18. இருபது ஓவர் கிரிக்கெட் விளையாட்டின் கடவுள்: கிரிஸ் கேயல்

18. இருபது ஓவர் கிரிக்கெட் விளையாட்டின் கடவுள்: கிரிஸ் கேயல்

நவம்பர் 13, 2012 ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தினம்.

ஐந்தாம் நாயகன்: கிரிஸ் கேயல்

‘நீங்கள் நினைக்கும்படியெல்லாம் நான் இல்லையென்பதால் என்னை வெறுக்காதீர்கள். நான் எவ்வகையில் வாழ்ந்துகொண்டிருக்கிறேனோ அப்படியெல்லாம் உங்களால் வாழ இயலவில்லை என்பதாலும் என்னை வெறுக்காதீர்கள்’ - கிரிஸ் கேயல்

நவம்பர் 13, 2012 ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தினம். அன்றைய தினத்தில் டெஸ்ட் போட்டியின் இயல்புக்கு முரணான சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. 1877-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முன்பு எப்போதும் நிகழ்ந்திராத சாதனை அது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், வங்காள தேச அணிக்கும் இடையிலான போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அன்றைய தினத்தில் நிகழ்வதாக இருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் களத்தில் இறங்கியிருக்க, தனது அறிமுக போட்டியில் களமிறங்கியிருந்த சுழற்பந்து வீச்சாளர் சோகாஹ் காஸி பந்து வீச தயாராய் இருந்தார்.

அரங்கத்தில் ஆரவாரம் ஒருபக்கம் எழுந்தபடி இருந்தது. தனது முதல் பந்தை எதிர் கொள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிரிஸ் கேயல் தயாராய் நின்றிருக்கிறார். அவரது தோள்களின் மீது எப்போதும் படர்ந்து அசைவுகொண்டிருக்கும் சிவப்பு நிற கைக்குட்டை மெல்ல காற்றில் சலசலத்துக் கொண்டிருக்கிறது. மைதானத்தில் ஆறடிக்கும் மேலான உயரம் கொண்ட கிரிஸ் கேயல், கம்பீரமாக சுற்றி நின்றிருக்கும் வங்கதேச விளையாட்டாளர்களை பார்வையிடுகிறார். அவரது பார்வை உறுதி மிக்கதாக இருக்கிறது. நிலத்தில் குனிந்த நிலையில் தனது முதல் பந்தை எதிர்கொள்ள ஆயத்தமாகியிருக்கிறார். இதற்கு முன்பு சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் விளையாடியிராத சோகாஹ் காஸிக்கு தனது முதல் பந்தை உலகின் மிக அபாயகரமான கிரிக்கெட் விளையாட்டாளர்களில் ஒருவரென கருதப்படும் கிரிஸ் கேயலுக்கு வீசும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது.

மெல்ல நிதானமாக, பந்தை தனது விரல் இடுக்கில் வைத்து சுழற்றியபடியே மைதானத்தில் அதனை வீசுகிறார். பந்து தன்னை நோக்கி வருகின்ற வரையில் நிதானித்திருந்த கேயல், தனது வழக்கமான ஆட்ட முறைகளில் ஒன்றான வலது காலை முன்னால் எட்டி வைத்து, லெக் சைடில் பந்தை திருப்புகிறார். மைதானத்தில் வீரர்கள் அனைவரும் தங்களது பார்வையை வான் நோக்கி மேயவிடுகிறார்கள். பவுண்டரி கோட்டினை தாண்டிச் சென்று பந்து பார்வையாளர்கள் பகுதிக்குள் புகுந்தோடுகிறது. பன்னெடுங்கால வரலாறு கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் விதிகளில் பிரதானமானதாக நிதான ஆட்டம் அன்றைய தினத்தில் தகர்க்கப்படுகிறது. கிரிஸ் கேயல் எனும் ராட்சசன் தனது சாதனை மகுடத்தில் மற்றுமொரு வைரத்தை மிளரவிட்ட தினம் அது.

‘நான் விசித்திரமானவன். விசித்திரங்கள் நிரம்பியவன். என்னைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருப்பதாக நம்புகிறீர்களா? ஹா ஹா ஹா உங்களுக்கு என்னைப் பற்றி தெரியாது. உங்களால் என்னை ஒருபோதும் அறிந்து கொள்ளவே முடியாது’

கிரிஸ் கேயல் பொதுவாக, டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் கிரிக்கெட் அல்லது இருபது ஓவர் போட்டி என்றெல்லாம் வகைப் பிரித்துப் பார்ப்பதில்லை. அனைத்து விதமான போட்டிகளையும் வெகு அசால்ட்டாக கையாளக் கூடிய சொற்ப எண்ணிக்கையிலான சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர். இந்தப் போட்டிக்கு முன்னதாகவே இரண்டு முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னூறு ரன்களை கடந்திருக்கிறார்.

2005-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 317 ரன்களை குவித்திருந்தார். அக்காலங்களில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனியொரு மனிதரால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இதுவே இருந்தது. பின்னர் சில காலத்திற்கு பின்னர், ஜெயவர்தனே அந்த சாதனை முறியடித்தார். டிராவில் முடிவடைந்த அப்போட்டியில் வழக்கத்துக்கு மாறாக பல விளையாட்டு வீரர்கள் சதமடித்திருந்தனர். ஏபி டிவில்லியர்ஸ், ஸ்மித், காலிஸ், பிரின்ஸ், சர்வன், சந்தர்பால், பிராவோ என பலருடைய சதங்களை உள்ளடக்கியிருந்த அப்போட்டியில் தனியொருவராக கிரிஸ் கேயல் மட்டுமே ஒரே இன்னிங்ஸில் 317 ரன்களை குவித்திருந்தார்.

அதே போல, இலங்கைக்கு எதிராக 2010-ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டில் 333 ரன்களை குவித்து அணியின் இலக்கை 580 வரையில் உயர்த்தி விட்டிருந்தார். அது சர்வதேச அளவில் கிரிஸ் கேயல் குவித்த இரண்டாவது முன்னூற்று சொச்ச ரன்களாகும். இந்த ஒரு இன்னிங்ஸில் மட்டும் 34 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடக்கம். டெஸ்ட் கிரிக்கெட் வரையறைக்கு பொருந்தாத பெரும் சாதனைகளில் இவை குறிப்பிடத்தகுந்தவை.

டெஸ்ட் வரலாற்றில் 300 ரன்களை இது வரையிலும் இரண்டு முறை கடந்தவர்கள் வெறும் நான்கே விளையாட்டாளர்கள்தான். வெகு துவக்க காலங்களில் (அதாவது 1930-களில்) டொனால்ட் பிராட்மேன், அதன் பிறகு, மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றொரு வரலாற்று நாயகனான பிரயன் லாரா, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக் மற்றும் அந்தப் பட்டியில் இறுதியாக கிரிஸ் கேயல் தனது 333 ரன்கள் மூலமாக சேர்ந்துக் கொண்டார். அவரது சட்டையின் பொறிக்கப்பட்டுள்ள அடையாள இலக்க எண் அன்றிலிருந்து 333 ஆகதான் இருந்துக் கொண்டிருக்கிறது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்று வரையிலும் லாரா விளாசிய 400 ரன்கள்தான் தனியொருவரின் அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது. லாராவின் ஆட்டம் நிதானமும், அவசியமான பொழுதுகளில் மட்டுமே அதிரடியை கையாளுகின்றது என்றால், கிரிஸ் கேயலின் ஆட்டம் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசும் வகையில் எப்போதும் ஆக்ரோஷம் மிகுந்ததாகவே இருக்கிறது.

முன் தலைமுறையினரின் வாழ்க்கையில் அதுவும் கிரிக்கெட்டை தீவிரமாக பின் தொடரக் கூடியவர்களின் நினைவுகளில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கிய கிரிக்கெட் விளையாட்டாளர் பிரயன் லாரா. இந்தியாவிலும் சச்சினுக்கு நிகராக லாராவை நேசித்தவர்கள் உண்டு. ரோஹித் சர்மா கூட தனது நேர்காணல் ஒன்றில் சிறுவயதுகளில் மிகப்பெரிய அதிர்வை தன்னிடத்தில் தோற்றுவித்தவர் பிரயன் லாரா என்றே குறிப்பிட்டிருக்கிறார். எக்காலத்திலும் நினைவுக் கூறத் தக்க பெரும் ஜாம்பவான் பிரயன் லாரா.

அதிரடி ஆட்டம் என்கின்ற வகை மாதிரிக்கு முன்காலங்களில் முன்மொழியப்பட்ட பெயர்களில் ஒன்று லாராவினுடையது. அன்றைய தினங்களில் இன்றைக்கு இருப்பதைப் போல, பவர் ப்ளே உள்ளிட்ட சலுகைகள் இருக்கவில்லை. எனினும், தங்களது பந்தை விளாசித் தள்ளும் திறன்களின் மூலமாக பெரும் புகழைத் தக்க வைத்திருந்தவர்களில் லாரா மிக முக்கியமானவர். விவ் ரிச்சர்ட்ஸுக்கு பிறகு, வெகுவாக உலகளவில் கொண்டாப்படுகின்ற மேற்கிந்திய தீவுகளின் ஆட்டக்காரராக லாராவே திகழ்ந்திருக்கிறார்.

இன்றைக்கு ஐ.பி.எல்களின் வருகையால், பல மேற்கிந்திய தீவுகளின் விளையாட்டாளர்களுக்கு நம்மூரில் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். ஆட்டத்திறன் மட்டுமல்லாது களத்தில் அவ்வப்போது செய்கின்ற சேட்டைகள் மற்றும் கரீபியன் தீவுகளுக்கே உரிய கொண்டாட்ட மனோநிலையின் காரணமாகவும், பொலார்ட், சாமி, பிராவோ, ஹோல்டர், சாமூவேல்ஸ், சுனில் நரேன் என பலருக்கும் நம்மூரில் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். அதிலும் பிராவோ தமிழ் பாடல்களில் தோன்றியதன் மூலமாக கிட்டதட்ட நம்மூர்காரர் போலவே ஆகிவிட்டார். சென்னை சூப்பர் கிங்க்ஸில் நட்சத்திர ஆட்டக்காரராக அவ்வப்போது குட்டி குட்டியான நடனமிடும் பிராவோவை மேற்கிந்திய தீவுகளின் ஆட்டக்காரராகவே நம்மால் பார்க்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

ஆனால், இவர்கள் எல்லோரையும்விட மிகுதியான திறன் கொண்ட வரும், நீண்ட காலமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடி வருபவரும் கிரிஸ் கேயல்தான். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலகாக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். முந்தைய தலைமுறை விளையாட்டாளர்களில் இருந்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு சவால்விடுக்கும் அளவுக்கு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அனைத்து விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் சதமடித்திருப்பது, இருபது ஓவர் போட்டியில் இது நாள் வரையிலும் அதிக சிக்ஸர்கள் குவித்திருப்பது, உலக கோப்பை வரலாற்றில் முதல் இரட்டை சதத்தை விளாசியது என இவரது சாதனைப் பட்டியல் மிக நீளமானது. நம் காலத்தின் அதிக வீரியமிக்க ஷாட்டுகளை விளாசக் கூடியவர் என கிரிஸ் கேயலை தைரியமாக முன்னிறுத்தலாம். இருபது ஓவர்களின் கடவுள் என்றே சிலர் கிரிஸ் கேயலை வகைப்படுத்துகிறார்கள். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் (4, 6) புதிய பைனரி இலக்கங்களாக கிரிஸ் கேயலுக்கு மாறிவிட்டது என பொதுவாக சொல்லப்படுகிறது.

‘நான் களத்தில் ஒவ்வொருமுறை பந்துகளை எதிர் கொள்ளும்போது பறவைகள் நிலத்தை நோக்கி வருவதில்லை. அவை வான்வெளியில் இருந்தே கீழிருக்கும் நிலத்தைப் பார்வையிடுகின்றன. ஆனால், நான் எனது விக்கெட்டை பறிகொடுத்துவிட்டேன் என்றால், அவை மீண்டும் நிலமிறங்கி தானியங்களை கொத்தத் துவங்கிவிடுகின்றன. உண்மையில், என்னால் மிகப்பெரியதென நீங்கள் கற்பனை செய்திருக்கும் எதைவிடவும் மிகுதியான நிலையை அடைய முடியும். பசிபிக் பெருங்கடலில் காணப்படும் வெண்மை நிற ஆல்பட்ரோஸ் பறவையை விடவும், ஒரு நீர்யானையை விடவும் என்னால் எனது சாதனைகளை கொண்டு மிகப் பெரிய நிலையை அடைய முடியும். என்னால் அவைகள் குறித்து கருதப்படுகின்ற வியப்புணர்வை முழு முற்றாக எனது சாதனைகளை கொண்டு அழித்தெறிந்துவிட முடியும்” என்பது அவரது கூற்றுகளில் ஒன்று. 

இன்றைக்கு கிரிஸ் கேயலின் பெயரில், அவரின் தலைமையின் கீழ் ஒரு கிரிக்கெட் அகாதெமியே இயங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பல சிறுவர்களுக்கு அந்த அகாதெமியில் பயிற்சியளிக்கப்படுகிறது. நவீன தொழிற் கருவிகளுடன் கூடிய அபாரமான பயிற்சிகூடமாக அது செயல்பட்டு வருகிறது. மிகுந்த நெருக்கடியான குடும்ப சூழலில் இருந்து வளர்ந்த கிரிஸ் கேயல், சிறுவயதுகளில் இதுப்போலொரு அகாதெமியில் இணைந்துதான் தனது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொண்டார். அந்த பயிற்சிக் கூடத்தின் பெயர் லூகாஸ் கிரிக்கெட் அகாதெமி. அவரது வார்த்தைகளிலேயே அந்த பயிற்சிக் கூடத்தைப் பற்றி சொல்லுவதென்றால், ‘லூகாஸ் மட்டும் இல்லையெனில், இன்றைக்கு நான் என்னவாக ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை. ஒருவேளை தெருவில் கைவிடப்பட்ட நிலையில் மனத் தெளிவற்று சுற்றிக்கொண்டு இருந்திருக்கலாம்’.

(சிக்ஸர் பறக்கும்…)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com