை ‘கோலி ஸ்டைல்’ என்றே வகைப்படுத்தப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகும். தன் உடலில் டாட்டூ போட்டுக் கொள்வதிலும் கோலிக்கு பெரும் விருப்பம் உண்டு. உள் அமைதியும் புற வேகத்தையும் ஒருங்கே பெற்றவராக கோலி தம்மை கட்டமைத்துக் கொண்ட விதம் ஆச்சரியமானது. கிராமத்தில் மைதானங்களில் கோலி ஸ்டைல் தலை சிராய்ப்புடன் கையில் மட்டையடித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் சச்சினுக்கு இருந்ததைப் போலவே இன்றைக்கு கோலியின் மீது பல இளைஞர்கள் மோகம் கொண்டு அலைகிறார்கள்.

கோலியின் ஆட்டத்தை முன்னாள் இந்திய ஆட்டக்காரரும், 1983-ல் இந்திய உலக கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்தவருமான தமிழ்நாட்டு வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தொடர்ந்து பாராட்டியபடியே வந்திருக்கிறார். கோலியின் துவக்க நாட்களில் இருந்தே, ஸ்ரீகாந்த் அவரை பலமுறை புகழ்ந்திருக்கிறார். ‘கோலியிடம் அசாதாரமாண மனோதிடம் நிரம்பியிருக்கிறது. அவரால், எத்தகைய சூழலையும் பொறுமையுடன் வழி நடத்திச் செல்ல முடியும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகக் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் (52 பந்துகளில்), மிக விரைவாக ஆயிரம் சர்வதேச ரன்களை கடந்தவர், மிக விரைவாக பத்து சதங்கள் அடித்த வீரர், கேப்டனாக தொடர்ந்து அதிகமுறை (ஒன்பது தொடர்கள்) டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வெற்றிப் பெற செய்த வீரர், அயல் நாட்டில் இரட்டை சதமடித்த முதல் இந்திய கேப்டன், 2013-ம் ஆண்டின் அர்ஜுனா விருது, 2017-ல் பத்மஸ்ரீ விருது என மிக குறுகிய காலக்கட்டத்தில் பல்வேறு சாதனைகளை அடைந்திருக்கும் கோலிக்கு, பல சோதனைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் அவரது வழக்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு விளையாட சென்றிருந்தபோது அங்கிருந்த பார்வையாளர்களை பார்த்து நடு விரலை உயர்த்து பழித்துக் காட்டியதால், அந்தப் போட்டியின் ஐம்பது சதவிகித சம்பளத் தொகை தண்டனையாக விதிக்கப்பட்டது. போலவே, சக விளையாட்டு வீரர்களுக்கு மத்தியில் சமரசமற்ற போக்கு, பயிற்சியாளருடன் முரண்டுபாடு கொண்டிருத்தல் என கோலியின் எதிர்மறையான போக்கும் தொடர்ந்து ஊடகங்களில் சர்ச்சையாக எழுந்தபடியும் இருக்கிறது. விமரிசனங்களுக்கு அஞ்சாத கோலி இவற்றையெல்லாம் புறம்தள்ளி தன் விளையாட்டு ஒன்றே குறிக்கோளாக இருப்பவர்.

இந்தியா போன்ற பெரும் பரப்பளவும், ஜனத்தொகையும் மிகுந்த நாட்டில், ஒற்றை பிரதிநிதியாக ஒரு மனிதர் உருவாகுவது என்பது சாத்தியமற்றது. அதீத நெருக்கடியையும், மன உளைச்சலையும், கடுமையான சூழலை எதிர்த்தும்தான் இங்கு அத்தகைய அடையாளத்தை கட்டியெழுப்ப முடியும். இன்றைக்கு உலகளவில் கவனிக்கப்படும் மனிதராக கோலி உயர்ந்துள்ளார் என்றால் அது சாதாரண விஷயமன்று. நூறு கோடி மக்களின் சார்பாக, இந்திய அணியை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார் அவர். கோலியின் தினசரி செயல்பாடுகளை ஒற்றறிய ஊடகங்கள் விழிப்புடன் அலைகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகையான அவரது காதல் மனைவி அனுஷ்கா சர்மாவையும் கேமராக்கள் சூழ்ந்திருக்கின்றன. அவர்கள் காதலர்களாக இருந்த காலகட்டத்தில் இது இன்னும் அதிகமாக இருந்தது. ஆனால், இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு எந்தவொரு இந்திய நடுத்தர குடும்பத்து சிறுவனையும் போல கைகளில் மட்டையுடன் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த கோலியை எவர் ஒருவரும் அறிந்திருக்கவில்லை.  

அந்தக் கோலியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

சிக்ஸர் பறக்கும்......

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com